முதலாழ்வார்கள் போற்றி!

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒருகால்

மாட்டுக்கு அருள் தரும் மாயன் மலிந்து வருத்துதலால்

நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடை விளங்க

வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் அம்மெய்விளக்கே

நூல்: தேசிகப் பிரபந்தம் (#89)

பாடியவர்: வேதாந்த தேசிகர்

முன்கதை:

பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற மூவரும் ஒருநாள் திருக்கோயிலூருக்குச் சென்றார்கள். அங்கே பெரிய மழை.

முதலில், பொய்கையார் ஓர் ஆசிரமத்துக்குச் சென்றார். ‘மழைக்கு ஒதுங்க இடம் உண்டா?’ என்று கேட்டார்.

அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் ஒரு சிறு அறையைக் காண்பித்தார்கள். ‘இங்கே ஒருவர் படுக்கலாம்’ என்றார்கள்.

சிறிது நேரத்தில் அங்கே பூதத்தார் வந்தார். ’நான் உள்ளே வரலாமா?’ என்று கேட்டார்.

‘இங்கே இருவர் உட்காரலாம்’ என்றார் பொய்கையார். உடனே பூதத்தாரும் அந்த அறையினுள் நுழைந்தார்.

சற்றுநேரம் கழித்து பேயாரும் அங்கே வந்து சேர்ந்தார். அவரையும் இவர்கள் உள்ளே அழைத்தார்கள். ‘இங்கே மூவர் நிற்கலாம்.’

உண்மையில் அது ஒரு சின்னஞ்சிறிய அறை. அங்கே சரியாக மூன்று பேர்மட்டுமே நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதற்கு இடம் இருந்தது.

ஆனால், அவர்கள் மூவரும் தங்களுக்கிடையே நான்காவதாக ஒருவர் தோன்றி நெருக்குவதுபோல் உணர்ந்தார்கள். ஆச்சர்யப்பட்டார்கள்.

அவர்களை நெருக்கிய பெருமான் யார், அதனால் என்ன அதிசயம் நிகழ்ந்தது என்று இந்தப் பாடல் விளக்குகிறது.

உரை:

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நம்முடைய உள்ளமாகிய செல்வத்துக்கு அருள் செய்யும் எம்பெருமான், மாயன் திருமால். இனிய பாசுரங்களைப் பாடி அவனை மகிழ்விக்கக்கூடிய முதலாழ்வார்கள் மூவருக்கும் அருள் செய்ய நினைத்தான் அவன்.

அதற்காக, முன்பு ஒரு நாள் திருக்கோயிலூரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களை நெருக்கி வருத்தினான். அதனால், உலகத்தின் இருளை நீக்கக்கூடிய ஒரு மெய்விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது, நான்கு வேதங்களின் உள்பொருள் விளங்கும்படியான ஒரு பிரகாசம் தோன்றியது.

துக்கடா

 • ’முதலாழ்வார்கள்’ என்று போற்றப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவருக்கும் இன்று பிறந்தநாளாம். தகவல் சொன்ன நண்பர் @kryesக்கு நன்றி 🙂
 • இங்கே ‘மாட்டுக்கு அருள்’ என்று வருவது பசு மாட்டை அல்ல, அதுதான் இன்றைய அரிய சொல் : மாடு = செல்வம் (அந்தக் காலத்தில் நிறையப் பசு மாடுகள் வைத்திருப்பவர்கள்தான் பெரிய செல்வந்தர்கள். அந்தப் பொருளில் இந்தச் சொல் வழக்கத்துக்கு வந்திருக்கலாம்)
 • உதாரணங்கள்:
 • 1. கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு, மாடுஅல்ல மற்றையவை : திருக்குறள்
 • 2. மறப்பின்மை யான் வேண்டும் மாடு : நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்
122/365
Advertisements
This entry was posted in ஆழ்வார்கள், கதை கேளு கதை கேளு, திருமால், பக்தி. Bookmark the permalink.

5 Responses to முதலாழ்வார்கள் போற்றி!

 1. கதை சொல்லிக்கு நன்றி:)
  முதலாழ்வார்கள் மூவரும், ஒரு நாள் விட்டு ஒரு நாள், அடுத்தடுத்து பிறந்தவர்கள்!

  “ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம்” இவை
  ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
  பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
  தேசுடனே தோன்று சிறப்பால்!
  ——–

  ஒருவர் படுக்க,
  இருவர் இருக்க,
  மூவர் நிற்க,
  நால்வர் நெருக்க…

  ஆழ்வார்களின் ஈரத் தமிழான = முதல் பாசுரம் உருவாகியது!
  அதுவும் உலகத்தை முதலாக வைத்து…

  “வையம்” தகளியா, வார்கடலே நெய்யாக
  வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
  சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் தமிழ்மாலை
  இடர் ஆழி நீங்குகவே என்று!

