எப்படிப் பிரிவேன்?

விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்

பாசம் தின்ற தேய்கால் மத்தம்

நெய்தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்

வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்

அரிஅமை சிலம்பு கழீஇப் பன்மாண்

வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள்

‘இவைகாண் தோறும் நோவர் மாதோ!

அளியரோ அளியர் என் ஆயத்தோர்’ என

நும்மொடு வரவுதான் அயரவும்

தன்வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.

நூல்: நற்றிணை (#12)

பாடியவர்: கயமனார்

சூழல்: பாலைத் திணை : ஒரு காதல் ஜோடி. அவர்களுடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு. ஆகவே அவர்கள் வீட்டைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுக்கிறார்கள். அதிகாலை நேரம். காதலி வீட்டுக்கு வெளியே காதலன் காத்திருக்கிறான். ஆனால் அவள் வரவே இல்லை. அவளுடைய தோழிதான் வருகிறாள். ‘என்னாச்சு?’ என்று பதற்றத்துடன் விசாரிக்கிறான் காதலன். அதற்குத் தோழி சொல்லும் பதில் இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

என் தோழி, உன்னுடைய காதலி இன்று அதிகாலையிலேயே எழுந்துவிட்டாள். உன்னோடு கிளம்பிச் செல்வதற்கான ரகசிய ஏற்பாடுகளில் இறங்கினாள்.

அப்போது, அக்கம்பக்கத்து வீடுகளில் தயிரில் இருந்து வெண்ணெய் கடைகிற சத்தம் கேட்டது. அந்தத் தயிர்ப் பானைகள் நிறைமாத கர்ப்பிணியின் வயிறுபோல் பருத்திருந்தன, விளாம்பழ வாசனை வீசுகிற அந்தப் பானைகளில் பொருத்தப்பட்டிருந்த மத்துகளில் ஒரு பகுதிமட்டும் நன்றாகத் தேய்ந்திருந்தது. காரணம், பலகாலமாக அங்கே கயிறு மோதி மோதி, தேய்த்துத் தேய்த்து மரத்தைத் தின்றுவிட்டது.

இந்தச் சத்தத்தையெல்லாம் கேட்டபடி என்னுடைய தோழி புறப்பட்டாள். அப்போது அவளுடைய காலில் இருந்த சிலம்புகள் சத்தமிட்டன. அதைக் கேட்டு மற்றவர்கள் எழுந்துவிடுவார்களோ என்று அவளுக்குக் கவலை.

ஆகவே, பரல்கள் நிறைந்த அந்தச் சிலம்புகளை அவள் கழற்றிவிட்டாள். அவற்றை மேஜைமீது வைப்பதற்காகச் சென்றாள்.

அங்கே பலவிதமான அலங்காரப் படங்கள் வரைந்த பந்துகள் இருந்தன. அந்தப் பந்துகள், நானும் அவளும் மற்ற தோழிகளும் தினசரி விளையாடுகிறவை.

அதையெல்லாம் பார்த்தவுடன் உன் காதலிக்கு ஒரு புதுக் கவலை பிறந்துவிட்டது. ‘பாவம்! நான் கிளம்பிச் சென்றபிறகு என்னுடைய தோழிகள் இதைப் பார்த்துப் பார்த்து வருத்தப்படுவார்களே, என்னைப் பிரிந்து வாடுவார்களே’ என்று யோசித்தாள். அவளையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்த்தது.

