அங்காடித் தெரு

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்

சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையில்

பொலம்தெரி மாக்கள் கலைஞர் ஒழித்து ஆங்கு

இலங்கு கொடி எடுக்கும் நலம்கிளர் வீதியும்

நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்

பால்வகை தெரியாப் பல்நூறு அடுக்கத்து

நறுமடி செறிந்த அறுவை வீதியும்…

நூல்: சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம் / ஊர்காண் காதை / வரிகள் 201 முதல் 207வரை)

பாடியவர்: இளங்கோ அடிகள்

சூழல்: கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளோடு மதுரை வந்து சேர்கிறார்கள். அங்கே தங்குவதற்கு ஒரு வீடு தேடிக் கடைத் தெருவுக்கு வருகிறான் கோவலன். அங்கே அவன் பார்த்த பல காட்சிகளில் இதுவும் ஒன்று

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தங்கத்தில் நான்கு வகைகள் உண்டு: சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்.

பொன் வியாபாரிகள் இந்த நான்கு வகைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நன்றாகப் புரிந்துவைத்திருப்பார்கள். தங்களுடைய கடையைத் தேடி வரும் மக்கள் ‘இது எங்கே?’ என்று குழம்பக்கூடாது என்பதற்காகக் கடையின் பெயரைக் கொடியாகக் கட்டி அறிவிப்பார்கள். அப்படிப்பட்ட நன்மை நிறைந்த தங்கக்கடை வீதியைக் கோவலன் பார்த்தான்.

அடுத்து, அவன் துணிக்கடை வீதிக்குள் நுழைந்தான். அங்கே பருத்தி நூல், மிருகத்தின் ரோமம், பட்டு இழை போன்றவற்றால் நெய்யப்பட்ட ஆடைகள் பல நூறு அடுக்குகளாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த அழகிய துணிகளில் இழை எங்கே சென்றது, எப்படிச் சென்றது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படி ஒரு நுட்பமான கலை!

துக்கடா

 • ’ஊர்காண் காதை’யில் கோவலன் பார்க்கும் பல காட்சிகளில் ஒரு சின்னத் துளிதான் இது. முழுமையாகப் படித்தால் மிகச் சுவாரஸ்யமான ஒரு சுற்றுலாக் கட்டுரை கிடைக்கும் : http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=16
 • ‘அங்காடித் தெரு’ என்ற தலைப்பு புதிய சினிமாப் பெயராக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள். அதுவும் இளங்கோ அடிகள் சூட்டிய பெயர்தான்: ‘அரசுவிழை திருவின் அங்காடி வீதி’
 • இந்த நான்கு வகைத் தங்கங்கள் இப்போதும் உண்டா? அவற்றிடையே என்ன வித்தியாசம்? 22 கேரட், 24 கேரட் என்பதுபோலவா? இணையத்தில் தேடியபோது இராம.கி. ஐயா அவர்கள் எழுதிய (http://payananggal.blogspot.com/2007/09/blog-post.html?showComment=1188997200000#c7459892102993053845) இந்த விளக்கம் கிடைத்தது:
 • 1. சாதரூபம் = பிறந்தபடி இயற்கையாக இருக்கும் பொன்
 • 2. கிளிச்சிறை = கிளிச் சிறகுபோல, சற்றே பச்சை நிறம் கொண்ட பொன்
 • 3. ஆடகம் = காய்ச்சிய, சற்றே குங்கும நிறம் கொண்ட பொன்
 • 4. சாம்பூநதம் = ஒளி மங்கிய பொன்
 • இன்றைய அரிய சொல் : அறுவை = துணி (தறியிலிருந்து அறுத்து எடுக்கப்படுவதால் அல்லது, வேண்டிய நீளத்துக்கு அறுத்து விற்கப்படுவதால்)
 • உதாரணங்கள்:
 • 1. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் – சங்கப் புலவர் ஒருவருடைய பெயர்
 • 2.  (நேச நாயனார்) அறுவையர் குலத்து வந்தார் – பெரியபுராணம்
101/365
Advertisements
This entry was posted in இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வர்ணனை. Bookmark the permalink.

