மழை மழை!

விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர

நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு

அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்

முரசு அதிர்ந்து அன்ன இன்குரல் ஏற்றொடு

நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி

இன் இசை முரசின் சுடர்ப் பூண் சேஎய்

ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்

மின் மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென…

நூல்: குறிஞ்சிப் பாட்டு (வரிகள் 46 முதல் 53 வரை)

பாடியவர்: கபிலர்

சூழல்: குறிஞ்சித் திணை. கதாநாயகியும் அவளது தோழியும் காட்டு வயலில் மேயும் கிளிகளை விரட்டச் செல்கிறார்கள். அப்போது அங்கே மழை பொழிகிறது. பின்னர் தோழி அந்தக் காட்சியைக் கதாநாயகியின் தாய்க்கு விவரிக்கிற பகுதி இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

வானத்தில் பறக்கின்ற பறவைகள் எல்லாம் தம்முடைய விருப்பத்துக்கு உரிய கூடுகளில் போய்ச் சேர்கின்றன.

நீரால் நிறைந்த கடல். அந்தத் தண்ணீரில் கொஞ்சத்தைமட்டும் அள்ளிச் செல்கின்றன மேகங்கள். அந்த மேகங்களின்மீது காற்று வீசிக் கலங்கடிக்கிறது. முரசு முழங்குவதுபோல உருமல் ஒலியோடு இடி இடிக்கிறது.

ஒளி நிறைந்த நகைகளை அணிந்தவன், இனிய ஒலியைக் கொண்ட முரசை உடையவன், அந்த முருகன் தன்னுடைய பகைவர்களை அழிப்பதற்காகக் கையில் ஏந்தியிருக்கிற இலை போன்ற வேலைப்பாடுகளைக் கொண்ட வேல்போல மின்னல் மின்னுகிறது. மலைமுழுவதும் மழை பொழியத் தொடங்குகிறது.

துக்கடா

 • மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு மினி அறிவியல் விளக்கம் இந்தப் பாடலில் உண்டு. முழு விளக்கம் வேண்டுமென்றால் திருப்பாவை படிக்கலாம். ‘ஆழி உள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து பாழிஅம் தோள் உடை பத்மநாபன் கையில் ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்’ என்று மிக நுணுக்கமாக வர்ணிக்கிறாள் ஆண்டாள்
 • இந்தப் பாட்டில் இன்னொரு சுவையான பகுதி, இரண்டு முரசுகள். ஒரு முரசு சத்தமாக அதிர்ந்து இடியாக இடிக்கிறது, இன்னொரு முரசு முருகனுக்காக இன்னிசை பாடுகிறது!
 • குறிஞ்சிப் பாட்டு ஒரு சுவாரஸ்யமான குறுங்காவியம். ’பூவெல்லாம் கேட்டுப் பார்’ சினிமாவில் இதன் ஒரு சிறு பகுதியைக் கேட்டிருப்பீர்கள்:
 • இன்றைய அரிய சொல் : பௌவம் = கடல் (ஆழமான நீர்ப் பகுதி)
 • உதாரணங்கள்:
 • 1. தென் திரைப் பௌவம் பாய்ந்து… : ஐங்குறுநூறு
 • 2. திருவின் தொடர்போக பௌவம்… : கம்ப ராமாயணம்
116/365
Advertisements
This entry was posted in அகம், இயற்கை, கபிலர், குறிஞ்சி, சினிமா, தோழி, வர்ணனை. Bookmark the permalink.

One Response to மழை மழை!

 1. குறிஞ்சி திணை என்பதனால் முருகன் இல்லாமல் பாடல் அழகு பெறாது.

  என்ன அழகான ஒரு சூழ்நிலை. வயலில் பறவைகளை விரட்டச் செல்லும் போது பெய்த மழையை பற்றி தோழி நாயகியின் தாயிடம் எடுத்துச் சொல்கிறாள். இடியும் மின்னலும் கூடிய மழை வருவதனால் பறவைகள் அனைத்தும் கூட்டில் சென்று அடைகின்றன.

  இடி முரசொலி போல உள்ளது. மின்னலோ வேலவனின் கையில் உள்ள வேலில் இருந்து வரும் பளீர் ஒளியை ஒத்துள்ளது. அழகிய ஆபரணங்களை அணிந்து எதிரிகளை வீழ்த்த ஒளிபொருந்திய வேலை உடையவனும் இனிய முரசொலியை கேட்டு மகிழும் ஆறுமுகனின் குன்றின் மேல் மழை பொழிகிறது. கபிலரின் பாடலின் பெருமையை கூறவும் வேண்டுமோ!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s