வீணாகும் பால்

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு

எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என் மாமைக் கவினே

நூல்: குறுந்தொகை (#27)

பாடியவர்: வெள்ளிவீதியார்

சூழல்: பாலைத்திணை : காதலியைப் பிரிந்து செல்கிறான் காதலன். ‘இந்தத் துயரத்தை இவள் எப்படித் தாங்குவாளோ!’ என்று தோழி கவலைப்படுகிறாள். அவளுக்குக் காதலி சொல்லும் பதில் இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நல்ல பசுவின் இனிமையான பால். அந்தப் பாலைப் பசுவின் கன்று குடிக்கவேண்டும், அல்லது அது பாத்திரத்தில் கறக்கப்பட்டு மற்றவர்களுக்காவது பயன்படவேண்டும். இந்த இரண்டுமே இல்லாமல் அது தரையில் சிந்தினால் வீண்தானே?

அதுபோல, தேமல் படர்ந்த என் பெண்மையும் மாந்தளிர் நிற அழகும் எனக்கும் பயன்படவில்லை, என்னுடைய காதலனுக்கும் இன்பம் தரவில்லை. பசலை படர்ந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.

துக்கடா

 • சங்க இலக்கிய நூல்களில் சில மிக அற்புதமான பாடல்களை எழுதியுள்ளவர் வெள்ளிவீதியார். அவற்றில் சிலவற்றை இங்கே வாசிக்கலாம் : http://tawp.in/r/24fx
 • இன்றைய பா ‘என் சுவாசக் காற்றே’ என்ற திரைப்படத்தில் வரும் ‘தீண்டாய், மெய் தீண்டாய்’ என்ற பாடலின் தொடக்கத்தில் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதி எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா இருவரும் பாடிய அந்தப் பாடலை இங்கே கேட்கலாம் (ஆனால் அந்தப் பாடலில் இந்தக் குறிப்பிட்ட வரிகளைப் பாடிய பெண் குரல் சித்ரா அல்ல என்று நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை)
 • இன்றைய அரிய சொல்: ஐ = தலைவன்
 • உதாரணங்கள்:
 • 1. பூக்கெழு துறைவனை என் ஐ என்றும் யாமே… – ஐங்குறுநூறு
 • 2. என் ஐ வாழிய! – நற்றிணை
102/365
This entry was posted in காதல், குறுந்தொகை, சினிமா, தோழி, பாலை, பிரிவு, பெண்மொழி. Bookmark the permalink.

19 Responses to வீணாகும் பால்

 1. GiRa says:

  இந்தப் பா தமிழர்கள் பெருமைப்படத் தக்க பா.

  இதை எழுதிய வெள்ளிவீதியார் ஒரு பெண்பாற்புலவர். காதல் நிறைவேறாமல் போனவர். அதற்குக் காரணம் என்னவென்று பலவித ஊகங்கள் உண்டே தவிர, நான் அறிந்தவரை இதுதான் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஒரு சிலர் கதைகள் சொன்னாலும் அதற்குத் தரவுகள் இருப்பது போலத் தெரியவில்லை.

  ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் என்று சொல்வதில் இருந்து கணவனை இழந்து தவித்தவராக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

  ஆதிமந்தி சோழன் மகள். ஆட்டனத்தி சேரன். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஒரு சூழலில் ஆட்டனத்தி ஆற்றோடு போய்விடுகிறான். அப்பொழுது ஆதிமந்தி காவிரிக்கரையோரமாக தலைவனைத் தேடி அழுது புலம்புகிறாள்.

  இந்தக் கதையை பாரதிதாசன் ஆட்டனத்தி ஆதிமந்தி என்று நாடகமாக எழுதினார். இதையே தழுவி எடுக்கப் பட்ட படம் மன்னாதி மன்னன். அதில் அஞ்சலிதேவி தண்ணீரோடு போன எம்.ஜி.ஆரைத் தேடி “காவிரித்தாயே காவிரித்தாயே” என்று பாடுவார்.

  வெள்ளிவீதியாரின் இயற்பெயர் தெரியவில்லை என்று நினைக்கிறேன். பெயர்க்காரணத்தை உ.வே.சாவின் குறுந்தொகை உரைநூலில் காணலாம்.

