சூரனை வதைத்த முகம்

தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்

தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே – நின்

தந்தையினை முன்பரிந்து இன்ப அரி கொண்டு நன்

சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே

கண்டு உற, கடம்புடன் சந்த மகுடங்களும்

கஞ்ச மலர் செம்கையும் சிந்து வேலும்

கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்

கண்குளிர எந்தன்முன் சந்தியாவோ?

புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிர் அண்டமும்

பொங்கி எழ, வெம் களம் கொண்டபோது

பொன்கிரி என அம்சிறந்து, எங்கினும் வளர்ந்து முன்

புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்

கொண்ட நடனம் பதம், செந்திலிலும் என்றன்முன்

கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே,

கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்

கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!

நூல்: திருப்புகழ்

பாடியவர்: அருணகிரிநாதர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

முருகா,

கால்களில் தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, தண் கழல், சிலம்பு போன்ற ஆபரணங்கள் இனிமையாகச் சத்தமிட்டுக் கொஞ்ச நீ நடனம் ஆடுகிறாய். உன் தந்தையாகிய சிவபெருமானை வணங்கி ஆனந்தமாகக் கூத்தாடுகிறாய். அதைக் கண்டு பக்தர்கள் மகிழ்கிறோம்.

உன் கழுத்தில் அணிந்த கடம்ப மாலை, ஆறு முகங்கள், அவற்றை அலங்கரிக்கும் அழகிய மகுடங்கள், தாமரைப் பூ போல் சிவந்த கைகள், ஒளி வீசுகின்ற வேல், கண்கள், நிலா போன்ற வெண்மை நிறம்… இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எங்களுடைய கண்கள் குளிரும். எங்கள்முன் தோன்றி அந்த வரம் அருளமாட்டாயா?

வெப்பமான போர்க்களத்தினுள் நீ நுழைந்தபோது, பிரம்மன் படைத்த இந்த உலகமும், வெளி அண்டமும் பொங்கி எழுந்தன.  ’பொன் மலை’ என்று போற்றப்படும் திருச்செந்தூரில் வளரும் முருகா, உன்னுடைய நடனத்தை பிரமனின் தந்தையாகிய திருமாலும் பார்த்து மகிழ்கிறார்.

இப்படி நடனமாடிய திருப்பாதங்களை இந்தத் திருச்செந்தூரிலும் பதித்து, நான் பார்த்து மகிழும்படி ஆடுகின்ற முருகா, குறத்தியாகிய வள்ளியின் மார்பில் பூசிய சந்தன மணத்தை நுகர்கிறவனே, கும்ப முனியாகிய அகத்தியரால் வழிபடப்படுகின்ற தம்பிரானே, உன்னை வணங்குகிறேன்.

துக்கடா

 • இன்று ’சூர சம்ஹார’ நாள். அதைக் கொண்டாடும்வகையில் அற்புதமான இந்தப் பாடலைத் தேர்வு செய்து தந்த நண்பர், முருக பக்தர் @kryes. அவரது வலைப்பதிவில் இந்தப் பாடலைப் பற்றி இன்னும் விரிவாகப் படிக்கலாம் : http://muruganarul.blogspot.com/2010/11/3-tms.html
 • 6 முகங்கள், 12 கண்கள்… பன்மை சரி, அதென்ன சந்திர நிறங்கள்? சந்திர நிறம் என்று ஒருமையில் அல்லவா வரவேண்டும்? இந்த விஷயம் எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்
 • இந்தப் பாடலை ஒலி வடிவத்தில் கேட்க:
 • 1. ‘அருணகிரிநாதர்’ படத்தில் டி. எம். சௌந்தர்ராஜன் பாடியது : ஆடியோ : http://player.raag.fm/player/?browser=flash&pick[]=208185 வீடியோ: http://www.youtube.com/watch?v=LLey-OjIaJA
 • 2. ஓதுவார் பாணியில் @kryes பாடியது : http://cinch.fm/kryes/304425
 • இன்றைய அரிய சொல் : கஞ்சம் = தாமரை
 • உதாரணங்கள்:
 • 1. கஞ்ச நிமிர் சீறடியள் : கம்ப ராமாயணம்
 • 2. கஞ்சம் கலங்குவன : நளவெண்பா
117/365
Advertisements
This entry was posted in அருணகிரிநாதர், சினிமா, திருப்புகழ், நண்பர் விருப்பம், பக்தி, முருகன், வர்ணனை. Bookmark the permalink.

