விழித்திடு பெண்ணே

’பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப்பகல் நாம்

பேசும்போது; எப்போது இப்போதுஆர் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!’… ‘நேரிழையீர்!

சீசீ! இவையும் சிலவோ? விளையாடி

ஏசும் இடம் ஈதோ?’… ‘விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசு மலர்ப்பாதம் தந்து அருள வந்து அருளும்

தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆர்? ஏலோர் எம்பாவாய்.’

நூல்: திருவெம்பாவை (#2)

பாடியவர்: மாணிக்கவாசகர்

சூழல்: மார்கழி மாதம். அதிகாலையில் எழுந்து சிவன் கோயிலுக்குப் போகிறார்கள் சில பெண்கள். அவர்களில் ஒருத்தியைமட்டும் காணோம். அவள் வீட்டு வாசலில் சென்று பாடுகிறார்கள், அங்கே நடக்கும் சிறு நாடகம் இந்தப் பாடல்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தோழிகள்:

பொருத்தமான அணிகலன்களை அணிந்தவளே,

ராத்திரி பகலாக நாம் அரட்டையடிக்கும்போதெல்லாம்என்னுடைய உள்ளம் முழுக்கப் பரஞ்சோதியாகிய அந்தச் சிவபெருமான்தான் நிறைந்திருக்கிறான்’ என்று அடிக்கடி சொல்வாய். நாங்களும் அதை நம்பினோம்.

ஆனால் இப்போது? சிவனைக் கும்பிடச் செல்லவேண்டிய நேரத்தில் மலர் தூவிய படுக்கைமீதும் தூக்கத்தின்மீதும் நேசத்தைக் காட்டுகிறாயே, இது நியாயமா?

அவள்:

பொருத்தமான அணிகலன்களை அணிந்த என் தோழியரே,

சீச்சீ, என்ன பேச்சு இது? விளையாடுவதற்கு இதுவா நேரம்? நானா பரஞ்சோதியை மறந்து தூங்குவேன்?

நீங்கள் நினைப்பது தவறு. நான் ஏற்கெனவே எழுந்துவிட்டேன். கோயிலுக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். இதோ பாருங்கள். (வெளியே வருகிறாள்)

அனைவரும்:

ஒளிமயமான தேகத்தைக் கொண்டவன், சிவலோக நாதன், தில்லைச் சிற்றம்பலத்தில் நாட்டியம் ஆடும் நடராஜன், அவனுடைய பாத மலர்களில் இருந்து பரவும் ஒளியைக் கண்டால், வானத்தில் உள்ள தேவர்களுக்குக்கூடக் கண் கூசும்!

அப்பேர்ப்பட்ட சிவன் தன்னுடைய மலரடிகளை நமக்காகத் தந்து அருள்வதற்கு இங்கே வந்திருக்கிறான். அவனுடைய அன்புக்கு நாமெல்லாம் தகுதியானவர்கள்தானா?

துக்கடா

 • நேற்று முன் தினம் #365paa வரிசையில் திருமாலின் ‘சோதி’ரூபத்தைக் கண்டோம் (https://365paa.wordpress.com/2011/11/18/135/) இன்று சிவனின் பரஞ்சோதி (பரம் + சோதி = மேலான ஒளி) அவதாரம்!
 • பக்தி ரசத்தோடு நகைச்சுவையும் சேர்ந்து வழியும் பாடல் இது. சின்னப் பெண்களை ஒருவரை ஒருவர் கேலி செய்துகொள்வதுபோல் தொடங்கி, எல்லோரும் இறைவன் புகழைச் சொல்வதாக முடிக்கிறார் மாணிக்கவாசகர்
 • தோழிகள் ஒருத்தியை ‘நேரிழையாய்’ என்று அழைத்துக் கேலி செய்ய, அவளும் வேண்டுமென்றே பதிலுக்கு ‘நேரிழையீர்’ என்று பேசத் தொடங்குவது தனி அழகு!
 • சில ’ரொம்ப நல்லவர்’களின் அருகே இருக்கும்போது, அவர்களது சிறப்பை முழுமையாக உணரும்போதுதான் நம்முடைய சிறிய, பெரிய குறைகள் ஞாபகத்தில் வரும், அவர்கள் அருகே உட்கார்ந்து இருப்பதற்காக லேசாகக் கூச்சப்படுவோம். ரொம்ப நுணுக்கமான இந்த உணர்வை மாணிக்கவாசகர் கச்சிதமாகப் பிடித்துவிடுகிறார். அதை ஒரு படி மேலே கொண்டு போய்க் ‘குறை ஏதும் இல்லாத தேவர்களையே அப்படிக் கூசவைக்கும் சிவனின் மலர்ப் பாதம்’ என்கிறார், அதன்மூலம் சிவனின் சிறப்பை உயர்த்திக் காட்டுகிறார்
 • இன்றைய அரிய சொல் : அமளி = படுக்கை
 • உதாரணங்கள்:
 • 1. பூஅணை அமளி புக்கான் : பெரிய புராணம்
 • 2. அமளித் துஞ்சும் … குதலை : மணிமேகலை

