ஊஞ்சல் நாடகம்

கயமலர் உண்கண்ணாய்! காணாய்; ஒருவன்

வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட

கண்ணியன், வில்லன் வரும், என்னை நோக்குபு,

முன்னத்தில் காட்டுதல் அல்லது, தான் உற்ற

நோய் உரைக்கல்லான், பெயரும்மன் பன்னாளும்

பாயல் பெறேன், படர்கூர்ந்து, அவன்வயின்

சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்

கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின்,

பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின், இன்னதூஉம்

காணான், கழிதலும் உண்டு என்று, ஒருநாள் என்

தோள் நெகிழ்புற்ற துயரால் துணிதந்து ஓர்

நாண் இன்மை செய்தேன்; நறுநுதால்! ஏனல்

இனக்கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்துஅயல்

ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,

‘ஐய! சிறிது என்னை ஊக்கி’ எனக் கூறத்

‘தையால்! நன்று’ என்று அவன் ஊக்க, கைநெகிழ்பு,

பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில்! வாயாச்செத்து

ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்

மெய் அறியா தேன்போல் கிடந்தேன்மன், ஆயிடை

மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், ஒய்யென

‘ஒண்குழாய்! செல்க’ எனக்கூறி விடும்பண்பின்

அங்கண் உடையன் அவன்.

நூல்: கலித்தொகை (குறிஞ்சிக் கலி #1)

பாடியவர்: கபிலர்

சூழல்: குறிஞ்சித்திணை – தோழியிடம் தன்னுடைய காதல் கதையை விவரிக்கிறாள் ஒருத்தி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

கருநீல மலர்களைப்போல மை தீட்டிய கண்களை உடைய என் தோழி, இந்தக் கதையைக் கேள்!

ஓர் இளைஞன், தலையில் மாலை அணிந்திருந்தான், தோளில் ஒரு வில்லை வைத்திருந்தான், வேட்டைக்காக விலங்குகளின் காலடிச் சுவடுகளைத் தேடுகிறவன்போல் இங்கே வந்தான். என்னைப் பார்த்தான். ஏதோ பேச விரும்புகிறவன்போல் வாயைத் திறந்தான். ஆனால் பேசமுடியவில்லை. வருத்தத்தில் மூழ்கினான்.

அட, அந்த வருத்தத்தையாவது வெளிப்படையாகச் சொல்லலாம்தானே? அவன் அதையும் செய்வதில்லை, சோகத்தையெல்லாம் முகத்தில்மட்டும் காண்பித்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டான்.

அவனைப் பார்க்கையில் எனக்கும் வருத்தமாக இருக்கிறது. ஏன்? முன்பின் தெரியாத ஒருவனுக்காக நான் ஏன் துயரப்படவேண்டும்? உறங்காமல் தவிக்கவேண்டும்? புரியவில்லை!

இந்தக் கதை நடப்பது ஒரு நாளோ, இருநாளோ அல்ல, பல நாள்களாக இதே நாடகம்தான்.

இத்தனை அவஸ்தை எதற்காக? அந்தப் பயல் என்முன்னே வந்து தன்னுடைய பிரச்னையைச் சொல்லவேண்டியதுதானே? ’அடேய், உனக்காக நான் வாடிக்கொண்டிருக்கிறேன்’ என்று நானும் வாயைத் திறந்து சொல்லமுடியவில்லை, பெண்ணாகப் பிறந்துவிட்டேனே!

இப்போது என்ன செய்வது? அவன்மீது நான் கொண்ட காதல் அவனுக்குத் தெரியாமலே போய்விடுமோ? எனக்குப் பயம். அதனால், வெட்கம் கெட்ட ஒரு வேலையைச் செய்துவிட்டேன்!

ஒருநாள், நாம் கிளிகளை விரட்டிக் காவல் காக்கும் தினைவயலுக்கு அவன் வந்தான். அப்போது நான் அங்கே ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தேன். அவனைப் பார்த்ததும் ‘ஐயா, இந்த ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டிவிடுங்களேன்’ என்று கேட்டேன்.

‘நல்லது பெண்ணே!’ என்றான் அவன். என்னுடைய ஊஞ்சலை ஆட்டத் தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து, நான் கை தவறிவிட்டதுபோல் நடித்தேன். பொய்யாக மயங்கிக் கீழே விழுந்தேன். அவன் மார்பில் கிடந்தேன்.

