இடத்துக்குத் தகுந்த நடத்தை

சான்றாருள் சான்றான் எனப்படுதல்; எஞ்ஞான்றும்

தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் … பாய்ந்து எழுந்து

கொள்ளாரும் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்

நல்லார் வழங்கு நெறி

நூல்: திரிகடுகம் (#83)

பாடியவர்: நல்லாதனார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

எங்கே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற வழியை நல்லவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்:

1. பண்புள்ள சான்றோர் மத்தியில் இருக்கும்போது, நாமும் ஒரு சான்றோனாக நடந்துகொள்ளவேண்டும்

2. நண்பர்களுக்கு நடுவே உள்ளபோது, அவர்களுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்கவேண்டும் (அதாவது, ’கம்பெனி’ கொடுக்கவேண்டும் 🙂 )

3. நம்மை விரும்பாத பகைவர்களுக்கு மத்தியில் உட்கார நேரிட்டால், அமைதி காப்பது அவசியம். அவர்கள் என்னதான் பேசினாலும், நம்மைக் கோபப்படுத்தினாலும் உடனே பாய்ந்து எழுந்து பதிலடி கொடுக்கவேண்டும் என்று துடிக்கவேண்டாம். அங்கே நாம் எவ்வளவுதான் நியாயமாகப் பேசினாலும் அவர்கள் அதை விரும்பமாட்டார்கள், ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

துக்கடா

 • அந்த மூன்றாவது பாயின்ட், இணையத்தில் அடிக்கடி சண்டை போடும் நமக்கெல்லாம் சொல்லப்பட்டதோ? 😉
 • இன்றைய அரிய சொல் : ஞான்று = நாள் / நேரம்
 • உதாரணங்கள்:
 • 1. ‘எஞ்ஞான்றும் வாழ்க’ : ’என்றென்றும் வாழ்க’ என்கிற பொருளில் சொல்லப்படும் வாழ்த்து
 • 2. எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்… : திருக்குறள்

138/365

Advertisements
This entry was posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா. Bookmark the permalink.

6 Responses to இடத்துக்குத் தகுந்த நடத்தை

 1. சிறப்பான திரி-கடுகப் பா!
  அதுவும் மூனாவதாக் காட்டும் ஒப்புமை…மிக மிக நன்று!

  //பாய்ந்து எழுந்து – கொள்ளாரும் கொள்ளாத கூறாமை//

  அடா அடா அடா!
  கொள்ளார்-ன்னு தெரிஞ்சே இருக்கு! அங்கே கூறலாமோ?

  அவரவருக்கு-ன்னு சில கொள்கைகள்…சில பிடித்தமானவைகள்!
  அதில் உண்மை/தரவு-ன்னு எவ்ளோ குடுத்தாலும் எடுபடாது!
  ஏன்னா தேடல் = உண்மையில் இல்லை! பிடித்ததில் இருக்கு:))

  நாளைக்கு பிடித்தது மாறிவிடும், அப்போ கொள்கையும் மாறி விடும்!:))
  இது தான் மனித மனத்தின் விந்தை (விசித்திரம்)
  ————-

  இதைத் தாண்டி, மெய்ப்பொருள் காண்பது அறிவு, முன்னம் எழுதினான் ஓலை பழுது…என்று பழுதான ஓலையைப் பழுது-ன்னு ஒப்புக் கொண்டு, திருத்தி எழுதும் தமிழ்ப் பெற்றிமை….தமிழ் மரபு…..ஒரு சில இலக்கிய உள்ளங்களுக்கே உண்டு!

  இதைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே காணலாம்!
  தொல்காப்பியர், மருதன் இளநாகனார், அப்பர் பெருமான், மாறன் நம்மாழ்வார் போன்ற வெகு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே!
  அண்மையில் சொல்லணும்-ன்னா….மென்மையே உருவான திரு.வி.க!

 2. 1. சான்றாருள் சான்றான்
  சான்றோன்-ன்னா என்ன-ன்னு பார்க்கலாமா? சான்றோன் எனக் கேட்ட தாய்-ன்னு படிச்சி இருக்கோம்-ல்ல?