137/365

Advertisements
This entry was posted in சிவன், திருவெம்பாவை, தோழி, நாடகம், பக்தி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

9 Responses to விழித்திடு பெண்ணே

 1. மாணிக்கவாசகர் என்பவர்….பெண்கள் பேசி விளையாடிக் கொள்ளும் பகுதிகளில் எல்லாம், மறைஞ்சிருந்து ஒட்டுக் கேட்டாரோ-ன்னும் தோனும்…வேற யாருக்கு? எனக்குத் தான்:))

  திருவெம்பாவை மட்டுமல்ல, பின்னால் வரும் பல பாடல்கள் = சாழல்/அம்மானை/பொற் சுண்ணம்….எல்லாத்துலயும் பொண்ணுங்க அடிக்கற லூட்டி அப்பட்டமாத் தெரியும்:)

  ஈசன் பாட்டில் தான் பக்தி, ஞானம் எல்லாம்!
  சக்தியை வியந்தது-ன்னு எழுதத் தொடங்கிட்டாரோ….எனக்கு jollu-o-jolly:)

 2. பேசும் போது நல்லா எலக்கணமாப் பேசு…பாட்டெழுதும் போது கோட்டை விட்டுரு டயலாக் ஞாபகம் இருக்கா?:)
  அதே போலத் தான் இங்கும்!

  “பேசும் போது நல்லா எலக்கணமா என் சிவனே, என் சிவனே-ன்னு பேசுவடீ…
  ஆனா பூசைக்கு வராம, என் படுக்கையே என் படுக்கையே-ன்னு கிடப்பியே…ஒன்னையப் பத்தி எங்களுக்குத் தெரியாது?”

  “ச்சீ ச்சீ…என்னங்கடி…வாய்லயே வயலின் வாசிக்கத் தொடங்கிட்டீங்களா? காலங்கார்த்தால?
  நான் எப்பவோ ரெடி, நீங்க வரத் தான் லேட்டு,
  அதான் நீங்க வர வரைக்கும் ஒரு குட்டித் தூக்கம் போட்டேன்! அதுக்கு ரொம்பத் தான் ஓட்டுறீங்க?”

  ஈசனார்க்கு அன்பு ஆர்? ஆம் ஆர்? ஏலோர் எம்பாவாய்!! சொல்லுங்கடி…

 3. அமளி-யைச் சிறப்புச் சொல்லா எடுத்துக்கிட்டீங்க, சொக்கரே!
  ஆனா போது-ஆர்-அமளி…”போது”-வை நீங்களே கைவிடலாமோ?:)
  ———–

  போது-ன்னா = மலரா?
  ஆமாம்! ஆனா “கிட்டத்தட்ட” மலர்!

