தியாகம்

ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக்

கேடு இல் நல் இசை வயமான் தோன்றலைப்

பாடி நின்றெனன் ஆகக் ‘கொன்னே

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்

நாடு இழந்தது அனினும் நனி இன்னாது’ என

வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய…

நூல்: புறநானூறு (பாடல் #165ன் ஒரு பகுதி)

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்

சூழல்: பாடாண் திணை, பரிசில் விடைத் துறை (அரசனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர் பாடுவது)

முன்கதை:

முதிர மலையை ஆட்சி செய்த அரசன் குமணன். தன்னைத் தேடி வந்தவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்துப் புகழ் பெற்ற வள்ளல்.

குமணனின் தம்பி பெயர் இளங்குமணன். இவனுக்கு முதிர மலையைத் தானே ஆளவேண்டும் என்று ஆசை. சதி செய்து அண்ணனின் நாட்டைப் பிடுங்கிக்கொண்டான்.

அதைப்பற்றிக் குமணன் கவலைப்படவில்லை. காட்டுக்குச் சென்று எளிமையாக வாழத் தொடங்கினான்.

அப்போதும், இளங்குமணனுக்கு ஒரு கவலை. என்றைக்காவது அண்ணன் திரும்பி வந்து ’என்னுடைய நாட்டைக் கொடு’ என்று கேட்டால்?

அந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்காக, இளங்குமணன் ஒரு வேலை செய்தான். ‘குமணனின் தலையைக் கொண்டுவருபவர்களுக்குப் பெரிய பரிசு அளிக்கப்படும்’ என்று அறிவித்தான். இந்த விஷயம் காட்டில் இருக்கும் குமணனின் காதுகளை எட்டியது.

அப்போது, பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் குமணனைப் பார்க்க வந்தார். அவனைப் புகழ்ந்து பாடினார்.

புலவர்கள் புகழ்ந்தால் அரசர்கள் பரிசு தருவது வழக்கம். ஆனால் குமணனிடம் இப்போது எதுவுமே இல்லையே. என்ன செய்வான்? இந்தக் கேள்விக்குப் பாட்டிலேயே பதில் சொல்கிறார் பெருந்தலைச் சாத்தனார்.

உரை:

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

குமணன் பெரிய வள்ளல். தன்னைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு அசைகின்ற யானையைப் பரிசாகத் தருகின்றவன்.

குறை ஏதும் இல்லாத அரசன் குமணன். வலிமையான குதிரைகளை உடையவன், அவனுடைய பெருமை உலகெங்கும் பரவியிருக்கிறது.

அப்பேர்ப்பட்ட குமணனை நான் போற்றிப் பாடினேன். ஆனால் எனக்குப் பரிசாகத் தருவதற்கு அவனிடம் எதுவுமே இல்லை. துடித்துப்போய்விட்டான். ‘என்னுடைய நாட்டை இழந்ததுகூட எனக்குப் பெரிய துன்பமாகத் தெரியவில்லை. என்னை நாடி வருகிற புலவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்பும்போதுதான் மிகவும் வேதனைப்படுகிறேன்’ என்றான்.

அப்போது, அவனுக்கு ஒரு யோசனை. ‘என் தம்பி இளங்குமணன் என்னுடைய தலைக்குப் பெரிய விலை வைத்திருக்கிறான். ஆகவே, நீங்கள் என் தலையை வெட்டி எடுத்துச் செல்லுங்கள். அவன் நிறையப் பரிசு தருவான். அதை வைத்துக்கொண்டு வளமாக வாழுங்கள்’ என்று சொன்னான். அதற்காகத் தன்னுடைய வாளை எடுத்து என் கையில் கொடுத்தான்.

