வேலினான் மனைவி

’தெய்வத யானை, கேள், தீய சூர்உயிர்

வவ்விய வேலினான் மனைவி ஆதியால்,

எவ்வுலகிற்கும் நீ இறைவி ஆம்!’ என

அவ்வவர் அடிபணிந்து அன்பொடு ஏத்தினார்.

நூல்: கந்த புராணம் (தெய்வயானையம்மை திருமணப் படலம் #171)

பாடியவர்: கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்

சூழல்: முருகன், தெய்வயானை திருமணம்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

’தெய்வ யானையே, கேள், தீய சூரனின் உயிரை வதைத்து ஏற்றுக்கொண்ட வேலவன் முருகனின் மனைவி நீ, ஆகவே, எல்லா உலகிற்கும் இறைவியாகிவிட்டாய்’ என்று அனைவரும் தெய்வ யானையின் பாதங்களை வணங்கி அன்போடு போற்றினார்கள்.

துக்கடா

 • நேற்றைய சூர சம்ஹாரத்தைத் தொடர்ந்து இன்று முருகன், தெய்வயானை திருமணம். அதற்கான விசேஷப் பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர், நண்பர் இராகவன் கோபால்சாமி
 • இன்றைய அரிய சொல் : வவ்வுதல் = ஏற்றுக்கொள்ளுதல்
 • உதாரணங்கள்:
 • 1. வானமும் வையமும் வவ்வுதல் செய்தான் : கம்ப ராமாயணம்
 • 2. வவ்வுதல் நீக்கு : புதிய ஆத்திச்சூடி (பாரதியார்)
118/365
Advertisements
This entry was posted in கந்த புராணம், நண்பர் விருப்பம், பக்தி, முருகன். Bookmark the permalink.

10 Responses to வேலினான் மனைவி

 1. GiRa says:

  என்னுடைய தெரிவைப் பதிந்ததற்கு நன்றி. 🙂

  தெய்வயானை திருமணம் என்று சொன்னதும் பழம் பாக்களில் கிடைக்கவில்லை. ஆகையால் கச்சியப்பரின் கந்தபுராணத்தில் தெய்வயானை திருமணப் படலத்திலிருந்து இந்தப் பாவை தேர்ந்தெடுத்தேன்.

  பின்னாளில் முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை என்று திருப்புகழில் அருணகிரியார் பாடினாலும் தெய்வயானை திருமணப் பாடலாக இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. தெய்வயானை திருமணத்தைப் படலமாகவே பாடிய கச்சியப்பர்தான் உதவிக்கு வந்தார்.

 2. GiRa says:

  இந்தப் பாட்டில் ஒன்று கவனிக்க வேண்டும்.

  கடவுள் என்று போற்றப்படுவதற்கு முருகன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆறுகுழந்தையா இருந்து, ஒன்றாகி, பிரம்மனைச் சிறையிட்டு, மலையைப் பிளந்து, சூர்மா தடித்து, இன்றும் உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டு… இத்தனை வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

  ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யாமல் தெய்வயானை அம்மையார் இறைவியாகி விட்டார் பார்த்தீர்களா?

  அஞ்சு வருசம் படிச்சு டாக்டர் ஆவரு ஒருத்தரு. ஆனா அவரைத் திருமணம் செஞ்சுக்கிட்டு டாக்டர் சம்சாரம் ஆயிருவாங்க அந்தம்மா. 🙂

 3. முருகா….
  இன்று திருமணமா? எனக்கு ஒன்னும் சொல்லத் தெரியல! வெக்கமா இருக்கு!
  நல்லா இருக்கணும்! வாரணம் ஆயிரம் சூழ கைத்தலம் பற்றி நல்லா இருக்கணும் முருகா!

 4. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
  பல கோடி நூறாயிரம்
  சொல்லாண்டு சொக்கத் திருமுருகா உன்
  சோதித் திருவடித் திருக்காப்பு!

  அடியோமோடும் உன்னோடும் உறவுகொண்டு
  – ஆயிரம் பல்லாண்டு!
  வடிவாய் உன்றன் வலத்துறை வள்ளியும்
  – நங்கையும் பல்லாண்டு!
  கொடியாய சேவல் கொடியவா காதலா
  – கொற்றமும் பல்லாண்டு!
  வடிவாய வேலுடன், மயிலுடன் முருகவா
  – வாழ்க நீ பல்லாண்டு!!

