மிஞ்சியது தனக்கு

நெடும்கயிறு வலந்த குறும்கண் அவ் வலை

கடல் பாடு அழிய, இன மீன் முகந்து

துணை புணர் உவகையர் பரத மாக்கள்

இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி

உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும்

ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ

அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி

பெரும்களம் தொகுத்த உழவர் போல

இரந்தோர் வறும்கலம் மல்க வீசி

பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி

கோடு உயர் திணிமணல் துஞ்சும் துறைவ!

பெருமை என்பது கெடுமோ – ஒரு நாள்

மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்

தண் நறும் கானல் வந்து ‘நும்

வண்ணம் எவனோ?’ என்றனீர் செலினே?

நூல்: அகநானூறு (#30)

பாடியவர்: முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

சூழல்: நெய்தல் திணை. காதலனிடம் (காதலி சார்பாக) தோழி சொல்வது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

கடற்கரை. அங்கே ஏகப்பட்ட கூட்டம். ஒரே ஆரவாரம், சத்தம், கூச்சல், கொண்டாட்டம்!

பரதவ (மீனவ) இளைஞர்களும் முதியவர்களும் தங்களது துணையோடும் உறவினர்களோடும் வருகிறார்கள். உப்பு வியாபாரிகள் மூட்டைகளை ஏற்றி வருகிற வண்டிகளில் பூட்டப்பட்டிருக்கும் வலிமை மிகுந்த எருதுகளைப்போல் அவர்கள் ஒன்றாகக் கூடுகிறார்கள்.

அந்த மீனவர்களிடம் நீண்ட கயிறுகள் இருக்கின்றன, அவற்றில் சின்னச் சின்னக் கண்களைக் கொண்ட வலைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த வலைகளைக் கொண்டு கடலில் உள்ள மீன் இனங்களைப் பிடிக்கிறார்கள். நுண்மணலை உடைய கரைக்குத் திரும்புகிறார்கள். மீன்கள் நிரம்பி வழியும் வலைகளை இழுத்துவருகிறார்கள்.

அப்போது அங்கே வறுமையில் வாடும் பலர் நெல் வயலில் குவிந்த உழவர்களைப்போல வந்து கூடுகிறார்கள். பாத்திரம் ஏந்தி நிற்கிறார்கள்.

இதைக் கண்ட மீனவர்கள் தங்களிடம் உள்ள மீன்களை அள்ளி அள்ளி அந்தப் பாத்திரங்களில் போடுகிறார்கள். அவை நிரம்பி வழிகின்றன.

இப்படி வாரி வழங்கியதுபோக மிஞ்சிய மீனைமட்டுமே அந்த மீனவர்கள் கூறு கட்டி விற்கிறார்கள். அதன்பிறகு, கரையில் உள்ள மணல் பரப்பில் தூங்குகிறார்கள்.

அப்படிப்பட்ட மீனவ இனத்தின் தலைவனே,

சுத்தம் செய்யப்படாத முத்துகளைப்போல் அரும்புகள் மலர்ந்த புன்னை மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலை. குளிர்ச்சியான அந்த அழகியச் சோலையில்தான் நானும் என் தோழியும் தினசரி விளையாடுகிறோம்.

இப்போதெல்லாம் நீ அந்தக் கடற்கரைச் சோலைக்கு வருவதே இல்லை. அங்கே விளையாடும் எங்களைப் பார்த்து ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று விசாரிப்பதும் இல்லை. ஏன்? எங்களைப் பார்க்க வந்தால் உன்னுடைய பெருமை கெட்டுவிடுமோ?

துக்கடா

 • இன்றைய பாடல் ‘அக’நானூறு தொகுப்பில் இடம்பெற்றிருந்தாலும், இங்கே காதலைவிட சங்க காலத் தமிழர்களின் ஈகைக் குணத்தை விவரிப்பதுதான் முதன்மையாகத் தெரிகிறது. வறுமையில் வந்து நின்றவர்களுக்குக் கொடுத்தபின் மிஞ்சியதைமட்டுமே விற்பனை செய்வது என்பது எப்பேர்ப்பட்ட பண்பு!
 • ’எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே’ என்ற திரைப்பாடலை இங்கே நினைத்துக்கொள்ளலாம்
 • தோழி தலைவனிடம் சொல்லும் ‘நும் வண்ணம் எவனோ?’ என்ற வாசகத்தின் உண்மையான பொருள் ‘உங்கள் அழகு எப்படி இருக்கிறது?’ என்பதுதான். அதை இன்றைய பழகுமொழிக்கு ஏற்பக் கொஞ்சம் மாற்றி ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று பொதுவாகப் பயன்படுத்தியிருக்கிறேன்
 • இன்றைய அரிய சொல் : உமணர் = உப்பு வியாபாரிகள்
 • உதாரணங்கள்:
 • 1. உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் : குறுந்தொகை
 • 2. உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுப : புறநானூறு
114/365
Advertisements
This entry was posted in அகநானூறு, அகம், காதல், கொடை, நெய்தல், வர்ணனை. Bookmark the permalink.

One Response to மிஞ்சியது தனக்கு

 1. பாடியவர் பெயரே வித்தியாசமா இருக்கே. இதுக்கு ஏதாவது கதை இருக்கா?

  “வறும்கலம் மல்க வீசி” brilliant
  இதை விட அடர்த்தியா எப்படி சொல்ல முடியும்!

  “பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி” – அப்படின்னா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s