அரும் பொருளே

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள், எழுதா மறையின்

ஒன்றும் அரும் பொருளே, அருளே, உமையே, இமயத்து

அன்றும் பிறந்தவளே, அழியா முத்தி ஆனந்தமே!

நூல்: அபிராமி அந்தாதி (#10)

பாடியவர்: அபிராமி பட்டர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அபிராமியே,

எழுதப்படாத வேதத்தின் முடிவாக இருக்கும் அரிய பொருளே, அருள் மயமானவளே, அன்றைய இமயமலை அரசனின் மகளாகப் பிறந்த உமையே, அழியாத வீடுபேற்றை(முக்தியை)த் தருகின்ற ஆனந்தவடிவானவளே,

நான் நிற்கும்போதும், நடக்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும் நினைப்பது உன்னைமட்டும்தான், என்றும் நான் வணங்குவது உன்னுடைய மலர் போன்ற பாதங்களைமட்டும்தான்!

துக்கடா

 • இந்தப் பாடலின் முதல் வரி கிட்டத்தட்ட இதே போன்ற அமைப்பில் நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்திலும் வருகிறது : ‘ஞாலத்தோடே நடந்தும் கிடந்தும் இருந்தும் சாலப் பலநாள் உகம் தோறும் உயிர்கள் காப்பானே’ என்று நாராயணனைப் போற்றிப் பாடுகிறார் நம்மாழ்வார்!
 • இன்றைய அபிராமி அந்தாதிப் பாடலை ஒலி வடிவமாகக் கேட்க இங்கே செல்லலாம் (இதே வலைப்பதிவில் அபிராமி அந்தாதி முழுவதையும் விரிவான விளக்க உரையோடு படிக்கலாம்) : http://kadavur.blogspot.com/2010/06/blog-post_21.html

143/365

Advertisements
This entry was posted in அந்தாதி, அபிராமி, அபிராமி அந்தாதி, அபிராமி பட்டர், பக்தி, வர்ணனை. Bookmark the permalink.

5 Responses to அரும் பொருளே

 1. சென்ற வியாழக்கிழமை அகாடமி வகுப்பில் இந்த நின்றும் கிடந்தும் இருந்தும் எண்ண, அது ஸ்புரிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்; லய விஷயமாய் மட்டுமின்றி சித்தி கொள்ள நினைக்கும் எதுவும் என்று.

  🙂

 2. GiRa says:

  அருமையான பாடல்.

  இந்தப் பாடலுக்குப் போவதற்கு முன்னால் இந்தப் பாடலால் நினைவூட்டப்பட்ட திருவெம்பாவையிலிருந்து சிறு கருத்து. பிறகு பாடலுக்கு வருகிறேன்.

  உலகில் அனைத்தையும் மூன்றில் அடக்கிவிடலாம். அவன் அவள் அது. திருநங்கைகளை என்ன செய்வதா? அதை அவர்களே “அவள்” என்று முடிவு செய்து விட்டார்களே. ஆகா மூன்றில் உலகம் அடங்கும். இது மாணிக்கவாசகர் கூற்று.

  சற்று வேறு விதமாக சிந்தித்தால் சத்து சித்து ஆனந்தம் ஆகிய மூன்றில் உலகம் அடங்கும். இது சைவை சித்தாந்தம். சத்து சிவன். சித்து சக்தி. ஆனந்தம் முருகன்.

  இன்னும் கொஞ்சம் சிந்திப்போம். இகம் பரம் என்று இரண்டுதான். ஆனால் இகபரம் என்றும் ஒன்றுண்டு. இகத்தில் இருக்கும் பொழுதே பரத்தை (பரத்தையை அல்ல) நினைக்கும் நிலை. விளக்கமாப் பாப்போம்.

