துள்ளிக் கொள்வோமே

ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்றுதே குறி … மலை

….யாள மின்னல், ஈழ மின்னல்

….சூழ மின்னுதே!

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்

காற்று அடிக்குதே … கேணி

….நீர்ப்படு சொறித் தவளை

….கூப்பிடு குதே.

சேற்று நண்டு சேற்றைக் குழைத்து

ஏற்று அடைக்குதே … மழை

….தேடி ஒரு கோடி வானம்

….பாடி ஆடுதே

போற்று திரு மால் அழகர்க்கு

ஏற்றமாம், பண்ணைச் சேரிப்

….புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித்

….துள்ளிக் கொள்வோமே.

நூல்: முக்கூடற்பள்ளு (#35)

பாடியவர்: தெரியவில்லை

சூழல்: மழை வரும் நேரம், பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்தமாகப் பாடும் ‘சிந்து’ வகைப் பாடல்

(இந்த எளிய பாடலுக்கு உரை அவசியமில்லை. எனினும் ஒரு சாத்திரத்துக்காக இது!)

ஆற்றில் நாளை வெள்ளம் வரப்போகிறது, அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன.

மலையாள / கேரள நாடு இருக்கிற பக்கத்திலிருந்தும், இலங்கை / ஈழ நாடு இருக்கிற பக்கத்திலிருந்தும் மின்னல்கள் சூழ்ந்து மின்னுகின்றன.

நேற்றும் இன்றும் காற்று பலமாகச் சுழன்று அடிக்கிறது. மரங்களை ஆட்டிவைக்கிறது.

கிணற்றுத் தண்ணீரில் இருக்கும் சொறித்தவளை சத்தமிட்டு மழை வரப்போகும் செய்தியைச் சொல்கிறது.

மழை வந்து வெள்ளம் நிரம்பினால் சேற்றில் வாழும் நண்டு என்ன ஆகும்? அதற்காக அந்த நண்டு முன்னெச்சரிக்கையாக அந்தச் சேற்று மணலைக் கொண்டே தன்னுடைய வளையின் வாசலை அடைக்கிறது.

மழையைத் தேடி ஒரு கோடி வானம்பாடிகள் விண்ணில் பாடிப் பறக்கின்றன.

எல்லோரும் போற்றி வழிபடுகிற அழகர் திருமால். அவருக்குப் பிடித்தமான பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

பண்ணையில் வேலை செய்கிற, சேரியில் வாழ்கிற பள்ளர்களாகிய நாம் அனைவரும் மழையை வரவேற்றுப் பாடுவோம், துள்ளி ஆடுவோம்

துக்கடா

 • தமிழகத்தில் எங்கும் பெருமழை பொழிகிற இந்த நேரத்தில் பொருத்தமான இந்தப் பாடலை வெளியிட்டால் நன்றாக இருக்குமே என்று தேர்ந்தெடுத்துக் கொடுத்த நண்பர்கள் : sudgopal மற்றும் kryes . அவர்களுக்கு நன்றி!
 • காற்று எந்தத் திசையிலிருந்து வீசுகிறது என்பதைப் பொறுத்து வாடை (வடக்கு), தென்றல் (தெற்கு), கீழை (கிழக்கு), மேலை (மேற்கு) என்பார்கள். மின்னலுக்கும் அப்படி விசேஷப் பெயர்கள் உண்டு என்று நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை!
 • தவளை, நண்டு, வானம்பாடி என்று எல்லா விலங்குகள், பறவைகளுக்கும் மழை வரப்போவது முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது. மனிதன்தான் பாவம், அவைகளைப் பார்த்து விஷயம் தெரிந்துகொண்டு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டியவனாக இருக்கிறான், நகரங்களில் அதற்கும் வாய்ப்பு இல்லை, ’டிவி’யில் யாராவது சொன்னால்தான் உண்டு :>
 • இந்தப் பாடல் / நூல் மொத்தமும் ‘பள்ளு’ என்ற வகையைச் சேர்ந்தது. மருத நிலத்துக்கான (வயலும் வயல் சார்ந்த இடமும்) இலக்கியம் இது. விவசாயிகள் / பள்ளர்களின் வாழ்க்கையைச் சொல்லும் சுவையான, எளிய பாடல்கள் இவை. ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோம் என்று’ என பாரதியார் குறிப்பிட்ட ‘பள்ளு’வும் இதுதான்

147/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், இயற்கை, நண்பர் விருப்பம், பள்ளு, வர்ணனை. Bookmark the permalink.

