உரை செய்ய அருள்வாயே

பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய

…..பவனி வரும்படி அதனாலே

பகர வளங்களும் நிகர விளங்கிய

…..இருளை விடிந்தது நிலவாலே

வரையில் எங்கணும் உலவி நிறைந்தது

…..வரிசை தரும் பதம் அது பாடி

வளமொடு செந்தமிழ் உரை செய்ய அன்பரும்

…..மகிழ வரங்களும் அருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி

…..அடியர் பணிந்திட மகிழ்வோனே

அசல நெடுங்கொடி அமைஉமை தன்சுத

…..குறமகள் இங்கித மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும

…..களபம் அணிந்திடும் மணிமார்பா

கனகம் மிகும்பதி மதுரை வளம்பதி

…..அதனில் வளர்ந்து அருள் பெருமாளே!

நூல்: திருப்புகழ்

பாடியவர்: அருணகிரிநாதர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பகல் நேரத்தில், எல்லோருக்கும் பிடித்த சூரியன் தனது நீண்ட கதிர்களை வீசியபடி பவனி வருகிறான்.

இரவு நேரத்தில், புகழ்ந்து சொல்லக்கூடிய வளங்களுக்கெல்லாம் இணையான நிலா இருளைப் போக்கும்படி தோன்றுகிறது.

குன்று இருக்கும் இடமெல்லாம் வரிசையாகக் காட்சி தரும் குமரா, உன் திருவடி அந்தச் சூரியன், சந்திரனுக்கு இணையானது.

அந்தத் திருவடியின் பெருமையை நான் பாடவும், அன்பர்கள் புரிந்துகொண்டு மகிழும்படி அதற்கு விளக்கம் சொல்லவும் எனக்கு நீ வரம் தா!

’அரஹரா’, ‘சுந்தரா’, ‘ஆறுமுகனே’ என்றெல்லாம் உன்னை பக்தர்கள் போற்றுவார்கள், அதைக் கேட்டு மகிழ்கிறவன் நீ. பெருமை நிறைந்த நீண்ட கொடியைப்போன்ற பார்வதியின் மகன், குறமகள் வள்ளிக்கு இனிமையான கணவன்!

நினைத்தாலே இனிக்கும் அருமையான வலுவான தோள்களைக் கொண்ட சரவணனே, மணிமார்பில் குங்குமமும் சந்தனமும் அணிந்தவனே, செழிப்பான, பொன்வளம் நிறைந்த மதுரை நகரில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே, வணங்குகிறேன்!

துக்கடா

 • 108 என்ற எண் இந்தியப் பக்தி மரபில் மிகவும் விசேஷம். அதைக் கொண்டாடும்வகையில் இன்றைய பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் நண்பர் கோ. இராகவன். அவருக்கு என் நன்றி
 • தமிழ் மரபில் 108 விசேஷமா என்று எனக்குத் தெரியவில்லை. ’அதை ஏன் இங்கே கொண்டாடுகிறாய்?’ என்று கோபிக்கவேண்டாம். இந்த விஷயத்தில் நான் Garfield கட்சி. காரணம் முக்கியமில்லை, கொண்டாட்டம்தான்!
 • இன்றைய அரிய சொல்: களபம் = நறுமணத்துக்காக ஆண்கள், பெண்கள் மார்பில் பூசிக்கொள்கிற சந்தனக் கலவை
 • உதாரணங்கள்:
 • 1. புனுகும் கமழும் களபங்கள் அணிந்து… : வள்ளி திருமணப் பாட்டு
 • 2. சீதக் களபச் செந்தாமரை… : விநாயகர் அகவல்
108/365
Advertisements
This entry was posted in அருணகிரிநாதர், திருப்புகழ், நண்பர் விருப்பம், பக்தி, முருகன், வர்ணனை. Bookmark the permalink.

14 Responses to உரை செய்ய அருள்வாயே

 1. முருகா

  மிக்க நன்றி, உங்களுக்கு…இத்திருப்புகழ் இட்டமைக்கு!
  மிக்க நன்றி மிக்க நன்றி, இராகவனுக்கு….இத்திருப்புகழ் தொட்டமைக்கு!
  எனக்கு மிகவும்ம்ம்ம்ம்ம் பிடிச்ச திருப்புகழ்….மதுரைத் திருப்புகழ்…மதுரையில் அருவி இல்லையே என்னும் குறைபோக்க, அருவி போல் கொட்டும் திருப்புகழ்! சந்தமும் தமிழும் அருவி போல் கொட்டும் திருப்புகழ்!

