சொன்னேன்

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவிவைத்தேன்

நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும்கொலொ!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச்செயல் (நாச்சியார் திருமொழி #592)

பாடியவர்: ஆண்டாள்

மணம் நிறைந்த சிறந்த காடுகளைக் கொண்ட திருமாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு அண்டாக்களில் வெண்ணெய் சொன்னேன், நூறு அண்டாக்கள் நிறைய அக்கார அடிசில் சொன்னேன், நாளுக்கு நாள் அழகு கூடிக்கொண்டே போகின்ற எம்பெருமான் இன்றைக்கு நேரில் வந்து இவற்றை ஏற்றுக்கொள்வானா?

துக்கடா

 • இன்று #365paa நூறாவது நாளை முன்னிட்டு என்ன பாடல் வெளியிடலாம் என்று ட்விட்டரில் கேட்டிருந்தேன். நண்பர் @kryes இந்தப் பொருத்தமான ஆண்டாள் பாசுரத்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தார். அவருக்கும் நூறு நாள்களாக இந்தப் பதிவுகளை வாசித்துக் கருத்துச் சொல்லிவந்த நண்பர்களுக்கும் என் நன்றி. குறிப்பாக, நண்பர் @RagavanG அவர்களுக்கு!
 • ஆண்டாள் நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்கார அடிசில் என்று வாயால் சொல்கிறாளேதவிர, நிஜத்தில் சமைத்துச் சமர்ப்பிக்கவில்லை. அவள் வாழ்ந்து பல காலம் சென்றபின் அந்தப் பிரார்த்தனையை நிஜத்தில் நிறைவேற்றிவைத்தவர் ராமானுஜர்
 • ‘அக்காரம்’ என்றால் கரும்பு / சர்க்கரை. ‘அடிசில்’ என்றால் சாதம். ‘அக்கார அடிசில்’ என்பது சர்க்கரைப் பொங்கல்மாதிரியான உணவு. (ஒரே ஒருமுறை @writerpara வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். சரியாக விளக்கம் சொல்லத் தெரியவில்லை. நண்பர்கள் உதவுவார்கள் 🙂 )
 • இணையத்தில் ‘அக்கார அடிசில்’ செய்முறை நிறையக் கிடைக்கிறது. சாம்பிளுக்கு இது –> http://www.arusuvai.com/tamil/node/4503
 • இன்றைய அரிய சொல்: தடா = பெரிய பானை / அண்டா
 • உதாரணங்கள்:
 • 1. தடாமுகை அலங்கல் தன்மேல்… – சூளாமணி
 • 2. தடா உடல் உம்பர்… – கல்லாடம்
100/365
Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், காதல், திருமால், நண்பர் விருப்பம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to சொன்னேன்

 1. nvaanathi says:

  வாழ்த்துகள். 🙂

 2. 100 வது நாள்! 100 வது பா!
  100 இனிய வாழ்த்துக்கள் சொக்கரே:)
  ————–

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தமிழ்ப்பா என்பது நன்முயற்சி!
  தமிழ் இலக்கிய வாசிப்பை எளிமையாக்கி, அனைவரையும் ஈடுபடவைக்கும் ஈடிலா முயற்சி!
  இத்தொண்டு தொடர்ந்து சிறக்க வேண்டும்! முருகா, இதற்கு நீ என்றும் உதவ வேணும்!

 3. “நூறு” என்று வரும் பாட்டு வேணும்-ன்ன உடனே…சட்டுனு…இதான் நினைவுக்கு வந்தது! இனிப்பு கலந்த பாட்டு அல்லவா?:)

  அடுத்தல்=சமைத்தல் (நெருப்பில் பக்குவப்படுத்தல்)
  அடு மேடை=சமையல் மேடை
  அதான் அடிசில்=சமைத்த சோறு
  ——————

  அக்கார அடிசில் வேறு! சர்க்கரைப் பொங்கல் வேறு!

  இதில் தண்ணீரே சேர்க்காமல், அரிசியைப் பாலால் மட்டுமே வேக வைப்பது!
  மேலும், அரிசி மட்டுமே இல்லாது, பயத்தம் பருப்பும் உண்டு!
  முந்திரி, திராட்சையெல்லாம் போடாமல், வெறும் ஏலம் மட்டுமே சிறப்பு!

  சர்க்கரைப் பொங்கல் போல் திடமாக இல்லாமல், அதே சமயம் திரவமாகவும் இல்லாமல், இடைப்பட்ட நிலையில் இருக்கும்!

  அடிசில்(வெந்த சோறு), வெல்லம்,நெய்-ன்னு “கிளறும் படலம்” தான் இதில் வித்தியாசமானது!:)

  பால் மட்டுமே சேர்ப்பதால், அடிப்பிடித்து விடாமல் இருக்க, கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்!:) கை வலிக்கும்:)
  பாலும், நெய்யும் மட்டுமே விட்டு விட்டுக் கிளறுதல் முக்கியம்! Condensed Milk எல்லாம் சுவை வராது! கிளறுங்க! கிளறுங்க! கிளறிக்கிட்டே இருங்க! அதுவும் மண்பானைக் கிளறல்….அந்த வாசனை வரவே வராது!

