யாருக்காகப் பறித்த பூ?

விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்

தளிர் அறிந்தாய், தாம் இவை

பணிபு பசி ஒண்ப, பண்டெல்லாம் நனி உருவத்து

என்னோ துவள் கண்டீ

எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாடக்

கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்

செய்ததும் வாயாளோ? செப்பு!

புனை புணை ஏறத் தாழ்த்ததை தளிர் இவை

நூல்: பரிபாடல் (#6, வரிகள் 61 முதல் 68வரை)

பாடியவர்: நல்லந்துவனார்

சூழல்: காதலிக்காகப் பூப் பறித்துக் கொண்டுவருகிறான் ஒரு காதலன். அந்தப் பூ கொஞ்சம் வாடியிருக்கிறது. அதைப் பார்த்தவுடன் காதலிக்கு லேசாகச் சந்தேகம். அப்போது நடக்கும் பேச்சுவார்த்தை இது

(இது ஒரு சுவாரஸ்யமான நாடகம், உரையை ஆங்காங்கே தேடிப் பிடித்துக்கொள்ளுங்கள் 🙂 )

அவள்: ‘டேய், என்னடா இது?’

அவன்: ‘பார்த்தா தெரியலையா? பூ!’

அவள்: ‘அது சரி, யாருக்காகப் பறிச்சது இது?’

அவன்: ‘உனக்காகதான்!’

அவள்: ‘பொய் சொல்லாதே, உன்னை விரும்பாத யாரோ ஒருத்திக்காகப் பறிச்ச பூ இது.’

அவன்: ‘ஆமா, நீதான் பக்கத்துல இருந்து பார்த்தியா? சும்மா விளையாடாதேடீ, நிஜமா உனக்காகப் பறிச்ச பூதான் இது.’

அவள்: ‘நான் நம்பமாட்டேன், முன்னெல்லாம் நீ என்மேலே ரொம்பக் காதல் வெச்சிருந்தே, பூப் பறிச்சதும் நேரா எனக்குக் கொண்டுவந்து தருவே, ஆனா இப்போ? இந்தப் பூ எப்படி வாடியிருக்கு பாரு. வேற ஒருத்திக்காகப் பூப் பறிச்சிருக்கே, அவகிட்டே அதைக் கொண்டுபோய்க் கொடுத்திருக்கே, அவ வேணாம்ன்னு சொல்லிட்டா, அதுக்கப்புறம் அதே பூவை என்கிட்டே கொண்டுவர்றே, அதனாலதான் இந்தப் பூ வாடிப்போயிருக்கு.’

அவன்: ‘அச்சச்சோ, இதென்ன புதுக்கதை? நான் உனக்காகதான் இந்தப் பூவைப் பறிச்சேன்.’

அவள்: ‘ம்ஹூம், உன்னோட நெஞ்சுல சூடின பூ மாலையெல்லாம் வாடும்படி கஷ்டப்பட்டுப் பூப் பறிச்சிருக்கே. ஆனா என்ன பிரயோஜனம்? நீ கொடுத்த பூவை அவ ஏத்துக்கலையே, அதை அவ கால்ல வெச்சுக் கெஞ்சிக் கேட்டிருப்பே, அப்பவும் அவ ஏத்துக்கலையே! அதுக்கப்புறம்தானே என்கிட்டே வந்தே? உண்மையைச் சொல்லு!’

அவன்: ‘அடியே, கண்டதையும் கற்பனை செஞ்சுக்காதே, ஆத்துல வெள்ளம் அதிகமாகிடுச்சு, பூவை எடுத்துகிட்டுக் கட்டுமரம் ஏறி இங்கே வர்றதுக்குள்ள அது லேசா வாடிப்போச்சு. அவ்வளவுதான். வேற ஒண்ணும் இல்லை! என் மனசுல இருக்கறது நீமட்டும்தான். நம்பு!’

துக்கடா

 • அட அசட்டுக் காதலா, அந்தப் பூவோட கால் கிலோ அல்வாவும் சேர்த்து வாங்கிக் கொண்டுபோயிருந்தா அவ கோவிச்சுகிட்டிருப்பாளா? 😉
 • முக்கியமான விஷயம், தளிர் என்றால் இளம் இலை. இந்தக் காதலன் தன் காதலிக்காக இலைகளைதான் கொண்டுபோய்க் கொடுக்கிறான், இந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருக்கட்டுமே என்பதற்காக வேண்டுமென்றே அதைப் ‘பூ’ என்று மாற்றினேன். சரியான உரை வேண்டுவோர் மாற்றிப் படித்துக்கொள்ளவும்
 • ’தளிர்’ என்பதைப் பூ என்ற அர்த்தத்திலும் பயன்படுத்துகிறார்கள். ‘அரும்பும் தளிரே’ என்று வாசித்திருப்பீர்கள், அதுவும் சரியான பொருள்தானா என்று எனக்குத் தெரியவில்லை
 • ‘புனை புணை’ என்றால், புனையப்படுகின்ற (செய்யப்படுகின்ற) படகு, கட்டுமரம் அல்லது தெப்பம்
 • இன்றைய அரிய சொல் : செப்பு = சொல்லு (தெலுங்கில் இன்றைக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிற வார்த்தை, தமிழில்தான் அரியதாகிவிட்டது)
 • உதாரணங்கள்:
 • 1. செப்பு மொழிப் பதினெட்டுடையாள் : பாரதியார்
 • 2. செப்பேலோர் எம்பாவாய் : திருப்பாவை