 2. மதுரைக்கு அருகில் அழகர் கோயில் – பழமுதிர்சோலையில் தான் சிலம்பாறு என்னும் சிற்றருவி கொட்டும்!
  ஆனால் மதுரை மாநகரிலோ, இந்தத் திருப்புகழ் அருவி!

  வேறு எந்த ஊருக்கும் இல்லாத பெருமை மதுரைக்கு!
  அறுபடை வீட்டிலே, இருபடை வீடுகள்! = மதுரைக்கு
  இந்த ஊரை அணைந்து தான் இரண்டு படைவீடுகளும்!
  * திருப்பரங்குன்றம் = முதல் படைவீடு
  * பழமுதிர்சோலை = கடைசிப் படைவீடு

  இப்படி அறுபடைகளை துவக்கியும், முடித்தும் வைக்கிற பெருமை தமிழ் மதுரைக்கு உண்டு!

 3. மதுரை ஆலயம் மீனாட்சி அன்னையின் control room என்றாலும்….
  அதே ஆலயத்தில் அழகிய முருகன் ஒருத்தன் இருப்பான்:)

  மதுரை முருகனுக்கு கூடல் குமாரர் என்றே பெயர்!
  இரண்டாம் திருச்சுற்றில் (பிரகாரத்தில்), கொலு வைப்பாங்களே…அதே இடத்தில் தான் “கூடல் குமாரர் சன்னிதி”

  அங்குள்ள முருகன்…ரொம்பவும் அழகு…ரொம்பவும் பிடிச்ச முருகன்…
  அவன் மேல் அருணகிரி, 10 திருப்புகழ் மேல் பாடியிருக்கார்-ன்னு நினைக்கிறேன்…அதில் இந்தப் பாட்டும் ஒன்னு!
  இன்னோன்னு புருவச் செஞ்சிலை-ன்னு வரும்! அதுவும் நல்லா இருக்கும்!

 4. amas32 says:

  என்ன கேஆர்எஸ் இந்த பாடலுக்கு மூன்று பதில் பதிவுகள் தான் எழுதியிருக்கிறார்?
  வளமொடு செந்தமிழ் உரை செய்ய அன்பரும்
  மகிழ வரங்களும் அருள்வாயே
  இதுதான் என்னுடைய பிரார்த்தனை.
  amas32

 5. திருமுருகாற்றுப்படை போலவே ஆரம்பிக்குது-ல்ல?
  * அங்கே…….உலகம் உவப்ப + பலர் புகழ் ஞாயிறு
  * இங்கே…….பரவு நெடுங்கதிர் + உலகில் விரும்பிய
  ————

  பகர வளங்களும்…என்பதற்கு இன்னொரு அறிவியல் பொருளும் இருக்கு!
  அதாச்சும் சூரியன் கிட்ட இருந்து தானே நிலவு, ஒளியை வாங்கிக் குடுக்குது?
  அதான், நெடுங்கதிர் நிலவுக்குப் பகர (சொல்ல), அதுவும் இருளை ஓரளவு போக்குகிறது!

  பரவு நெடுங்கதிர் பவனி வரும்படி அதனாலே பகர,…..
  இருளை விடிந்தது நிலவாலே!
  ————-

  நல்ல காலங்களிலே….சூரியன் போல் ஒளி நிறைந்து வாழ்ந்தாலும்,
  என் போதாத வேளையிலும்…என் முருகவன் என்னைக் கை விடுவதில்லை!

  அவ்வளவு ஒளி இல்லாவிட்டாலும், நிலவாயாச்சும் ஒளி தருகிறான்! நிகர, இருளை விடிந்தது நிலவாலே!

  விழிகளைச் சூரிய சந்திரரோ…ன்னு சொல்வது வழக்கம்!
  இங்கு திருவடிகள், சூரிய சந்திரரோ?

 6. விஜய்வீரப்பன் சுவாமிநாதன் says:

  “சுந்தரம்” என்பது தமிழ்ச் சொல்லா? இந்தச் சொல்லை மிகவும் உபயோகித்தவர்கள் சோழர்கள் என்று நினைக்கிறேன்.

  சோழர்கள் தமிழில் வடமொழி கலந்து பேசினார்கள் என்றும் (ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன்), பாண்டியர்களே தூய தமிழை பேசினார்கள் என்றும் படித்ததாக ஞாபகம்.

  அறிந்தவர்கள் விளக்குங்களேன்!!

  • சுந்தரம் = வடமொழி! தமிழில் அழகா = அழகு!:)
   அழகு, எழில்-ன்னு எல்லாத்துலயும் ‘ழ’ இருக்கும்!