 4. //நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு//

  இதுல ஆண்டாள், என் முருகனை நோக்கித் தான் வேண்டுதல் வைக்கிறாளோ?:))))
  பின்னே…கீழே அழகருக்கு ஏது நாறு நறும் பொழில்? மேலே முருகனுக்கு அல்லவா பொழில் (பழமுதிர்சோலை) இருக்கு?:)

  என்னவா! வென்று பகை கெடுக்கும் நின் கையில், “வேல் போற்றி”! 🙂

 5. இந்தக் கவிதையில் இன்னோன்னும் கவனிக்க வேண்டியது!
  //ஏறு திருவுடையான்//

  திரு = செல்வம்!
  செல்வம் ஒரே இடத்தில் தங்காது! அதான் செல்+வம்…போய்க் கொண்டே இருக்கும் (cash-flow)…அழியும் தன்மை கொண்டது!

  திரு = அழகு!
  இதுவும் நாளுக்கு நாள், அழியும் தன்மை கொண்டது!
  கவர்ச்சிக் கன்னி-ன்னு், மயங்கியவர்களே, உவர்ச்சிக் கன்னி-ன்னு கேலி செய்யறாங்க கொஞ்ச நாளில்:) புற அழகு!

  ஆனா, கோதையின் காதலன் அப்படி இல்லையாம்!
  ஏறு-திரு
  வினைத்தொகை = ஏறிய திரு, ஏறுகின்ற திரு, ஏறும் திரு!
  இப்படி ஏறிக்கிட்டே இருக்காம்!

  அதுவும் எப்படி?
  இவன் போய் அழகு செய்து கொள்வதில்லை! அழகு வந்து இவனிடம் “ஏறிக்” கொள்கிறது! = ஏறு + திரு!
  —————-

  இன்றும் புறப்பாடு சமயங்களில்….
  “ஏறு திரு”வுடையான், ஆபரணங்களுக்கு அழகு குடுக்கும் பெருமாள், பச்சைத் தமிழின் பின் சென்ற பெருமாள்-ன்னு தான் கூவி……..தூக்கிக்கிட்டு வருவாங்க:)

 6. //மாலிருஞ்சோலை நம்பி//
  = அழகர் கோயில், கள்ளழகர் ஒரு காதல் தெய்வம்!:)
  காதல் சோடிகளைச் சேர்த்து வைக்கறவரு!:) அதான் அவரு கிட்ட இந்த வேண்டுதல் பாட்டு!
  ————-

  அவனிடம் என்னைச் சேர்த்து வை-ன்னு வேண்டிக்கிட்டா!
  அது எப்படிச் சேர முடியும்?
  கண்ணன் எந்தக் காலம்? இவ எந்தக் காலம்?
  சேர்ந்துட்டா-ன்னு சொல்லுறோம், கொண்டாடுறோம்!
  ஆனா அவ கதி என்ன ஆச்சோ………தெரியாது!

  இறைவா…
  அவனிடம் சேர்த்து வை

  சேர்த்து வை-ன்னா, பக்கத்தில் physical ஆக் கூட இல்ல!
  * எதைச் சேர்த்து வைக்கணும்? = உறவு…

  எது என்னிக்கும் அழியாம, “உறவைச் சேர்த்து வை”
  * எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு…உறவேல்…எனக்கு
  * அது இங்கு ஒழிக்க ஒழியாது!
  * அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம், நான் கடவா வண்ணமே நல்கு!
  ————–

  100 தடா வெண்ணெய் + பொங்கல் செஞ்சி வைக்கிறேன் இறைவா-ன்னு “வாய் நேர்ந்து” வேண்டிக்கிட்டா!
  ஆனா நிறைவேற்றினாளா? இல்லை…அதுக்கும் முன்னாடியே போய்ச் சேர்ந்துட்டா!

 7. அவளுக்கு 400-500 வருசம் கழிச்சி…
  இந்தப் பாட்டை…கூட்டமா வாசிச்சிக்கிட்டே வராங்க!
  அப்போ….
  யாருக்கும் தோனாதது…ஒருத்தருக்கு மட்டும் வித்தியாசமாத் தோனுது!

  அய்யய்யோ…”வாய் நேர்ந்து பராவி” வைச்சேன்-ன்னு வேண்டுதல்…நிறைவேறாமலே போயிருச்சே!
  ஆண்டாளே, வேணும் போது வேண்டிக்கிட்டு, காரியம் ஆன பொறவு மறந்துட்டா-ன்னுல்ல பேச்சு வரும்?

  அவ “வாய் நேர்ந்து” வேண்டிக்கிட்டதை, நிறைவேற்றி வைப்போம்-ன்னு “அசட்டுத்தனமா” தோனுது, அவருக்கு!

