நெஞ்சு அறியாள்

கோள் தேங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என்

வேட்டு அங்குச் சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே

குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை

வெறும் கூடு காவல் கொண்டாள்

நூல்: முத்தொள்ளாயிரம்

பாடியவர்: தெரியவில்லை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தென்னை மரங்களில் தேங்காய்கள் குலைகுலையாகக் காய்த்திருக்கும் மதுரை நகரம். அதன் தலைவனாகிய பாண்டியன் கம்பீரமாக வீதி உலா வருகிறான். அவனைப் பார்க்க என் நெஞ்சு துடிக்கிறது.

ஆனால், என் தாய்க்கு இந்தத் தவிப்பு புரியவில்லை. என்னை வீட்டுக்குள் அடைத்துப் பூட்டிவிட்டாள்.

காட்டில் ஒரு வேடன். காடையைத் துரத்திச் சென்றான். அது தன்னுடைய கூட்டுக்குள் நுழைந்துவிட்டது.

அந்த வேடன் கவலைப்படவில்லை. ‘எப்படியும் அந்தக் காடை வெளியே வந்துதானே தீரவேண்டும்? அப்போது பிடித்துக்கொள்கிறேன்’ என்று அங்கேயே உட்கார்ந்துகொண்டான்.

ஆனால் அவனுக்குத் தெரியாத விஷயம், காடை வேறு வழியாக எப்போதோ வெளியேறிவிட்டது. வேடன் பாவம், வெறும் கூட்டைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறான்.

என் தாயும் அப்படிதான். என்னை வீட்டுக்குள் வைத்துப் பூட்டினாலும், என் மனம் எப்போதோ பறந்து சென்று அந்தப் பாண்டியனுடன் கலந்துவிட்டது. அது தெரியாமல் வெறும் உடம்பைக் காவல் காக்கிறாள்.

துக்கடா

 • இந்தப் பாடலின் கடைசி வரியில் உள்ள கூடு, காடைக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும். காரணம், உடலைக் ‘கூடு’ என்று சொல்வது வழக்கம். ’கூடு விட்டுக் கூடு பாய்வது’ என்ற பதம் இப்படி வந்ததுதான்!
 • வார்த்தை பிரிக்காத வெண்பா வடிவம்:
 • கோள்தேங்கு சூழ்கூடல் கோமானைக் கூடஎன்
 • வேட்டங்குச் சென்றஎன் நெஞ்சறியாள் … கூட்டே
 • குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
 • வெறுங்கூடு காவல்கொண் டாள்.
145/365
Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், காதல், பாண்டியன், முத்தொள்ளாயிரம், வெண்பா. Bookmark the permalink.

6 Responses to நெஞ்சு அறியாள்

 1. என்னவொரு அழகிய கவிதை!
  நாம யாராச்சும்….மனசை எங்கோ ஓட விட்டு, வெறும் உடம்பைப் பிடிச்சிக்கிட்டு இருப்போமா?
  பல நேரங்களில் நாம அப்படித் தானே இருக்கிறோம் என்கிறீர்களா?:)

  * வகுப்பில் வெறும் உடம்பு! மனமோ பிரபல சினிமா நடிகரும் அவர் காதல் மனைவியும் தோன்றும் கொலவெறிப் பாட்டில்!
  * அலுவலகத்தில் வெறும் உடம்பு! மனமோ ட்விட்டரில்:)
  இப்படிப் பல…

  மருத்துவர்கள் இப்படி இருக்க முடியுமா?:)
  உடலும், மனமும் ஒருமித்து இயங்கினால் தான் பிறர் நோய் தீர்க்க முடியும்!
  இந்தப் பாட்டிலும் அப்படியே! உடலும், மனமும் ஒருமித்துப் பார்க்காமல், ஒரு அன்னை, உடலை மட்டுமே பார்க்கிறாள்! காவல் வைக்கிறாள்!

  சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
  நிறைகாக்கும் காப்பே தலை – என்பார் ஐயன்!