134/365

Advertisements
This entry was posted in காதல், நாடகம், பரிபாடல். Bookmark the permalink.

11 Responses to யாருக்காகப் பறித்த பூ?

 1. amas32 says:

  பொதுவாகப் பெண்களை ஏமாற்ற முடியாது. யூகிக்கும் திறன் அதிகம். அதுவும் காதல் விஷயத்தில் இன்னும் முன்னெச்சரிக்கையாக இருப்பது இயல்பு தானே 🙂
  amas32

 2. //கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
  செய்ததும் வாயாளோ? செப்பு!//

  அப்படியே திருக்குறள் மாதிரியே இருக்கு!
  “பரிபாடல்”-ன்னு சொல்லாம, இந்த ரெண்டு வரியை மட்டும் மக்களிடம் குடுங்க….குறள்-ன்னு தான் சொல்லுவாய்ங்க:)
  ———–

  பரிபாடல் என்பது ஒரு நூலா?
  அல்ல! ஒரு பாட்டு வகை! பண்ணோடு பாட வல்ல பாடல்! தொல்காப்பியத்தில் இந்தப் பா வகை பேசப்படுது! தமிழிசைக்கு ஆதாரம்!

  தொல்காப்பியத்துக்குப் பின்னால் எழுந்த ஒரு நூல், இந்தப் பா வகையிலேயே அமைந்ததால், அதுக்குப் “பரிபாடல்” என்ற பேரே ஒட்டிக்கிச்சி…நாம xerox என்பது போல:)
  ———-

  பரிபாடல்…பொதுவாக காதலை ஒட்டியே அமையும்! மலை விளையாட்டு, புனல் விளையாட்டு (ஜலக்கிரீடை??) :))
  * திருமால் – முருகன்
  * மதுரை – வைகை
  இந்த நாலும் தான் பேசு பொருள்!

  சில பரிபாடல்களில், இடைச் செருகல் அதிகம்!
  சுவடிகளில், ரொம்பவும் கிடைக்காத இலக்கியம்-ன்னா இது தான்! சிலரது உரை நூல்களை மட்டுமே வச்சி, அங்கொன்னும் இங்கொன்னுமாகத் திரட்டிய “பரிபாடல் திரட்டு”-ன்னே இருக்கு!

  இடைச்செருகலான பாடல்களில் தான், முருகனுக்கு 6face,12hands,18eyes எல்லாம்:) ஹோமம் கூட வரும்:)
  ஆனா….பல மெய்யான பரிபாடல்களில், முருகன் (அ) இயற்கை அழகு (அ) காதல் மட்டுமே!:)

 3. //அட அசட்டுக் காதலா, அந்தப் பூவோட கால் கிலோ அல்வாவும் சேர்த்து வாங்கிக் கொண்டுபோயிருந்தா அவ கோவிச்சுகிட்டிருப்பாளா//

  அதானே!
  கவுண்டர் காமெடி தான் ஞாபகம் வருது!:)

  “அண்ணே, நீங்க மட்டும் எப்படி-ண்ணே எப்பமே சந்தோசமா இருக்கீங்க?”
  “அதுவாடா கேக்குற சம்மட்டித் தலையா? எனக்குச் சந்தோசமா இருக்குணும்-ன்னு தோணும் போதெல்லாம்…ஒரு முழம் மல்லிப்பூ, காலே கால் கிலோ அல்வா….”

  ஞாபகம் வருதா, என்ன படம்-ன்னு? பரிபாடலும் கவுண்டமணியும் :))))

 4. GiRa says:

  பரிபாடலெல்லாம் படிக்கிறீங்களா? 🙂 கடக்குமுடக்குன்னு இருக்கும். கற்கண்டும் அப்படித்தானே. 🙂

  பரிபாடலுக்கும் குதிரை(பரி)க்கும் எந்தத் தொடர்பும் கெடையாது.