  உலகம்-கடல்-கதிரவன் போற்றுதும்ன்னு சிலப்பதிகாரம் போலவே….

 2. //நான்மறை அந்தி நடை விளங்க//

  யாரும் தப்பா எடுத்துக்கலீன்னா ஒன்னு சொல்லுறேன்; இதுக்கு மரபிலே வேறு பொருள்:)
  நான்மறை = இருள் :)))
  என்னாது? வேதம் = இருளா?ன்னு வியப்பா இருக்கா?

  நான்மறை அந்தி நடை விளங்க = நான்கு வேதங்களின் உள்பொருள் விளங்கும்படியான -ன்னு சொக்கன் பொருள் கொண்டது ஓரளவு சரியே என்றாலும்…
  இதுக்கு மரபிலே, “உரை செய் பொருள்” என்ன-ன்னா…
  ———–

  அது என்ன அந்தி நடை?
  அந்தி = இருள், இருள் சாயும் நேரம்
  வேதம் = இருளைப் போன்றது, இருட்டான பாதை (நடை) என்று மரபிலே எழுதி வைத்துள்ளார்கள்!:)

  ஏன்?

  வடமொழியில், இரிக்கு, யஜூர், சாம, அதர்வண வேதங்களில்…இறைவன் மட்டுமே பேசு பொருள் அல்ல! யாகம்/ஹோமம்/கர்மா போன்ற சடங்குகள், நாத்திகவாதம் கூட வேதத்தில் உண்டு!
  இதனால் எது சரி, எது தவறு-ன்னு வேதம் படிக்கறவங்களுக்கு குழம்பும்! அதான் இருட்டான பாதை=அந்தி நடை என்கிறார்!

  அந்தப் பாதைக்கு, விளக்கு போல் வந்து உதவியது = தமிழ் வேதமான அருளிச் செயல்!
  செய்ய “தமிழ் மாலைகள்” யாம் தெளிய ஓதி
  “தெளியாத மறைநிலங்கள்” தெளிகின்றோமே-ன்னும் பாடுவாரு!

  இப்படி, வேதத்தை = தெளியாத மறைநிலம், அந்திநடை-ன்னு…சொல்லவும் ஒரு துணிவு வேணும்:)
  அதுக்கும் மேல, அந்தத் தெளிவில்லா வேதங்களையும், எனக்குத் தெளிவிச்சது, தமிழ் மாலைகள்-ன்னு சொல்ல அதை விடத் துணிவு வேணும்:))

  இன்றும் பெருமாள் கோயில்களில் இந்தப் பாட்டைக் கருவறையில் சொல்கிறார்கள்!
  ஆனாப் பொருள் தெரிஞ்சி சொல்லுறாங்களா-ன்னு எனக்குத் தெரியாது! பொருள் தெரிஞ்சிச்சின்னா பயந்தாலும் பயந்துருவாங்க:))
  – இதுவே தமிழ் வேதங்களின் ஏற்றம்!!

 3. amas32 says:

  எப்படித் தான் ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகான பாக்களை தேர்ந்தெடுத்து விளக்கம் அளிக்கிறீர்களோ? பாராட்டுகள்! எனக்கு முதலாழ்வார்கள் பாடியதில் பேயாழ்வார் பாடிய முதல் பாடல்
  திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன்; திகழும்
  அருக்கன் அணி நிறமும் கண்டேன்; செருக் கிளரும்
  பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக்ண்டேன்
  என் ஆழி வண்ணன்பால், இன்று.
  எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் திருமகளின் பொன் நிற ஒளியினால் கருத்தத் திருமேனியூடைய திருமாலின் திருவுருவத்தை அனுபவித்தார் என்ற அழகிய உவமை என்னைப் பெரிதும் கவர்ந்தது. மேலும் பக்தியாலே பரம்பொருளை நேரில் பார்த்ததை விளக்கயுள்ளார். ஆழ்வார் திருவடிகளே சரணம்!
  amas32

 4. நெருக்கி வருத்தியது literal அர்த்தம். இந்த நிகழ்வை metaphorஆக வைத்து சொல்லப்பட்ட அர்த்தம் ஒன்று உண்டு: . “தனக்கே கொஞ்சம் தான் இருந்தாலும், தான் கொஞ்சம் சிரமப்பட்டுக்கொண்டாவது பிறருடன் அதைப் பகிநர்ந்துகொள்ள முன்வரும் மனிதர்களின் கூட்டத்தில் கடவுள் இருக்கிறான்”

 5. பிரமாதம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s