7 Responses to அங்காடித் தெரு

 1. \\இன்றைய அரிய சொல் : அறுவை = துணி (தறியிலிருந்து
  அறுத்து எடுக்கப்படுவதால் அல்லது, வேண்டிய நீளத்துக்கு அறுத்து விற்கப்படுவதால்)\\

  பட்டு நூல் நெசவாளர்கள் பேச்சு வழக்கில் இன்றும், “அவன் ஒரே மாதத்தில் ஆறு சேலைகள் அறுப்பான்” என்றுதான் சொல்கிறார்கள் (குறிப்பாக சௌராஷ்டிரா சமூகத்தில்). ஆறு சேலைகள் நெய்வான் என்று சொல்வதில்லை:-))

  • ஆமா! எங்கூரு, மற்றும் ஆரணிப் பட்டுத் தறியிலும் இதே வழக்கு தான்!
   தறியில் அறுத்து எடுப்பதால் அறுவை!
   துணித்து எடுப்பதால் துணி!
   வெட்டி எடுப்பதால் வேட்டி!

   வேட்டி – வெள்ளை வேட்டி,சாய வேட்டி ரெண்டுமே உண்டு!
   சாயம் படர்வதற்கு முன் வெட்டி எடுத்துட்டா வேட்டி ஆகும்! (ஆண்கள்)
   சாயம் போட்ட பின், எடுத்தா சீலை ஆகும் (பெண்கள்)

 2. ஆனால் அந்த வார்த்தை பரவலாகப் பயன்பாட்டில் இல்லை என்றுதான் நானும் நினைக்கிறேன்

 3. GiRa says:

  காட்சிப்படுத்துதலில் இளங்கோதான் முன்னோடி. கம்பன் கவிவம்பன் என்றாலும் இளங்கோவே மிகச்சிறப்பு என்பதென் கருத்து.

  ஊர் சுத்திப் பாக்குறதுக்கே ஒரு காதை எழுதீருக்காரு. அப்படியே கேமராவில் படம் பிடித்த வரிகள்.

  இளங்கோ தமிழ் வளங்கோ!

 4. GiRa says:

  நால்வகைப் பொன்னில் சாம்புனதம் ஒளி மங்கிய பொன் என்று சொல்லியிருக்கின்றீர்கள். அது தவறுன்னு நெனைக்கிறேன். நால்வகைப் பொன்னிலும் உயர்ந்தது சாம்புனதம். வெளிரிய மஞ்சள் நிறத்தில் பளபளப்பது. பூவுக்குத் தாமரை பொன்னுக்குச் சாம்புனதம்னு திருவள்ளுவமாலை சொல்லுதே.

  • இராகவன் சொல்வது சரி தான் சொக்கரே!

   சாம்புனதம் (நாவல் பொன்) தான் தரத்தில் உசத்தி! இன்றைய carat கணக்கு போல், அன்றைய கணக்கில் 1008 பொன்!

   “ஒளி மங்கி”-ன்னா, நேரடியான தங்க மினுமினுப்பு இல்லாம, வெளிறிய தங்கம்! இன்னிக்கி White Gold-ன்னு சொல்லுறோமே! அது போல!:)
   (பிகு: எதுக்கும் வீட்டுல, அண்ணி கிட்டக்க ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க:))
   ——————

   நாவலந்தீவு (நாவல் பழம்=ஜம்பு வடமொழியில்)
   அங்கு சிறப்பான பொன் ஆதலால், ஜாம்புனதம்->சம்புனதம்
   “ஜம்பு”கேஸ்வரர் – நாவல் மரத்தடி ஈசன் அல்லவா, திருவானைக்கா-வில்?
   ஜம்பு-சம்புனதம் ஆயிற்று! தமிழில் இதற்கு நாவல்பொன் என்றே பெயர்!

   ஆடகம் = ஆடகச் சீர் மணிக் குன்றே-ன்னு மாணிக்கவாசகர் பாடுவது! (நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து எனும் பதிகம்)
   ஆடகப் பொன்! Yellow Gold

   கிளிச்சிறை = “பசும்”பொன்! Green Gold…வெள்ளி நிறைய கலந்து இருப்பதால், ஒரு வித பச்சை லுக்கு கிடைக்கும்! நடராசர் பஞ்சலோகத் திருமேனிகளைப் பார்த்தாத் தெரியும்!

   So, இராகவன் சொன்ன வண்ணம், சம்புனதம் (நாவற்பொன்) தான் தரத்தில் உசத்தி

 5. இந்தப் பா-வுக்கு என் பின்னூட்டம் இல்லை!

  தனிப் பதிவாகவே தான் போட முடியும்!
  வெள்ளிவீதியார் கதை = http://madhavipanthal.blogspot.com/2011/06/sangatamizhincinema.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s