பவளக் குன்றே!

பைம்பொனே, பவளக் குன்றே,

….பரமனே, பால் வெண்ணீறா,

செம்பொனே, மலர்செய் பாதா,

….சீர்தரு மணியே, மிக்க

அம்பொனே, கொழித்து வீழும்

….அணி அணாமலையுளானே,

என்பொனே, உன்னை அல்லால்

….ஏது நான் நினைவிலேனே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருநாவுக்கரசர்

சூழல்: திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் சிவனைப் பாடியது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பசும்பொன்னே, பவள மலையே, அனைத்திலும் சிறந்தவனே, பால் போன்ற திருநீறை உடல்முழுவதும் பூசியவனே, செம்பொன்னே, மலர் போன்ற பாதங்களை உடையவனே,

சிறப்பு மிகுந்த மணியும், அழகு நிறைந்த பொன்னும் செழித்து வளருகின்ற அண்ணாமலைதனில் வீற்றிருக்கும் சிவனே, என் தங்கமே, உன்னைத் தவிர வேறெதையும் நான் நினைப்பதில்லை!

துக்கடா

 • இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகள் இன்னொரு தேவாரப் பாடலை நினைவூட்டுகின்றன. அதுவும் திருநாவுக்கரசர் பாடியதுதான், பின்னர் ’ராக்கம்மா’வுக்குத் துணையாகத் தமிழ்நாட்டுப் பட்டிதொட்டி(அப்டீன்னா?)களிலெல்லாம் ஒலித்தது: ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும், பனித்த சடையும், **பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்**’ 🙂
 • இன்றைய அரிய சொல் : பரமன் = சிறந்தவன்
 • உதாரணங்கள்:
 • 1. பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் … : கம்ப ராமாயணம்
 • 2. பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்… : சிலப்பதிகாரம்
104/365
Advertisements
This entry was posted in சிவன், திருநாவுக்கரசர், தேவாரம், பக்தி, வர்ணனை. Bookmark the permalink.

14 Responses to பவளக் குன்றே!

 1. nvaanathi says:

  //உன்னைத் தவிர வேறெதையும் நான் நினைப்பதில்லை
  நானும் தான். 😉

 2. //உன்னை அல்லால்
  ….ஏது நான் நினைவிலேனே!//

  ப்ரமாதமுலு!

 3. பெஸ்ட் ரைம் கூட! அழகாப் பாடலாம் போலிருக்கு!

  இந்தமுறை பாடும் சாய்ஸ் கேயாரெஸ் பக்கம் போகட்டும்.

 4. அப்பர் பெருமான் திருவடிகளே தஞ்சம்!
  ———-

  நாவுக்கு+அரசர் என்ற பெயரை இவருக்கு யார் தந்தார்களோ?…
  மனத்துக்கு+அரசர் என்ற பெயரே மிக மிகப் பொருந்தும்!
  அப்படி மனதிலே….தானும் கரைந்து, நம்மையும் கரைப்பவர்…அப்பர் பெருமான்!

  சமயக் குரவர் நால்வருள், ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பேசுதல் கூடாது தான்!
  ஆனாலும், என்னளவில் சொல்கிறேன்!
  “அப்பர் பெருமான் போல்…நேர்மையும், அலங்காரங்கள் இன்றி அகத்தைத் தொடும் உள்ளத்து உணர்ச்சியும்…
  சமயத்தை விடக் கருணையை முன்னிறுத்தும் குணம்….வேறெங்கு தேடினாலும் கிடைக்காது…திருவாசகம் உட்பட….”

  அதானோ என்னவோ…மொத்த 12 திருமுறையும், இவர் எழுதிய “தேவாரம்” என்ற “பேரிலேயே” அடங்கி விட்டது!

  Thevaaram.org, தேவாரப் பயிற்சிப் பள்ளி, தேவார ஓதுவார்-ன்னு…எல்லாத் திருமுறையும் சொல்லிக் குடுத்தாலும்…பேர் என்னமோ….அப்பரின் “தேவாரம்” தான்!

  முருகா…இந்தத் தேவாரம் தழைத்து, கருவறைக்குள்ளும் கோலோச்சும் நாள் எந்த நாளோ?