  சான்றோன் = சான்றாகக் காட்ட வல்லவன் சான்றோன்!

  * ஓ…மண்மகள் மாதிரி பொறுமை-ம்மா! = மண்மகள் இங்கே சான்றோள் ஆகிறாள்!
  * வள்ளுவர் மாதிரி ரெண்டே வரி-ல படீர்-ன்னு சொல்லுறது = வள்ளுவர் இங்கே சான்றோர் ஆகிறார்!

  இது போலத் தன் மகனை, “முருகவன் போல நல்லவன்”-ப்பா ன்னு யாராச்சும் சொல்ல மாட்டாங்களா? = சான்றோன் எனக் கேட்ட தாய்!

  * இந்திரனே சாலும் காரி = இங்கே இந்திரனைச் சான்று காட்டுகிறார் ஐயன்! அதுக்காக இந்திரன் = சான்றோனா? அல்ல!
  உயர்வுக்குச் சான்று காட்டினால் தான் சான்றோன்! கீழ்மைக்கு அல்ல!
  ———–

 3. 2. தோய்ந்தாருள் தோய்ந்தான்

  அன்பிலே ஒரு உள்ளம் தோயும் போது, தானும் அதனூடே தோய்தல்! = ஆழமான நட்பு/ காதல் எல்லாத்துக்கும் பொருந்தும்!

  அது என்ன “தோய்தல்”?

  உங்க எல்லாருக்குமே தெரிஞ்ச சொல்லு தான்! தமிழ் கடினமே இல்ல! ரொம்ப எளிது-இனிமை!
  தோய்தல் = பாலைத் தோய்ச்சி வை-ன்னு சொல்றீங்க-ல்ல? அதே தான்!:))

  பாலை, இரவிலே தோய்ச்சி வச்சா, காலையில் கெட்டித் தயிர் ஆகும்! அப்பறம் வெண்ணைய், அப்பறம் நெய்!
  பாலில், சொட்டூண்டு விட்ட தயிர் – தோய்ஞ்சி, பாலே தயிராகி விடுதல் போல்…

  நம் மீது, சொட்டூண்டு அவர்கள் விட்ட ஆழமான அன்பு! அதில் தோய்ஞ்சி, நாமும் அவர்களாவே ஆயிடறோம்…உணர்விலே!
  அதான் “தோய்ந்தாருள் தோய்ந்தான்”! புரியுதா? இப்போ சொல்லுங்க! தமிழ் எளிமை+இனிமை தானே?:))

  • amas32 says:

   உங்களை போல் ஒரு ஆசிரியர் இருந்தால் தமிழ் எளிமை +இனிமை தான்! நன்றி 🙂
   amas32

 4. துணி தோய்ச்சிட்டியா?-ன்னு நாம slangஆக புழங்கினாலும்…அதிலும் உண்மை இருக்கு!
  1. முதலில் கரைசல் தண்ணியில் தோய்-த்தல் = ஊற வைத்தல்
  2. அப்பறம் துவை-த்தல் = அடித்து, துவைத்தல்

  தோய் வேற, துவை வேற! ஆனா ஒன்னு பின்னாடி ஒன்னு:)
  ————

  எஞ்ஞான்றும் = ஞான்று = Sunset/முடிவு! Can be taken as a day! = நாள்!!
  முன் ஞான்று = Yesterday
  பின் ஞான்று = Tomorrow!

  நாள் முன் ஞான்று = Day before Yesterday!
  நாட் பின் ஞான்று = Day after Tomorrow!

 5. amas32 says:

  உங்கள் பதிவுகளால் நிறைய கற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி! நண்பர்களிடையே பழகுவது எளிது ஆனால் ஒத்தக் கருத்து இல்லாத ஒரு குழுமத்தில் அமைதி காப்பது மிகவும் கடினம். நல்லவர்களோடு இருத்தல் என்றும் நலமே, பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் 🙂
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s