 5. இது நான் பேசுவதல்ல! பொய்யறியா வாரியார் பேசுவது:

  “காக்கும் கடவுளான நாராயணன் கண்ணிலே தோன்றி,
  முருகனையே எண்ணி எண்ணி வாழ்ந்து
  ஆறாண்டு காலம் சரவணப் பொய்கையிலே தவமிருந்து
  பின்பு முருகப் பெருமான் இட்ட கட்டளைப்படி
  சத்தியலோகத்திலே
  மனோபதி நகரத்திலே
  கற்பகச் சோலையிலே
  வெள்ளை யானையால் கண்டு வளர்க்கப்பட்டு
  “தேவ யானை” என்னும் பேரும் பெற்று
  சூர சங்காரத்துக்குப் பிறகு, தேவரும் ஏவரும் மூவரும் வாழ்த்த
  எம்பெருமானைக் கைப்பற்றினாள்” – தேவ குஞ்சரி பாகா நமோ நம!
  —————

  தேவானை “செய்தது” = ஆறாண்டு காலத் தவம்! அடுத்து இன்னும் பன்னீராண்டு காலப் பிறவி…

  எதுக்கு ஆறாண்டுத் தவம்? வந்தா வா, வராக்காட்டிப் போ-ன்னு ரெண்டே நாளில் சென்று விடுபவர்கள் போல இருக்கலாமே?
  உலகையே காக்கும் கடவுளின் மகள்! எதுக்குப் பிறவி எடுத்து யானையோடு இருந்து உழல வேணும்?

  இந்திரன் மகள் என்பது வெறும் பேச்சு வழக்கு, சம்பிரதாயம்! இந்திரன் பொறுப்பில் வளர்கிறாள் அவ்வளவே! அதுவும் அரண்மனையில் அல்ல! யானை இருக்கும் சோலையில், வெட்ட வெளியில்!

  ஒருவருக்கு bus stand-இல் அரை மணி நேரம் காத்துக் கிடந்தாலே…குமுறும் நமக்கெல்லாம்…
  ஆறாண்டு, பன்னீராண்டு…இருப்போமா? இருந்து பார்த்தால் தெரியுமோ என்னவோ?
  ——————

  தமிழ்நாட்டு அரசியலால் அலைகழிந்து போனவள் = தேவானை!
  தேவானைத் திருமணம் பற்றி = பரிபாடலில் உண்டு! ஆற்றுப்படை போல் அல்லாமல், நேரடியாக, பெயர் குறிப்பிட்டு…
  —————–

 6. வள்ளியின் வாட்டம் அதிகம்! தேவானையை விட அதிகம்!

  என்ன தான் பிறவி எடுத்தாலும், முருகனுக்குத் தான் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டதால்….தேவானைக்கு ஒரு பிடிப்பாச்சும் இருந்தது!

  போதாக்குறைக்கு ஆள்-அம்பு-படை-பலம் ன்னு கொஞ்சம் செழிப்பான இடம்!
  முருகனும், முத்தமிழ்-ன்னு பேசிட்டு, அழகா இருக்குற தேவானைக்கு இடம் குடுத்து விட்டான்:)))

  ஆனா வள்ளியின் நிலை?
  —————

  பேரழகு எல்லாம் கெடையாது! கருப்பு! வேட்டுவச்சி!
  ஆள்-அம்பு-படை-பலம் இல்ல…தேவாள் இனம் இல்லை…ஒரு செழிப்பும் இல்லை!
  * முருகனோடு, முன்னே பின்னே காதல் நோக்கில் பழகி் இருக்கோமா? = தெரியாது
  * முருகனை close-up இல் பார்த்தாச்சும் இருக்கோமா? நெருங்கி லுக்கு விட்டு இருக்கோமா? = தெரியாது!
  * முருகன் ஏற்றுக் கொள்வானா? = தெரியாது! தெரியாது!!

  ஆனாலும்…
  இப்படிப் பார்க்காத ஒருவனுக்காக…
  அவனே அவனே என்று
  அவனிலேயே, அவள் “ஆழ்ந்து” இருந்தாள்! – Hymns Of The Drowning!
  —————-

  * முருகன் ஏற்றுக் கொள்வானா? = தெரியாது!
  * முருகனுக்குத் தான் கொடுக்கப்படப் போகிறோம் என்ற பிடிப்பாச்சும் இருந்துச்சா? = இல்லை!!

