அவன் எங்கே?

சிற்றி(இ)ல் நல்தூண் பற்றி ‘நின் மகன்

யாண்டு உளனோ?’ என வினவுதி. என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

நூல்: புறநானூறு (#86)

பாடியவர்: காவற் பெண்டு

சூழல்: வாகைத்திணை, ஏறாண் முல்லை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பெண்ணே,

எங்களுடைய சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு நின்றபடி ‘உன்னுடைய மகன் எங்கே?’ என்று கேட்கிறாய்.

என் மகன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறுதான் புலி தங்கியிருந்த காலிக் குகையைப்போல் இங்கே இருக்கிறது.

நீ புலியைதான் பார்க்கவேண்டுமென்றால், போர்க்களத்துக்குப் போ!

துக்கடா

 • ’புறநானூற்றுத் தமிழர்களின் வீரம்’பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் தவறாமல் மேற்கோள் காட்டப்படும் அருமையான பாட்டு இது. மிக எளிமையான, ஆனால் அழுத்தமான வரிகளைக் கொண்டது
 • காவற் பெண்டிடம் ’உன் மகன் எங்கே?’ என்று கேட்டவர் ஆணா அல்லது பெண்ணா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு வாசிப்பு சுவாரஸ்யத்துக்காக அவரைப் பெண்ணாக்கிச் சேர்ப்பது வழக்கம்
 • ஏறாண் முல்லை, அதாவது ‘ஏறு ஆண் முல்லை’ என்றால் மென்மேலும் உயர்கின்ற ஆண்மையின் சிறப்பைச் சொல்லும் பாடல்
 • இன்றைய அரிய சொல் : இல் = வீடு (இல்லம்) வீட்டில் இருக்கும் குடும்பம், மனைவி போன்றோரையும் குறிக்கும்
 • தமிழில்தான் இது அரிய சொல்லாகிவிட்டது, சில கவிஞர்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதில்லை. தெலுங்கில் இன்னும் ‘இல்லு’ பயன்பாட்டில் இருக்கிறது, ‘பொம்மரில்லு’ (பொம்மை வீடு) என்ற அழகான தெலுங்குப் பெயர் கொண்ட படம் தமிழில் வந்தபோது நம் ஊரில் கவித்துவமான பெயரெல்லாம் எடுபடாது என்று அதற்கு ஹீரோவின் பெயரையே சூட்டிவிட்டார்கள் 🙂
 • அதேபோல் கன்னடத்தில் ‘மனே’ இன்னும் உள்ளது, நாம் ரியல் எஸ்டேட்தவிர வேறெங்கும் ‘மனை’யைப் பயன்படுத்துவதில்லை
 • Of course, ‘வீடு’ என்ற வார்த்தையில் எந்தக் குறையும் இல்லை, இல், மனை என்ற வார்த்தைகளை நாம் almost இழந்துவிட்டதுதான் வருத்தம்
 • உதாரணங்கள்:
 • 1. இல்லறம் = இல் + அறம், குடும்ப வாழ்க்கைக்கான ஒழுக்கங்கள்
 • 2. இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது : தேவாரம்
106/365
This entry was posted in நாடகம், புறநானூறு, புறம், பெண்மொழி, வீரம். Bookmark the permalink.

8 Responses to அவன் எங்கே?

 1. amas32 says:

  இல்லத்தரசி என்று சொல்லும் வழக்கம் இன்னும் சென்னையில் இருப்பதாகத் தான் நினைக்கிறேன்.
  இன்று நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பா எனக்கு ஈழத்தைதான் நினைக்க வைக்கிறது.
  amas32

 2. nvaanathi says:

  இது மனப்பாடப்பா இல்ல.. ஆனாலும் செய்யுள் பகுதில இருந்தது. :))