 2. GiRa says:

  வெள்ளிவீதியார் சங்கப்புலவர். ஆகையால்தான் உள்ளதை உள்ளபடி சொல்லிப் பாராட்டும் பெற முடிந்தது. சங்ககால ஔவையார் இவர் பெயரைக் குறிப்பிட்டு அகநானூற்றுப் பா எழுதியிருக்கிறார்.

  பட்டினி. வயிற்றுப் பசி. பசிக்கு மருந்து சோறு. அந்தச் சோறில்லாமல் வயிறு தவிப்பது கொடுமை. அந்தக் கொடுமையை அனுபவிக்கின்றவர்களுக்குத்தான் ஆண்டவன் வயிற்றை ஏன் படைத்தான் என்று ஆத்திரம் வரும்.

  பசி இப்படி. கிசி? அதுதான் உடற்பசி.

  கணவனோ இறந்து விட்டான். வேறு யாரையும் காதலிக்க முடியவில்லை. அவன் தொட்டணைத்து கைபட்டுக் கால்பட்டு உடல்முட்டிச் சுகித்த எண்ணங்களை மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?

  தவிக்கிறார் வெள்ளி வீதியார். இரவு நேரம். இருட்டு மருட்டுகிறது. நிலவு சுடுகிறது. படுத்திருக்கும் மெத்தை உறுத்துகிறது. தென்றல் கடலலையிலிருந்து வருகிறதா? உலையிலிருந்து வருகிறதா? கிசித்திருக்கும் வேளையில் கிசிச்சோறு கிட்டாத் துயரம். மாற்றான் பொருளுக்கு மனதிலும் விரும்பாதவர் வெள்ளிவீதியார். இறந்தவனையே நினைத்து வருந்துகிறார்.

  நல் ஆன் தீம்பால் – நல்ல பசுவின் தீம்பால். ஒரு சிறிய செய்தி. பழந்தமிழில் ஆ என்றால் பசு. நாம் வடக்கத்திப் பசும்பாலுக்கு மாறி விட்டோம். தெலுங்கில் இன்றும் ”ஆப்பாலு”தான்.

  ஆவின் மடியில் சுரக்கும் பாலை கன்று பருகும். அல்லது ஆயர் பீய்ச்சுவர். இரண்டும் ஆகவில்லையென்றால் பால் கட்டிக் கொள்ளும். அது பசுவிற்குத் துன்பம் கொடுக்கும். அந்தத் துன்பம் தாளாமல் பசுக்கள் பாலைத் தரையிற் சொரிந்துவிடும்.

  அப்படி மண் வீழ்ந்த பாலால் என்ன பயன்? அப்படிப் பயனில்லாமல் கிடக்கிறதே என் அழகு. பசலை பிடித்துப் போனதே.

  தனியொருத்தியாய் முழுமையான இன்பம் துய்க்க முடியவில்லை. என் தலைவனாலும் அனுபவிக்கப்பட முடியவில்லை. ஒரு ஆணால் அனுபவிக்க முடியாத என்னுடைய அழகான அல்குல்(பெண்குறி) நிலம் வீழ்ந்த பாலாயிற்றே. பொருளோ நல்ல பொருள். வீணாய்க் கிடக்கிறது.

  இப்படியாகப் புலம்புகிறார்.

 3. GiRa says:

  நம்மள்ளாம் ஒன்னு நல்லா நினைவு வெச்சிக்கனும்.

  சங்கப்பாடல்ல இருந்து இப்பத்தைய சினிமா பாடல் வரைக்கும் பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் நிலையிலிருந்து நிறைய எழுதீருக்காங்க. அதெல்லாம் ஓரளவுதான் பொருத்தம்.

  ஒரு பெண்ணே உணர்ச்சிகளை உளவெடிப்போடு எழுதும் போது ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் அது அவர்களின் தவறான பக்கத்தை அல்லது இயலாமையை சுட்டிக் காட்டுகிறது.

  காதல் பாட்டையே ஆண் யோசிக்கும் பொழுது “மனம் துள்ளும் இன்பத்தால்” என்றுதான் எழுத முடிகிறது. “குங்கமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டில் சங்கமம்” என்று இயல்பாக எழுத ஒரு பெண் கவிஞர் தேவைப்படுகிறார்.