  இகம் – இந்த வாழ்க்கை. மண்ணுலகில் குழவியாய் மகவாய் நாம் பிறந்து வாழும் வாழ்க்கை. பரம் – பிறந்ததிலிருந்து எப்போதும் தொடர்பிலிருந்த மண்ணை நீங்கிப் பரவாழ்வுக்குச் செல்வது. இந்த இரண்டிலும் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் உண்டு. ஒரே ஆள்தான். வீட்டில் கணவனாக அனுபவிக்கும் இன்பங்கள் ஒருவகை. அலுவலகத்தில் மேலாளராக அனுபவிக்கும் இன்பங்கள் இன்னொரு வகை. இரண்டும் சரியாக இருக்க வேண்டும். ஒன்றில் குறைவிருந்தாலும் அடுத்த இடத்தில் இடிக்கும்.

  இகத்து வாழ்க்கை சரியாக நடந்தால்தால் பரம் பரமசுகம். இகமே சுகமாக இல்லையென்றால் பரம் பம்பரம்தான்.

  இகத்துக்கு அருள்வது அம்மை. பரத்துக்கு அருள்வது அப்பன். ஆனால் அது போதுமா? வெளியூருக்குப் போகும் பொழுது அதற்கு முன்னேற்பாடுகளை செய்து கொண்டுதானே புறப்படுகிறோம். அது போல இகத்தில் இருக்கும் பொழுதே பரத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதுதான் இகபரம். அதற்கு அருள வேண்டியது அம்மையப்பன் (அதாவது முருகன்).

  இதையே இன்னமும் அழகாகச் சுருக்கிக் கச்சியப்பர் கந்தபுராணத்தில் எழுதியிருக்கிறார். எப்படி?

  தோடுடைய செவியன் ஒருபுறம். மரகதமங்கை மறுபுரம். இருவருக்கும் இடையில் குழந்தை முருகன் தகப்பன் மடியில் அமர்ந்திருக்கிறான். இந்தக் காட்சி எப்படியிருக்கிறதாம்?

  ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
  பாலனாகிய குமரவேள் நடுவுரும் பான்மை
  ஞாலமேவுரும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
  மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்

  இரவு பகல் என்று நாளை இரண்டாகப் பிரித்தான். பகலில் வெயில். இரவில் இருட்டு. பகலில் சூரியன். இரவில் சந்திரன். பகலில் செய்வதற்குக் கடமைகள். இரவில் செய்வதற்கும் கடமைகள். ஆனால் அத்தோடு முடிகிறதா? பகலானது இரவாக மாறத் தொடங்கும் மாலைப்பொழுது ஒன்று இருக்கிறது.

  பகலுக்குரிய வெளிச்சம் உண்டு. ஆனால் வெம்மை இல்லை. இரவிற்குரிய குளுமை உண்டு. ஆனால் இருட்டு இல்லை. இப்படி இரண்டின் நல்ல பண்புகள் இணையும் மாலை இனிமையானது என்பது நாம் அனைவரும் ஒப்புக் கொள்வது.

  அப்படி பகலுக்கும் இரவுக்கும் நடுவில் இனிமையான மாலையாக முருகப் பெருமான் அம்மைக்கும் அப்பனுக்கும் நடுவில் இருக்கிறார்.

  இதுதான் மூன்றில் உலகம் அடங்கும் வகை. இன்னும் விரித்துச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதுவே போதுமானது.

 3. GiRa says:

  சரி. பாடலுக்கு வருவோம்.

  அபிராமி பட்டர் சொன்னதற்கும் நம்மாழ்வாரின் அருளிச் செயலில் சொன்னதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் நல்ல கருத்துகள்தான். ஆனால் இந்த வரிகளை வைத்துப் பார்த்தால் சொல்லும் கருத்துகள் வேறு.

  ஆழ்வார் அனைத்தையும் பார்க்கிறார். உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. விழிக்கிறது. உழைக்கிறது. உறங்குகிறது. இப்படி உலகத்தோடேயே இயங்கி உகவுகமாய் (யுகயுகங்களாய்) உலக உயிர்களைக் காப்பவன் என்று நாராயணனைப் புகழ்கிறார் நம்மாழ்வார்.

  பட்டர் சிந்திப்பது வேறு வகையில். இன்னும் சொல்லப்போனால் முதல் வரியிலேயே பாடல் முடிந்து விடுகிறது. இலக்கணத்திற்காக அடுத்து மூன்று வரிகள். அவைகளும் சுவையானவைதான். நாம் முதலடியை மட்டும் பார்ப்போம்.

  நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை

  இதற்கு எப்பொழுதும் உன்னையே நினைக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே? அதென்ன நின்று இருந்து கிடந்து நடந்து எனச் சொல்வது?

  நாமெல்லாம் குழந்தைகளாகத்தான் இந்த உலகில் பிறக்கிறோம். பிறந்த பொழுதிலிருந்தே உண்கின்றோம். மூச்சு விடுகிறோம். மலம் கழிக்கிறோம். அப்படியிருக்கும் பொழுது நாம் அன்னையின் முழுக்கட்டுப்பாட்டில்தான் இருக்கிறோம். எது நடந்தாலும் அவள் பொறுப்பு.

  ஆனால் எப்பொழுது நிலை மாறுகிறது. படுத்துத் தவழ்ந்து உருண்டு விளையாடிக்கொண்டிருக்கும் நாம் எழுந்து நிற்கும் பொழுது நிலைமை மாறிவிடுகிறது. வாழ்க்கையில் முதன்முறையாக நம்முடைய கால்களால் நிற்கிறோம். அப்பொழுதுதான் வாழ்க்கை முறையே மாறத்தொடங்குகிறது. பிடிக்க வரும் அன்னையிடமிருந்து கூட ஓடும் வேகம் வருகிறது. அதற்கு எழுந்து நிற்பது வாழ்வின் முதல் நிலை.

  அடுத்து என்ன? இருப்பது. வாழ்க்கையை வாழ்ந்து இருப்பது. அவரவர்க்கு வாய்க்கப்பட்ட வகையில் இந்த உலகத்தில் வாழ்ந்து இருப்பது வாழ்வின் அடுத்த நிலை.

  வாழ்வின் இன்பதுன்பங்களையெல்லாம் பட்டுத் தெரிந்து நொந்து வயதேறி நலங்குன்றி கட்டிலில் கிடப்பது அடுத்த நிலை. நேரம் எப்பொழுது வருமோ என்று காத்துக் கிடப்பது.

  ஆவி போனதும் நால்வர் துணையோடு இறுதி யாத்திரை நடப்பது இறுதி நிலை.

  இப்படியான வாழ்க்கை நிலைகளை எல்லாம் சொல்லி, இந்த வாழ்க்கை முழுவதும் நினைப்பது அம்மையே உன்னைத்தான் என்கிறார் பட்டர்.

  இது ஒருவகைப் பொருள்.

 4. GiRa says:

  இரண்டாவது பொருளுக்கு வருவோம்.

  நாமெல்லாம் கோயிலுக்குச் செல்கிறோம். அங்கு என்னென்ன செய்து இறைவனை வணங்குகிறோம்? புளியோதரையில் புரந்தரியையும் சர்க்கரைப் பொங்கலில் சங்கரியையும் பார்த்து வணங்கி விழுங்கி மரியாதை செய்வது ஒருவகை. அதை இங்கே இப்பொழுது பேச வேண்டாம். 🙂

  கோயிலுக்குச் செல்கிறோம். இறைவன் முன்னால் நிற்கிறோம். அவனுக்குச் செய்யும் பூசனைகளைக் கண்டு மெய்மறந்து இருக்கிறோம். இறைவன் திருவடிகளில் விழுந்து கிடந்து வணங்குகிறோம். அவனைச் சுற்றி நடந்து வலம் செய்து வழிபடுகிறோம்.

  இப்படித் திருக்கோயிலில் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நாமெல்லம் இறைவியை நினைக்க வேண்டும் என்பதற்காக பட்டர் சொன்ன பாடல் இது.

  இது இன்னொரு பொருள்.

 5. amas32 says:

  நம் வாழ்வின் நோக்கமே முக்தி தான். அதை அடைய ஒரே வழி இறைவனின்/இறைவியின் கமல மலர் பாதங்களைப் பற்றுவது தான். நாலு சிறிய வரிகளில் உண்மையை எளிமையாக எடுத்துரைக்கும் இப்பெரியோர்களும் இறை அம்சமே!
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s