  ஒரு கவிதையை…..வாசித்தால்….வாசிச்சிட்டு போய் விடுவது வழக்கம்! அதிக பட்சமா, ஞாபகம் வச்சிருந்து, மேற்கோள் வேணும்-ன்னாக் காட்டுவோம்!
  ஆனா, 400 வருசத்துக்கு முன்னால எழுதுன கவிதையில் வரும் வாக்கை நிறைவேற்றி வைப்போமா?

  கவிதையை “வாசித்தால்” வராதது
  கவிதையைச் “சுவாசித்தால்” வரும்!
  தமிழைச் “சுவாசித்தால்” வரும்!

 8. இது ஒரு வினைத் தொகைப் பாட்டும் கூட…

  * நாறு நறும் = நாறிய, நாறுகின்ற, நாறும்
  * நூறு தடா = நூறிய, நூறுகின்ற, நூறும்
  * நூறு தடா
  * ஏறு திரு = ஏறிய, ஏறுகின்ற, ஏறும்

  நாறு, ஏறு சரி தான்! நூறு எப்படி-ன்னு பாக்குறீங்களா?:)
  நூறு = 100 எண்ணிக்கையில் சரி தான்!
  ஆனா நூறுதல்-ன்னா, கிண்டுதல், கிளறல், அடித்தல் என்ற பொருளும் உண்டு

  இப்போ படிங்க….
  நூறு தடா அக்கார அடிசில் = நூறிய, நூறுகின்ற, நூறும்…கிளறிக்கிட்டே இருக்கும் தடா(பானையில்) அக்கார அடிசில்:)

  365பாவும், அவ்வண்ணமே, நூறிய, நூறுகின்ற, நூறும்-ன்னு நூறு நூறா…நூறிக்கிட்டே இருக்க, முருகவன் அருள் செய்யட்டும்!

 9. GiRa says:

  ஒரு நூறு வேள்வி உரவோன்
  தனக்குப் பெருவிழா அறைந்ததும் 🙂

  மணிமேகலை சொல்லுது. 

  இந்திரன் ஆகனும்னா நூறு வேள்விகள் செய்யனும். இங்க நீங்க செஞ்சதும் நூறு வேள்விகள்தான்.

  ஆகையினால 365 “பா”வேந்திரன் என்று அழைக்கப்படுவீராக 🙂

  வாழ்த்துகள் பல.

  எனக்கெல்லாம் நன்றி சொல்லக்கூடாது. வேள்விக்குத்தான் நெய் நன்றி சொல்லனும்.

  வாழ்க. வளர்க.

  • Amen! அப்படியே ஆகட்டும்!
   ராஜேந்திர சோழன்
   பாவேந்திர சொக்கன்
   ரைமிங்கா வருது! 🙂

   பாவேந்திர சொக்கன் வாழ்க, வளர்க!

 10. Samudra says:

  வாழ்த்துகள். 🙂

 11. amas32 says:

  இணையத்தின் மூலம் எளிய முறையில் என்னைப் போன்றவர்களும் படித்து மகிழ நீங்கள் இயற்றும் தினம் ஒரு பா தொடர பல்லாண்டு பாடுகிறேன்.மும்மூர்த்திகளான தாங்கள், கே ஆர் எஸ், ராகவன் ஆகிய மூவரின் தமிழ் பணி வாழ்க, வளர்க 🙂
  amas32

 12. Srinivasan Uppili says:

  ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் (தாளிக்கும் ஓசை) ‘அக்கார அடிசில்’ செய்முறை…

  http://mykitchenpitch.wordpress.com/2007/01/11/akkaara-adisil-maargazi-27/

 13. KRS,

  \\ஏறு திருவுடையான்\\

  மார்பில் ஏறி அமர்ந்திருக்கும் திருவை (மகாலக்ஷ்மி) உடையவன் என்பதும் பொருத்தமாக இருக்கும். வினைத்தொகையாகப் பார்க்கின் முக்காலும் நீங்காத திரு.

  எங்கே சுத்தியும் ரங்கனை என்பது போல மாலிருஞ்சோலையுடன் முருகனை முடிச்சுப் போடுகிறீர்கள்:-)))

  சொக்கன்,

  சொன்னேன், சொன்னேன் என்று சொல்வதில் வெண்ணெய், அக்காரவடிசிலின் சுவை முழுதும் கிட்டவில்லை. மாலுக்கு இதைப் படிக்கிறாள் (of course, symbolically, வாய் நேர்ந்து) என்பது இன்னும் நன்றாக வரவேண்டும்.

  \\அக்கார அடிசில்\\

  அக்கார வடிசில் என்று எழுதுவது இன்னமும் பொருத்தமாக இருக்கும். படிக்கும்போதும் பாடும்போதும் எளிது.

  நூறுக்கு வாழ்த்துக்கள்!

  ஆயிரத்துக்குப் பொருத்தமான பாடலை இப்போதே சொல்லி விடுகிறேன்.

  வாரணமாயிரம்…

 14. ராதாகிருஷ்ணன் says:

  நேசித்தேன், நன்றி. மிகவும் மகிழ்ச்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s