அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகரும் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதர் அரி பரந்த செழும்கடைத் தூதும்
மருந்தும் ஆயது இம்மாலை…
நூல்: சிலப்பதிகாரம்
பாடியவர்: இளங்கோவடிகள்
சூழல்: போர் முடிந்து வீரர்கள் திரும்பி வருகிறார்கள். வீட்டில் காத்திருக்கும் மனைவிகள் அவர்களை வரவேற்கிறார்கள். அங்கே நடக்கும் பல காட்சிகளில் ஒன்று இது
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
அவள் தனது அழகிய, மென்மையான கூந்தலை மேகம்போல் விரிக்கிறாள், அகில் புகை போடுகிறாள்.
மேகத்துக்குள் நிலாவைப்போல் அவளுடைய முகம் தோன்றுகிறது. அந்த நிலாவுக்குள் கரிய வில்லைப்போன்ற இரண்டு புருவங்கள். அந்தப் புருவங்களுக்குக் கீழே, சிவந்த கோடுகளைக் கொண்ட பெரிய கண்கள்!
அவளுடைய கண்கள் ஊட்டுகிற காதல் போதை சாதாரணமானது அல்ல, அதன்முன்னே மீன் கொடியைக் கொண்ட மன்மதனின் மலர் அம்புகள்கூடத் தோற்றுப்போய்விடும்.
நேற்றுவரை நான் போர்க்களத்தில் இருந்தேன். அப்போது, இவளது கடைக்கண்கள் விட்ட தூதுதான் எனக்குப் பிரிவு என்கிற நோயைத் தந்தது.
இப்போது, நான் வீடு திரும்பிவிட்டேன். அதே கடைக்கண்கள், ஆனால் இப்போது அவை வேறுவிதமாகத் தூது விடுகின்றன, என்னுடைய நோய்க்கு மருந்து போட்டுக் குணமாக்குகின்றன!
துக்கடா
- அந்தக் காலத்தில் பெண்கள் தலைக்குக் குளித்தபின் கூந்தலை உலரச் செய்வதற்காக அகில் புகை போடுவார்கள். அப்படி இவள் விரிந்த கூந்தலோடு, அகில் புகை வாசனையோடு இருந்தபோது, அவன் வந்துவிட்டான்போல!
- செவ்வரி… அவள் கண்களில் சிவப்புக் கோடுகள்… அது ஏன் வந்தது? பிரிந்து சென்றுவிட்ட அவனை நினைத்துத் தொடர்ந்து அழுததாலா? அல்லது, ராப்பகலாகத் தூங்காமல் அவனுக்காகக் காத்திருந்ததாலா?
- ’இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து’ என்கிற பொருளில் ஒரு திருக்குறள்கூட உண்டு : ’பிணிக்கு மருந்து பிறமன், அணியிழை / தன்நோய்க்குத் தானே மருந்து.’
- Update: மீன் கொடி பாண்டியனுடையதுதானே, மன்மதனுக்கு எப்படி வந்தது? என்று நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள். மன்மதனின் கொடியிலும் மீன் உண்டு. அதனாலேயே அவனை ‘மகர கேதனன்’ என்று அழைப்பார் கம்பர். ஒருவேளை, நீங்கள் கம்பர் சொல்வதை நம்ப மறுத்தால், சினிமாப் பாட்டு உதாரணமும் தருகிறேன் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் 🙂
- இன்றைய அரிய சொல் : சிலை = வில்
- உதாரணங்கள்:
- 1. சூடிய சிலையிராமன் : கம்பராமாயணம்
- 2. சிலைத் தார் முரசம் : புறநானூறு
139/365
சிலை = வில்
சிலை வேடச் சேவல் கொடியோனே:)
இதை இப்படி நீங்க மறக்கலாம்?:))
அதுவும் கொடியோனே = ஒரு கொடியவன் பாட்டு:) என் கொடியவன் பாட்டு:))
Pingback: மன்மதச் சிலை « மனம் போன போக்கில்
//மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து//
மீன் கொடி தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் – இந்தச் சிலப்பதிகாரம் தான் எனக்குத் தெரியும்!:))
————-
* கண் = சிவப்புக் கோடு ஏன் வருகிறது?
* முகில் நுழை மதியம் = மேகத்துக்குள் நிலா போச்சுன்னா,
நிலா கருப்பா ஆகி, கருமேகம் வெள்ளை ஆவுமே! அது போலத் தான் அவுங்களா?:)
* மருந்தும் ஆயது இம்மாலை = இந்த மருந்து கசக்குமா?
இன்றைய பா…கொஞ்சம் விவகாரமான பா!
நான் என் கையைக் கடினப்பட்டுக் கட்டிக்கிறேன்!:) Me, finger on the lips!:))
மக்கள், இதுக்கெல்லாம் பதில் சொல்லட்டும்:)
* மகரக் கொடியோன் = மீன் கொடி பாண்டியனுக்குத் தானே? மன்மதனுக்கு-ன்னு சொல்றீங்க??
no finger on lips start the music
மீன் கொடி எப்படி மன்மதனுக்கு வரும்..
அடடா …சிலம்பு என்னமாய் கரும்பாய் , கற்கண்டாய் இனிக்கிறது!
இளங்கோவடிகள் எழுதிய காதல் பாட்டு 🙂 பாடலும் விளக்கமும் அருமை!
amas32