ஆசை நோய்க்கு மருந்து உண்டா?

நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்

தாக்க, வெந்து தளர்ந்து சரிந்தனள்;

சேக்கை ஆகி அமர்ந்த செந்தாமரைப்

பூக்கள் பட்டது, அப் பூவையும் பட்டனள்.

*

வாச மென்கலவைக் களி வாரி மேல்

பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்,

வீச வீச வெதும்பினள், மெல்லியல்.

ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாங்கொலோ?

நூல்: கம்ப ராமாயணம் (பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: ராமனை முதன்முறையாகப் பார்க்கிறாள் சீதை. அன்று இரவு அவள் நிலைமை இது.

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

குறை இல்லாமல் எங்கும் பரவிய நிலாவைக் குளிர்ச்சியானது என்று சொல்வார்கள். ஆனால் இப்போது, அந்த நிலாக் கதிர்கள்கூட சீதையின் மேனியைத் தாக்கிச் சுட்டன. உடல் வெந்து தளர்ந்து சரிந்தாள்.

அவள் தினந்தோறும் படுத்துத் தூங்குகிற படுக்கைதான். ஆனால் இன்றைக்கு அது முள்ளாகக் குத்தியது. சீதையின் உடல் கொதிக்கக் கொதிக்க, அந்தப் படுக்கையில் உதிர்க்கப்பட்டிருந்த தாமரை இதழ்கள் வாடிப்போயின. அவற்றோடு கூடவே, அவளும் வாடினாள்.

*

சீதையின் உடல் கொதிப்பதால், குளுமைக்காகச் சந்தனக் கலவையை அள்ளி அள்ளிப் பூசினார்கள். ஆனால் குளிர்ச்சியான அந்தச் சந்தனமும் அவளுக்குப் புழுக்கத்தைதான் தந்தது.

அடுத்து, விசிறிகளைக் கொண்டு காற்று வீசினார்கள். அதுவும் அவளுக்கு வெம்மையைதான் தந்தது.

சீதையை வாட்டும் இந்த ஆசை நோய்க்கு மருந்து உண்டா?

துக்கடா

 • கம்ப ராமாயணத்தில் மிகவும் புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்’க்கு அடுத்து வரும் காட்சி இது
 • இதே மிதிலைக் காட்சிப் படலத்தில் இன்னும் பல பிரபலமான காதல் வரிகள் உண்டு. உதாரணமாக, ‘இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’, ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’, ‘என் உயிரை அம் முறுவல் உண்டதே!’ … காதலோ மற்ற உணர்ச்சிகளோ, சிறு சிறு வாக்கியங்களில் அட்டகாசமாகக் காட்சிப்படுத்துவதில் கம்பருக்கு இணை இல்லை!
 • கிட்டத்தட்ட இதே காட்சியை #365paa வரிசையில் ஏற்கெனவே ஒருமுறை பார்த்திருக்கிறோம். அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகளில் சீதையைப் பார்த்த ராமர் பாடும் பாடல் அது : https://365paa.wordpress.com/2011/08/08/034/
 • ‘சேக்கை ஆகி அமர்ந்த செந்தாமரை’ என்ற வரிகளுக்கு நேரடி அர்த்தம், சீதை தினமும் உறங்கும் படுக்கை, அதில் உதிர்க்கப்பட்டிருந்த தாமரை இதழ்கள். இதற்கு வேறோர் அர்த்தமும் கொள்ளலாம், திருமகள் அவதாரம் சீதை, திருமகளின் ஆசனம், செந்தாமரை!
 • இன்றைய அரிய சொல் : சேக்கை = படுக்கை / கட்டில் / உறங்கும் இடம்
 • உதாரணங்கள்:
 • 1. செங்காந்தள் மெல்விரலால் சேக்கை தடவந்தேன் : முத்தொள்ளாயிரம்
 • 2. குறுங்கால் கட்டில், நறும்பூச் சேக்கை : குறுந்தொகை
123/365
Advertisements
This entry was posted in கம்ப ராமாயணம், கம்பர், காதல், திருமால், ராமன். Bookmark the permalink.

6 Responses to ஆசை நோய்க்கு மருந்து உண்டா?

 1. GiRa says:

  கவிகள் உணரும் கனிச்சுவை. தமிழ்க்கவிகள் உணரும் கம்பனின் கவிச்சுவை.

  நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
  நெருப்பாய்ச் சுடுகிறது – அந்த
  மலருக்கு என் மேல் என்னடி கோபம்
  முள்ளாய் மாறியது

  பாட்டுக்குத் தமிழ்க் கோட்டை பட்டுக்கோட்டை என்றால் கவிகளின் அரசன் நமது கவியரசன் கண்ணதாசன்.

  இலக்கியத்தை அப்படியே நமக்குப் புதிதாய் வார்த்துத் தந்தான். நம் நெஞ்சதோடு என்றும் நிற்க எளிமை சேர்த்துத் தந்தான். அவனுக்குப் பின் அதைச் செய்வாரில்லை. கண்ணதாசனுக்குப் பின்னால் வார்த்தை அடுக்குவாரெல்லாம் பெருங்கவி ஆனதே உண்மை. அரசியல் தாளம் தட்டி, அடிப்பொடியாய் மாரும் தட்டி, தமிழுக்குச் சீரும் தட்டி, சிங்காரித்துத் தரும் தமிழ் ஒப்பனையாளரும் ஆனாரே திரைப்படக் கவிஞர் என்று.

  • amas32 says:

   “இலக்கியத்தை அப்படியே நமக்குப் புதிதாய் வார்த்துத் தந்தான். நம் நெஞ்சதோடு என்றும் நிற்க எளிமை சேர்த்துத் தந்தான். அவனுக்குப் பின் அதைச் செய்வாரில்லை.” சத்தியமான வார்த்தைகள். கண்ணதாசனைப் போல ஒரு எளிமையான கவுங்கனை நான் பார்த்ததில்லை. அவருடைய பாடல்கள் என்றும் மனதை விட்டு அகலாதவை 🙂
   amas32

 2. GiRa says:

  வெண்ணிலா எனும் முழுமதி அனல்வாரி மேனி கொதிக்க
  தாமரை அதன் மேலவள் காமத் தீயில் வெந்து கொதிக்க
  பூசுகின்ற கந்தம் என்பது காய்ந்துடனே சருகாய் உதிர
  ஆசையுள்ள பேதை நெஞ்சம் பெரும் போதை மிஞ்ச
  தென்றல் தீண்ட வெங்குமிழும் கொண்டதே
  பூசைக்குப் பொருளுண்டு கொண்டு பூசை பல செய்தேன் – நெஞ்சத்து
  ஆசைக்கு மருந்துண்டோ உண்டு நானும் சுகம் பெறவே?
  உண்டென்றும் நெஞ்சறிவேன் வில் தாங்கும் நோயொன்று
  எந்நோய்க்கு அந்நோயும் அந்நோய்க்கு எந்நோயும் மருந்தென்று சேர்ப்பீரோ!
  இப்படிக்கு,
  சனகன் வளர்த்த சீதை

 3. amas32 says:

  சீதையை வாட்டும் இந்த ஆசை நோய்க்கு மருந்து திருமணமே! சீதை மட்டும் அல்ல, காதலில் வாடும் அனைவருக்குமே அது தான் தீர்வு, தமிழ் கலாசாரம் மாறாத வரையில்! கம்பனின் வரிகளை படிக்கப் படிக்க இன்பம் 🙂
  amas32

 4. அந்த இடத்துல நிறைய சிறப்பான பாடல்கள். “இந்த மாதிரி தவிச்சிக்கிட்டிருக்குற பெண்ணுக்கு அபயமளிக்காதவன் எல்லாம் ஆம்பளையா?”ங்கற மாதிரி சீற்றமான வரி கூட ஒண்ணு வரும்

  சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
  “அஞ்சல் அஞ்சல்” என்றிடாத ஆண்மை என்ன ஆண்மையே

  என்ன ஒரு கோவம் !!

  //நிலாவைக் குளிர்ச்சியானது என்று சொல்வார்கள். ஆனால் இப்போது, அந்த நிலாக் கதிர்கள்கூட சீதையின் மேனியைத் தாக்கிச் சுட்டன//

  இதேபோல..

  “தென்றலைப் பகையைச் செய்த சீதையைத் தருதி”

  அப்படின்னு மாரீசன் கிட்ட ராவணன் சொல்லுவான்.

 5. Pingback: மதி மயக்கம்! | தினம் ஒரு ’பா’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s