உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க! வெள்ளம்
தடுத்தல் அரிதோ? தடம்கரை பேர்த்து
விடுத்தல் அரிதோ? விளம்பு!
நூல்: நன்னெறி (#8)
ஆசிரியர்: சிவப்பிரகாச சுவாமிகள்
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
சிலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். அவர்களைப் பார்த்து எல்லோரும் பயப்படுவார்கள்.
ஆனால் உண்மையில், சினம் நம்முடைய உள்ளத்தைத் தாக்கித் தன்வயப்படுத்திக்கொள்ளப் பார்க்கும் நேரத்தில், அதைக் கட்டுப்படுத்தி அடக்குவதுதான் மிகப் பெரிய குணம்.
நம்பமுடியவில்லையா? கொஞ்சம் யோசியுங்கள், ஆற்றில் வெள்ளம் பொங்கி வரும்போது, பெரிய கரையை உடைத்து அதை ஊருக்குள் அனுப்புவது பெரிய விஷயமா? அல்லது அணை கட்டித் தடுத்து நிறுத்துவது பெரிய விஷயமா?
துக்கடா
- இந்தப் பாடல் வெண்பா வடிவத்தில் அமைந்தது. வாசிக்க எளிதாக இருக்கவேண்டும் என்பதற்காக வார்த்தை பிரித்துத் தந்திருக்கிறேன். ’ஆனால் அதனால் வெண்பா இலக்கணம் கெட்டுவிடுகிறது. அதன் ஓசையும் சரியாக வருவதில்லை. ஆகவே, ஒரிஜினல் பாட்டை அப்படியே தரலாமே’ என்று நண்பர் இலவசக் கொத்தனார் கேட்டார். அவருக்காகவும், வெண்பாவை ‘அப்படியே’ சாப்பிட விரும்பும் ஹார்லிக்ஸ் பிரியர்களுக்காகவும் வார்த்தை பிரிக்காத பாட்டு இங்கே:
- உள்ளம் கவர்ந்தெழுந் தோங்கு சினம்காத்துக்
- கொள்ளும் குணமே குணமென்க! வெள்ளம்
- தடுத்த லரிதோ? தடங்கரைதான் பேர்த்து
- விடுத்த லரிதோ? விளம்பு!
- இன்றைய அரிய சொல் : விளம்பு = சொல் (கட்டளை)
- உதாரணங்கள்:
- 1. விளம்பரம் என்ற வார்த்தை இந்த ‘விளம்பு’விலிருந்து வந்ததுதான். எல்லோருக்கும் சொல்லுதல் என்ற அர்த்தம்
- 2. உடையது விளம்பேல் : ஆத்திசூடி
140/365
Advertisements
/விளம்பரம் என்ற வார்த்தை இந்த ‘விளம்பு’விலிருந்து வந்ததுதான். எல்லோருக்கும் சொல்லுதல் என்ற அர்த்தம்/
Advertising Ethical Code – சிறுவர்கள் புத்தகங்களில் சிகரெட், மது விளம்பரங்கள் வரக்கூடாது என்றெல்லாம் சுயக்கட்டுப்பாடு இருக்கிறதே. அதை ‘விளம்பறம்’ எனச் சொல்லலாமா?
போகிற போக்கில் ஒரு நாள், இன்றைய அரிய சொல்: அரிய.. அரிய என்றால் எளிதில் காணக்கிடைக்காதது என்று சொல்லி விடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது 🙂
sooperu!
விளம்பு = சத்தமாச் சொல்லு! ஊருக்கே கேக்குறா மாதிரிச் சொல்லு!
அதான் சில ‘விளம்ப’ரத்துல, “இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக”-ன்னு இந்த கத்து கத்துறாங்களா?:)
————–
“சொல்” என்ற அடிப்படைச் சொல்லுக்கு, தமிழில் தான் எத்தனை பேரு…ஒவ்வொன்னுத்துக்கு வெவ்வேற பொருள்…
நுவல்
செப்பு
உரை
கூற்று
புகல்
மொழி
கிள
விளம்பு
அறை
இயம்பு
….
மொத்தம் 16 or 22, சரியா நினைவில்ல! ஆனா ஒவ்வொன்னும் ஒவ்வொரு பொருள்…எப்படிச் “சொல்”றோம் என்பதைப் பொறுத்து:))
நல்ல வெண்பா!
சினம் நம்ம கைக்குள் இருக்கோணும், அணையைப் போல…
ஊருக்குள் திறந்து விடலும் கூடாது, அதே சமயம் ஒட்டுமொத்தமா அடக்கினாலும் ஆபத்து…
எப்போ தேவையோ, அப்போ மட்டும் மதகு லேசா திறந்தால் பிரச்சனையில்லை:))
Anger is a powerful weapon! We shd know, when & where to use it
சரிதான்.. விளம்பு என்றாலே.. ஒன்றை விளக்கமுறச் சொல்லுதல்தானே..! விளம்”பறம்” இருக்கலாமே “இலவசக்கொத்தனார்” சொன்னது போல..!
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்னு ஒரு சொலவடையே இருக்கே. ஆனால் பொறுத்தார் பூமியாள்வார்ன்னும் சொல்லியிருக்காங்க! So discriminate use of anger is required 🙂 நம் கோபம் தனிப்பட்ட மனிதர் மேல் இல்லாமல், அவரின் செயல்கள் தவறானதாக் இருந்தால் அந்த செயல்களின் மேல் கோபம் கொள்ள வேண்டும். அனால் வெண்பாவில் கூறியுள்ளபடி கோபத்தை அடக்குவது மிகவும் கடினம்!
amas32
/விளம்பரம் என்ற வார்த்தை இந்த ‘விளம்பு’விலிருந்து வந்ததுதான். எல்லோருக்கும் சொல்லுதல் என்ற அர்த்தம்/
Advertising Ethical Code – சிறுவர்கள் புத்தகங்களில் சிகரெட், மது விளம்பரங்கள் வரக்கூடாது என்றெல்லாம் சுயக்கட்டுப்பாடு இருக்கிறதே. அதை ‘விளம்பறம்’ எனச் சொல்லலாமா? #
விளம்பறம் – நல்ல சொல்லாடல்!