  பரிந்து வருவதால் பரிபாடல். அகம் புறமெல்லாம் தாண்டி இன்பம் மட்டுமே குறிக்கோளாகப் பரிந்து வரும் பாடல்கள் பரிபாடல்கள்.

  நீங்க படிக்கிற பரிபாடற் தொகுப்பு முன்னாடியும் ஒரு பரிபாடற் தொகுப்பு இருந்திருக்கு. ஆனா இப்ப இல்ல. இந்த நூலுக்குப் பிறகும் பிற்காலத்துல சிலர் எழுதியிருக்காங்க.

  இந்தப் பரிபாடற் தொகுப்பும் பிற்காலத்து நூலோ என்று ஒரு ஐயமும் உண்டு. ஆனால் கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து முடிவுக்கு வரமுடியாது.

  யாருடைய உரையைப் படிக்கின்றீர்கள்? உ.வே.சா திரட்டிய பரிமேலழகர் உரையும் மாணிக்கனாரின் உரையும் என்னிடம் இருக்கிறது.

  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் – தமிழ் இலக்கியக் குறிப்புகள்!

   பரிமேலழகர்-உ.வே.சா குறிப்புகளைச் சற்றே கவனமுடன் படிக்க வேணும், பல முரண்கள் எழும்! ஆனால் உவேசா குறிப்பு, ஒரு நல்ல அருஞ்சொற்பொருள், இலக்கணக் குறிப்பு!

 5. //புனை புணை’ = புனையப்படுகின்ற (செய்யப்படுகின்ற) படகு//

  வாழைமரப் பட்டைகளைத் தொடுத்து, பரப்பி வச்சி, அதன் மேல் நின்றவாறு நீரில் மிதக்க முடியும்!
  நாங்க கிராமத்தில் ஆடிய விளையாட்டு தான்!:)

  ஆனா, ஆற்றில் தண்ணி கொறைச்சலா ஓடணும்…
  கடல்-லயோ, குற்றாலத்துலயோ இதைச் செஞ்சிக் கவுந்துட்டீங்கன்னா, நான் பொறுப்பல்ல! சொக்கனின் கம்பேனி தான் பொறுப்பு:)
  ————–

  தளிர் = பூவும் குறிக்கும்! பூந்தளிர்!

  தளிர் என்பது மெல்லிய இலை! (துளிர்க்கும் இலை)
  அல்லது இலையே பூவாய்ச் சூடிக் கொள்ளும் வழக்கம்…
  * மாந்தளிர்
  * தாழம்பூ
  இதெல்லாம் நீட்டாத் தளிர் போலத் தான் இருக்கும்! இதைச் சூடுவதும் பெண்டிர் வழக்கம்!

  * இளமையில் = தளிர் (துளிர்த்தல்)
  * நடுவில் = இலை (பரவுதல்)
  * முதுமையில் = தழை (பரவி, அடங்கி, தழைத்தல்)
  -ன்னு ஒரு சாதாரண இலைக்கு, தமிழில், எத்தனை அழகான காரணப் பெயர்கள் பாருங்க!

 6. GiRa says:

  நீங்க குடுத்திருக்கும் இந்தச் சின்ன விளையாட்டுப் பாடல் ஒரு சிறுகதைக்குள்ள வருது. 🙂

  இந்தப் பாடல் வரிகளை மட்டும் படிக்கிறவங்க, அந்தக் காதலன் அப்பாவின்னும் அந்தப் பொண்ணு ரொம்பப் படுத்துறான்னும் நெனச்சுக்குவாங்க.

  ஆனா உண்மை அதுவல்ல. 🙂

  பிரச்சனை முதல் வரியிலயே தொடங்குது. விளியா விருந்து. அதாவது அழையா விருந்தாளி.

  தலைவன் இந்தக் காட்சியில் அழையா விருந்தாளி. ஏனென்றால் இந்த வரிகளில் வருகின்றவள் தலைவி அல்லள். அவள் காதற்பரத்தை.

  பொய்யாக் குலக்கொடி வையையிலே புதுப்புனல். இளம் பெண்ணின் காதல் உள்ளம் போல வெள்ளம் பொங்கிப் பெருகி வருகின்றது. இப்பொழுதும் ஆற்றில் நீர் வந்தால் போய்ப் பார்ப்பது போலே, அப்பொழுது ஆற்றில் நீர் வந்தால் புதுப்புனலாடுவது வழக்கம். அப்பல்லாம் ஆத்துத் தண்ணி அவ்வளவு நல்லாயிருந்திருக்கு. 🙂

  அப்படி தன்னுடைய தலைவியோடு நீராடிய தலைவன், பரத்தையர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தே அந்தப் பக்கமாக வருகின்றான். அவர்களைத் தேடித்தான். அழையா விருந்தாளியாக. அதுதான் விளியா விருந்து.

