எது உண்மை?

’பால் மருள் மருப்பின் உரல்புரை பாஅடி,

ஈர்நறும் கமழ் கடாஅத்து, இனம்பிரி ஒருத்தல்

ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து,

பொருள்வயின் பிரிதல் வேண்டும் என்னும்

அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே!

நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி

‘நின்னிற் பிரியலென்; அஞ்சல் ஓம்பு’ என்னும்

நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே!

அவற்றுள், யாவோ, வாயின? மாஅன் மகனே!

கிழவர் இன்னோர் என்னாது, பொருள்தான்

பழவினை மருங்கின், பெயர்பு பெயர்பு உறையும்;

அன்ன பொருள்வயின் பிரிவோய்! நின்இன்று

இமைப்புவரை வாழாள் மடவோள்

அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே.’

நூல்: கலித்தொகை

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ

சூழல்: பாலைத் திணை, பொருள் தேடுவதற்காகக் காதலியைப் பிரிந்து செல்ல நினைக்கிறான் ஒரு காதலன். இதைத் தெரிந்துகொண்ட அவளுடைய தோழி, அவனிடம் பேசுகிறாள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

வெண்மையில் சிறந்தது பால். அந்தப் பாலைக்கூடத் தோற்கடித்துவிடும் அளவுக்கு வெண்மையான தந்தம் கொண்டது காட்டு யானை!

இந்த வெள்ளைத் தந்தத்தோடு, உரல் போன்ற பெரிய கால்கள், ஈரம் பட்டதால் மணம் வீசுகின்ற மத நீர் ஆகியவற்றைக் கொண்ட காட்டு யானைகளைப் பிடித்து வந்து யானைப் படை அமைப்பார்கள்.

அத்தகைய யானைப் படையினால் பாதுகாக்கப்படுகின்ற வெளிநாட்டுக்குச் சென்று ‘காசு தேடப்போகிறேன்’ என்கிறாய். ‘இதுதான் உலக வழக்கம், இதற்காகக் காதலியைப் பிரிந்து சென்றால் தப்பில்லை’ என்றெல்லாம் அன்பில்லாமல் பேசுகிறாய்.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நீ என் தோழியைக் காதலிக்கத் தொடங்கியபோது, அவளுடைய நல்ல நெற்றியைத் தடவிக் கொடுத்தபடி ‘உன்னை எப்போதும் பிரியமாட்டேன். பயப்படாதே’ என்று உறுதிமொழி சொன்னாய்.

ஆனால் இப்போது, அதே காதலியைப் பிரிந்து செல்லத் தயாராகிவிட்டாய். ஏன்? காசு என்றவுடன் உனக்கு மயக்கம் வந்துவிட்டதா? நீ அன்று பேசியது நிஜமா, அல்லது இன்று பேசுவது நிஜமா?

நீ நினைக்கிற அளவுக்குக் காசு வாழ்க்கைக்கு முக்கியமா? நீ தேடினால் அது கிடைத்துவிடுமா?

ஒவ்வொருவரும் முன்பிறவியில் செய்த நல்லது கெட்டதுக்கு ஏற்பதான் இந்தப் பிறவியில் அவர்களுக்குச் செல்வம் கிடைக்கும். அது உனக்குத் தெரியாதா?

ஆக, நீ முன்பிறவியில் நல்லது செய்திருந்தால், இப்போது காசு தானாகக் கிடைக்கும். கெட்டது செய்திருந்தால், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கிடைக்காது. அப்புறம் ஏன் அலட்டிக்கொள்கிறாய்?

அன்றைக்கு உன் காதலிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி இப்போது நீ அவளைப் பிரிந்து சென்றால் சத்தியத்தை மீறிய பாவம் உனக்கு வரும், அடுத்த பிறவியிலும் செல்வம் கிடைக்காமல் போய்விடும்.

இத்தனைக்குப்பிறகும் நீ கிளம்பிச் சென்றுவிட்டால், உன்னைப் பிரிந்து என் தோழி இமைப்பொழுதும் உயிர் வாழமாட்டாள். இவளுடைய மூங்கில் போன்ற அழகிய தோள்களை மறந்து நீ போகத்தான் வேண்டுமா? யோசித்துக்கொள்!

