தேடினால் கிடைக்கும்

பொன் செய்த மேனியினீர், புலித்தோலை அரைக்கு அசைத்தீர்,

முன் செய்த மூ எயிலும் முன் எரித்தீர், முதுகுன்று அமர்ந்தீர்,

மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே

என் செய்தவாறு அடிகேள்? அடியேன் இட்டளம் கெடவே.

நூல்: தேவாரம்

பாடியவர்: சுந்தரர்

முன்கதை

ஒருமுறை, சுந்தரர் விருத்தாசலத்துக்குச் சென்றிருந்தார். அங்கே எழுந்தருளியிருக்கும் சிவனைப் போற்றிப் பாடினார். அவருடைய தமிழைக் கேட்டு மகிழ்ந்த சிவன் பல ஆயிரம் பொற்காசுகளைப் பரிசாக வழங்கினார்.

ஒரே பிரச்னை, சுந்தரரின் வீடு திருவாரூரில் இருக்கிறது. இத்தனை தங்கத்தையும் அவ்வளவு தூரம் பாதுகாப்பாகக் கொண்டுசெல்வது எப்படி? சுந்தரருக்குக் கவலை.

பக்தரின் குழப்பத்தைக் கண்டு சிவன் சும்மா இருப்பாரா? ‘நானே இந்தத் தங்கத்தையெல்லாம் உன் ஊருக்குப் பத்திரமாக wire transfer செய்துவிடுகிறேன்’ என்று அறிவித்தார். ‘நீ எல்லாத் தங்கத்தையும் பக்கத்தில் இருக்கும் மணிமுத்தாற்றில் வீசி விடு, மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.’

சுந்தரர் கொஞ்சமும் யோசிக்கவில்லை. சிவன் சொன்னபடி எல்லாத் தங்கத்தையும் ஆற்றில் போட்டார். பயணத்தைத் தொடர்ந்தார்.

கொஞ்ச நாள் கழித்து, அவர் திருவாரூர் வந்து சேர்ந்தார். தனது மனைவி பரவியாரைச் சந்தித்தார். நடந்த கதையையெல்லாம் சொன்னார்.

பரவையாருக்கு அதிர்ச்சி. ‘அத்தனை தங்கத்தையும் ஆற்றில் வீசிட்டீங்களா?’ என்று கேட்டார்.

‘ஆமாம்’ என்றார் சுந்தரர். ‘கவலைப்படாதே, இப்போ அந்தத் தங்கத்தையெல்லாம் நம்ம ஊர்க் கமலாயக் குளத்தில எடுத்துக்கலாம்.’

‘என்னங்க விளையாடறீங்களா? எங்கயோ வீசின தங்கம் இங்கே எப்படிக் கிடைக்கும்?’

‘ஆண்டவன் அருள் இருந்தால் எல்லாம் கிடைக்கும்’ என்றார் சுந்தரர். பரவையாரை அழைத்துக்கொண்டு உள்ளூர்க் குளத்துக்கு வந்தார். உள்ளே குதித்துத் தேடினார்.

ம்ஹூம், தங்கத்தைக் காணோம்!

என்ன ஆச்சு? சிவபெருமான் வாக்குத் தவறிவிட்டாரா? அவர் அப்படியெல்லாம் ஏமாற்றுகிற ஆள் இல்லையே.

சிவனுக்குச் சுந்தரரின் தமிழை இன்னும் கொஞ்சம் கேட்கிற ஆசை. அதனால்தான் தங்கத்தை உடனே தராமல் விளையாடினார்.

புரிந்துகொண்ட சுந்தரர், இந்தப் பாடலில் தொடங்கிப் பல பாக்களைப் பாடினார். அதன்பிறகு, அவர் இழந்த தங்கம் தண்ணீரில் மிதந்து வந்ததாகச் சொல்வார்கள்.

உரை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பொன் போல் ஒளிர்கின்ற மேனியைக் கொண்டவனே,

புலியின் தோலை இடுப்பில் அணிந்தவனே,

அந்தக் காலத்தில் நன்றாகக் கட்டப்பட்ட மூன்று கோட்டைகளையும் எரித்தவனே,

திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனே,

மின்னல் போன்ற சிறு இடை கொண்ட என் மனைவி பரவையின் முன்னே என்னை ஏன் சோதிக்கிறாய்? இந்தத் துன்பம் நீங்குவதற்கு அருள் புரிவாய்!

துக்கடா

 • இன்றைய கதையின் ப்ராக்டிகல் நீதி, மனைவி முன்னால் பெயரைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்று நினைக்கிற கணவன்கள் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள் 😉
 • Jokes apart, இந்தப் பாடல் இழந்ததை மீட்க உதவும் பரிகாரப் பாடலாகக் கருதப்படுகிறது. நீங்களும் எதையாவது தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருந்தால், தினமும் 21 முறை இந்தப் பாடலைச் சொல்லிவரலாம். பலன் கிடைக்குமாம்!
 • இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர், வானதி. அவருக்கு நன்றிகள்
 • திருமுதுகுன்றம் பற்றிச் சுந்தரர் பாடிய மற்ற பாடல்கள் இங்கே : http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/DM7_25.HTM
 • ‘மூன்று கோட்டைகளையும் எரித்தவனே’ என்ற வரியில் சுவாரஸ்யமான ஓர் உபகதை உள்ளது. அது இங்கே : http://tamildoubt.blogspot.com/2011/10/blog-post_21.html
 • ஆனால் உண்மையில், ’முப்புரம் அழித்தல்‘ என்பது மூன்று கோட்டைகளைக் குறிப்பதே அல்ல என்றும் சொல்கிறார்கள். ’நமக்குள் இருக்கும் ஆணவம், மாயை, வினைகள் என்ற மூன்று விதமான கெட்ட குணங்களை அழிக்கிறவன் இறைவன்’ என்பது சைவ சித்தாந்தம்
 • இன்றைய அரிய சொல் : எயில் = கோட்டை / மதில் / நகரம்
 • உதாரணங்கள்:
 • 1. எயில் கதவம் : புறநானூறு
 • 2. ஆர் எயில் மூன்றும்… : ஆசாரக்கோவை
132/365
This entry was posted in கதை கேளு கதை கேளு, சிவன், சுந்தரர், தேவாரம், நண்பர் விருப்பம், பக்தி, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to தேடினால் கிடைக்கும்

