மருந்து

ஆடு மகளிரின் மஞ்ஞை அணிகொளக்

காடும் கடுக்கை கவின்பெறப் பூத்தன

பாடு வண்டு ஊதும் பருவம் பணைத்தோளி

வாடும் பசலை மருந்து

நூல்: கார் நாற்பது (#4)

பாடியவர்: மதுரை கண்ணங்கூத்தனார்

சூழல்: வேலை காரணமாகக் காதலியைப் பிரிந்து செல்கிறான் காதலன். ‘மழைக்காலம் தொடங்கியதும் வந்துவிடுவேன்’ என்கிறான். அவனைப் பிரிந்து வருந்தும் காதலி உடலில் பசலை படர்கிறது. அவளைத் தேற்றுவதற்காக ‘மழைக்காலம் இதோ வந்துவிட்டது, உன் காதலனும் சீக்கிரம் வந்துவிடுவான்’ என்கிறாள் தோழி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

மூங்கில் போன்ற தோள்களை உடைய என் தோழி,

ஆடும் பெண்களைப்போல மயில்கள் அழகாகத் திகழ்கின்றன. காட்டில் எங்கு பார்த்தாலும் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வண்டுகள் சத்தமிட்டபடி அவற்றை மொய்க்கின்றன.

காதலனைப் பிரிந்து வாடுகின்ற உன்னுடைய பசலை நோய்க்கு மருந்து, இந்தக் கார்காலம்தான்!

துக்கடா

 • ஆண்கள் பாட்டு எழுதும்போது ’மயில்போல் அழகு’ என்று பெண்களை வர்ணிப்பார்கள். இங்கே இந்தப் பாடலை எழுதியவர் ஆண் என்றாலும், பாட்டுக்குள் பேசுவது பெண் என்பதால் கொஞ்சம் ‘மாத்தி யோசி’க்கிறாள். ‘பெண்களைப்போல் மயில் அழகு’ என்கிறாள்
 • கம்பரும் இதேமாதிரி மாற்றி வர்ணித்தது உண்டு. கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள்
 • இன்றைய அரிய சொல் : மஞ்ஞை = மயில்
 • உதாரணங்கள்:
 • 1. ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற… : பரிபாடல்
 • 2. வளைக்கையர் போன்ற மஞ்ஞை : கம்ப ராமாயணம்
107/365
This entry was posted in அகம், காதல், கார் நாற்பது, தோழி, பிரிவு, பெண்மொழி, வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

27 Responses to மருந்து

 1. எனக்கு ரொம்ப நாளா ஒரு ஐயம்!
  ஏன் பெண்கள் தோளை = மூங்கில் போல-ன்னு உவமை சொல்கிறார்கள்?

  மூங்கில் உறுதி மிக்கது! பெண்களோ மென்மை! (சில ஆண்களும்:)))
  அப்படி இருக்க, ஏன் உறுதியான மூங்கிலை, பெண் தோளில், ஏற்றினார்கள்? சொல்லுங்க சொல்லுங்க:))

  • amas32 says:

   மூங்கில் வளைந்து கொடுக்கும், வேறென்ன அதனால் தான் பெண்களுக்கு மூங்கில் போன்ற தோள்கள் 🙂 தட்டியும் பின்னலாம் கூடையும் முடயலாம்.
   amas32

 2. சுப. இராமனாதன் says:

  ஞை என்ற எழுத்தை வாழ்வில் முதல் முறையாக வாசிக்கிறேன் என நினைக்கிறேன். பிரக்ஞை என்ற வார்த்தையைப் படித்திருப்பதாய் ஞாபகம். எப்படி உச்சரிக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை.

  ஞை என்பதன் ஒலி வடிவம் ஜை தானே? இதே கோணத்தில், ஏன் தஞ்சாவூரை தஞ்ஞை என்று எழுதுவதில்லை?

  • இல்ல இராமநாதன்! “ஜை” அல்ல!
   ஞ = nya என்ற ஒலிப்பில் வரும்!

   ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியர், 2000 வருசத்துக்கு முன்னாடியே Standards Book – Grammar Book செஞ்சிட்டுப் போயிருக்காரு!
   English-ல written grammar authority-ன்னு இருக்காத் தெரியலை! They dont even have written constitution!
   ஆனா we had written standards, 2000 yrs back!

   ககார ஙகாரம் முதல் நா அண்ணம்
   சகார ஞகாரம் இடை நா அண்ணம்
   டகார ணகாரம் நுனி நா அண்ணம்
   – தொல்காப்பியம்

   ஞ பாருங்க! = நாக்கு, மேல் அண்ணத்தை, நடுவாலத் தொட்டா வருவது ஞ என்னும் ஓசை!
   செஞ்சிப் பாருங்க! உங்களுக்கே விவரம் தெரிஞ்சிடும்:)
   ————–

   ச-வும் அப்படியே! sonnaan illa, chonnaan!
   எனக்கும் ச பத்தி தெரியாது! ஆனா என் தோழன் தான் கத்துக் குடுத்தான்!
   அவன் தொல்காப்பியம் எல்லாம் காட்டி விளக்கல! ஆனா chonnaan ன்னு தான் சொல்லணும், தெக்கத்தித் தமிழா எனக்குப் புரிய வச்சான்!
   ————-

   தஞ்சை = தஞ்சை தான்!
   பிரக்ஞை = வடமொழி!
   மஞ்ஞை, உழிஞை (பூ), குடிஞை-ன்னு நிறைய “ஞ” இருக்கு தமிழில்!:)

 3. இந்தப் பூவுக்கு வண்டு வந்து “ஊதுதாம்”?
  ஏன் ஊதணும்?
  அதான் தேன் இருக்கே…Straightஆ குடிக்க வேண்டியது தானே?
  = This is called Foreplay in காதல் & கலவி :))

  வண்டு வரும், வந்த உடனேயே அமராது!
  பூவைச் சுற்றிச் சுற்றி வரும்! எம்பும்! ஊஊஊஊ-ன்னு இறக்கையால் சத்தம் போடும்! லேசா உரசும்!
  “மகரந்தம்” அப்படியே ஒட்டிக்கும்!

  அப்பறம் லேசாத் தேன் குடிக்கும்! திருப்பியும் எம்பி, பூவைப் பார்க்கும்..ஊஊஊ-ன்னு சத்தம்…
  இப்படிக் கொஞ்சிக் கொஞ்சி…ஒரு வழியா…பூவுக்குள் அடங்கி, உறிஞ்சி, மாந்தி, களித்து, உறங்கி….அப்பறம்…அப்பறம்… :))

 4. எவ்வளவு அழகான பாட்டு!
  * பெண்கள் போல மயில் (reverse உவமை)

  மயில் குறிஞ்சிக்கு உரியது! ஆனா முல்லையில் வச்சிப் பாடுறாரு கவிஞர்!
  திருமால் தந்தையும் தெய்வமுமாய் இருந்தாலும், முருகனே என் நாயகனாக இருக்கான்-ல்ல? அது போல:))

  செவ்வேள் ஏறிய “மஞ்ஞை” வாழ்க – பாட்டை எடுத்துக் காட்டாக் கொடுப்பீங்களோ-ன்னு நினைச்சேன்! அனைவரும் அறிந்த முருகன் துதி! = ஆறிரு தடந்தோள் வாழ்க:)
  —————–

  கொன்றைப் பூ (கடுக்கை)
  மஞ்ச மஞ்சளா, கொத்துக் கொத்தா, தொங்கும்! இந்தப் பூவைத் தொடுக்கவே வேணாம்! இயற்கையே தொடுத்து மரத்தில் தொங்க விட்டாப் போலத் தான் இருக்கும்!
  —————

  வாடும் பசலை மருந்து = வாடும் பசலை”க்கு” மருந்து!
  நான்காம் வேற்றுமைத் தொகை!