  எத்தனையோ விதமாக ஆண்களைப் பெண்கள் பாடுவதாகப் பாடல்கள். ஆனால் வசீகராவின் வெற்றி ஊர் அறிந்தது.

  இன்றும் பெண் எழுத்தாளர்கள் எல்லாம் ராஜம் கிருஷ்ணனாகவோ லட்சுமியாகவோதான் இருக்கப்பட ஆண்கள் விரும்புகிறார்கள். உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் வடித்தால் விமர்சனங்கள், வசவுகள், இன்னும் என்னென்னவோ. இதுதான் உலகம். 🙂

 4. நல்ல வேலை “அல்குல்” என்ற சொல்லை அறிய சொல்லாக போடவில்லை! இல்லையெனில் அதற்க்கு விளக்கம் சொல்லியே தாவு தீர்ந்து போயிருக்கும்!!

 5. இந்தப் பா-வுக்கு என் பின்னூட்டம் இல்லை!

  தனிப் பதிவாகவே தான் போட முடியும்!
  வெள்ளிவீதியார் கதை = http://madhavipanthal.blogspot.com/2011/06/sangatamizhincinema.html

 6. இந்தப் பா, வரும் வரும் என இரவெல்லாம் காத்திருந்து,
  தாமதமாக வந்த பிறகும்…வாசித்து வாசித்து,
  எதையும் எழுதவும் முடியாமல்…

  கை-இல் ஊமன் கண்ணின் காக்கும், வெண்ணெய் உணங்கல் போல
  பரந்தன்று இந்நோய்! நோன்று கொளற்கு அரிதே!

 7. psankar says:

  சில நூறு வருடங்களாக (அநேகமாக இசுலாமியர் ஆதிக்கத்துக்கு பின் ) பெண் உடல் தொடர்பானவை ஏதோ சொல்லக்கூடாதவையாக மாற்றப்பட்டுவிட்டன 🙂 நீங்கள் அல்குல் என்ற சொல்லுக்கு விளக்கம் சொல்லி இருக்கிறீர்களா என்று காண மிகவும் ஆவலாய் வந்தேன். என் கணிப்பு பொய்க்கவில்லை.

 8. வெள்ளிவீதியார் கணவனை இழந்தவர் அல்லர்!
  காதலனை இழந்தவர்! காதலனால் கைவிடப்பட்டவர்!

  மொத்த வாழ்வும்…முடங்கிப் போய்…
  கிசித்தே முடிந்த ஒரு பெண்பாற் புலவர்!
  ————-

  தம் பாடல்களில், வெள்ளிவீதி, அவனை(ரை) நேரடியாகச் சொல்ல முடியாமல் குமைந்தாலும்…
  அவள் பட்ட துன்பங்களை எல்லாம், அவள் நடையாய் நடந்ததை எல்லாம்…..சக பெண்/ஆண் புலவர்கள், சங்க இலக்கியத்தில் எழுதி வைத்துள்ளார்கள்!

  பெருங்கோழியூர் நாய்கன் மகள் நக்கண்ணையார், ஓளவையார், நல்லந்துவனார் என்று…
  இவள் பட்டதைக் காணப் பொறாமல்…பலர்…ஆங்காங்கே அகநானூற்றிலும், குறுந்தொகையிலும், ஏன் புறநானூற்றிலுமே பதிந்து வைத்துள்ளனர்!
  ————-

  இவளும், தன் கவிதைகளில், தன் பசியை/கிசியை/வாழ்வை/வளத்தை(?)…பெய்து வைத்திருக்கிறாள்!

  தனக்குள்ளேயே பேசிப்பாள் போலிருக்கு!
  அவன் இல்லாததால்…..அவன் பேசுவது போல், இவளே பேசிக் கொள்வதும்…
  பெண் பேச்சும், ஆண் பேச்சுமாய்….மாறிமாறி…
  இவள் அக வெளிப்பாடுகள் பட்டுத் தெறிக்கும்!

  • GiRa says:

   அவள் துன்பப்பட்டாள் என்றுதான் பாடியிருக்கிறார்கள். இழந்து வருந்தினாள் என்றுதான் பாடியிருக்கின்றார்கள். கைவிடப்பட்டாள் என்று பாடவில்லை.