பாவம் அவன்! நான் நிஜமாகவே விழுந்துவிட்டேன் என்று நினைத்துப் பதறினான். என்னை அள்ளி அணைத்துக்கொண்டான்.

அப்போதாவது நான் நடிப்பை நிறுத்தியிருக்கவேண்டும். உண்மையைச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அப்படிச் செய்தால் அவன் என்ன சொல்வான் தெரியுமா? ‘உயர்ந்த குழை அணிந்தவளே, நீ உன்னுடைய வீட்டுக்குப் போ!’ என்று சொல்லி என்னை அனுப்பிவைத்துவிடுவான். அதுதான் அவனுடைய பண்பு.

ஆகவே, நான் என்னுடைய நாடகத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து வெகுநேரம் அவனுடைய மார்பிலேயே மயங்கிக் கிடந்தேன்.

துக்கடா

 • என்ன? ஜாலியான ரொமான்ஸ் குறும்படம் பார்த்ததுபோல் இருந்ததா? 😉 கலித்தொகை முழுவதும் இதுபோன்ற அருமையான காதல் காட்சிகள்தான், அதுவும் திரைக்கதை, வசனத்துடன்! நம் சினிமா இயக்குனர்கள் எப்படி விட்டுவைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை 😉
 • இந்தக் கதையில் ’ஊக்க’ என்ற வினைச்சொல் மிக அழகாகப் (சிறிது ஊக்கி / அவனும் ஊக்க) பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இங்கே ஊக்குதல் என்றால் ஊஞ்சலை ஆட்டிவிடுதல் என்று அர்த்தம்
 • இன்றைய அரிய சொல்: ஒய்யென – விரைவாக
 • உதாரணங்கள்:
 • 1. பைதலங் குழவி தழீஇ ஒய்யென – குறுந்தொகை
 • 2. ஒய்யென ஓடினர் உற்றிடுகின்றார் – கந்தபுராணம்
096/365
This entry was posted in அகம், கதை கேளு கதை கேளு, கபிலர், கலித்தொகை, காதல், குறிஞ்சி, தோழி, நாடகம். Bookmark the permalink.

7 Responses to ஊஞ்சல் நாடகம்

 1. சிற்றஞ் சிறுகாலை வணக்கம்!:)
  ஆம்ஸ்டர்டாமில், சீக்கிரமே முழிப்பு வந்துருச்சி!

  இன்று தமிழ் அறிஞர் டாக்டர் மு.வ அவர்களின் நினைவு நாள்!
  சங்க இலக்கியத்தை எளிமையாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு முவ-க்கு உண்டு! பல நூல் பதிப்பாளர்!

  அவர் நினைவாக, இந்தக் கலிப்பாட்டைப் படிப்பதில் பேருவகை கொள்கிறேன்!:)
  ————-

  ஊஞ்சல் பாட்டு அருமை சொக்கநாதரே!
  காதலில் எம்புட்டு “பொய்” பாருங்க, காதலிக்கு! I like it 🙂

  இந்த “ஒய்” நினைவிருக்கா?
  நீங்கள் பழனிக்குச் சென்றிருந்த போது, ட்விட்டரில் என் முருகன் நல்லா இருக்கானா-ன்னு கேட்க, நீங்களும் “ஜம்”-ன்னு இருக்கான்-ன்னு சொல்ல…
  அது என்ன “ஜம்”? தமிழ்க் கடவுளான அவன் “ஒய்”யாரமா இருக்கான்-ன்னு என் ஆசைக்குச் சொல்லக்கூடாதா-ன்னு கேட்க… :))

  ஒய்-ஒய்யாரம் பற்றி…முகுந்த் போன்ற தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் விவாதித்து மகிழ்ந்தார்கள்!
  என் தம்பி என்று அறியப்பட்ட வெட்டிப்பயல் பாலாஜி, தமிழ்க் கடவுள் என்று நான் சொன்னமைக்காக, மிகுந்த சினம் கொண்ட காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன:))

  இப்போ அதே “ஒய்” ஒய்யாரமா வந்திருக்கு 365பாவில் 🙂

 2. கலித்தொகையில், இந்தப் பாட்டு ஒரு “நவரசப்” பாடல்! ஒன்பது ரசங்களும் ஒரே பாட்டில் இருக்கும் பாட்டு!