 1. Anonymous says:

  எழிலான தெரிவு! நன்றி!

  பாட்டில் “இட்டளம் கெடவே” என்பது தான் முக்கியமான சொல்! விளக்கத்தில் அதை விடலாமோ?
  இந்தப் பதிகத்தில் உள்ள பத்து பாட்டும், இட்டளம் கெடவே-இட்டளம் கெடவே-ன்னு தான் முடியும்!

  அது என்ன “இட்டளம்”?
  உப்பளம் போலத் தான்! உப்பு தேக்கும் அளம் (இடம்)=உப்பளம்! இட்டு தேக்கும் அளம்=இட்டளம்!
  மன-நெருக்கடி தேக்கி விடுவதால் = இட்டளம்

  காதல் மனைவியின் முன்னே, இழந்த செல்வத்தை எப்படிப் பெறுவது-ன்னு தீவிர மன நெருக்கடி
  அடர்த்தியாய் மனத்தைப் போட்டு நெருக்குவதால், ஐயா என் இட்டளம் கெடவே, இட்டளம் கெடவே என்று சுந்தரர் பாடும் தெய்வத் தமிழ்ப் பதிகம்!

 2. Anonymous says:

  திருமுதுகுன்றம் (பழமலை)
  தொன்மையான தலம்! அதைச் சமஸ்கிருதம் ஆக்குறேன் பேர்வழி-ன்னு, விருத்தாச்சலம்-ன்னு எசகு பிசகா ஆக்கிட்டாங்க!:(

  வடமொழியில் விருத்தம்-ன்னா = வயசான!
  தொன்மை, மூதூர் என்பதை literal translation ஆக்கி, ஈசனுக்கு வயசானேஸ்வரர் (விருத்தகிரீஸ்வரர்), அன்னைக்கு வயசானேஸ்வரி (விருத்தாம்பிகை)-ன்னு ஆக்கிட்டாங்க!:((

  ஆதியான தமிழ்ப் பேரை விடுத்து, நாமளும் இன்னிக்கி விருத்தாசலம்-ன்னே சொல்லிக்கிட்டு இருக்கோம்!:(

  இதே போலத் தான் திருமரைக்காடு! மரை=மான்! அதை மறை-ன்னு தப்பா எடுத்துக்கிட்டு…வேதாரண்யம் ஆக்கி, தல புராணமும் எழுதியாச்சு!
  மயிலாடுதுறை=மாய வரம்! அன்னையின் பெயர் = அஞ்சொல் நாயகி! அதை அஞ்சல்(பயப்படாதே)-ன்னு நினைச்சிக்கிட்டு, அபயாம்பிகை ஆக்கியாச்சு:(

  திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) மிகத் தொன்மையான தலம்! காமிகம் முதலான 28 சிவாகமம்!
  ஒவ்வொரு ஆகமத்துக்கும் ஒவ்வொரு லிங்கம் நிறுவி, அன்பே உருவான முருகன் வழிப்பட்ட தலம்!
  மொத்தம் 28 சிவலிங்கம்! பன்னிரண்டு கையால் பூசிக்கும் பெரிய முருகன்!!

 3. நாங்களும் கதை சொல்லி இருக்கோமுல்ல

  http://tamildoubt.blogspot.com/2011/10/blog-post_21.html

 4. பொன்னார் மேனியனே என்று தானே ஆரம்பிக்கும்….(எனக்கு சரியாத் தெரியாது)…

 5. மன்னிக்கவும். என் தவறு தான். அது வேறு பாடல் போல…ஆனால் இதுவும் சுந்தரர் தான் எழுதி உள்ளார்.

  பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
  மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
  மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
  அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

 6. amas32 says:

  Why KRS has become anonymous? 🙂 இவ்வுலகில் நாம் சேர்க்கும் புண்ணியமும் அவ்வுலகுக்கு wire transfer தான் ஆகிறது. அதற்கும் இறைவனை உருகித் தான் வேண்ட வேண்டியிருக்கிறது! இனிமையான பாடல். நன்றி வானதி.
  amas32

 7. சுந்தரவடிவேலு says:

  நான் 24 வயசு சின்ன பையன்தான் பாடும் புரியுது.. கீழே இவங்க சொல்லி இருக்கற ஊர் பெயர் போன்ற தகவல்கள் அருமை.. என்னோட பூர்விகதுக்கு இப்படி ஒரு பேர் இருக்கும்னு நினைச்சுகூட பார்த்தது இல்லை.. இதெல்லாம் அக்கால தமிழ் பேர் நினச்சேன்..

 8. nvaanathi says:

  நன்றி.. நன்றி.. எல்லோரும் சீரியஸா பேசிட்டு இருக்காங்க இங்கே. சோ நான் நன்றியுடன் எஸ்கேப்பு. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s