 5. amas32 says:

  ஒரொரு யுகத்திலும் திருவண்ணாமலை, ஒவ்வொரு மலையாக இருந்தமைக்கு சான்றுகள் உள்ளன. செம்பொன்னே, பவள மலையே என்று இவர் பாடுவது அவற்றைக் குறிப்பதா அல்லது அன்பினால் இறைவனை துத்தித்து மட்டும் பாடுகிறாரா?
  amas32

  • அப்பர், ரொம்ப “தல புராணம்” எல்லாம் பாட மாட்டார்!
   இங்கே, இறைவனை அன்பால் துதித்து மட்டுமே பாடுகிறார்!

   திருவண்ணாமலை…
   கிருத யுகம் = அக்னி
   திருத யுகம் = மாணிக்கம்
   துவாபர யுகம் = பொன்
   கலியுகம் = கல்…என்பது “புராணம்”!

   ஆனா, இங்கே அப்பர், “அக்னி, கல், மாணிக்கம்” எல்லாம் குறிப்பிடவில்லை!

 6. திருவண்ணாமலை = எங்கூரு வாழைப்பந்தலுக்குப் பக்கம் தான்!
  காஞ்சிபுரம்-அண்ணாமலைக்கு நடுவால இருக்கும் கிராமம்!

  அண்ணாமலையில் இருக்கும் அத்தை வீடு தான் சுற்றுலா!
  எனக்குச் சோறூட்ட படாத பாடுபட்ட ஆண்டாள் அத்தை!

  இடுப்புல தூக்கி வச்சிக்கிட்டு, அண்ணாமலை கோயில் சிற்பம் சிற்பமாக் காட்டிச் சோறு ஊட்டுவாங்களாம்! அப்பவும் கால்-வாய்க்கு மேல் திங்க மாட்டேனாம்!
  முழுச் சோறும் ஒரே ஒரு இடத்தில் தான் இறங்குமாம்! அது பெரிய மயில் சிலை இருக்கும் இடம் = கோபுரத்து இளையனார் சன்னிதி!

  அத்தைக்கு வாய் காட்டாதவன், முருகன் சிலைக்கு முழு போண்டா வாயும் தொறப்பான்-ன்னு இப்பவும் ஊருக்குப் போவையில சொல்லுவாங்க:))

  திருவண்ணாமலைப் பாட்டுக்கு மிக்க நன்றி, சொக்கநாதரே!

 7. பாட்டுக்கான பொருளில், கொஞ்சம் கொஞ்சம் மாறுபடுகிறேன், சொக்கரே:)

  மலர்செய் பாதா = //மலர் போன்ற பாதங்களை உடையவனே//-ன்னு அத்தனை தட்டையான பொருளில் அடக்கீற முடியாது!
  மலரன்ன பாதா-ன்னு சொல்லி இருக்கலாமே? எதுக்கு மலர்செய் பாதா? “செய்” என்பது உவம உருபும் அல்ல!
  ————

  மலர்செய் பாதா
  * செய் = சிறந்த! செய்->சேயோன் (சிறந்தவன்)
  “செம்”மையா இருக்கு மச்சி-ன்னு சொல்றோம்-ல்ல?செம்=சிறப்பு

  * செய் = சிவந்த! செய்->சேயோன் (சிவந்தவன்)
  மலர் செய் பாதம் = மலரின் சிவந்த பாதம்!!

  ஈசனின் திருவடி, பெருமாளின் திருவடி போல் ஓய்வான திருவடி அல்ல!
  சதா ஆடும் திருவடி! அதான் சிவந்து விடுகிறது!

  ஆனா இதையும் விட ஒரு சிறப்பான பொருள் இருக்கு!
  ————

  * செய் = விளைந்த…
  நன்செய்/புன்செய் -ன்னு கேள்விப்பட்டிருக்கோம்-ல்ல?
  மலர் செய் பாதம் = மலர் “விளைந்த” பாதம்!

  ஒரு பாதத்தில் மலர் தூவலாம்!
  ஆனா பாதமே மலரால் செஞ்சி வச்சது-ன்னா?
  எதுக்கு ஈசனின் பாதத்தை….மலரால் செய்யணும்? = மலர் செய் பாதம்?

  ஆடல்வல்லான் தூக்கிய திருவடியைக் கற்பனை பண்ணிப் பாருங்க!
  எந்தக் காலைத் தூக்கி இருக்காரோ, அதே காலின் மேல், ஒரு கையும் காட்டி இருக்கும்!