   சுந்தரராஜப் பெருமாள், சுப்ரமணியன் எல்லாம் letterpad-இல் தான்!
   கள்ளழகர், பெருமாள், முருகன் என்ற தமிழ் வழக்கே, மக்கள் வழக்கு!
   ————

   ஆமாம்! இடைக்காலச் சோழர் காலத்தில் தான், கிரந்தம் பரவலாக… அரசு அலுவல், ஏடு, கல்வெட்டுகளிலெல்லாம் கலந்தது!
   ஆனால் அதற்காக இராஜராஜன் செய்த பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது! தில்லையில் பூட்டிக் கிடந்த தேவாரங்களை வெளிக் கொணர்ந்தவன் அவனே!

   என்ன, அவன் அரசிலும், பின்னர் வந்த அரசுகளிலும், ஒரு சாராரின் ஆதிக்கம் மேலோங்க, அவனும் மதத்துக்குக் கட்டுப்பட்டு ஒத்துப் போனான்!
   மக்கள் தொடர்பான ஆவணங்கள் கூட கிரந்தத்திலேயே எழுதி பொறிக்கப்பட்டன! அஞ்சொலாள், அஞ்சல்-ன்னு ஆகி, அபயாம்பிகை என்று ஆகிவிட்டாள்!

   முற்காலப் பாண்டியர்கள் தான் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்தது! ஆனால் இடைக்கால, பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில், வடமொழி ஆதிக்கம் மிகுந்து தான் இருந்தது!
   சோழர்களை மட்டுமே குறைசொல்லி, பாண்டியர்களைக் கொண்டாடி விடவும் முடியாது! மதுரையை மீட்ட “சுந்தர” பாண்டியன் தானே?:)) அங்கே ஒரு சுந்தர சோழன், இங்கே சுந்தர பாண்டியன்!:)

   அதனால் “தூயதமிழ்” பாண்டியர்க்கு மட்டுமே சொந்தமானது கிடையாது:)

 7. வரையில் எங்கணும் உலவி நிறைந்தது = குன்று இருக்கும் இடமெல்லாம் அவன் பாதம் உலவி நிறைஞ்சுதா, தெரியாது!
  எத்தனையோ குன்று…St Thomas Mount, சோளிங்கபுரம், Sravanabelagola…இந்தக் குன்றில் எல்லாம் முருகன் பாதம் நடந்ததோ, என்னமோ…

  ஆனா….
  வரையில் எங்கணும் உலவி நிறைந்தது = அவள், அவனுக்காகவே மலையெல்லாம் நடந்து நடந்தே ஓய்ஞ்சா!

  அவன் ஏற்றுக் கொள்வானா-ன்னு கூடத் தெரியாது! முன்னே பின்னே அப்படிப் பேசியதோ, பார்த்ததோ கூட இல்லை!
  இப்படி அவன் ஏற்றுக் கொள்வானா-ன்னு தெரியாத போதிலும், அவனே அவனே என்று இருந்து விட்டவள்!

  பார்க்காத அவனுக்காக, வீடு தேடி வந்த மாப்பிள்ளைகளையும் துரத்தியவள்!:)
  கட்டிளங் காளையா, வேடனாய் ஒருவன் வந்து நின்ற போதும், தன் மனத்தை இழக்காது, முருகவா என்று மட்டுமே நின்றவள்!

  அவனைச் சுமந்து சுமந்தே….
  தனக்குள்ளேயே பேசிக் கொண்டு…
  மலையெல்லாம் நடந்து நடந்தே தேய்ஞ்சவ….

  அவள் நெஞ்சை ஒடித்து விடாதபடி = இங்கிதம்
  ஏய்-ன்னு அவளைக் கூப்பிட்டாலும்…
  அந்த ஏய்-இல் ஏய்த்தல் இருக்காது…ஏய்ய்ய்ய்-ன்னு ஏக்கமே இருக்கும்!

  அவள் தேய்ஞ்ச “பாதம் வருடிய மணவாளா”!
  இங்கிதம்!
  அந்த அவளுக்கு, அவன் = இங்கிதம்
  “இங்கித” என்ற இந்த ஒத்தைச் சொல்லுக்காகவே….இந்தத் திருப்புகழ் ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்

  இங்கித முருகவா!

 8. முருகா இங்கித மணவாளா!
  முருகா இங்கித மணவாளா!
  என் முருகா இங்கித மணவாளா!
  என் முருகா இங்கித மணவாளா!