14 Responses to துள்ளிக் கொள்வோமே

 1. nandan says:

  காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்பதைப் பொறுத்து வாடை (வடக்கு), தென்றல் (தெற்கு), கீழை (கிழக்கு), மேலை (மேற்கு) என்பார்கள். மின்னலுக்கும் அப்படி விசேஷப் பெயர்கள் உண்டு என்று நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை! details please

 2. வடக்கு – வாடை
  தெற்கு – தென்றல்
  கிழக்கு – கொண்டல்
  மேற்கு-கோடை

  இப்படித்தான் நான் படித்து இருக்கிறேன் நீங்கள் சொல்வது வேறு மாதிரி இருக்கிறதே

  • ஆம்!
   வடக்கு = வாடை; தெற்கு = தென்றல்
   கிழக்கு = கொண்டல்; மேற்கு = கோடை
   என்பதே இலக்கிய வழக்கு!

   ஆனால் இதைச் சற்றே மாற்றி, பொது வழக்கில்…
   வாடைக் காற்று; தென்றல் காற்று
   கீழைக் காற்று, மேலைக் காற்று
   என்று சொல்வதும் சரியே!

 3. amas32 says:

  மழை விவசாயிகளுக்கு வாழ்வாதாரம். அதனால் தான் மருத நிலத்தவர் ஆடிப் பாடுகின்றனர். நிலத்தில் வேலை செய்யும் ஏழ்மை நிலையில் இருந்தாலும், சேரியில் வாழ்கிற பள்ளர்கள் மழையை வரவேற்றுப் பாடுகிரார்கள்!, துள்ளி ஆடுகிறார்கள்! இறைவனையும் வாழ்வோடு இணைத்து இன்பம் காண்பதும் நம் பண்பாடாக உள்ளது
  amas32.

 4. மிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க நன்றி சொக்கரே….இந்தப் பாட்டு என்னோட அந்தரங்க ஆசை:)
  ————–

  பள்ளு என்பது சிற்றிலக்கியம்-ன்னு சொன்னாலும், உண்மையில் அது பேரிலக்கியம்! மக்கள் இலக்கியம்! கம்பனுக்கே ஆட்டங் காட்டிய இலக்கியம்:)

  அது என்ன பள்ளு?
  பள்ளம் = அதான் பள்ளு!
  பொதுவா வேளாண் நிலம் பள்ளமாத் தான் இருக்கும்! வரப்பு தான் மேலாக்க இருக்கும்!
  உழுது உழுது வந்த பள்ளம்! ஆழ உழுதல்!

  பள்ளத்தில் வேலை செய்வதால் = பள்ளன்/பள்ளத்தி
  உழவு செய்வதால் = உழவன்/உழத்தி
  அவர்கள் பாடுவது பள்ளுப் பாட்டு = பள்ளத்தில் பாடும் பாட்டு
  ———–

 5. பள்ளுப் பாட்டின் சில அமைப்புகள், சிலப்பதிகாரத்திலேயே இருக்கு! ஏர்மங்கலம், முகவை, உழத்திப் பாட்டு-ன்னுல்லாம் இளங்கோ சொல்லுவாரு!

  இதுக்கு யாரும் சந்தம் போடத் தேவையே இல்லை! பாட்டுலயே சந்தம் வந்துரும்! ஆடிக் கொண்டே பாடும் பாட்டு!!
  ———-

  பள்ளு = மக்கள் ரொம்ப காலமாப் பாடி வந்த பாட்டு தான்!
  ஆனா யாரும் எழுதி வைக்கலை!
  முக்கூடற்பள்ளு தான் முதலில் எழுதி வைக்கப்பட்டது!
  இதன் எளிமை, ஓசை நயம், பெரிய hitஆக….பின்னாளில் இன்னும் சில பள்ளு நூல்கள் எழுதப்பட்டன….

  ஆனா அவையெல்லாம் தில்லைப்பள்ளு, சீகாழிப் பள்ளு, ஞானப் பள்ளு-ன்னு ரொம்ப “மேதாவித்தனமா” இருக்கும்!

  படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் கதையா…சமயம்/புராணத்துக்கு எல்லாம் பின்னாளைய புலவர்கள் பள்ளு எழுத ஆரம்பிச்சிட்டாங்க….
  ஆனா பள்ளுப்பாட்டில் இயற்கையா இருக்கும் கிராம மக்கள் வாழ்வு, அவிங்க இன்ப உணர்வு இதெல்லாம் இந்த நூல்களில் வரலை!

  எனவே முக்கூடற் பள்ளு மட்டும் தனித்துத் தெரிகிறது! தமிழ் இலக்கியத்தில், மக்கள்-இலக்கியமாகப் பெருமையுடன் நிற்கிறது!

 6. காட்டைக் கொஞ்சமா அழிச்சி, வேளாண் நிலம் உருவாச்சு!
  அந்தக் காட்டுக்குரிய தமிழ்க் கடவுள் = மாயோன் (எ) திருமால்!
  அதான் பழைய தொடர்பிலேயே, முல்லைத் தெய்வத்தை, மருத மக்கள் மறக்காமல் பாடுகிறார்கள்!