  • சுப. இராமனாதன் says:

   ஐ, ஆல், கு, ன், அது, கண் – என வேற்றுமை உருபுகளைப் படித்ததாக ஞாபகம். இவை வேற்றுமைத் தொகைகளா?

   முதல் வேற்றுமை உருபை ஏன் யாரும் குறிப்பிடுவதில்லை?

   • ஆமாங்க! வேற்றுமை உருபுகள் தான்!
    அவை “தொகைஞ்சி” (மறைஞ்சி) வந்தா, அப்போ = தொகை:)
    தொகையாம வந்தா அப்போ = விரி
    —–

    முதல் வேற்றுமை = எழுவாய்! (Subject)
    Subject இல்லாம ஒரு வாக்கியம் இருக்கக் கூடாது! அதான் அதுக்கு உருபும் இல்லை! தொகையவும் தொகையாது!

    சங்கரி அவனைக் காதலித்தாள்…
    சங்கரி = முதல் வேற்றுமை (எழுவாய்)
    அவனை = ஐ = இரண்டாம் வேற்றுமை!

 5. சேது says:

  “பணைத்தோளி” என்று குறிப்பிட்டிருக்கும் இடம் — பணையைப் போல மெலிதான தோள்களைக் கொண்டவளாக இருப்பாள் என்று கூட எடுத்துக்கொள்ளலாமா?? பணை என்றால் மூங்கிள் என்றுதான் அர்த்தமா?

 6. சொல்ல மறந்துட்டேனே….
  இந்த நூல் = கார் நாற்பது…என்னான்னு தெரியுமா? ஞாபகப்படுத்திப் பாருங்க!

  இன்னா நாற்பது…இனியவை நாற்பது…
  அதே அதே…அதே வரிசையில் கார் நாற்பது!
  18 கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்னு!
  இந்த 18-இல் பலவும், ஒரே நீதி நூலா (moral science) இருக்கும்! ரொம்ப போதனை + வேதனை :))

  ஆனா கார் நாற்பது = செம ரொமான்ஸ்! மொத்தமும் முல்லைத் திணை!
  திருக்குறளும் 18கீழ்க் கணக்கு தான்! ஆனா வள்ளுவர் மரபு மீறி, அறநூலில் காதலை வச்சாரு! (என்னளவில்: காதல் நூலிலே அறத்தை வச்சாரு!:)

  • சுப. இராமனாதன் says:

   திருவள்ளுவருக்குத் தெரிந்திருக்கிறதைய்யா – அது இல்லறம் (ஒரு வகை அறம்) என்று! 🙂

  • சேது says:

   காதல்=அறம்..அறம்=காதல்..சரியா?? வாசுகி தான் எத்தனை கொடுத்து வைத்தவள் 🙂 🙂

 7. விஜய்வீரப்பன் சுவாமிநாதன் says:

  /*ஆண்கள் பாட்டு எழுதும்போது ’மயில்போல் அழகு’ என்று பெண்களை வர்ணிப்பார்கள். இங்கே இந்தப் பாடலை எழுதியவர் ஆண் என்றாலும், பாட்டுக்குள் பேசுவது பெண் என்பதால் கொஞ்சம் ‘மாத்தி யோசி’க்கிறாள். ‘பெண்களைப்போல் மயில் அழகு’ என்கிறாள்*/

  இதை கண்ணதாசனும் செய்திருக்கிறார்.

  “கண்களில் நீலம் கொண்டவளோ,
  அதை கடலினில் சென்று கரைத்தவளோ!”

  கடலைப் போல நீல நிறக் கண்கள் உடையவளே என்று பாடாமல், தன் கண்களில் உள்ள நீலத்தை, கடலில் கரைத்ததனால் தான் கடலே நீல நிறமானது என்கிறார்.

  இது எனது புரிதல், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  • ஆகா! எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேக்குறீக?
   அனைவரும் தமிழை, அள்ளி அள்ளி மாந்தும் தடாகம் தானே = #365paa

   நீங்க சொல்வது முற்றிலும் சரி! அழகான கண்ணதாசன் பொருள்! கடலிலே கண்ணின் நீலத்தைக் கொண்டு போய் கரைத்ததாக…கவிஞரின் தற்குறிப்பேற்ற அழகு!