 9. சரீஈஈ
  சொக்கரே…முக்கியமான ஒன்னை விட்டுட்டீங்க…
  இந்தப் பாட்டுல நீங்களும் இருக்கீங்க:)

  * அரஹர “சுந்தர” = சுந்தரேஸ்வரர் = சொக்கன் 🙂
  * “அசல நெடுங்கொடி” = மலையத் துவசன் பெற்ற மகள் = மீனாட்சி (அசலம்=மலை; கொடி=துவசம்)
  ————-

  இப்படி என் மாமனும் அத்தையுமாய்….
  என் முருகவனின் அம்மையும் அப்பனுமாய்,
  இந்தப் பாட்டில் இருக்காங்க!

  நீங்களும் சொக்கனாய் இருக்கீங்க:)
  இங்கு தமிழ் பருகும் அன்பர்கள் எல்லாரும் வேறு இருக்காங்க!

  வளமொடு செந்தமிழ் உரை செய்ய = #365paa
  அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே = #365paa அன்பர்கள், மகிழ வரங்களும் அருள்வாயே

 10. GiRa says:

  நன்றி சொல்லித் தொடங்குகிறேன். 🙂

  நீங்கள் சொன்னதும் குறுந்தொகையிலிருந்து சிலப்பதிகாரம் பரிபாடல் கந்தபுராணம் இன்னும் பலப்பல நூல்கள் மனதில் வந்தன. ஆனாலும் ஏனோ திருப்புகழ் முந்திக் கொண்டது. ஒன்றா இரண்டா? சந்தங்களை எல்லாம் சொற்களில் சொந்தங்களாக்கிப் பாடிய திருப்புகழில் எதை எடுப்பது? பலவற்றையும் சிந்தித்து தமிழும் மதுரையும் சிறக்கும் இந்தத் திருப்புகழை எடுத்தேன்.

  எளிய சொற்கள். ஓரளவு புரியும் மேலோட்டப் பொருள். இனிய சந்தம்.அருணகிரிக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொன்னாலும் போதாது.

  அப்பா அருணகிரி
  எத்தனை ஊர்
  எத்தனை கோயில்
  எத்தனையடிகள் நடந்ததோ உன்னடிகள்
  இத்தனைக்கும் ஈடான் முருகனருளே பொருத்தம்
  உன்னையும் மதித்து வணங்குகிறோம்

 11. GiRa says:

  திருமுருகாற்றுப்படையின் முதல்வரியும் இந்தத் திருப்புகழின் வரியும் சொல்வது ஒன்றுதான்.

  உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு – திருமுருகாற்றுப்படை
  பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய பவனி வரும்படி அதனாலே – திருப்புகழ்

  ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாகிய இடைவெளியில் தமிழ் எப்படி மாறியிருக்கிறது பார்த்தீர்களா? 🙂

  இந்தத் திருப்புகழில் நான் மிகவும் ரசித்த சொல்
  வரை – மலை – வரை என்றால் எளிதில் தெரியாது. வரையாடு என்று கேள்விப்பட்டிருப்போம். அது மலையில் திரியும் ஆட்டைக் குறிக்கும்.

 12. GiRa says:

  கந்தரநுபூதியில் ஒரு வரி உண்டு. அருணகிரி சொன்னதுதான். யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்.

  அதன் பொருள் என்ன?

  முருகா… ஒன்றும் அறியாமல் இருந்தேன். எதையெதையோ நினைத்து அதில் திளைத்திருந்தேன்.

  அப்படியிருந்த நான் இன்றைக்கு ஊரூராகச் சென்று உன்னுடைய திருப்புகழைப் பாடுகின்றேன்.

  அப்படிப் பாடுவதற்குரிய கல்வியும் அறிவும் நீயே தந்தாய். ஏன் கொடுத்தாய்?

  ஒரு குழந்தையின் மழலைச் சொல் கேட்டு பெற்றோர் பெறும் இன்பத்தை என் வழியாக நீ கேட்டு இன்புற நினைத்தாய்.

  பூமியில் இருக்கும் நீர் மேகத்துக்குப் போகிறது. ஆனால் அது அங்கேயே தங்கிவிடுவதில்லை. மீண்டும் பூமிக்கே வருகிறது.

  முன்பு பூமியில் இருந்த நீர் கடலில் உப்பு நீராக இருந்தது. அது மேகத்திற்குச் சென்று திரும்பி வருகையில் உலகம் பயன்பெறும் நன்னீராக வருகிறது.

  அப்படித்தான் முருகா. யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற நீ தந்தாய்.

  ஆகையால்தான் வளமொடு செந்தமிழ் உரை செய நீ அருள வேண்டும். அது போதாது. அந்த வளமையான உரையை அன்பர்கள் மகிழவும் வரங்கள் அருள்வாயே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s