  நடந்த கால்கள் நொந்தவோ
  நடுங்கும் ஞாலம் ஏனமாய்
  இடந்த மெய் குலுங்கவோ?
  இலங்கு மால் வரைச் சுரம்

  அவளாப் பேசிக்குவாப் போல…
  காடு மேடு குகைகள் தோறும்,
  கால் தேயத் தேய,
  மனமும் தேயத் தேய அலைந்தவள் வள்ளி!

  அதனால் தான் முருகன், அந்தத் தேய்ந்த போன பாதங்களைப் பிடித்துக் கொண்டான்! = பாதம் வருடிய மணவாளா!
  குறமகள் “இங்கித” மணவாளா!!
  ——————

  இராமனின் பாதுகைக்குத் தான் “பாதுகா பட்டாபிஷேகம்”-ன்னு சொல்லுவாய்ங்க!
  ஆனால் காதல் பாதங்களுக்கு, என் காதல் முருகன் செய்யும் இந்தப் பாதுகா பட்டாபிஷேகம், எந்தப் பாதுகா பட்டாபிஷேகத்துக்கும் ஈடாகாது!

  பாதம் வருடிய மணவாளா!
  குறமகள் “இங்கித” மணவாளா!!

 7. amas32 says:

  வள்ளியைத் திருமணம் செய்ய முருகன் அண்ணன் விநாயகர் துணையை நாடி பின் சாதுர்யமாக வள்ளியை மணம் முடித்தார். தெய்வயானை தவம் இருந்து அழகன் முருகனின் கரம் பிடித்தாள். இந்நன்னாளில் திருமணத்திற்குக் காத்து நிற்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் விரைவில் திருமணம் நடைபெற அந்த முருகன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிநிற்கிறேன்.
  amas32

 8. ஆலயங்களில் தேவானைத் திருமணமே பெரும்பாலும் நடத்திக் காட்டப்படுகிறது!
  வள்ளித் திருமணம், எழுத்து/பேச்சு மேடைகளில் மட்டுமே!

  இந்த நிலை மாறி, இரு திருமணங்களுமே நடத்திக் காட்டப்பெற வேண்டும்!

  சூரசங்காரத்தின் அடுத்த நாள் என்பதால், தேவானைத் திருமணம்! சரியே!
  தேவானைக்கு நல்லூழ்! அப்படி அமைந்து விட்டது! Victory & More Eventful:)

  ஆனால் வள்ளித் திருமணம் = திரு’மன’மும் கூட! Eventful இல்லாம இருக்கலாம்! ஆனா இனியது கேட்கின், இனியது காணின்!
  —————–

  * தேவானை அம்மையை மணந்த தலம் = திருப்பரங்குன்றம்
  * வள்ளி அம்மையை மணந்த தலம் = திருத்தணிகை!

  திருத்தணி-ன்னாலே ஏதோ பழத்துக்காக போட்ட சண்டை, கோபம் நீங்கிய தலம்-ன்னு நெனச்சீறக் கூடாது!
  இனி, திருத்தணி-ன்னா = வள்ளித் திருமண இடம்-ன்னு எல்லோருக்கும் ஞாபகம் வரணும்!

  யானை தன் அணங்கு வாழ்க
  மாறிலா வள்ளி வாழ்க
  வாழ்க சீர் அடியாரெல்லாம்!

 9. சரி சரி போதும்…
  இன்னிக்கி முருகனுக்கு முதலிரவு:)

  இதுக்கு மேலே சொல்ல வெட்கம்…
  இந்த முருகனைப் பார்த்தாச் சிரிப்பு சிரிப்பா வருது!:))
  ——-

  செவ்வேள் எனநீ பெயர் கொண்டாய்!
  சொல்வேல் கொண்டுநீ தமிழ் வென்றாய்!!

  கைத்தலம் பற்ற நான் கனவு கண்டேன்! அந்ந்ந்த….கனவுகள் நனவாக உறவு தந்தாய்!
  மனம் படைத்தேன்ன்ன்ன்ன்ன் உன்னை…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s