இளம்பெயர்கள்

மாற்ற அரும் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று

ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே

நூல்: தொல்காப்பியம் (மரபியல், பாடல் #1)

பாடியவர்: தொல்காப்பியர்

மரபு வழியை மாற்றுவது கடினம். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, தமிழில் உள்ள இளமைப் பெயர்கள் ஒன்பது:

 1. பார்ப்பு
 2. பறழ்
 3. குட்டி
 4. குருளை
 5. கன்று
 6. பிள்ளை
 7. மகவு
 8. மறி
 9. குழவி

துக்கடா

 • இந்த ஒன்பது பெயர்களும் எங்கே எப்படிப் பயன்படுத்தவேண்டும்? அடுத்தடுத்த பாடல்களில் அதையும் விளக்குகிறது தொல்காப்பியம்:
 • பார்ப்பு : பறவைகள், குரங்குகள் மற்றும் ஊர்ந்து செல்வனவற்றின் குழந்தை
 • பறழ் : எலி, அணிலின் குழந்தை
 • குட்டி : எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, குரங்கின் குழந்தை
 • குருளை : நாய், பன்றி, புலி, முயல், நரியின் குழந்தை
 • கன்று : யானை, குதிரை, கழுதை, பசு, எருமை, மான், கரடி, ஒட்டகத்தின் குழந்தை
 • பிள்ளை : பன்றி, புலி, முயல், நரி, குரங்கின் குழந்தை
 • மகவு : குரங்கின் குழந்தை
 • மறி : ஆடு, குதிரை, மானின் குழந்தை
 • குழவி : யானை, பசு, எருமையின் குழந்தை
 • அப்போ மனிதக் குழந்தைகளுக்கு?
 • இரண்டே வார்த்தைகள்தான் : குழவி, மகவு. மற்ற எதையும் மனிதக் குழந்தையைக் குறிப்பிடப் பயன்படுத்தக்கூடாது என்கிறது தொல்காப்பியம் … உங்கள் குழந்தையைச் ‘செல்லக் குட்டி’ என்று கொஞ்சுவது இதில் சேராது :>

142/365

Advertisements
This entry was posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல். Bookmark the permalink.

12 Responses to இளம்பெயர்கள்

 1. amas32 says:

  நாய் குட்டி, புலிக்குட்டி போன்றவை சாதாரணமாக வழக்கில் உள்ளன. பசுவின் கன்று, எருமையின் கன்று என்று தான் இப்பொழுதும் கூறுகிறோம். முயல் பிள்ளை கேள்விப்பட்டு இருக்கிறேன். மகவு, குழவி என்று இன்றும் மனிதக் குழந்தைகளைக் குறிப்பிடுகின்றோம். மகப்பேறு மருத்துவமனை என்று தானே பிரசவ மருத்துவமனை முகப்பு போர்டுகள் சொல்லுகின்றன. பார்ப்பு, பறழ், குருளை, மறி ஆகியவை நான் தெரிந்து கொண்ட புதிய இளமை பெயர்கள்.
  amas32

 2. Sathya says:

  வாவ். அருமையான தகவல்கள்.

 3. G.Ragavan says:

  நல்ல பாடல். தொல்காப்பிய உரையே எழுதலாமே 🙂

  இந்தக் குருளை என்ற சொல் கம்பராமாயணத்தில் ஒரு சுவையான கட்டத்தை நினைவூட்டுகிறது.

  கைகேயி வரம் வாங்கி விட்டாள். இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

  அதிலொருவன் இலக்குவன். உடன் பிறந்த பிறப்பின் உண்மையைப் புரியாதொரு மூடநிலையில் சொல்கிறான்.
  சிங்கக் குருளைக்கு இடு தீம்
  சுவை ஊனை, நாயின்
  வெங் கண் சிறு குட்டனை
  ஊட்ட விரும்பினாளே!

  கைகேயிசைத்தான் நேரடியாகத் தாக்குகிறான். ஆனால் உள்ளே அவன் தாக்குவது பரதனை. இதுதான் இலக்குவனின் சிந்திக்கும் தகுதி.

  சிங்கக் குருளைக்கு (இராமன்) ஊட்ட வேண்டிய இனிய சுவையுள்ள உணவினை, கண்பொங்கி ஊழை வடியும் கண்களை உடைய ஒரு நாய்க்குட்டிக்கு (பரதன்) ஊட்ட விரும்பினாளே!

  தன்னுடைய தமயனை இப்படிப் பேசும் ஒரு பாத்திரம்தான் இலக்குவன் பாத்திரம்.

