கொடிச்சி!

’தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை

குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?

குறும் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய

நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ?

இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்

கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு’ என

யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,

தான் செய் குறி நிலை இனிய கூறி,

ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,

உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்

கொடிச்சி நெல்புறம் நோக்கி,

விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?

நூல்: நற்றிணை (#204)

பாடியவர்: மள்ளனார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலன் தன் நெஞ்சுக்குச் சொல்லிக்கொண்டது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

’பெண்ணே,

தளிர் இலைகளைச் சேர்த்துத் தைத்த குளிர்ச்சியான ஆடையை உடுத்தியவளே, உன்னுடைய தந்தை கொடுத்த ’கிளி கடி’ என்ற கருவியைக் கையில் எடுத்துக்கொண்டு, தினை வயலைக் காவல் காப்பதற்காக இன்று இரவு வருவாய்தானே?

நானும் அங்கே வரட்டுமா? சுனையில் பூத்த குவளை மலரைப் பறித்து உன் தலையில் சூடட்டுமா? நாம் எப்போதும் சந்திக்கிற ‘ஜில்’லென்ற சாரல் அருவியில் விளையாடலாமா?

சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’

இப்படி நான் அவளிடம் சொன்னேன். அவளும் என்னிடம் ஆசையாகப் பேசினாள்.

ஆனால் அதன்பிறகு, ஆண்மானைப் பிரிகின்ற பெண்மானைப் போல, அவள் என்னை விட்டுச் சென்றுவிட்டாள். மூங்கில் உயரமாக வளர்ந்த தன்னுடைய சிறிய வீட்டினுள் போய்விட்டாள்.

அந்தக் கொடிச்சி என்னை விட்டுச் செல்லும்போது, அவளுடைய முதுகைப் பார்த்துக் கலங்கிய என் நெஞ்சமே, அவளை விட்டுவிடாதே!

துக்கடா

 • இந்த உரையைப் படிக்கும்போது ‘சாமத்துல வாரேன், சாமந்திப்பூ தாரேன்’ என்று நீங்கள் பாடினால் அதற்குக் கம்பேனி பொறுப்பேற்காது 😉
 • ’நின் கூர் எயிறு உண்கு’ என்றால் என்ன அர்த்தம்? நேரடிப் பொருள் ‘பற்களைச் சாப்பிடுதல்’. ஆனால் இதன் உண்மையான பொருள், இதழோடு இதழ் சேர்த்துப் பற்கள்வரை துழாவி முத்தமிடுதல்!
 • அதாவது, இப்போது நாம் French Kiss என்று சொல்கிற சமாசாரம், சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது. தமிழேண்டா 😉
 • ஆனால் ஒன்று, இந்த ‘எயிறு உண்ணும்’ முத்தம் காதலர்களுடைய ஸ்பெஷாலிட்டி அல்ல, இதே நற்றிணையில் இன்னொரு பாட்டில் ஒரு தாய் தன்னுடைய மகளிடம் ‘உன் எயிற்றில் முத்தம் தருவேன்’ என்று சொல்கிறாள். அதன் பின் எங்கேயோ தாய் / தந்தை அன்பைக் கன்னத்து / நெற்றி முத்தங்களுக்கு மாற்றிவிட்டோம்
 • இன்றைய அரிய சொல் : கொடிச்சி = காட்டுப் பெண் (குறிஞ்சி நிலப் பெண்)
 • உதாரணங்கள்:
 • 1. வள்ளி என்னும் கூந்தல் கொடிச்சி : தேவாரம்
 • 2. கொடிச்சி காக்கும் பெருங்குரல் … : ஐங்குறுநூறு
129/365
Advertisements
This entry was posted in அகம், காதல், குறிஞ்சி, நற்றிணை. Bookmark the permalink.

One Response to கொடிச்சி!

 1. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’

  சந்தோஷமான என்பதை விட தமிழ்ச்சொல்லான மகிழ்ச்சியான என்று கூறலாமே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s