15 Responses to சூரனை வதைத்த முகம்

 1. amas32 says:

  இன்று இந்த பா அளித்து விளக்கமும் கொடுத்தமைக்கு நன்றியை தவிர வேறு என்ன சொல்ல முடியும். மிக்க நன்றி. அருணகிரிநாதருக்கு கோடி கோடி நன்றி.
  amas32

 2. அருணகிநாதர் பாடல்கள் உரக்க படிக்க படிக்க ஒரு பூரிப்பு வருது. இவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் தமிழ் வருது!

  • amas32 says:

   உண்மையாக இவர் பாடல்களை படிக்கும் போது தான் தமிழன் என்ற திமிர் மனதில் தோன்றுகிறது 🙂
   amas32

   • GiRa says:

    அருணகிரிக்கு ஓசைமுனின்னு ஒரு பேரும் உண்டு. அவர் வாயிலிருந்து வரும் ஓசையும் தமிழ்ப்பாவாக இருக்கும் என்பதால் அப்பெயர். தாள வகைகள் அத்தனையையும் இவரைப் போல் எவரும் இன்னும் பயன்படுத்தவில்லை.

  • அருணகிரியின் பாட்டை, எப்பமே வாய் விட்டுப் படிச்சாத் தான், பிடிபடும்! சந்தம் துள்ளும்!

   அருணகிரி அடிப்படையில் பாடல் கலைஞர்! கவிஞர்! ஆடல் வீடுகள் அப்படித் தான் அவருக்கு அறிமுகம்!
   கர்நாடக இசையாய் மட்டும் இல்லாமல், தமிழிசையில் – பண்ணிசையில் அதிகம் வடித்தவர்!
   ———

   உண்மை! தமிழ் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் துள்ளும்!
   தமிழ் இலக்கியத்தில் சந்தத்துக்கு-ன்னே பொறந்தவங்க ரெண்டு பேரு!

   * திருமழிசை ஆழ்வார் = திருச்”சந்த”விருத்தம்-ன்னே பாடி இருக்காரு! (5-6th CE) – வல்லினம் வச்சியே பாட்டு, மெல்லினம் வச்சியே பாட்டு-ன்னு பிச்சி உதறுவாரு!
   * அருணகிரிநாதர் = சொல்லவே வேணாம்! வாயைத் திறந்தாலே சந்தம் தான்! 15th CE

 3. சொக்கரே, பாடலை இட்டமைக்கு மிக்க நன்றி:) அருணகிரியாரின் சார்பாகவும் ஒரு நன்றி:)
  பின்னே…@dagalti @amas32 எல்லாம் எப்படி ரசிக்கறாங்க பாருங்க! அதுக்குத் தான்:)

  முருகா…நீ இதே போல், அடியவர்-அன்பர் புடைசூழ, நல்லா இருக்கணும்!
  தமிழ் இருக்குற வரைக்கும் ஒனக்கு ஒரு குறையும் வராது…பல்லாண்டு பல்லாண்டு!

 4. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
  பல கோடி நூறாயிரம்
  சொல்லாண்டு சொக்கத் திருமுருகா உன்
  சோதித் திருவடித் திருக்காப்பு!

  அடியோமோடும் உன்னோடும் உறவுகொண்டு – ஆயிரம் பல்லாண்டு!
  வடிவாய் உன்றன் வலத்துறை வள்ளியும் – நங்கையும் பல்லாண்டு!
  கொடியாய சேவல் கொடியவா காதலா – கொற்றமும் பல்லாண்டு!
  வடிவாய வேலுடன், மயிலுடன் முருகவா, வாழ்க நீ பல்லாண்டு!!

 5. //6 முகங்கள், 12 கண்கள்… பன்மை சரி,
  அதென்ன சந்திர நிறங்கள்?
  சந்திர நிறம் என்று ஒருமையில் அல்லவா வரவேண்டும்?//

  நல்ல கேள்வி! 100 மதிப்பெண்கள்:)
  இதே போல, “மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்-கள்”-ன்னு சொல்லுவாரு!
  முருகா – ஒருமை தானே! அப்பறம் என்ன நாமங்-கள்? 🙂
  ——

  சந்திரனின் நிறம்…
  1. பெளர்ணமி அன்று = மஞ்சள் (Yellow)
  2. அமாவாசைக்கு ஒரிரு நாள் முன்பு = வெளிர் நீலம் (Blue moon)

  3. மாலையில் = வெள்ளை (White)
  4. காலையில் = சாம்பல் (Grey)

  5. குளிர் காலத்தில் = காவி (Orange)
  6. அபூர்வமாக, கிரகண காலங்களில் = சிவப்பு (Red)

  நிலவு = பூமியின் சுழலுக்கேத்தாப் போல தன் நிறத்தை மாற்றி மாற்றி இன்பம் குடுக்கும்! = குளிர்ச்சி!
  அதே போல் முருகனின் அறு முகங்கள் = அறு வண்ணங்கள்! நம்ம சுழலுக்கு ஏத்தாப் போல் மாறி மாறிக் குளிரப் பண்ணும்!