துக்கடா

 • அட! இவள் தோழியா, அல்லது வழக்கறிஞரா? செம லாஜிக் பேசி மடக்குகிறாளே!
 • இன்றைய அரிய சொல் : அமை = மூங்கில்
 • உதாரணங்கள்:
 • 1. அமை மென் தோள் குறவர் மகளிர் : திணைமொழி ஐம்பது
 • 2. அமை உற அமைவது உண்டு : கம்ப ராமாயணம்

148/365

Advertisements
This entry was posted in அகம், கலித்தொகை, காதல், தோழி, பாலை, பிரிவு. Bookmark the permalink.

7 Responses to எது உண்மை?

 1. கலித் தொகை
  கலி = ஓசை! ஓசை நயம் (இசை) உள்ள பாடல்கள்!

  பரிபாடல், கலித்தொகை = இந்த ரெண்டும் தான், இசையோடு இயைந்து வரும் சங்கத் தமிழ் நூல்கள்!

  கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை என்ற பெருமை இதுக்கு உண்டு!
  கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு, அகம்-புறம் என்று
  இத்திறத்த எட்டுத் தொகை
  ——————–

  சரி, matterக்கு வருவோம்!:) எனக்கு ஒரு ஐயம்; தீர்த்து வைக்கறீங்களா?

  பலநேரங்களில், தலைவன் கிட்ட, தோழி தான் வந்து பேசுகிறாள்! ஏன்? தலைவியே பேசலாமே!
  இரண்டு பேரும் மனமொத்து காதல் புரிந்தவர்கள்…இன்பம் பருகிக் கொண்டவர்கள்! அப்படியிருக்க, அவளே அவனிடம் எடுத்துச் சொல்லலாமே? ஏன் தோழி என்னும் பாத்திரம்?:) சொல்லுங்க பார்ப்போம்:)

  • amas32 says:

   ஏன் இப்பவும் தான் தோழி, தோழன் மூலம் தூது விடுகிறோமே? அனால சங்க இலக்கியத்தில் தோழி தான் உண்டு, தோழன் போய் நாயகியிடம் எதுவும் பேசுவது போல் சித்தரிக்கப் படவில்லை என்றே நினைக்கிறேன். I guess a “thozhi” can exercise more leverage with the nayakan in getting the nayaki’s wishes fulfilled. The nayaki may become emotional while expressing herself and hence may not be able to convey what she wants to convey. இந்தப் பாடலிலேப் பாருங்க, தோழி எப்படி டான் டானுன்னு கேள்வி கேக்கறாங்க! The nayakan also has more freedom to express his views freely without fear of offending his lady love, as it will be conveyed to the thalaivi in an appropriate fashion by the friend later! Waiting to hear what you have to say 🙂
   amas32

   • எல்லாம் நல்லாத் தான் சொல்லி இருக்கீங்க…
    ஆனா ஆனா ஆனா….
    * தலைமகன் நேரடியா ஒரு முடிவெடுக்க முடியுது!
    * ஆனா தலைவி அப்படி எடுக்க முடியாம, தோழி மூலமாத் தணிஞ்சி தான் எடுத்துச் சொல்ல முடியுது…

    பெண்/பெண்-மனம்ன்னு வந்தாலே, இத்தனை தணிவு ஏனோ?:(

    சொக்கரே, ஒரு பெண், தன் காதலன் கிட்ட, “டேய் மடையா…புரிஞ்சிக்கோடா”ன்னு சொல்லும் பாட்டு ஏதாச்சும் இருந்தாப் போடுங்க…Please:)

  • amas32 says:

   உங்கள் பதிலுக்கு பதில்! மனு தர்மத்தின் படி பெண் ஆணை சார்ந்து தானே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது! அப்புறம் எப்படி கணவனையோ துனைவனையோ எதிர்த்துக் கேள்விக் கேட்க முடியும். தழைந்து தானே செல்ல வேண்டியுள்ளது. இன்றும் நிதர்சனமான ஒரு உண்மை, பெண், தந்தை, தமையன், மகன் அல்லது மருமகனை சார்ந்து தான் இருக்கிறாள் என்பதே.
   amas32

 2. பொதுவா எட்டுத் தொகை நூல்கள்….பல புலவர்கள் பாடிய தொகுப்பாத் தான் இருக்கும்!
  அகநானூறு/புறநானூறு எல்லாம் பார்த்தீங்கன்னா…நூற்றுக் கணக்கான கவிஞர்கள்!