  //போற்று திரு மால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணைச் – சேரிப்
  புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிக் கொள்வோமே//

  மருத நிலம் ஆக்கியவன் = மன்னன்!
  அதனால் “வேந்தன்” என்பவனே மருதத் திணையின் தெய்வம் ஆனான்! அதே போல் நெய்தலுக்கு=வருணன்!

  ஆனால் மக்கள் முதலில் வாழ்ந்து, தழைத்து, பின்னர் நகர்ந்து குடியேறினாலும்….தங்கள் பழைய தமிழ்ப் பண்பாட்டையும் கூடவே எடுத்துச் செல்கிறார்கள்!
  அப்படித் தான் தமிழ்க் கடவுளான மாயோனையும், சேயோனையும் (திருமால்-முருகன்) எடுத்துச் செல்கிறார்கள்! கூத்தும் கோயிலும் எடுக்கிறார்கள்!
  ————

  முக்கூடற் பள்ளு – இதில் திருமால் பற்றிய குறிப்புகள் வருமே தவிர…ஞானப் பள்ளு போல் மேதாவித்தனமா எல்லாம் இருக்காது! மக்கள் வாழ்வியலை ஒட்டிய அளவில் மட்டுமே பேசப்படும்!
  மற்றபடி முழுக்க முழுக்க, வயல் காட்சிகள், மழைக் காட்சிகள், நண்டு-பறவை-பூ-மரம்-காற்று-ன்னு அமர்க்களப்படும்:)))

 7. முக்கூடற் பள்ளு = ஒரு சின்னக் கதை…
  தலைவன் பேரு = அழகன் (அட, மதுரைக்காரன்!)

  ஐயாவுக்கு முக்கூடற் பள்ளி-ன்னு ஒருத்தி! ஆனா போதாது-ன்னு மருதூர்ப் பள்ளி-ன்னு இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டான்:))
  புதுத் துடைப்பம் நல்லாப் பெருக்கும் கதையா…புதியவளிடம் மயங்கிக் கிடக்கிறான்!

  ஆத்துல தண்ணி வந்தும், நிலத்துக்கு நீர் பாய்ச்சி வேளாண் செய்யாம….அவளிடமே வேளாண் செய்து கிடக்கிறான்:))

  இதுனால முத்தவ கோச்சிக்கிட்டு, பண்ணையாரிடம் சென்று அழுவ…அவர் அவனைக் கூப்பிட்டு அனுப்பி, அப்பப்போ விவசாயமும் பார்க்கச் சொல்லுறாரு:)

  இளைய மனைவி = சைவ சமயம்! மூத்தவ = வைணவம் போல…அதுனால இருவருக்கும் நடக்கும் உரையாடலில் செம “பிரியாணிச் சுவை” இருக்கும்:)))

  நிலத்தில் சரியா வேளாண்மை செய்யாததால், பள்ளனைப் பண்ணையார் தண்டிக்க…மூத்தவள் தான் காப்பாற்றுகிறாள்!
  இதனால்…மூத்தவ-இளையவ ரெண்டு பேரும் ஒற்றுமையாகி, பள்ளனோடு…இதுக்கு மேல நீங்களே கற்பனை செஞ்சிக்கோங்க:))
  ————-

  இந்தப் புலனத்தில்…நடக்கும் ஒவ்வொரு விவசாயக் காட்சியும், முக்கூடற்பள்ளு மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டும்! சந்த ஓசை துள்ளும்! நாட்டுப்புறப் பாட்டு-ன்னாலே தனி ‘கிக்’ தான்:) என்ன சொல்றீங்க?:))

 8. இப்போ….பாட்டைப் பார்க்கலாமா?

  எத்தினி பேரு, மழை வருவதற்கு 10நிமிடம் முன்பே, மழைக்காகக் காத்திருந்து, மழை வாசம் புடிச்சி, மழையில் நனைஞ்சி இருக்கீக? கையைத் தூக்குங்க!:))
  —————–

  ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி!
  = குறி (சமிக்ஞை) தோன்றுது…என்னெல்லாம்?

  மலையாள மின்னல், ஈழ மின்னல்….சூழ மின்னுதே!
  = மலையாள மின்னல் = மேற்கு பக்கம்
  = ஈழ மின்னல் = தெற்கு பக்கம்!