  இராமன் காட்டிற்குப் போய் பதினான்கு ஆண்டுகள் துன்பப்பட்டார் என்று சொல்வார்கள். அப்படிப் பட்ட அத்தனை துன்பங்களையும் சில நாட்களில் அனுபவித்தான். அவனைப் பெற்ற தாய் அவனைப் புரியாமல் வரம் கேட்டாள். கோசலையோ அவன் ஒன்றும் தெரியாதது போல நடிக்கிறான் என்று நினைத்தாள். இதோ இலக்குவனோ இப்படி. குகனும் பரதனைப் பார்த்ததும் தவறாகத்தானே நினைத்தான். இவர்களெல்லாம் கிடக்கட்டும் வசிட்டன் இருக்கிறானே, அவன் இன்னும் கொடிது செய்தான். பாட்டன் வீட்டிலிருந்து வந்து நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு வருநதியிருக்கும் பொழுது அவனிடத்தில் போய் “எப்பொழுது பட்டாபிஷேகம் வைக்கட்டும்” என்று கேட்கிறான்.

  இப்படி அனைவராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதனால் பரதன் பட்ட துன்பம் பெரிது என்பதால்தான் தன்னை நிரூபிக்க கடிய பெரிய முடிவுகளை எடுக்கிறான்.

  ஏன் இந்த நிலை? சற்று சிந்தித்துப் பார்த்தால் கம்பன் காட்டும் ஒரு உண்மை புரியும். எங்கு தனிமனித வழிபாடு அதிகரிக்கிறதோ, அங்கு அடுத்தவரைப் புரிந்து கொள்ளும் நல்ல பண்பு குறைந்து போகும். இராமன் நல்லவனாகவே இருக்கட்டும். ஆனால் அவன் மீது வைத்த அதீத அன்பும் அளவுக்கு மீறிய வழிபாடும், பின்னாளில் ஆயிரம் இராமனும் உனக்கு ஒக்கார் என்று புகழப்பெற்ற மாண்புடைய பரதன் என்ற ஒப்பற்றவனைப் புரிந்து கொள்ளாத நிலையை உண்டாக்கி விட்டது.

  இதை இன்றும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். நமக்குப் பிடித்த எழுத்தாளர், அரசியல்வாதி, பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், நடிகர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

 4. Vijay says:

  பாடல், சொக்கனின் விளக்கம் ஆகியவற்றைவிட ராகவனின் விளக்கம், கருத்து அருமை.

  • GiRa says:

   பாராட்டுகளுக்கு நன்றி விஜய்.

   இது ஒரு பட்டி மன்றம் போல. இங்கு எல்லாரும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. சொக்கன் தொடக்கி வைப்பார். நான் அதைப் பிடித்துக் கொண்டு எதையாவது சொல்வேன். 🙂 எழுதியதைத் திரும்பப் படிக்கையில் செய்திருக்கும் சிறு தவறுகள் புரிகின்றன. அவைகளை அடுத்த முறையிலிருந்தேனும் நீக்க வேண்டும்.

   உயிர் 12. மெய் 18. அவ்வளவுதான். ஆனால் இந்தப் பன்னிரண்டும் பதினெட்டும் கலந்து நம்மை எவ்வளவு சிந்திக்க வைக்கின்றன. பேச வைக்கின்றன. விட்டால் பேச கருத்துகள் உண்டு. அதை எடுத்துச் சொல்ல சொக்கனின் இந்த வலைப்பூவும் உண்டு. 🙂

   • நல்ல பகிர்வு.
    அந்தப் பகுதில இருக்குற நிறைய பாடல்கள் பிரமாதமா இருக்கும். ‘கோவப்படாத’ அப்படின்னு இராமன் சொல்லும்போது, இதுக்கு கோவப்படாம, நான் வேற எதுக்குயா கோவப்படுவேன்-னு தன்னோட அன்பால வந்த கோவத்தை நியாயப்படுத்துவான்:
    யாண்டோ, அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது?’ என்றான்

    பரதனைப் புரிஞ்சிக்கிட்டது இராமன் ஒருத்தன் தான் அப்படிங்கிறதுக்கு சான்றா ஒரு வரி:


    ‘மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
    பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?

    அப்படின்னு இராமன் கைகேயி கிட்ட சொல்றான்.