   அத்தோடு உங்கள் பதிவையும் பார்த்தேன். தலைவன் கூற்றைத் தலைவி கூற்றாக்கி விட்டீர்கள்.

   இதற்காகத்தான் உ.வே.சா குறுந்தொகைக்கு மட்டும் மிகமிக விரிவான உரையெழுதினார். ஒவ்வொரு பாடலுக்கும் என்ன திணை யாருடைய கூற்று என்பதையெல்லாம் கூடத் தெளிவாகவே எழுதியிருக்கிறார்.

   இன்னொன்று நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காதலனால் கைவிடப்பட்டவர் அனுதாபத்திற்கு உரியவர்தான். ஆனால் ஏன் கைவிடப்பட்டாள் என்றும் யோசிக்க வேண்டும். இருவரும் காதலித்துப் பிரிந்திருந்தால் அது ஒரு விதம். ஒருதலையாக நினைத்துக் கொண்டு அடுத்தவரைக் கொடுமைப்படுத்தும் கூற்றெண்ணமாக இருந்தால் இன்னொரு விதம்.

   • //அவள் துன்பப்பட்டாள் என்றுதான் பாடியிருக்கிறார்கள்
    கைவிடப்பட்டாள் என்று பாடவில்லை//

    அவள் பாடவில்லை!
    ஆனால் பிறர் பாடி உள்ளார்கள்!
    “கை” விடப்பட்டாள் என்பதற்கான தரவுகள்/அகச் சான்றுகளை, அவ்வப் பாடல்களைக் கொண்டே வைக்க இயலும்!!
    ——————-

    //தலைவன் கூற்றைத் தலைவி கூற்றாக்கி விட்டீர்கள்//

    தலைவி கூற்று ஆக்கவில்லை!
    பாடிய பெண்ணுக்கு “கூற்றா”னதைத் தான் நவின்றுள்ளேன்!

    பாடியவள் ஒரு பெண் தானே!
    அவளே, தலைவனாகவும், தலைவியாகவும்…..தன்னை மாறி மாறி பாவித்து பாடிய கவிதைகள்!
    ——————

    //உ.வே.சா குறுந்தொகைக்கு மட்டும் மிகமிக விரிவான உரையெழுதினார்//

    திணை, துறை, மகடூஉ முன்னிலை, இதனை இதனான் இவர்க்குச் சொல்லியது = இவையெல்லாம் “இலக்கணக் குறிப்புகள்”! அதை உ.வே. சாமிநாத அய்யரால் தர முடியும்!

    ஆனால்…கவிதை “அகக்குறிப்புகள்”, மனப்படிமானக் குறிப்புகள்…
    இவற்றை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், அதை விட, தாயம்மாள் அறவாணன் என்ற பெண் அறிஞர், இவர்களின் நூல்களில் அறியலாம்!
    —————–

    //ஆனால் ஏன் கைவிடப்பட்டாள் என்றும் யோசிக்க வேண்டும்//
    – இது, கைவிடப்பட்டதற்கான காரணங்களை அடுக்கி, நியாயப்படுத்தத் துடிக்கும் பார்வையோ, குற்றஞ் சுமத்தும் பார்வையோ அல்ல!
    – இது, அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு வாழ்வற்ற வாழ்வில், அவள் பட்ட அக-உணர்ச்சிகளான பார்வை மட்டுமே!!

   • இன்னொரு முறையும் சொல்லிக் கொள்ளக் கடமைப்படுகின்றேன்….

    = வெள்ளிவீதியார் கைவிடப்பட்டதற்கான காரணங்களை “அடுக்கி”, அதை நியாயப்படுத்தத் துடிக்கும் பார்வையோ
    (அல்லது) அவளுக்கு ஆதரவாக அவனைக் குற்றஞ் சுமத்தும் பார்வையோ அல்ல!

    = வெள்ளிவீதியே, தன் காதலன் பெயரை/குறிப்பை எங்கும் சொல்லிடவில்லை!

    = அவள், அவன் இன்ப-நினைவிலேயே வாழ்ந்து முடிந்தாள்!

    = இது, அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு வாழ்வற்ற வாழ்வில், அவள் பட்ட அக-உணர்ச்சிகள் மட்டுமே!!

