வினை தீர்ப்பவனே

சீதக் களபச் செந்தாமரைப் பூம்

பாதச் சிலம்பு பல இசை பாடப்

பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நால் இரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்

திரண்ட முப்புரி நூல் திகழ் ஒளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே,

முப்பழ நுகரும் மூஷிக வாகன!

நூல்: விநாயகர் அகவல் (முதல் 15 வரிகள்)

பாடியவர்: ஔவையார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

விநாயகனே,

கற்பக மரத்தைப்போல் பக்தர்கள் கேட்டதையெல்லாம் அள்ளித் தருகிற யானை முகனே,

மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சுவைக்கிறவனே, மூஞ்சூறு வாகனத்தில் உலா வருகிறவனே,

குளிர்ந்த, மணம் வீசுகிற செந்தாமரையைப் போன்ற உன் மலர்ப்பாதங்களில் சிலம்புகள் பலவிதமான ஒலிகளை எழுப்பிப் பாடுகின்றன. உன் அழகிய இடுப்பில் தங்கத்தால் ஆன அரைஞாண் கயிறும் மென்மையான ஆடையும் உனக்கு மேலும் எழில் சேர்க்கின்றன.

பெட்டி போன்ற பெரிய வயிறு, யானை முகத்தில் கனமான ஒற்றைத் தந்தம், சிந்தூரப் பொட்டு.

ஐந்து கைகள், அவற்றில் அங்குசம், பாசம் போன்ற கருவிகள். பக்தர்கள் உள்ளத்தில் என்றும் தங்கியிருக்கும் நீல மேனி.

தொங்கிய வாய் (தும்பிக்கை), நான்கு பெரிய தோள்கள், மூன்று கண்கள், முகத்தில் மூன்றுவிதமான மதநீர் பொழிவதால் ஏற்பட்ட தழும்புகள், இரண்டு காதுகள், தலையில் அழகாகத் திகழும் தங்கக் கிரீடம், மூன்று பிரிகளை ஒன்றாகத் திரட்டிய பூணூல், ஒளி பெற்று விளங்கும் மார்பு…

இப்படி எத்தனை சொற்களில் வர்ணித்தாலும் அவற்றையெல்லாம் கடந்து நிற்கும் அழகு உன்னுடையது. மூளையின் நுட்பமான பகுதிகளால் உணரக்கூடிய மெய்ஞ்ஞான அற்புதமாகிய உன்னை வணங்குகிறேன்!

துக்கடா

 • நமக்கு இரண்டு கைகள், இரண்டு தோள்கள், 1:1 விகிதம், ஆனால் விநாயகருக்குமட்டும் ஐந்து கைகள், நான்கு தோள்கள்தானா? கணக்கு இடிக்கிறதே!
 • உண்மையில் பிள்ளையாருக்கு நான்கு கைகள், நான்கு தோள்கள்தான், ஐந்தாவது கை அவரது தும்பிக்கை, ஆகவே தோள் கணக்கில் ஒன்று குறைவு 🙂
 • சிவனுக்கு மூன்று கண், கேள்விப்பட்டிருக்கிறோம். விநாயகருக்குமா?
 • ஆமாம். அப்ராக்ருத சூர்ய, அப்ராக்ருத சந்த்ர, அப்ராக்ருத அக்னி என்று விநாயகருக்கு மூன்று கண்கள் உண்டு என்கிறார் விநாயகர் அகவலுக்கு விரிவான உரை எழுதிய குகஸ்ரீ ரசபதி. (அவரது உரையை இங்கே நீங்கள் முழுமையாகப் படிக்கலாம் : http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0231.pdf )
 • ’யானைக்கு மதம் பிடிக்கிறது’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில் அது மதம் அல்ல, மதங்கள். கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் ஆகிய அவற்றைதான் ‘மும்மதம்’ என்கிறார் ஔவையார்
 • ’துரிய மெய்ஞ்ஞானம்’ என்ற வார்த்தைக்கு நான் படித்துத் தெரிந்துகொண்ட விளக்கத்தை (மூளையின் நுட்பமான பகுதிகளால் உணரவேண்டிய அறிவு) உரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இதுபற்றி மேலும் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் விவரம் சொல்ல வேண்டுகிறேன்
 • ‘அகவல்’ என்றால் மயிலின் ஓசை. அதே அமைப்பில் வந்த பாடல் வகையை ‘அகவல் பா’ என்று அழைப்பார்கள். இந்த நூல் விநாயகரைப் பற்றிய அகவல் பா, ஆகவே ‘விநாயகர் அகவல்’ எனப் பெயர் பெற்றது
 • இந்தப் பாடலை இசை வடிவமாகக் கேட்க:
 • 1. சீர்காழி கோவிந்தராஜன் குரலில் : http://www.youtube.com/watch?v=O8MIKnKyWls
 • 2. எம். எஸ். சுப்புலஷ்மி குரலில் : http://www.youtube.com/watch?v=z4MP_98draI
 • இன்றைய அரிய சொல் : சீதம் = குளிர்ச்சி
 • உதாரணங்கள்:
 • 1. மலைமகள் பூண் அணி சீதம் அது அணிதரு…  : தேவாரம்
 • 2. தாது கொண்ட சீதம் மேவு சாந்து… : கம்ப ராமாயணம்
115/365
Advertisements
This entry was posted in ஔவையார், பக்தி, பிள்ளையார், வர்ணனை. Bookmark the permalink.

3 Responses to வினை தீர்ப்பவனே

 1. amas32 says:

  எனக்கு மிகவும் பிடித்த பிள்ளையார் ஸ்துதி. சொல்லும் போதே பொருள் உணர்ந்து சொல்லக் கூடிய அளவில் எளிமையான பாடல். விநாயகருக்கு எப்படி மூன்று கண்கள் என்று தெரியாமல் இருந்தது. சொல்லியமைக்கு நன்றி!
  amas32

 2. amas32 says:

  “நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்”
  விநாயகர் கபில வர்ணம். கருப்பும் நீலமும் சாம்பல் நிறமும் கலந்த திருமேனி. யானை நிறத்தவன். அதனால் நீல மேனி.
  amas32

 3. Banu Venkat says:

  Really good to know the meanings in simple way .. pls go thro d whole poem .. efficient efforts .. keep it up !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s