    ஒரு அர்த்தம்: “உங்க அப்பா காட்டுக்கு போக சொன்னாரு”ன்னு எல்லாம் ஏம்மா சொல்ற. நீ சொன்னா நான் போகமாட்டேனா? (ஒருவேளை இது மன்னவன் இட்ட பணி இல்லை என்றாலும், நீ சொன்னாலே நான் போக மாட்டேனா). என் பின்னவனான பரதனுக்கு கிடைத்த இந்த ராஜ்ஜியம் எனக்கே கிடைச்ச மாதிரி தான் எனக்கு.

    இது நெகிழ்ச்சியான அர்த்தம். இன்னொரு அர்த்தம் :

    மன்னவன் பணி அன்று. ஆகின் நும் பணி மறுப்பேனோ? : இது எங்க அப்பா இட்ட கட்டளை இல்லைன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் நீ சொன்னாலும் நான் போவேன் (ஆனால்…)

    என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேனேன் பெற்றதன்றோ – நான் துறவுக்கோலம் பூண்டு அரசாட்சியை விட்டு விலகும் ‘செல்வத்தை’ பெறுகிறேன். நான் முன்னமே பெற்றுவிட்ட இச்செல்வத்தைத் தான் என் தம்பியும் பெற்றுக்கொள்வான்.

    அதாவது, உனக்கு உன் மகனைத் தெரியாது, எனக்கு என் தம்பியைத் தெரியும்.

    கொஞ்சம் out of the way interpretation தான். ஒரு பேச்சாளர் சொல்லிக் கேட்டது, ரொம்ப பிடிச்சது.

 5. GiRa says:

  @dagalti

  பின்னவன் பெற்ற செல்வன் யான் பெற்ற செல்வம்னு ராமன் புரிஞ்சிக்கிறது சரி.

  நாமும் ராமனை இப்படி உசத்தியாக வைத்து பரதனை அதன் மூலம் உயர்த்த வேண்டுமா? 🙂

  சரி. ராமன் மட்டுமா பரதனைப் புரிந்து கொண்டான்? இல்லை.

  பெற்றவள் கைகேயி. அவளிடம் கூட ராமன் பெயரைச் சொல்லித்தான் வரத்தையே கேட்க வைக்க முடிகிறது தசரதனால். அந்த அளவிற்கு ராமனைத் தன் மகனாய் நினைத்த தாய். ஆனால் தன் மகனை?

  அகிலமெல்லாம் ஆளும் ஆண்டவனைக் கும்பியில் சூல் கொண்டு பெற்ற கோசலை? கைகேயி மாற்றாள் மகனைத் தன் மகன் என்று எண்ணிய எண்ணியது போல கோசலை பரதனை எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் பரதன் வந்ததும் அழுது புரண்டிருப்பாள். ஆனால் அவளோ பரதன் நடிப்பதாகத்தான் நினைக்க முடிந்தது.

  கூடவே பிறந்த பிறப்பு. அறிவிற் சிறந்த சுமத்தரை பெற்ற மகனோ பரதனை நாய் என்றான்.

  வசிட்டன், குகன் என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளாத நிலை.

  அப்பொழுது ஒரு கூட்டம் பரதனைப் புரிந்து கொண்டது.

  அண்ணனைத் தேடி வருகிறான் பரதன். ராமனை அழிக்கத்தான் வந்தானோ என்று படபட வீரவசனங்களை அள்ளி வீசுகிறான் குகன். ஆனால் அவன் கூட்டம்? எளிமையே வாழ்க்கையாக வாழும் அந்தக் கூட்டம்? அது புரிந்து கொண்டது பரதனை. இதற்கு முன்பு பார்த்ததும் கிடையாது. குகனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் அவர்களுக்கும் தெரியும்.

  ஆனால் அவர்கள் கண்ணுக்கு பரதனின் பண்பு பார்த்ததும் புரிந்து விட்டது. ஏன்? அவர்கள் தனி மனித வழிபாட்டில் இல்லை. ஆகையால்தான் தலைவன் கொக்கரித்த போதும் அமைதியே காத்தனர். அவர்கள் அமைதியையும் பரதன் அருகில் வந்த கோலத்தையும் சிந்துத்துத்தான் குகனே வேறு மாதிரி யோசித்து பரதனைப் புரிந்து கொள்கிறான்.

  ராமன் புரிந்து கொண்டது ஒரு பொருட்டே அல்ல. அவந்தான் ஆண்டவனாமே. புரியாமல் போனால்தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால் அந்தக் கங்கைக் கரை வேடுவர்கள்? அவர்களை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்.

  • நல்ல இடுகை. கம்பனில் வரும் மௌனங்களும் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன 🙂

   இராமனை மட்டும் உயர்த்தி, அவனே கல்யாண குணங்களின் தொகை என்று நான் சொல்ல முயலவில்லை.