  • உடலை ஒடுக்கி வைக்கலாம்! உள்ளத்தை ஒடுக்க முடியுமோ?
   சஷ்டி விரதம்-ன்னு உடலை ஒடுக்கினாலும், உள்ளம் மட்டன் பிரியாணியை யோசிச்சிக்கிட்டு இருந்தா?:))

   இந்த அன்னை, உடலை ஒடுக்கினால், உள்ளத்தை ஒடுக்கி விடலாம்-ன்னு நினைச்சிட்டாப் போல…
   காதல், வீரம், தியாகம், எதிலுமே….உள்ளத்தை ஒடுக்க முடியாது! உடம்பை மட்டும் சும்மானா ஒடுக்கி வைக்கலாம், பேருக்கு! அவ்வளவே!
   ———

   பூழ் = காடை
   குறும்பூழ் = சிறு காடை!
   ஆங்கிலத்தில் Quail என்பார்கள்! கோழி போல இருக்கும்! ஆனா முட்டை பெருசு!
   Chicken உண்பது இன்று பெருத்து விட்டாலும், காடை/கெளதாரி உண்பது கிராமத்துப் பக்கமே!…

   • மிக அருமையான பாடல். கொணர்ந்த @chokkan னுக்கும் பின்னூட்டிய @kryes க்கும் மட்டற்ற நன்றிகள்.

    இந்தப் பாடல் — அதுவும் கடைசி அடி — “அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள்” — பெரும் இடி! இடியோடு கூடிய மின்னல், களேபரமாக என்னைத் தாக்குகின்றது. காரணம் இதோ.

    அக்காலத்தில் சில அன்னைகள் தங்கள் பிள்ளைகளை காதலர்களிடம் இருந்து மட்டுமே, பிரித்து, சிறைவத்தார்கள். ஆனால் இந்த விஞ்சான யுகத்தில், புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மிடையே புற்று நோயாக முளைத்திருக்கும் ஒரு புதிய நோய்: பச்சிளங்குழந்தைகளின் சிறைபிடிப்பு. ஆம், இது ஒரு புது ரகம்; முடிவில்லா சோக ராகம்!

    மனதால் குரூரமாக சிந்திக்கும் சிலர் தாயாகவும் தந்தையாகவும் பதவி உயர்வு பெறும்போது, இத்தகைய அவலங்கள் நேருகின்றது. “குழந்தைக்கு தாய் தேவையில்லை” என்று சில தந்தைகளும், “தந்தை தேவையில்லை” என்று சில அன்னைமார்களும், தன்னிச்சையாய் முடிவெடுத்து, அதில் சட்டத்தையும் அது தரும் நிழலையும் தவறாக பிரயோகப்படுத்தத் துணிந்து, ஈன்றெடுத்த தம் மக்களையே மற்றொரு பெற்றவரிடம் இருந்தே பிரிக்கத் துணியும்போது, அங்கே அக்குழந்தையின் நிலையை விவரிக்கும் விதமாக இப்பாடல் ஒரு புது பரிமாணத்தை அளிப்பதாகவே நான் உணர்கின்றேன்!

    “இந்த அன்னை, உடலை ஒடுக்கினால், உள்ளத்தை ஒடுக்கி விடலாம்-ன்னு நினைச்சிட்டாப் போல…” என்று KRS கூறுவது நூற்றில் ஒரு வரி என்றாலும், வளர்ந்த பைங்கிளியின் சிறைவாட்டம் போல அல்ல குழந்தைகளின் சிறைவாட்டம். காதலியை அன்னை சிறைவைக்கும் போது ஏற்படுவது வெறும் பசலை நோயே! ஆனால் சிற்றிளம் சிறார்களும், சிறுமியர்களும் பெற்றவர்களாலேயே சிறைவைக்கப்படும்போது, அவர்களுக்கு ஏற்படும் மனத்துயரம் சொல்லி மாளாது.

    ஆங்கிலத்தில் இச்சிறைபிடிப்பிற்கு பெயர் International Parental Kidnapping மற்றும் International Parental Child Abduction என்பதே. அமெரிக்கா முதலாக வளர்ந்த 85+ நாடுகளில் இது குற்றவியல் குற்றம். ஆனால், இந்தியாவில் அதெல்லாம் ஒன்றும் இல்லை! இதனால் மேலும் மேலும் குழந்தைகள் பெற்றோர்களால் அனுதினமும் கடத்தப்படுகின்றார்கள். அடுத்த முறை விமானத்தில் அத்தகைய ஒரு குழந்தை பயத்தோடும், அழுகையை அடக்கிய வண்ணமாய் அமர்ந்திருந்தால், இந்த பின்னூட்டம் கண்டிப்பாய் உங்கள் நினைவில் வரும் 😦

    இதனைப் பற்றிய ஒரு அறியாமையே அதிகம் உள்ளதால், இதெல்லாம் ஒரு விசயமா என்று அக்களிக்கும் அவல நிலையில் தான் இன்று நாமிருக்கின்றோம். http://bit.ly/a9Q0Ac மற்றும் http://bit.ly/oB51bA சற்றே இவ்விசயத்தை விளக்க உதவும். தவறாமல் கிளிக்கவும்.