   • நன்றி கே.யார்.எஸ்.
    நான் இப்போ தான் தமிழ் கத்துக்குறேன். புதுசா தான் பின்னூட்டம் போடுகிறேன். அதான்!!
    உங்கள் மாதவிப் பந்தல் பதிவுக்கும், மற்ற பதிவுகளுக்கும் நான் நெடுநாள் வாசகன். 🙂 (பின்னூட்டம் போட்டதே இல்லை. படித்து,அனுபவித்து விட்டு ஓடிடுவேன்.)

   • “கடலில் உள்ள நீலம், போன்ற கண்கள் உடையவளே” அப்பிடின்னா சாதாரண உவமையகத் தான் இருக்கிறது.
    “உன் கண்களில் உள்ள நீலத்தை, நீ கடலில் கரைத்ததனால் தான், கடல் நீலமாயிற்று” என்றால், கவித்துவம் உள்ளே வந்து உட்காந்துகொள்கிறது, காதலிக்கு டன் கணக்கில ஐஸ் வச்சா மாதிரியும் ஆகுது. 🙂

 8. சேது says:

  ரவி… அதனால தான் ‘கொன்றைப் பூ’வில் குளித்த மஞ்சள் என்றாரா கவிப்பேரரசு

  • Yep:)
   கொன்றைப் பூ…பார்த்து இருக்கீயளா?
   IIT Chennai, Anna University-ல்ல சரம் சரமாத் தொங்கும்! இருங்க படத்தைச் சொக்கன் சாருக்கு அனுப்பி வைக்கிறேன்! பதிவில் சேர்ப்பாரு!

   • சேது says:

    பார்த்திருக்கேன் 🙂 🙂 படங்களுடன் பாவைப் போட்டால் நல்ல மல்டிமீடியா பேக்கேஜ் போல இருக்கும். நல்ல ரசனை

 9. amas32 says:

  Just reading the discussion going on here is such a joyful learning experience. Thanks to all great souls participating in this nice endeavour.
  amas32

 10. GiRa says:

  சொக்கன், இந்தப் பாக்களைப் படிக்கும் போது கண்ணுல தண்ணி வருது. நாலே வரி. வரிக்கு நான்கு சொற்கள். அதைப் பிரிச்சி எழுதுனா நானூறு வரிகளும் பத்தாது. ஒரு சொல்லாச்சும் தேவைக்கு அதிகமா இருக்கா? நம்மளும் எழுதுறோமே! ஸ்ஸ்ஸ்ஸ்!

 11. GiRa says:

  பாட்டின் விளக்கத்துல கார்காலம்னு சொல்லலை. அப்புறமெப்படித் தெரியும்? மயில்கள் ஆடுகின்றன. கொன்றை பூக்கின்றன. கார்காலத்தின் தொடக்கத்தைக் குறிப்பவை. மழையில் மயில் ஆடாது. மழை வரப்போகும் வேளையில் மயில் சிலிர்த்து ஆடும். மழை வந்ததும் ஆண்மயில் பெண்டோடு ஒதுங்கும். அப்படித் தலைவனும் தலைவியோடு ஒதுங்குவான். ஆகையால் தலைவியின் பசலை நீங்கும்.

 12. GiRa says:

  மூங்கில் போன்ற தோள் பெண்களுக்குச் சொல்லப்படுவது. ஏன் மூங்கில்? அதன் வழவழப்புத் தன்மைக்காக.

  வேயுறு தோளி பங்கன் – இதுலயும் பாருங்க. தோளிதான். தோளன் இல்லை. ஏன்னா வேயுறுன்னு சொல்லியாச்சே. புரியலையா? வேய்ங்குழலை நினைச்சுக்கோங்க புரியும்.

  அந்தத் தோளியைப் பங்காகக் கொண்டவன் சிவன். திருநாவுக்கரசரும் பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ என்று பாடவில்லையா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s