துக்கடா

 • இந்த நற்றிணைப் பாடலை நான் இதுவரை படித்ததில்லை. நேற்று இரவுதான் முதன்முறையாகப் படித்தேன். பிரமிப்பூட்டும் படைப்பாக இருந்தது. பத்தே வரிகளில் ஓர் அழகான அதிகாலைக் காட்சியை விவரித்து அதற்கு நடுவே காதலுக்கும் நட்புக்கும் (அல்லது பிறந்தவீட்டுப் பாசத்துக்கும்) இடையே தடுமாறுகிற ஒரு பெண்ணின் மனத்தைக் காட்சிப்படுத்திவிட்டார் புலவர். என்றைக்கும் மறக்கமுடியாத பாடல்!
 • தயிர்ப்பானையில் ஏன் விளாம்பழ வாசனை? ரொம்பக் காலமாக ஒரே பானையில் தயிர் ஊற்றி வைத்தால் அதில் துர்நாற்றம் வீசுமாம். அதற்காக அவ்வப்போது விளாம்பழத்தைப் போட்டு flavor மாற்றுவார்களாம். சுவாரஸ்யமான தகவல், இதைப் படித்தவுடன் விளாம்பழ வாசனை அடிக்கும் தயிரைச் சுவைக்கிற ஆசை வருகிறது. வீட்டில் விசாரித்திருக்கிறேன் 😉
 • On a related note, வங்காளத்தில் பனங்கற்கண்டு சுவை கலந்த ‘மிஷ்டி தோய்’ உண்டு, பெங்களூரில்கூடக் கிடைக்கும். அதுபற்றி நான் எப்போதோ எழுதிய ஜொள் பதிவு இங்கே : http://nchokkan.wordpress.com/2008/12/29/mishti/ (சந்தடி சாக்கில் போஸ்டர் போட்டாச்சு 😉
 • இந்தப் பாட்டில் நான் மிகவும் ரசித்த இன்னொரு விஷயம், மரத்தைத் தின்ற கயிறு, அதாவது மத்தில் கயிறு போட்டுக் கடைவதால் ஏற்படும் தேய்மானம்!
 • அடுத்து, ‘வரிப்புனை பந்து’. இப்போது குழந்தைகள் விளையாடும் பந்துகளின்மீது ஆங்கில எழுத்துகள், பூக்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்றவற்றை அச்சிடுகிறார்கள். அந்தக் காலத்திலும் இதேபோன்ற பழக்கம் இருந்திருக்கிறதுபோல!
 • பாடலில் ‘நெய்’ என்று இருக்கிறது, உரையில் ‘வெண்ணெய்’ என்று இருக்கிறது, எது சரி?
 • இரண்டும் சரிதான். வெண்ணெய் = வெள்ளை நிற நெய். அதை ‘வெண்ணை’ என்று எழுதுவது தவறு
 • அதேபோல் ‘எண்ணெய்’ = எள் + நெய். அதை ‘எண்ணை’ என்று எழுதுவது தவறு
 • அப்படியானால் தேங்காய் எண்ணெய்? கடலை எண்ணெய்? தேங்காய் + எள் + நெய்? கடலை + எள் + நெய்? இவற்றில் ஏது எள்?
 • அதுவும் தவறுதான் ‘தேங்காய் நெய்’, ‘கடலை நெய்’ என்பவைதான் சரி. பழக்கத்தால் எள் இவற்றில் ஒட்டிக்கொண்டுவிட்டது என்று நினைக்கிறேன் 🙂
 • இன்றைய அரிய சொல் : குழிசி = பானை
 • உதாரணங்கள்:
 • 1. சோறு அடு குழிசி : பெரும்பாணாற்றுப்படை
 • 2. முரசுவாய் ஆடுறு குழிசி : புறநானூறு
109/365
Advertisements
This entry was posted in அகம், கதை கேளு கதை கேளு, காதல், தோழி, நட்பு, நற்றிணை, நாடகம், பாலை, பிரிவு, பெண்மொழி. Bookmark the permalink.

7 Responses to எப்படிப் பிரிவேன்?

 1. amas32 says:

  உங்களுடைய துக்கடா இன்று பாடல் விளக்கத்தை விட சுவையாக உள்ளது. இந்தப் பாடலில் இருந்து, காதலிக்கும் பெண் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறும் போது ஏற்படும் மனக்குழப்பமும் துக்கமும் காலம் காலமாக ஒரே மாதிரி தான் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. இங்கும் தோழிக்கு தான் முக்கியத்துவம்.
  amas32

 2. ஜில் says:

  (என் மழழையில்) என் கொள்ளுபாட்டி தினமும் தயிர்பானையை மாற்றிக்கொண்டே இருப்பார்.. காரணம் கேட்டால் பூனையை ஏமாற்ற என்பார்.. தினமும் தயிர் விதவிதமான சுவையிலிருக்கும்… அவர்களே அறியாமல் சங்கப்பழக்கத்தை தொடர்ந்தார்களா? அடியேன் அறியேன்…தங்கள் பா பல கதவுகளை திறந்திருக்கிறது….(பால்யத்திற்கு டூர் கூட்டிட்டு போனதற்கு நன்றி:-))

 3. விஜய்வீரப்பன் சுவாமிநாதன் says:

  விளாம்பழம் பற்றி சொல்லி எனது மலரும் நினைவுகளை திறந்து விட்டீர்.

  புதுக்கோட்டை அருகில் ராங்கியம் கிராமத்தில் தான் எனது பாட்டி வீடு. மிகப் பெரிய தோட்டம் கொண்ட வீடு அது. ஒரு விளாம்பழ மரம் உண்டு. விளாம்பழத்தின் ஓடு மிகக் கடினாமாக இருக்கும். நான், எனது தங்கை, மற்ற சகோதரிகள் (பெரியம்மா பெண்கள்) எல்லோரும் பழத்தை கல்லால் அடித்து சேர்ப்போம். வீட்டிற்க்கு பழங்களை எடுத்து சென்று, ஓடுகளை உடைத்து, சக்கரையில் கலந்து சாப்பிடுவோம். அதற்கு ஈடு, இனை ஏதும் இல்லை.