  அவனுக்கு அவள் புதியவள் அல்ல. ஏற்கனவே போய் வந்த எடந்தான். அதான் அவ கேக்குறா “தாமிவை பணிபொசி பண்ப பண்டெல்லா”. பண்டு.. அதாவது முந்தியெல்லாம் நல்ல தளிராப் பாத்துக் கொண்டு வர்ரவனாச்சே. இப்ப மட்டும் ஏன் “நனியுருவத்தென்னோ துவள் கண்டீ”? அதாவது… தளிர்களெல்லாம் ரொம்பவும்(நனி) துவண்டு(துவள்) போச்சே!

  அவளுக்குத் தெரியும் அவனுக்கென்று ஒரு தலைவி இருப்பது. அதான் இதையெல்லாம் கேக்குறா. அவனும் அதையும் இதையும் சொல்லிச் சமாளிக்கிறான். ஒன்னும் படியல. கடைசியா திருப்பரங்குன்றத்து முருகன் மேலையே சத்தியம் செய்றான். அப்பக் கூடயிருக்கும் சில மூத்த கிழவிகள் அவளைப் பேசிச் சரிக்கட்டி அனுப்பி வைக்கிறாங்க.

  அதுக்கப்புறம் அவங்க என்ன பண்ணாங்கன்னு பரிபாடல்ல படிச்சிக்கோங்க. 🙂

  • சொல்லப் போனால்….
   இது இரு பரத்தைப் பெண் கொடிகளுக்கு இடையேயான மலர்ப் போட்டி:)

   ஒருத்தி = இற் பரத்தை (வீட்டோட)
   இன்னொருத்தி = காதற் பரத்தை (வெளியில்)
   :))))

   கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
   செய்ததும் வாயாளோ? செப்பு!

 7. GiRa says:

  பரிபாடலில் முருகன் பாடல்களில் மட்டுமல்ல திருமால் பாடல்களிலும் இடைச்செருகல்கள் உண்டு. பரிமேலழகர் உரையை வைத்துத்தான் பரிபாடல் பாட்டுகள் இப்பக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. திருமாலுக்கும் அதுல இடைச்செருகல்கள் மாயக்கதைகள் எக்கச்சக்கம் உண்டு. பன்றி முகம். தண்ணிக்குள்ள போய் கொம்புல நிலமகளைத் தூக்கீட்டு வர்ரதுன்னு.

  • உண்மையே!
   முருகனுக்கான கதைகளை விட, திருமாலுக்கான கதைகளின் இடைச்செருகல் இன்னும் அதிகம்!

   நல்வழுதியார், இளவெயினனார் பாடல்களில் தொல்தமிழ் மாயோன்…
   கேசவனார் பாடல்களில் = அவதாரங்கள்…
   கவிஞர் பெயரே பலதும் சொல்லி விடும்:)))

 8. இன்னும் ஒன்னே ஒன்னு “செப்பணும்”! “செப்பிட்டுத்” தூங்கப் போறேன்…Long drive of 16 hours….

  //அவள்: ‘டேய், என்னடா இது?’
  அவன்: ‘பார்த்தா தெரியலையா? பூ!’
  அவள்: ‘அது சரி, யாருக்காகப் பறிச்சது இது?’
  அவன்: ‘உனக்காகதான்!’//

  இதில் வரும் சில தமிழ்ச் சொல்லாட்சிகளைப் பாருங்க…
  அவன் கிட்ட கோச்சிக்கும் போது கூட…அந்த ஆழ்மனசு அன்பு எப்படியோ வந்துருது! ச்சே மறைச்சி வைக்கவே முடியலை:))

  * விளியா விருந்து = அவன் விருந்து தான்! ஆனா அழைக்காத விருந்தாம்:) என்ன கோவம்!:)

  * பணிபு ஒசி பண்ப = “ஓசி”ப் பண்பு அல்ல! நல்லாக் கவனிங்க; ஒசி பண்பு!
  அவனை, கோவத்திலும், பண்பாளன்-ன்னு தான் சொல்லுறா:)
  ஒசித்தல் = வளைத்தல்! வளைஞ்சி குடுக்கும் பண்பன்!

  * கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
  செய்ததும் வாயாளோ? செப்பு!

  = நீ “கை பற்றிச் செய்ததும்” அவள் வாயலையா?:)
  கை பற்று = லஞ்சம்:))
  அவளுக்கு லஞ்சம் குடுக்கப் பாத்த! ஆனாலும் உன் காரியம் முடியல-ல்ல? ன்னு என்னமாக் கோச்சிக்கிறா?:)
  கோச்சிக்கும் போது கூட அழகாத் தான் இருக்கா…அவளும் அவள் தமிழும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s