  இதோ….மலர் செய் பாதம் = மலரால் செய்த பாதம் = மலரைச் சூடிக் கொள்!
  இந்த மலரே வாடா மலர்! இதுவே உனக்கு அழகு!
  அது தான் “மலர் செய் பாதம்”

 8. பைம்பொனே = பசும் பொன் போல் மேனி
  பவளக் குன்றே = சிவந்த குன்று போல் சடா முடி

  பரமனே, பால் வெண்ணீறா = பால் போல் பளீர் வெள்ளை நீறு
  செம்பொனே, மலர்செய் பாதா = சிவந்த, மலரால் செய்து வச்ச பாதம்
  ————-

  சீர்தரு மணியே, மிக்க அம்பொனே = மணியும், பொன்னும்
  கொழித்து வீழும் அணி அணாமலை உளானே = கொழித்து உருளும் மலை…அந்த மலையாகவே இருப்பவனே

  அணாமலை உளானே = அண்ணாமலை”யில்” உள்ளவனே என்பதை விட
  அணாமலை உளானே = அண்ணாமலை”யாய்” உள்ளவனே என்பது இன்னும் பொருந்தும்!
  ————

  என்பொனே = என் சொத்தே
  உன்னை அல்லால்
  ஏது நான் நினைவிலேனே! = ஏதும் எனக்கு நினைவில்லையே!

  நான் தேடித் தேடிச் சேர்த்த சொத்து…அந்தச் சொத்தைக் காப்பாற்றுவதிலேயே குறியாய் இருக்கேன்!
  அதனால் ஏது நான் நினைவிலேனே = எனக்கு வேற ஏதும் நினைவு இல்லையே!
  ————-

  பாட்டின் ஒவ்வொரு வரியும் பாருங்க! இந்தச் சொத்து வெவரம் புரியும்!
  ஒவ்வொரு வரியிலும், பொன், பொன்-ன்னு வரும்!!

  1. பைம் பொன்னே
  2. செம் பொன்னே
  3. அம் பொன்னே
  4. என் பொன்னே

  இப்படியான “பொன்னாசை” பிடிச்ச தேவாரம்…இந்தப் பாடல்! எங்கள் அப்பர் பெருமான் பாடல்!

  • amas32 says:

   நெஞ்சு நிறைந்து வழிகிறது, இறை இன்பத்தால், நீங்கள் செய்யும் இத்தொண்டால். நன்றி!
   amas32

 9. இன்னொன்னும் சொல்லணும்! (யாரும் தப்பா நினைச்சிக்கிட வேண்டாம்)

  அப்பர் பெருமான் பாட்டுல மட்டும் தான்…சமண/பெளத்தம் தாக்கியோ, சமணர்களை ஓவராத் தாக்கியோ பாடல்கள் இருக்காது! தன்னைத் தானே தான் தாழ்த்திக் கொள்வார்!

  பல பாடல்களும் கருணை அளவிலேயே நிற்கும்! மிகுந்த பணிவு தெரியும்! முன்பு சமணத்தில் இருந்ததால், அதன் தாக்கமாக, கொல்லாமை பற்றியும் நிறைய சொல்லுவாரு!
  ————-

  ஈசனையே பற்றி இருந்தார்!
  வெறுமனே கருத்து சொல்லீட்டுப் போயிடாது, உடலால் உழைத்து, உழவாரப் பணி செய்தார்!
  தமிழுக்கு, “தாண்டகம்” என்னும் புது வகைப் பாவைக் கொணர்ந்தவர்!
  பல புதிய இசைப் பண்களை அறிமுகம் செய்தவர்!
  ————-

  ஆனால் என்ன காரணமோ தெரியலை…இத்தனை அன்பு வழியில் நின்றாலும், அப்பர் மட்டும் தான் ரொம்ப சோதனைக்கும், உடல் உழைப்புக்கும் உள்ளானார்!:(

  மற்றவர்களுக்கு கிடைத்த சொகுசோ, முத்துப் பந்தலோ, காமத்துக்கு தூதோ, தோழமையோ…எதுவும் அப்பருக்கு கிடைக்கவில்லை!

  ஆனாலும்…ஈசனையே பற்றி இருந்து, அதே சமயம், எந்த நெறியும் வெறுக்காது, அன்பிலே ஊறி இருந்தவர் அப்பர் பெருமான்!
  குரவர்களுள், இவர் முடிவு மட்டும் தான், எப்படி என்று நாம் அறிய முடியவில்லை!

 10. Vijay says:

  சொக்கன், 365 (& preferably more) பா புத்தகமா போடும்போது நண்பர் கண்ணபிரான் ரவிசங்கரை சக எழுத்தாளராகப் பாவித்து அவர் உரையையும் சேர்த்தே அளிக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s