ஊடல் அதிகமானால்…

ஊடல் எனஒன்று தோன்றி அலர்உறூஉம்

கூடல் இழந்தேன் கொடிஅன்னாய், நீள்தெங்கின்

பாளையில் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்

காளையைக் கண்படையுள் பெற்று.

நூல்: முத்தொள்ளாயிரம்

பாடியவர்: தெரியவில்லை

பாடப்பட்டவர்: சோழன்

சூழல்: காதல் கனவு கண்டு எழுந்த ஒரு பெண் வருத்தத்தோடு பேசுகிறாள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

என் தோழீ, கொடி போல் மெலிந்தவளே,

சற்றுமுன் நான் தூங்கச் சென்றேன். கனவில் என் காதலன் தோன்றினான்.

என்னுடைய காதலன் யார் என்றுதான் உனக்குத் தெரியுமே, சோழ மன்னன், அவனுடைய நாட்டில் காவிரி ஆறு பாய்ந்து ஓடுகிறது, வளத்தை அள்ளித் தருகிறது, ஆகவே, அங்கே உயரமாக வளர்ந்த தென்னை மரங்களின் பாளைகளில்கூடத் தேன் வடிகிறது.

அந்தக் கட்டிளம் காளை என் கனவில் வந்தவுடன் நான் அவனைக் காதலுடன் கொஞ்சி மகிழ்ந்திருக்கவேண்டும். ஆனால் முட்டாள்தனமாக ஒரு வேலை செய்தேன்: அவன்மேல் ஊடல் கொண்டதுபோய் பொய்க் கோபத்தோடு திரும்பி உட்கார்ந்தேன். அப்போதுதான் அவன் என்னைக் கெஞ்சிக் கொஞ்சி சமாதானப்படுத்துவான் என்று நினைத்தேன்.

ஆனால், இதெல்லாம் நடப்பதற்குள், என்னுடைய கனவு கலைந்துவிட்டது. அவனைக் காணவில்லை.

என் நிலைமையைப் பார் தோழி, ஊடலினால் கூடலை இழந்துவிட்டேன். இப்போது என்ன செய்வது?

துக்கடா

 • தென்னை மரத்தில் எப்படித் தேன் வடியும்? கவிதைக்குப் பொய் அழகுதான், அதற்காக இப்படியா? 😉
 • இதற்கும் ஒரு சுவாரஸ்யமான விளக்கம் உண்டு. சோழ நாட்டுப் பூக்களில் தேன் நிறையச் சுரக்க, அதையெல்லாம் உறிஞ்சிய ஈக்கள் / வண்டுகள் அவற்றை எங்கே சேமிப்பது என்று தெரியாமல் திணறின, உயரத்தில் இருந்த தென்னை மரப் பாளைகளில் கொட்டிவைத்தன, அதனால் அந்த நாட்டுத் தென்னம்பாளைகளில்கூடத் தேன் வடியுமாம்!
 • இன்றைய அரிய சொல் : தெங்கு = தென்னை
 • 1. தளரா வளர் தெங்கு : மூதுரை
 • 2. குலைத் தெங்கம் சோலை சூழ் : தேவாரம்
111/365
Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், காதல், சோழன், தோழி, முத்தொள்ளாயிரம், வெண்பா. Bookmark the permalink.

6 Responses to ஊடல் அதிகமானால்…

 1. GiRa says:

  கனவு கண்டேன்னு சினிமாவுல இன்னைக்கு எத்தனையோ பாட்டு. ஆனா அன்னைக்கே கனவுப் பாட்டுகள் இருந்திருக்குன்னு முத்தொள்ளாயிரத்துல இருந்து தெரியுது. 🙂

  தெங்கின் காய்தான் தேங்காய். சங்கப்பாடல்களில் தேங்காய் கிடைக்காது. இன்றைக்கும் கன்னடத்தில் தெங்கின்காய் தான் வழங்கப்படுகிறது.