    ஒரு வருடத்தில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 200,000-300,000 குழந்தைகள் பெற்றோர்களால் கடத்தி சிறைவைக்கப்படுவதும், அதிலும் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு தான் அதிகமாக குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்பதும் ஆணித்தரமான புள்ளிவிவரம். இருந்தும் என்ன பயன்?

    இந்திய சட்ட கமிஷன் பரிந்துரைத்தும் கிடப்பில் போடப்பட்ட கிடாவாய், பல குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குரியாகவும் சூனியமாகவும் மாறி வரும் ஒரு அவல நிலையில் ஒன்றும் நடக்காதது போல ஒரு பாசாங்கோடு தான் இந்தியா இருக்கின்றது.

    “உடலை ஒடுக்கி வைக்கலாம்! உள்ளத்தை ஒடுக்க முடியுமோ?” அருமையான கேள்வி, @kryes! வள்ளுவர் கூறியது போல, “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?”

    சில அக்கிரமிகள் குழந்தைகளை அறையின் சிறைத் தாழ்களை போட்டு அடைத்தாலும், அக்குழந்தையின் அன்பின் பறவை, அடைத்த தாழ்களை தகர்த்தெறிந்து, எண்ணச் சிறகுகளை விரித்து, பறந்து போயும் வெறும் கூட்டினை காக்கும் வெட்டி வேலையை செய்கின்றாள் இந்த அன்னை என்ற கருத்தினை வலியுறுத்தும் விதமாக இப்பாடலை நான் பொருள் கொள்கின்றேன்.

    தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி. அருமையான பாடல்; மிக அருமையான கருத்து செறிவு.

 2. amas32 says:

  உடலை சிறை வைக்கலாம், மனதை சிறை வைக்க முடியாது. அது காதலர்களுக்கு மட்டுமே பொருந்தும் கூற்றில்லை. எத்தனை விடுதலை வீரர்களை சிறை வைத்தாலும் அவர்களின் சுதந்திர உணர்வு சிறகடித்துப் பறந்ததால் தான் பல நாடுகளுக்கு விடியல்கள் தோன்றின. உதாரணம், நம் மஹாத்மா, தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மாண்டேலா, பர்மாவின் ஆங் சான் சூ கீ அனைவரும் சிறைப் பறவைகள் தானே!
  amas32

 3. @rexarul இட்ட பின்னூட்டத்துக்கு என்னிடம் பதில் இல்லை! கண்ணீரே உள்ளது:(

  தாய்-தந்தையர்கள் ஒன்றைக் கட்டாயம் உணர வேணும்:
  * தாங்கள் செய்த கலவிக்கு மதிப்பு அளிப்பதாக இருந்தால்…
  * அந்தக் கலவியால் உருவான குழந்தையை…
  * குழந்தையாக நடத்த வேண்டும்; தன் சொத்து/ தன் பாக்கெட் பணம் போல் நடத்தக் கூடாது!

  ஒரு உயிரை நாம் உருவாக்குவதில்லை!
  ஒரு உயிர், நம் மூலமாக, உருவாகிறது!!
  முருகா…..

  • KRS – தங்களது சீரிய தமிழ் புலமையிலும், கருத்தாழத்திலும் என்னையே மெய்மறந்து போய்விடுகின்றேன் நான். இப்பின்னூட்டத்தில் தங்களது ஆதங்கம் 100% என்னுடைய கருத்தை பிரதிபலிக்கின்றது.

   நீதிமன்றங்கள் கூட “கலவியால் உருவான குழந்தையை…குழந்தையாக நடத்த வேண்டும்; தன் சொத்து/ தன் பாக்கெட் பணம் போல் நடத்தக் கூடாது” என்னும் கருத்தை வலியுறுத்தும் விதமாக “A child is not a chattel” என்று தீர்ப்புகளில் திரும்ப திரும்ப வலியுறுத்தினாலும், நடைமுறையில் அதுவே மெய்யாகி விடுகிறது.

   “திருடனா பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..”

   சோகம்!!!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s