   எனக்கு மிகப் பிடித்ததே அவனுடைய humanness சித்தரிக்கப்பட்ட விதம் தான்.

   “பிள்ளாய் பெரியாய்” என்றெல்லாம் இலக்குவனைப் பாடுகிறான். ஆனால் ஒரு இடத்தில் இலக்குவன் தனக்கு உவப்பில்லாத ஒரு உண்மையைச் சொல்லப்போக, அவனை குத்துவதற்காக பரதனை உயர்த்திப் பேசுகிறான்:


   எத் தாயர் வயிற்றினும், பின் பிறந்தார்கள் எல்லாம்
   ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ?

 6. குருளை என்ற இளமைச் சொல்லா, அத்தனை பேரையும், பரதனிடம் இட்டுச் சென்றது? = இந்தச் சொல்லுக்கு என் வந்தனம்!

  பரதனின் பெற்றிமை….மிகவும் நுணுக்கமானது!
  அதை வாயால் பேசி, மாளாது, பின்பு மனத்தால் அணுகும் போது, நம்மைப் பற்றியே நமக்கு, பலப்பல உண்மைகள் புலப்படும்!
  – ஏன்னா, மனிதனுக்குரிய எல்லாக் குணத்திலும் வாழ்ந்து காட்டியது யார்? = இராமனா? பரதனா??

  பரதனே! இதைச் சொல்வது நானல்ல! ஆழ்வார்கள்! = “இராகவனின் மிக்கோன் நம் பரத நம்பி”!
  ———————

  பரத நம்பி
  * இராமனை விடச் சிறந்த வீரன்;
  இராமன் எந்தப் போரிலும் கலந்து கொண்டு, நாட்டை விரிவாக்கவில்லை! பரதனே காந்தாரம், தட்ச சீலம் போன்றவற்றை வென்று, நாட்டுடன் இணைத்தவன்! இராமன் முனிவனின் வேள்வி காத்ததோடு சரி!

  * இலக்குவனை விட குணக்குன்று…
  கட்டிய மனையாளை அம்போ-ன்னு விட்டுட்டு, தனக்குப் பிடிச்சமான ஒன்றில் ஈடுபட ஓடலை…
  அவளையும் (மாண்டவி) தன்னோடு இணைத்துக் கொண்டே, அயோத்திக்கு வெளியில் இருந்து, ஆட்சியைக் கண்காணித்து வந்தான்!

  * சீதையை விட உள்ளத்து அன்பு!
  சீதையாவது, இராகவனை அவ்வப்போது ஐயுறுவாள்! எதிர்த்து உரையாடுவாள்! ஆனால் அவனை எக்காலத்திலும் சந்தேகப்படாது, அவனை எப்போதும் நம்பி வாழ்ந்த ஒரே உயிர் = பரத நம்பியே!
  ——————–

  இப்படிப்பட்ட பரதனை விடுத்து, தனக்குப் பிடித்தமான இலக்குவனையே இளவரசன் ஆக்க நினைக்கிறான், நாடு திரும்பிய இராகவன்….
  அப்போது நடைபெறும் உரையாடல்கள் காட்டிக் குடுத்து விடும்…யார் “உதாரண புருஷன்” (சான்றோன்) என்று!

  சேஷத்வம்-பாரதந்திரியம் என்று சொல்லுவார்கள்!
  அதாவது…
  தொண்டிலே இரண்டு வகை!
  1. தனக்குப் பிடித்தம் என்பதால் தொண்டு செய்வது = இலக்குவன்
  2. தனக்குப் பிடிக்காவிடினும், அவனுக்கு நன்மை விளையும் என்பதால் தொண்டு செய்வது = பரதன்

  இட்ட வழக்காய் இருப்பது = பரதன்!

  வானம் பொய்த்துப் போனாலும், நெற்பயிர், வானம் பார்த்து மட்டுமே இருக்கும்! அழிந்தாலும், பூமியின் அடியில் நீரைத் தேடாத வேர்கள்….அவன் பெய்யும் போது பெய்யட்டும்-ன்னு அவனையே பார்த்து ஏங்கும் பயிர்!
  “எத்தனையும் வான் மறந்த காலத்தும்….பைங்கூழ்கள் மைத்தெழுந்த வான் முகிலே பார்த்திருக்கும்!”

  அப்பேர்ப்பட்ட “உள்ளத் துணிவு” கொண்டவன் பரதன்….ஆதலாலே…..ஆழ்வார், அவனை இராமனிலும் “மூத்தோன்” என்று ஒரே அடியாக முன்னே கொண்டு வைக்கிறார்!
  எதற்கு? = தாமும் பரதனைப் போல வாழ வேண்டும் என்பதற்காக!