  இதுவே சந்திர “நிறங்கள்”!
  சந்திர நிறங்களும் கண்குளிர எந்தன்முன் சந்தியாவோ?

 6. அதே போல் தான், முருகா எனும் நாமங்-கள்!

  மயில் ஆடின = தப்பு!
  மயில்கள் ஆடியது = தப்பு!
  அப்பறம் எப்படி முருகா என்னும் நாமங்-கள்? கள் போதையோ?:)

  “பன்மை மயக்கம்”-ன்னு இதுக்கு தமிழ் இலக்கணத்தில் விதிவிலக்கு உண்டு!
  வழி மேல் விழி வைத்து = விழிகள் வைத்து-ன்னு தானே சொல்லோணும்? ஒரு விழியை மட்டும் தனியா வைக்க முடியுமா?:)
  ஆக இது = ஒருமை மயக்கம் / பன்மை மயக்கம்
  ————

  ஆனா முருகா என்னும் நாமங்-கள் என்பது சரி தான்!
  முருகா = பார்ப்பதற்கு ஒரே பெயர்ச்சொல் போல் இருந்தாலும், அதுக்குள்ளே மூனு முத்துக்கள் இருக்கு!

  * மு = மெல்லினம் = அழகு
  * ரு = இடையினம் = இளமை
  * கு = வல்லினம் = கடவுள்தன்மை (உறுதி)

  இப்படி மூன்றாய் இருப்பதால், முருகா என்னும் நாமங்-கள் என்பது சரியே!
  ———-

  முருகு = பல் பொருள் ஒரு மொழி! மொத்தம் ஆறு பொருள் குடுக்கும்!
  1 அழகு
  2 இளமை
  3 மணம்
  4 மகிழ்ச்சி
  5 இனிமை
  6 தெய்வம்

  முருகுகள் இளமை நாற்றம்
  முருகவேள் விழா வனப்பாம் – என்பது சூத்திரம் (சூடாமணி நிகண்டு)

 7. முருகனுக்கு பண்டைத் தமிழ்ப் பெயர் = சேயோன்!
  அப்பறமாச் சங்க காலத்தின் நடுவில் = முருகன்!

  இது எப்படி மாறுச்சி-ன்னு உறுதியாத் தெரியாது!
  ஆனா பெண்களைப் பிடிக்கும் ஆவி போல் கருதப்பட்ட சேயோன் (வெறியாட்டு),
  பின்பு அதே பெண்களுக்கு அழகனாகவும் ஆகிப் போனதால் = முருகன் ன்னு வந்திருக்கலாம்!

  * மு-ரு-கு = மெல்லின-இடையின-வல்லினம்…அதனால் தான் அவன் தமிழ்க் கடவுள்-ன்னு யாரும் பார்த்துப் பார்த்து உருவாக்கலை!:)
  * உயிர் எழுத்து = 12 = 12 கரம்
  * மெய் எழுத்து = 18 = 18 ௧ண்
  – இப்படியெல்லாம் ஒரு மொழியை யாரும் உருவாக்கலை:) பகுத்தறிவுக்கும் ஒவ்வாது:)

  இது என்னவன் முருகனுக்குத் தானா அப்படி அமைஞ்சது!

  சொல்லப் போனா, சங்கத் தமிழ் முருகனுக்கு ஒரே முகம் தான்! இயற்கையோடு இயைந்த தமிழ் வழிபாடு!
  அப்பறமாக் கலந்த பின் தான், பல கதைகள், fairy tales, 18 கண், 12 கை எல்லாம்….

  இந்தச் சொல் விளையாட்டு, எண் விளையாட்டு எல்லாம் தாண்டி….
  பண்டைத் தமிழ்க் குடிகளின் வாழ்வியலில் இருந்த பெரும் தலைவன், தெய்வம் என்பதால் தான் முருகப் பெருமான் = தமிழ்க் கடவுள்!!!