  பாட்டி இறந்த பின் ஊர் பக்கம், போவதே இல்லை. பாட்டியுடன் சேர்ந்து நாங்கள் இழந்தது பல. 😦 😦 😦 😦

 4. GiRa says:

  எள் + நெய் = எண்ணெய் என்பது சரியே.

  எல்லாமே நெய்தான். ஆனால் மற்ற நெய்கள் எள்ளின் பெயரைத் திருடிக் கொண்டு விட்டதால் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகி விட்டது.

  http://koodal1.blogspot.com/2008/03/blog-post_13.html

 5. GiRa says:

  சின்ன வயசுல இந்தப் பாவில் வர்ரதெல்லாம் பாத்திருக்கேன்.

  பெரிய தயிர்ப்பானைகள். பொதுவா கருப்புப்பானைகள்தான் தயிருக்குப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அந்தப் பானையைத் தொட்டுப் பார்த்தால் வெளியில் சில்லென்று இருக்கும்.

  அடுப்பாங்கரையில் ஒரு ஓரத்தில் பெரிய கட்டையை நட்டு வைத்திருப்பார்கள். அதில் கயிறுகள் கிடக்கும். தயிர்ப்பானைகள் மட்டுமல்ல அந்தக் கயிறுகளிலும் தயிர் வீச்சம் அடிக்கும்.

  பானையை தரையில் அப்படியே வைக்க மாட்டார்கள். தலைக்கு வைக்கும் சும்மாடு போலவே ஒரு பானைதாங்கியும் இருக்கும்.தயி

  மத்தில் கயிறுபட்டுப் பட்டு ஒரு பக்கம் பளபளப்பாகவே தேய்ந்திருக்கும். கடையும் பொழுது மத்து பானைக்குள் எந்த உயரத்தில் இருக்க வேண்டும் என்றும் கணக்கு உண்டு. ரொம்பவும் மேலாக இருந்தால் தயிர் வெளியே சிதறும். ரொம்பவும் கீழாகப் போனால் பானையே உடையும். மத்து சரியாக நடுவில் இருக்க வேண்டும்.

  மத்தின் இடுக்குகளிலும் வெண்ணெய் ஒட்டிக்கொண்டிருக்கும். அதையும் வழித்து எடுப்பார்கள். பொதுவாக வெண்ணெய்யை நீண்ட நாள் வைத்திருக்க மாட்டார்கள். காரணம்…. எப்படியும் அடுத்தடுத்து பால் வரும். தயிராகும். கடையப்படும். ஆகையால் ஓரிரு நாளைக்குள் உருக்கி விடுவார்கள். வெயில்காலமென்றால் விரைவிலேயே உருக்கிவிடுவார்கள்.

  இந்த வெண்ணெய் கடையில் வாங்கும் வெண்ணெய் போல கட்டியாக இருக்காது. மிருதுவாக இருக்கும்.

  நெய் காய்ச்சும் பொழுது தெற்கில் நன்றாகக் காய்ச்சி விடுவார்கள். அரைகுறைக் காய்ச்சல் வீச்சம் போய்விடும். அப்படி நன்றாகக் காய்ச்சிய பொழுது வெற்றிலை, முருங்கையிலை, கருவேப்பிலை ஆகியவற்றை மோரில் நனைத்து நெய்யில் போடுவார்கள். மலைப்பழம் கிடைக்கும் காலங்களில் சிறு மலைப்பழமும் போடும் வழக்கம் உண்டு.

  வடித்த பிறகு சட்டியில் இருக்கும் மண்டியில் சோறிட்டு உப்பிட்டுப் பொரிந்த இலைகளோடு பிசைந்து சாப்பிடுவதற்கும் ஒரு அடிதடி நடக்கும். அந்நெய்ச்சுவை இப்பொழுது எங்கும் காணேண்.

 6. amas32 says:

  வடித்த பிறகு சட்டியில் இருக்கும் மண்டியில் அரிசி மாவும் சர்க்கரையும் கலந்து எங்கள் வீட்டில் கொடுப்பார்கள். இப்பொழுது வெண்ணெய் காய்ச்சி பின் அவ்வாறு கொடுத்தால் என் குழந்தைகள் சீண்டுவதேயில்லை.
  amas32

 7. பிரமாதமான பாட்டு.
  “கயிரால் தேய்ந்த மரம்”லாம் எவ்வளோ துல்லியமான imagery.

  “என் தோழி இவ்வளவு மென்மையானவள் பாத்துக்கோ”-ன்னு தலைவன் கிட்ட சொல்றா இந்த தோழி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s