  நம் அனைவருக்கும் பாடம், இராமனை விட நல்ல பாடம், பரதன் என்னும் இச் சிறு குருளை!

 7. கங்கலும் பகலும் கண் துயில் அறியாமே, கண்ணநீர் கைகளால் இறைத்துச் சேற்றிலே அழுந்திக் கிடக்கிறான் பரத நம்பி!!

  கதையில் ஒரு பாத்திரம் ஒளிரத் தொடங்கி விட்டால், பலரும் அதையே பேசிப் பேசி, அந்தப் பாத்திரத்துக்கு ஒரு செயற்கையான ஏற்றம் வந்து விடுகிறது!

  அதனால், இன்னொரு பாத்திரம், அதுவும் நமக்குப் பயன்பட வல்ல பாத்திரத்தைப் பலரும் மறந்து விடுகிறார்கள் (அ) அதிகம் கண்டு கொள்வதில்லை! = பரதன்!

  ஆனால் பரதன் வாழ்வில் இருந்து தான் நமக்கான பாடங்கள் அதிகம்! மிக மிக அதிகம்!
  தூய்மையான அன்பு….இன்னொன்றை அடக்கி ஆளாது!
  அது தன்னையே தரும்!
  தன்னை வேண்டாம் என்றுவிட்டால், தன்னைத் தராது, அவனே என நின்றுவிடும்!

  அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

  “இட்ட வழக்காய்”, அவனுக்கே என்று இருக்கும் பரத நம்பியின் திருவடிகளே தஞ்சம்!!!
  ———————

  கேரளத்தில், கூடல் மாணிக்க ஆலயம் மட்டுமே, பரதனுக்குரிய ஒரே கோயில்! ஆழ்வார் பாடிய திருத்தலம் (108 திவ்யதேசம்)

 8. பரதன், போன சென்மத்தில் சக்கரமாய் வைகுந்தத்தில் இருந்தான்!
  அப்போ….இறைவனின் பாதுகை கீழே இருக்கு, நாம தான் மேலே இருக்கோம்-ன்னு திமிரா நினைச்சான்….
  அதான் இராமாயணத்தில், அந்தச் சக்கர-பரதன், பாதுகையைச் சுமக்க வேண்டி வந்தது…..
  = இப்படியெல்லாம் சாஸ்திர/புராணத் திரிபுகளை ஏற்றி ஏற்றி….பின்னாளில்….நாமே நம்ம சொந்தக் கதையைச் சோடிக்கும் விற்பன்னர்கள் ஆகி விட்டோம்:)

  ஆனால், இதனால், உண்மையான மாந்த உணர்ச்சி, பரதன் என்னும் பாத்திரம்/படிப்பினை???
  ————

  நம் மக்கள், காப்பியத்தில் இருக்கும், “தொடு-மன” அழகுணர்ச்சிகளைப் பார்ப்பதில்லை!
  காப்பியத்திலும், “தனக்குப் பிடித்தமான” பகுதிகளையே கண்டு, அவற்றையே அதிகம் பரப்பி விடுகின்றனர்! 😦

  இதனால் நம் உள்ளத்தை நாமே அணுகிப் பார்க்கும் நல்ல வாய்ப்பை இழந்து விடுகிறோம்!
  காப்பியத் தனிநபர் துதியே மிஞ்சி விடுகிறது!

  பரதனை….ஆழ்வார் அணுகியது போல்….அணுகிப் பார்த்தால்…
  வாயளவில் அன்றி, மனத்தளவிலே அணுகிப் பார்த்தால்…
  வாருங்கள்…அணுகிப் பார்ப்போம்!!
  ————

  பெற்ற தாயான கைகேயி, தயரதன், வசிட்டன், விசுவாமித்திரன், சுமந்திரன், சனகன், இலக்குவன்….ஏன் இராவணின் “கரித்துக் கொட்டலுக்கு”க் கூட ஆளாகி நிற்கும் ஒரே பாத்திரம் = பரதன்!!!

  இப்படிப் பலரும் தவறாகப் புரிந்து கொண்டு எள்ளினாலும், அதற்காக அழுதானே தவிர, அவன் உள்ள உறுதி குலையவில்லை! அவனே என்று ஒடுங்கி விடத் தெரிந்த ஒரு அன்பு! = அந்தப் பரதனை அணுகிப் பார்ப்போம்……………

 9. H.K says:

  It is very good

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s