    = அவள், தன் “உணர்ச்சிகளை”க் கூட வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்ல முடியாதல்லவா!
    அவள் “உணர்ச்சிகள்” – சங்கத் தமிழ் அகப் பொருளாக ஊற்று எடுத்தன! அவ்வளவே!

 9. இந்தப் பாடல் மிகவும் சோகமான + புரட்சிகரமான பாடல்!

  பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனைகள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு!
  ஆனால் பெண்கள்? = வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!

  அதிலும் உறுப்பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை!
  வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை “துணிவு”! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!

  தமிழ் இலக்கியத்தில், 25+ பெண்பாற் புலவர்கள் உண்டு!
  ஒளவையார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தை, பாரி மகளிர்….
  ஆனால் வெள்ளிவீதியாருக்கு மட்டுமே இத்துணை துணிவு!

  சங்கப் பாடல்களில் அதிகம் பாக்களைப் பெய்த பெண்ணும், வெள்ளிவீதியே!

 10. Note: இந்தப் பின்னூட்டத்தை, தூய்மைவாதிகள், ஒதுக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

  அல்குல்
  = பெண் உறுப்பு/ இடை
  இரண்டு பொருளிலும் வரும்! இடத்துக்கு ஏற்றவாறு கொள்ள வேண்டும்!

  * குழந்தைக் கண்ணனை, பாலுண்ண என் அல்குல் ஏறாயே, என்று ஆழ்வார் பாடினால், அப்போ அல்குல்=இடை
  * இந்தப் பாடலில்…பசலை உணீஇயர் வேண்டும்
  திதலை அல்குல் = பெண் உறுப்பே
  ———————–

  அது என்ன
  பசலை + உணீஇயர் + திதலை + அல்குல்?
  இத்த்த்தனை விவரிப்பின் நோக்கம் என்ன?

  * திதலை = தேமல் (சற்று வெள்ளையாய் இருப்பது)

  * பசலை = சற்றுக் கரும் பச்சையாய் இருப்பது…
  அசோக மரத்துக் கொழுந்து இலை பார்த்து இருக்கீங்களா? அது போல…தோல் நிறமாற்றம்

  * மாமை = செம் பச்சையாய் இருப்பது
  (மாந்தளிர் = மாமை = மாமரம் தளிர் பார்த்தாத் தெரியும்…சிவப்பும் பச்சையும் கலந்த நிறம்)
  ——————–

  இந்தப் பெண்…வாழ்வு ஒடிந்து, கிசித்துப் போய் இருக்கிறாள்!
  கொஞ்சம் கொஞ்சமாய்…பரவுகிறது!
  அடியில் இருந்து ஏக்கம் பரவுதல் போல்…
  அடியில் இருந்தே நோயும் பரவுகிறது!
  நீங்களும், அடியில் இருந்தே பாட்டை வாசியுங்கள்!

  * திதலை அல்குல் = தேமல் அல்குல்
  தேமல் தோன்றத் துவங்கி விட்டது…அந்த இடத்தில்…வெள்ளைப்படுகிறது!

  * மாமை கவினே = மேலே, உடம்பு எங்கும், மாந்தளிர்…செம்பசுமை..ஒரு அழகிய வனப்பு

  * பசலை உணீஇயர் = உடம்பை, பசலை உண்ணத் தொடங்குது!
  கொஞ்சம் கொஞ்சமா, அந்தச் செம்பசுமை…கரும் பச்சை நிறமா….மாறத் துவங்குது!
  ——————

  உடம்பில் உள்ள மாமை கவின்…ஐய்யோ…பசலையாய் மாறத் துவங்கிருச்சே!
  கீழே…தேமல் தோன்றத் துவங்கிருச்சே! வெள்ளைப் படுகிறதே!

  “அந்த இடத்தில்” வெள்ளைப்படுவது…எனக்கும் ஆகாது! என் ஐக்கும் உதவாதே! நான் என்ன செய்வேன்??

  கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, நல் ஆன் தீம் பால் நிலத்திலே வீணாவது போல்…
  என் மாந்தளிர்க் கவின் உடம்பு, அவனும் உண்ண முடியாமல், நானும் அழகுபடுத்திக் கொள்ள மனமின்றி…
  கீழே பால் பெய்து வீண் ஆதல் போல், வெள்ளைப்பட்டு…திதலை அல்குல்….வீணாகிறதே!