துக்கடா

 • இன்று பக்ரித் : தியாகத் திருநாள். அதைக் கொண்டாடும்வகையில் இந்தத் ‘தியாக’ப் பாடல். அனைவருக்கும் பக்ரித் வாழ்த்துகள்!
 • குமணன் வாளைக் கொடுத்தான், சரி. புலவர் என்ன செய்தார்? இதுதான் சாக்கு என்று அவன் தலையைச் சீவி இளங்குமணனிடம் ஜாக்பாட் அடித்துவிட்டாரா?
 • இல்லை. குமணன் கொடுத்த வாளைமட்டும் எடுத்துக்கொண்டார். இளங்குமணனிடம் சென்று இந்தக் கதையைச் சொன்னார். அண்ணனின் தியாக மனத்தை உணர்ந்து தம்பி திருந்தியிருக்கலாம்
 • இன்று திருமுருக கிருபானந்த வாரியாரின் நினைவு தினமும்கூட. அவரை நினைவுகூரும்வகையில் நாளைய #365paa அமையும்
 • இன்றைய அரிய சொல் : இசை = புகழ்
 • உதாரணங்கள்:
 • 1. ஈதல் இசைபட வாழ்தல் : திருக்குறள்
 • 2. செந்தமிழ் உரை இசை பாடி… : பெரிய புராணம்
124/365
Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, புறநானூறு, புறம், வள்ளல். Bookmark the permalink.

7 Responses to தியாகம்

 1. நங்கள் ஒரு குழுவாக வாசிங்டன் வட்டாரத்தில் மாதம் இருமுறை கூடி ஆராய்ந்து புறநானூறு படித்து வருகிறோம். 286 பாடல்கள் படித்துள்ளோம்.
  முன்பு ஐந்து ஆண்டுகளாக திருக்குறள் படித்து முடித்து விட்டு ஒரு திருக்குறள் மாநாடு நடத்தினோம்.
  உங்கள் தமிழ்ச் சேவைக்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்

  நாஞ்சில் இ. பீற்றர்.

  • வணக்கம் பீற்றர்!
   286 புறநானூற்றுப் பாடல்கள் என்பது அத்துணை எளிது அல்ல! தங்கள் படிப்பு வட்டத்துக்கு வாழ்த்துக்கள்!
   ஏதேனும் இணையச் சுட்டி உளதா? படித்ததை, தகவலோடு, தொகுத்து வைத்துள்ளீர்களா என்று அறிய ஆவல்!

  • amas32 says:

   இவ்வளவு நல்ல பயிற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள், வாழ்த்துகள்! ஆமாம்,சொக்கனின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது!
   amas32

 2. நல்ல பதிவு.அன்புடன் ராஜா சந்திரசேகர்

 3. Eid Mubarak – தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

  இங்கும் வாளை ஓங்கிய நபிகளின் கதை தான்!
  தன் மகனையே பலியிடத் துணிந்து வாளை ஓங்கிய…இப்ராஹிம் நபிகளின் கதை! – நில்லு இப்ராஹிம் நில்லு! நில்லு கண்ணப்ப நில்லு!
  ————-

  திருமுருக. வாரியார் நினைவுக்கு வந்தனம்!
  ————

  “தலைகேட்டான் தம்பி” இளங்குமணன் கதை அருமை!
  தம்பி, வாளைப் பார்த்து வருந்தி, திருந்தியும் விட்டதாகவே கதைகள் சொல்கின்றன!

  குமணன், தன் இயலாமையைச் சொல்லிப் புலவரைத் திருப்பி அனுப்பி இருக்கலாமே! தப்பே இல்லை!
  இருந்து போது கொடுக்க முடிந்தது! இப்போது இல்லை! ஏன் இந்த “புனித பிம்பத்தனம்” என்று சிலர் கேட்கக் கூடும்!

  சிலர் இயல்பே அப்படி! என்ன செய்ய?
  வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
  பண்பில் தலைப் பிரிதல் இன்று

  புலவர் சொன்ன காட்சி தான், குமணனை இப்படிச் செய்யத் தூண்டி விட்டது!
  “வீட்டு அடுப்பில் காளான் பூக்க, குழந்தை தாய் முகம் பார்க்க, அவள் என் முகம் பார்க்க, நான் நின் முகம் பார்க்க வந்தேன்” என்று அவர் பாடிய தமிழுக்கு…குமணன் இப்படிச் செய்தான்!

 4. PVR says:

  Excellent, Chokkan. I am happy to be in a time to read your line on day-to-day basis. God bless. 🙂

 5. amas32 says:

  கொடுத்துப் பழகியவர்களுக்கு, கொடுக்க ஒன்றும் இல்லை என்கிற நிலை வரும்போது அது ஒரு மிகக் கொடிய நிலை. இங்கு காட்டப்பட்டிருக்கும் குமணனின் பண்பை, தியாகம் என்றும் கொள்ளலாம் தயாள குணம் என்றும் கொள்ளலாம். இந்த அழகிய பாடலில் ஓங்கி நிற்பது குமணனின் அன்பின் வெளிப்பாடு!
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s