  எங்க வீட்ல இல்லாள் என்ற சொல் அடிக்கடி கேக்கலாம். 🙂

 3. GiRa says:

  தாயிடம் மகன் எங்கே என்று கேட்பது இன்னொரு பெண் என்று இரண்டு விதமாக முடிவுக்கு வரலாம்
  1. கேட்பவர் ஆணாக இருந்திருந்தால் அவர் ஏன் போர்க்களம் புகவில்லை எனக்கேள்வி எழும். பல்லும் சொல்லும் போயினன் ஆயினும் வில்லும் வேலும் தோளினன் ஆகுவன் என்று போர்க்களம் புகுந்திருப்பார்.
  2. கேட்பவர் தூணைப் பிடித்துக் கொண்டு கேட்கிறார். அந்தக்காலத்து ஆண் வந்து நின்றால் தூண் போலத்தானே நின்றிருப்பானேயன்றி தூணைப்பற்றிக் கொண்டிருக்க மாட்டான் என நினைக்கிறேன்

  • இராகவன் சொல்வது சரி தான் சொக்கரே!
   முதற்கண், எப்படி இந்த ஐயம், (ஆணா-பெண்ணா?) வந்தது-ன்னு தெரியலை!
   பாட்டில் தெளிவாய் இருக்கே! – “தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே”…
   மாதோ = பெண்ணே,
   அவன் தோன்றுவன் போர்க்களத்தானே!

  • * சிற்றி(இ)ல் நல்தூண் பற்றி = பொதுவாக ஆண்கள், தூணைப் பற்றிக் கொண்டு பேசுவதில்லை:)))

   * ‘நின் மகன் யாண்டு உளனோ?’ என வினவுதி = வினவுதி-ன்னு ஒருமையில் சொல்கிறாள்!

   ஆணோ/பெண்ணோ…பெரியவர்களை அப்படிச் சொல்வது வழக்கமில்லை! சிறிய வயது ஆணாக இருக்கவும் வாய்ப்பில்லை! போர்க்களம் சென்றிருப்பான்!
   எனவே…தன்னை ஒத்த வயதுடைய பெண்ணிடம் பேசுகிறாள் என்பதும் தெளிவு!

   இப்பாட்டை எழுதிய = “காவற்பெண்டு” என்னும் பேரைப் பாருங்கள்!
   காவற்பெண்டு=செவிலித் தாய்!

   அதான் “ஈன்ற வயிறோ இதுவே” என்று பெருமையாகச் சொல்கிறாள்!
   ஒரு ஈன்ற தாயும், செவிலித் தாயும் பேசிக் கொள்ளும் உரையாடலே இது!

 4. GiRa says:

  காவற் பெண்டு விடமா? 🙂

  காவற் பெண்டிடம் என்பது சரி.

  நின் என்ற சொல் இன்றும் கன்னடத்தில் இதே பொருளில் வழங்குகிறது. தமிழில் வழக்கொழிந்து விட்டது.

  யாண்டு தொலைந்தே போன சொல்.

  போன பாட்டுல நண்டுக்கும் அளை. இந்தப்பாட்டுல புலிக்கும் அளை. ஆனாலும் வேறுபாடு இருக்கு. புலிக்கானது கல் அளை. இப்ப உள்ள தமிழில் குகை.

 5. Raghavan says:

  சுஜாதா தன் புறநானூறு எளிய அறிமுகத்தில் இந்தப் பாடலை பெரிதாக வியந்திருந்தார். ‘இல்’லை தெலுங்கிற்கும்,’மனை’யை கன்னடத்திற்கும் அனுப்பிவிட்டு, நாம் ‘வீட்டை’ கட்டிக்கொண்டு விட்டோம்.

 6. //நாம் ரியல் எஸ்டேட்தவிர வேறெங்கும் ‘மனை’யைப் பயன்படுத்துவதில்லை//

  மனை+வி? :))

  எங்கும் பயன்படுத்துவதில்லை என்று சொன்ன உமது ஆணாதிக்கத்தை, அண்ணி கவனித்துக் கொள்வார்கள்:))))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s