 8. //அவரது வலைப்பதிவில் இந்தப் பாடலைப் பற்றி இன்னும் விரிவாகப் படிக்கலாம்
  http://muruganarul.blogspot.com/2010/11/3-tms.html//

  சொக்கரே…அது குழு வலைப்பூ! “என்” வலைப்பூ அல்ல!:)
  ஆனாலும் என் வலைப்பூ! என்னவன் வலைப்பூ:)
  குழுவினர் பலரும் நல்ல முருகன் பாடல்களை இடும் தளம் – சினிமா/மரபிசை எல்லாம் – முருகன் பாடல்கள்!

  அந்தப் பதிவு சென்ற ஆண்டு சஷ்டிக்காக எழுதியது! மருத்துவமனையில் இருந்து கொண்டு!:)

 9. Pingback: வேலினான் மனைவி « தினம் ஒரு ’பா’

 10. பாடலைப் பற்றி முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்து போனேன்…

  இது திருச்செந்தூர் திருப்புகழ்!
  செந்தூருக்கு அருணகிரி முதல் முதலாக வந்த போது, செந்திலான் கோலத்தில் மயங்கி நின்றார்! அப்போது, அவர் ஆசைக்கு இணங்க, முருகன் நடனம் ஆடிய பாட்டே இஃது!

  பொதுவா, சிவபெருமான் தான் நடம் ஆடுபவர்! ஆனால் அப்பனுக்கே பாடம் சொன்ன பிள்ளை, ஆட்டத்திலும் அப்பனை மிஞ்சுகிறது:))
  —–

  //கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்//

  சந்தன மணத்தை எப்படி “உண்ண” முடியும்? 🙂
  இது மிகுந்த காதல் சொட்டும் பகுதி! அதனால் me finger on the lips, ok-vaa muruga? 🙂

 11. சூர சங்காரம் – முடிப்பாகச் சில தகவல்கள்….
  Twitter-இல் இட்டதை, இங்கே பதிந்து வைக்கிறேன்!

  1. சூர சங்காரம் நடந்தது திருச்செந்தூரில் அல்ல! ஈழத்தில்! ஏமகூடம் என்னும் இடத்தில், சூரனின் ஊரும் அஃதே

  2. சூர சம்ஹாரம் – தேவ சேனாதிபதி! இதெல்லாம் பண்டைத் தமிழ் மரபில் இல்லை! தமிழில் முருகன்/சேயோன் இயற்கையோடு இணைந்த கடவுள்

  3. சூரசம்ஹாரம் என்று கோயிலில் நடித்துக் காட்டுவது/தலையை வெட்டுவது…தவிர்க்கலாம்! – இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

  4. வடக்கே ராம்லீலா-வில் இராவணன் பொம்மை கொளுத்துவது போல், தமிழ்நாட்டு ஆலயங்களில் சூரன் தலை வெட்டல் ஆகி விட்டது!

  5. திருத்தணியில் மட்டும் “சூர சம்ஹாரம்” எப்போதும் நடத்தப்படுவதில்லை!
  ———————

  6. சூர் = துன்பம்! துன்பக் கடல்! சங்க இலக்கியத்தில் முருகன் = சூர் தடிந்தவன் என்று சொல்வது இஃதே!

  7. திருச்செந்தூர், திருவேரகம்(சாமிமலை), திருவரங்கம், திருவேங்கடம் கோயில்களை, 5thCE சிலப்பதிகாரம் காட்டும்! >1500yrs old

  8. சூரனை வதைத்ததாகச் சொன்னாலும், அவனை மயிலாக்கித் தன்னருகேயே தான் வைத்துக் கொண்டுள்ளான்! நாம் மயிலை வணங்கினாலும், சூரனைத் தான் வணங்குகிறோம்:) வேலும் மயிலும் துணை!:)

  9 முருகனுக்கு யார் குடியும் கெடுக்கத் தெரியாது!
  “அசுரர் குடிகெடுத்த ஐயா வருக”ன்னு சொல்லாம, இத்திருநாளை “அன்புடன்” கொண்டாடுவோம்!

 12. நிலவொளி மறைப்பில் வெவ்வேறு நிறங்கள் தோன்றும.அஃதாவது, நிலத்தின் நிழல் நிலவில் படிகையில் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு நிறமாக இருக்கும்.
  12 கண்களும் பரிவு, கனிவு, தீமைக்கு எதிரான வெகுளி எனப் பல்வேறு நிறங்கள் உடையன எனக்கருதி இருக்கலாம். அல்லது சூரிய சந்திர நிறங்களோ என்பதில் சூரிய என்பதை விடுத்து இருக்கலாம். உங்களின் நாளும் ஒரு பா நல்கும் தொண்டு பெரிதும் பாராட்டிற்குரியது. தொண்டு தொடர வாழ்த்துகின்றேன்.
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s