  ஆனா…ஐந்தே ஐந்து கவிஞர்களை மட்டுமே வச்சித் தொகுத்த நூல்-ன்னா,,,அது
  1. ௧லித்தொகை
  2. ஐங்குறுநூறு

  * முல்லை, குறிஞ்சி முதலான ஐந்து திணைகள் (திணை ன்னா ஒழுக்கம்)
  * ஒவ்வொரு திணைக்கும் ஒரேயொரு கவிஞர்
  * இப்படி ஐந்து கவிஞர்கள்
  – இம்புட்டு எளிமையா ஒரு தொகுப்பு நூல், சங்ககாலப் பதிப்பகத்தில்:)
  —————

  இன்னிக்கி ஒரு தொகுப்பு நூலைப் போட்டா…என்ன வரும்?
  * என் பாட்டை முதலில் வை, என் கதையை முதலில் வை…
  * என் வாசகர்கள் அதிகம்…
  * அது இலக்கியம் அல்ல…இது தான் இலக்கியம்…
  அப்படி இப்படி-ன்னு ஒரே ‘எலக்கியச் சண்டை’ தான்!:))

  ஆனா…1500 ஆண்டுக்கு முன்பே….எத்தனை அழகா…எழுதிய பேர்களைப் பின் தள்ளி, எழுத்தான எழுத்தை மட்டுமே முன் தள்ளி…
  தமிழும், இயற்கையும், காதலும்…ஒன்னோட ஒன்னு கொஞ்சிக் குலாவும் தொகுப்புகள்!

  கலித்தொகை-ன்னு தான் பலருக்கும் தெரியும்!
  ஆசிரியர்(கள்) பெயர் அதிகம் முன்னிறுத்தப்படுவதில்லை! இதுவல்லவோ தமிழ்த் தொண்டு!

  * தமிழை வைத்துத் தன் பிழைப்பு நடத்துவது ஒரு வகை!
  * தமிழ் பிழைக்க வேண்டுமே என்று தன்னை வைத்துக் கொள்வது இன்னொரு வகை!

  • இதை எதுக்கு இங்கே சொன்னேன்-ன்னா…

   கலித்தொகையில் ஒரு பகுதியை எழுதியவரே தான்…மொத்த நூலையும் தொகுத்ததும் கூட!
   = அவர் பேரு நல்லந்துவனார் (நல் + அந்துவன்)

   ஆனா…தான் பாடியதை முன்னுக்குத் தள்ளாமல்…மத்தவங்க பாடியதை முதலில் வைத்து…கடேசியா, தான் பாடியதை வைக்கிறார்!
   திணை வரிசையும் மாறி மாறித் தான் இருக்கு!

   * பாலைத்திணை = பெருங்கடுங்கோ
   * குறிஞ்சித்திணை = கபிலர்
   * மருதத்திணை = மருதன் இளநாகன்
   * முல்லைத்திணை = சோழன் நல்லுருத்திரன்
   * நெய்தல் திணை = நல்லந்துவன் (கலித்தொகை தொகுப்பாளர்)

   தெரியுதா, சங்க காலத் தமிழ் இலக்கியத்தின் அகச்சான்று?
   இது வரை தமிழில் வந்த நாவல்களிலேயே…”இது தான் நாவல்”-ன்னு சொல்லிக் கொள்ளும் ஆட்கள் சங்கத் தமிழிலே இல்லை!!

   நாம பாட்டை மட்டும் படித்து விட்டுப் போய் விடுகிறோம்!
   ஆனா அந்தப் பாட்டின் பின்னாடி தனிமனித ஒழுக்கம், தமிழ் ஒழுக்கம்-ன்னு ஒன்னு இருக்கத் தான் செய்கிறது!
   —————-

  • இது மட்டுமல்ல….

   சங்கத் தமிழ்க் கடவுளான திருமாலைச் (மாயோன்) சொல்லும் சங்கப் பாட்டிலும், இதே கவிஞர், தன் ஆருயிர் நண்பர்-முருக அன்பரான இன்னோரு கவிஞரை…பேர் சொல்லி நயம் பாராட்டுகிறார்…

   தன் கவிதையில், இன்னொருவன்…அதுவும் போட்டிப் பாடல் எழுதறவன்…அவன் பேரு-அவன் கவிநயம் எல்லாம் எதுக்கு?
   அதான் சங்கத் தமிழ் உள்ளம்!
   உள்ளத்தைத் தமிழிலே வைத்தால்…இந்த உண்மையை உணரலாம்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s