  பூ என்பது பொதுவான பெயர்
  * அரும்பும் போது = அரும்பு
  * அரும்பி, விரியத் தயாரா இருக்கும் போது = போது
  * மலர்ந்த பின் = மலர்
  * வீழ்ந்த பின் = வீ
  * வாடிய பின் = செம்மலர் (செம்மல்)

  அரும்புலயே = முகை, மொட்டு, முகிழ், மொக்குள்-ன்னு நாலு இருக்கு! size பொறுத்து…
  ——–

  பூசைக்கு மலர் பறிப்பது, அந்நாளில் தனிக் கலை! செடிக்கு வலிக்காமப் பறிக்கணும்!
  மலர்ந்த பூ-ன்னா வண்டு வந்து உட்கார்ந்து விடும்! அது எச்சில் பட்டது! பூசைக்கு ஆகாதாம்!:)

  அதனால் அரும்பு->மலர், இதற்கு இடைப்பட்ட நிலையிலேயே, பூவைப் பறிச்சிடுவாங்க!
  அதான் = “போது”
  இந்தப் “போது”-வை மாலையாக் கட்டி…அது கூடைக்குள்ளேயே “மலர்” ஆகிவிடும்!

  தோழி கோதை கட்டிக் குடுத்த “போது” மட்டும், கூடைக்குள் மலராமல்…
  அவன் சிலையைக் கண்டதும் “மலர்ந்து”, பின்பு கழுத்தில் ஏறியது என்பது மாலை-கட்டிங் expert பெரியாழ்வார் பாசுரம்!!:)

  • amas32 says:

   KRS என்னமா எழுதறீங்க! படிக்கப் படிக்க இன்பம் 🙂 நன்றி.
   amas32

  • @amas32 நன்றி. நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லீடீங்க!

   சொக்கன் இலக்கியத்துக்கு உரை எழுதி அழகு சேர்கிறார், kryes சோ, உரைக்கு விளக்கவுரை எழுதி இன்னும் அழகு சேர்கிறார்! சில நாட்களுக்கு முன் kryes வராது இருந்த பொது கொஞ்சம் கவலை கொள்ளவே செய்தேன்!

   சொக்கருக்கு நன்றி!

   இங்க பேச தனி தகுதி வேண்ணுமுன்னு பேசாது இருந்துடுவேன். இன்னைக்கு சொல்லியாச்சு! 🙂

   ~குரு

 4. இந்தத் திருவெம்பாவைப் பொண்ணும், “போது” கட்டி கூடைக்குள் ரெடியா வச்சிருக்கா!
  ஆனா அதை கட்டிலுக்குப் போட்டுக்கிட்டா-ன்னா கலாய்க்கிறாங்க:) = போது-ஆர்-அமளிக்கே நேசமும் வைத்தனையோ?:))

  பூசைக்குப் பறிக்கும் நிலை = போது!

  “போதொடு”, நீர் சுமந்து ஏத்தி
  புகுவார் அவர்பின் புகுவேன்
  காதல் மடப் பிடியோடு
  களிறு வருவன கண்டேன்…மாதர் பிறைக் கண்ணியானை-ன்னு எங்கள் அப்பர் பெருமான் தேவாரம்!
  ————

  எல்லாஞ் சரி தான்!
  அமளி-க்கு மட்டுமே பொருள் சொன்ன சொக்கரே! “அமளி-துமளி”-ன்னா என்ன? அமளி மேல் நடக்கும் துமளியா? சொல்லுங்கோ சொல்லுங்கோ :)))

 5. amas32 says:

  இறை பாடலில் இயல்பு வாழ்க்கையை அழகாக இணைத்துக் காட்டியுள்ளார் மாணிக்கவாசகர். திருப்பள்ளி எழுச்சி நமக்கு தான், உறங்காமல் அவன் அருளை பெறுவதற்கு!
  amas32

 6. mbell1983 says:

  சொக்கன், திருக்கோவையார் -இல் இருந்து சில பாடல்களை பதிவேற்றவும்! அதிலே சிவனுக்கும் ,சிவகாமிக்கும் உள்ள ஊடலை பற்றின பாடல், திருவாதிரை தினத்திற்கு எங்கள் ஊர் கோவிலில் பாடுவார்கள்!

 7. திருப்பாவை “எல்லே இளங்கிளியே” பாட்டு ஞாபகத்துக்கு வருது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s