  முருகா!…இதுக்கு மேல என்னால் சொல்ல முடியலை!

 11. காதலைப் பறிகுடுத்த ஒரு பேதை மனம்…
  தினமும், தனக்குள்ளயே பேசிப் பேசி…
  எல்லாவற்றிலும் ஒதுங்கி ஒதுங்கி…

  வேறு யாரையும் நெருக்கத்தில் வைக்காமல்…
  தனிமையில்…தன்னையே பார்த்து பார்த்து….
  தன் உடம்புக்குள் நடக்கும் மாற்றத்தையே…பார்த்துப் பார்த்து…
  அதனால் வந்த விளைவு…இந்தச் சங்கத் தமிழ்க் கவிதை!

  இப்போ, அடியில் இருந்து, கவிதையை வாசித்துப் பாருங்கள்!

  * திதலை அல்குல்!
  * என் மாமைக் கவினே, பசலை உணீஇயர் வேண்டும்!!
  * எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
  * கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
  * நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா ஆங்கே……

  அவள் அகச்சிதறல் மெய்ப்பாடு விளங்குகிறது அல்லவா?

 12. amas32 says:

  நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை இந்தமாதிரி பொழிப்புரை படிக்கும் பாக்கியம் பெற்றமைக்கு.
  amas32

 13. GiRa says:

  எனக்கு ஒன்று புரியவே மாட்டேன் என்கிறது. ரவிசங்கர் அவர்களும் அந்த வருத்தத்தை அழகாகச் சொல்லியிருந்தார்.

  அல்குல் என்பதற்குப் பொருள் சொல்வதில் என்ன குற்றம் வந்தது? தெருத்தெருவாகத் திரிந்து குறுந்தொகை இலக்கியம் தேடி அதில் ஒவ்வொரு பாடலுக்கும் மிக அருமையாக விளக்கம் சொல்லியிருக்கும் உவேசாவிற்கு அல்குல் எதைக் குறிக்கிறது என்பதைச் சொல்வதற்கு தயக்கமில்லை. தமிழில் அவர் செய்யாத ஆராய்ச்சியா? ஒரு கருத்தை வேண்டுமானால் அவர் சார்புடையவராக வைக்கிறார் என்று சொல்லலாம். ஒரு சொல்லிற்குப் பொருள் சொல்லும் பொழுதா அப்படிச் சார்பு நிலை வரும்.

  அபீதகுசம் என்று சொல்லும் பொழுதும் breast cancer என்று சொல்லும் போதும் வராத தயக்கம் அல்குல்லில் ஏன்?

  அதைப் புருவம் என்று சொல்கிறது இந்தப் பதிவு.
  http://www.tamilauthors.com/01/90.html
  நன்றாகப் படித்துப் பாருங்கள். இதை வைத்துக் கொண்டு அல்குல் என்பது அல்குல்தான் என்றும் சொல்லலாம்.

  இது தமிழ்ச் சுத்திகரிப்பல்ல. தமிழழிப்பு. 😦

 14. ramachandran bk says:

  ஆஹா ! தமிழ் படித்தால் அன்றோ வாழ்வை ரசிக்க முடியும், இன்று கன்றும் குடிக்காமல், பாண்டத்திலும் இல்லாமல் கோரிக்கை அற்று கிடக்குதண்ணே வேரினில் பழுத்த பலா என்று இல்லையா இருக்கிறது எனது மொழி

 15. Pingback: வாராவாரம்-அல்குல்-உள்ளாட்சித்தேர்தல்-கோயில்-23-10-2011 « GRagavan’s Weblog

 16. ராஜசுந்தரராஜன் says:

  ‘அல்குல்’ என்றால் பெண்குறி அன்று, hip.

  ||மைகொள் மாடத் திருக்குறுக்குடி நம்பியைநான் கண்டபின்
  செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடை வடிவும்
  மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே|| (திருவாய்மொழி 5.5.8)

  என்று பெருமாளுக்கு ‘அல்குல்’ சொல்லப்பட்டு இருக்கிறது பாருங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s