  அப்போ…இது என்ன பருவக் காற்று? தென்மேற்குப் பருவ மழை! (ஆடி மாசம்)
  எப்படி, ஒத்தை வரியில், Information வருது பாருங்க…யாரு புத்திசாலி? Science மனப்பாடம் பண்ண நாமா? இல்லை…Scienceஐ அன்றாட வாழ்க்கையில் அணுகிப் பார்க்கும் கிராம மக்களா?
  —————-

 9. நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே
  = ரெண்டு நாளாக் காத்து அடிக்குது, சரி! அது என்ன “கொம்பு சுற்றி”??

  கொம்பு-ன்னு நீண்ட வாத்தியம்! கேரளா வாத்தியம் பார்த்து இருக்கீக-ல்ல? அதே போல!
  அந்தக் கொம்பு இசை…உய்ய்ய்ய்ய்ங் ன்னு நீண்டு ஒலிக்கும்! ஊதுவதை நிறுத்தினாலும், அந்தப் பழைய உய்ய்ய்ய்ங்…கொஞ்ச நேரம் காதில் ஒலிச்சிக்கிட்டே இருக்கும்! அது போல….காற்று ஊதி ஊதி அடிக்குது! = கொம்பு சுற்றுதே!
  ——————-

  கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடு குதே
  = கேணி aka குளம்:)
  = அதுல சொறித் தவளை!
  சொறி நாய் தெரியும்! அதென்ன சொறித் தவளை?

  தவளைக்கு ஒரு பகுதி மழமழ-ன்னும், கீழ்ப்பகுதி சொற சொற-ன்னும் இருக்கும்! நகர வசதியாக…
  அந்த “சொறி”த் தவளை கூப்புடுதாம்? யாரை? = அனுஷ்கா தவளையை ரசிகத் தவளைகள் கூப்புடுறாப் போல!:))

  அட, மழைக்காலம்-ங்க! தவளை இனப்பெருக்கம்! அதான் குளத்தாண்ட ஒரே சத்தம் (அ) தவளை ட்வீட்ஸ் 🙂
  ——————

 10. சேற்று நண்டு சேற்றைக் குழைத்து ஏற்று அடைக்குதே
  = இதைச் சொக்கனே பதிவில் சொல்லிட்டாரு!

  வயல் நண்டு ரொம்ப பயந்த சுபாவம்! தவளை போல, மழையில் தாவிக் குதிக்காது! வெடுக்-ன்னு வளைக்குள்ளாற போயி மூடிக்கும்! ஆனா…மத்த நேரங்களில்? = நண்டு கொழுத்தா வளையில் தங்காது:))

  நம்ம வீட்டுக்கு paint அடிப்பது போல் அடிக்குதாம்! சேற்றைக் குழைத்து ஏற்று அடைக்குதே!! வளையைத் தானே அடைச்சிக்குது!
  ———————-

  மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே
  = மழை வருமா வருமா?-ன்னு துள்ளல் மகிழ்ச்சியில் வானம்பாடிப் பறவைகள் ஆடுகின்றன!
  ஒரு கோடி வானம்பாடி-ன்னவுடனே Census எடுக்காதீக:)
  அந்தக் கோடி வானம்பாடியில் நானும் ஒருவன்! என் முருகனும் ஒருவன்:))
  ———————-

  போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை
  = பண்டைத் தமிழ்க் கடவுளான திருமால் = காட்டழகிய கள்ளழகன் = அவருக்கு ஏற்றமான பண்ணிலே (குரவைக் கூத்து மெட்டிலே)

  சேரிப் புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிக் கொள்வோமே
  = வாங்க, எல்லாரும் (சேரி வாழ் பள்ளர்/உழவர்) ஆடிப் பாடி…துள்ளுவோம்! துள்ளுவோம்!

 11. * நாம என்னிக்காச்சும் மழையை ஆர அமர ரசிச்சி, வாசம் புடிச்சி இருக்கோமா?
  * மழைக்கு முன்னும் பின்னும் இயற்கையில் என்னென்ன மாற்றம் நடக்குது-ன்னு பாத்திருக்கோமா?
  * அட, ECR ரோட்டில், வேகமா Bike ஓட்டிக்கிட்டே..மழைக்கு எதிராப் படபட-ன்னு நனைஞ்சி இருக்கோமா?:))

  weather.comஇல் பாத்தா தான் தெரியும் மழை வருதா-ன்னு!
  என் அலுவலகப் பையன் ஒருத்தான் இருக்கான்..இன்னும் மோசம்! newyork livecam-இல் மழை வருதா-ன்னு பாத்துட்டு, குடை எடுத்துக்கிட்டுப் போவான், சாப்பாடு வாங்கியாற 🙂

  டேய் Oleg…Wassup? வந்து முக்கூடற் பள்ளு படிடா…அப்பறம் தெரியும் மழையின் இன்ப வாசம்!:))

  தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல்….வாழ உலகினில் பெய்திடாய் ரெம்பாவாய்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s