 2. தென்னம் “பாளை” என்றால் என்ன? பார்த்து இருக்கீங்களா?:)

  //அலர் உறூஉம் கூடல்// அலர் என்றால் என்ன? பேசி/கேட்டு இருக்கீங்களா?

  • Also, பாட்டில் சோழன் என்று இல்லையே! அகப் பாடல்களில், எதை வைத்து, சோழன் என்பது?:)

   இன்னிக்கி கேள்வியா மட்டும் கேக்குறேன்:)

 3. தெங்கு + காய்
  தெங்கு நீண்டு, ஈற்று உயிர்மெய் கெடும், காய் வரின்…என்பது நன்னூல் விதி
  * தெங்கு நீண்டு = தேங்கு
  * ஈற்றுயிர் மெய் கெட்டு = தேங்
  * காய் வரின் = தேங்+காய்
  ———–

  தெங்கங்காய் = இளநீர்க் காயைச் சொல்வதும் வழக்கில் உள்ளது!
  தெங்கம்பழம் = முற்றிய தேங்காய் = வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் செல்வம், நாய் பெற்ற தெங்கம்பழம்:)

  “தெங்க”நாடு (தெங்கம்) என்பது கடற்கோளுக்கு முந்தைய ஒரு தமிழ் நிலப்பகுதி! அதே போல் பனை = ஏழ் பனை நாடு!

  தென்னை என்பது பின்னாளைய வழக்கு! சங்கத் தமிழில் தெங்கே!

 4. //தென்னை மரத்தில் எப்படித் தேன் வடியும்? கவிதைக்குப் பொய் அழகுதான், அதற்காக இப்படியா?//

  இப்படி ஏதாச்சும் சொக்கன் மடக்கீறப் போறாரு-ன்னு தெரிஞ்சோ என்னவோ….
  பாளையில் தேன்”தொடுக்கும்”-ன்னு கவிஞர் போட்டுட்டாரு!
  தேன் “வடியும்”-ன்னு போட்டிருந்தா மாட்டி இருப்பாரு:)

  அம்பைத் “தொடுத்தல்”-ன்னாலே எய்தவன் ஒருவன் இருக்கான்-ன்னு தானே பொருள்!
  அதே போல் தேன் “தொடுக்கும்”! தேனை எய்தவன் (வண்டு) வேற ஒருத்தன்! மரத்தில் விளைந்தது அல்ல!:)

  ஒத்தை வெண்பாவுல, ஒவ்வொரு சொல்லும் பாருங்க…பிசிறாமப் போட்டுருக்காரு கவிஞரு! 🙂

  ஆனாப் பேரு தான் தெரியலை…
  முத்தொள்ளாயிரம் (3*900) = கிடைச்சதும் சொச்சம் பாட்டு தான்!

 5. //பாய்புனல்// – காவிரி-ன்னு நீங்களா எடுத்துக்கிட்டீங்க போல…சோழ வளநாடு என்பதால்..சரி தான்!:)
  ஆனால், மதகைத் திறந்தாலே…எல்லாப் புனலும் பாயும் தான்! அது ஆறு, ஏரி, கண்மாய் எதுவானாலும்:)
  ————–

  //காளையைக் கண்படையுள் பெற்று//

  கண் படை = அவளே சொல்லிக்கிறா பாருங்க…தன் கண், படை என்று…
  சண்டை, ஊடல்-ல்ல…அதான் கண்ணு படை ஆயிருச்சி!
  அவன் வந்தா, உர்-ன்னு மொறைச்சிப் பாக்கும்! வக்கணம் காட்டும்:))

  ஆனா கண்படை = உறக்கம், துயில், தூக்கம் என்ற பொருளைக் குறிக்கும்!
  அதாச்சும் கண் அசையாது (இமைக்காது) இருக்கும் நிலை! தூக்கத்தில் தானே!
  அவனை உர்-ன்னு மொறைச்சிப் பாக்கும் போதும் அசையாது தான்! ஆனா எவ்ளோ நேரம்? இமைச்சே ஆகணும்! ஊடியவள் கூடியே ஆகணும்:))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s