  இன்னும் நுட்பமாச் சொல்லப் போனா…
  தமிழில் எட்டு மெய்ப்பாடுகள் தான்! (சாந்தி என்னும் ஒன்பதாம் ரசம் இல்லை:)

  1 நகையே 2 அழுகை 3 இளிவரல் 4 மருட்கை
  5 அச்சம் 6 பெருமிதம் 7 வெகுளி 8 உவகை…என்று
  அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப

  பாட்டைப் பாருங்க…
  ஒவ்வொன்னா எடுத்துக் குடுங்க பார்ப்போம்! 🙂

 3. Sabari GS says:

  படிக்க படிக்க கண் முன்னே காட்சிகள் விரிகிறது…
  பொய்கள் மொழியாமல் காதல் இல்லை…
  பொய்கள் மொழிந்தாலும் காதல் பொய்யாவது இல்லை.

 4. ஊக்குதல்…= உயரமாக இட்டுச் செல்லுதல்!
  Focus high, motivate…

  The one kuRal that i used to tell in my credit risk presentation..
  ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
  “ஊக்கார்” அறிவுடை யார்
  * ஊக்கார் = உயர்ந்த இடத்தில் வைக்க மாட்டார்! Will not focus!
  * ஊக்குவித்தார்=Motivate to achieve greater heights!

  என்ன அழகான தமிழ்ச் சொல் பாருங்க!
  * ஊஞ்சலை ஊக்கினான்!
  ஊஞ்சல் ஆட்டி விடும் போது என்ன பண்ணுவோம்? = மொத முறை, ஊஞ்சலை உசரமாத் தள்ளுவோம்!
  அந்த உசரத்துக்கு, அது பின்னாடித் தானே வரும்! அப்பறம் வந்து வந்து போகும்!

  அதான் “ஊக்குதல்”! அதையே Motivation-க்கும் வைத்த தமிழ் நுட்பம் தான் எம்புட்டு அழகு!
  —————–

  ஊக்குதல் = சங்கத் தமிழ்ச் சொல்! ஆனா தெலுங்கிலும் இருக்கு!:)

  ஒய்யால ஊக வய்யா – தியாகராஜ கீர்த்தனை
  அதே ஊஞ்சல் பாட்டு தான்!
  ஓய்யால=ஊஞ்சல்! ஊக வய்யா=ஊக்கி ஆடும் ஐயா!

  இது போல பல தூய தமிழ்ச் சொற்கள், தெலுங்கில் புழங்கும்!
  நகுதல் = ஏமி “நவ்வுதாரு”?
  இல்லம் = இல்லு
  தந்தை = தன்ட்ரி
  ,,,,ன்னு நிறைய 🙂

 5. //கண்ணியன், வில்லன் வரும்//
  hero-வை villain ஆக்கிட்டா! இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான்:) (@nvaanathi gonna fight with me:)

  //கயமலர் உண்கண்ணாய்! காணாய்//
  இவ சொல்லுறா, அவ “கேட்கத்” தானே முடியும்? “காணாய்”-ன்னா என்ன அர்த்தம்?
  * காணாய்=காணாதே-ங்கிற பொருளும் தமிழில் உண்டு!
  * காணாய்=காண்பாய் என்ற பொருளும் உண்டு!
  காதலுக்கு வசதியானது தமிழ் மொழியே! 🙂
  ————————-

  //பாயல் பெறேன்//
  = பாயில் தூங்கும் தூக்கம் போச்சு! “பாய்” எப்படி வந்துச்சி-ன்னு இப்போ தெரியுதா?:)

  //தையல்//
  தை = ஒட்டி அழகு செய்! துணியை வெட்டி ஒட்டி அழகு செய்வதால் = தையல்!
  வயசுக்கு வந்த பொண்ணுக்குத் தான் முதன் முதலில், “அளவு” எடுத்து, “தைக்கும்” பழக்கம்! :)) அதான்!
  Dress-ஐ வச்சி, அந்தப் பருவத்தின் பொண்ணுக்குப் பேரு, தமிழில்!
  ———————-

  //”ஒய்”யென ஆங்கே எடுத்தனன்//

  ஒய் என்பது ஒலிக் குறிப்பு! விர்-ன்னு பறந்தாள்-ன்னு சொல்றோம்-ல்ல? அதே போல!
  ஒய் = லாவகமாக, அழகாக, stylish, “ஜம்”-ன்னு :))
  “ஒய்”யாரமா முருகன் மலை மேல நிக்குறான்! 🙂

 6. கலித் தொகை = மொத்தம் 5 கவிஞர்கள் எழுதியது!
  அதுல குறிஞ்சித் திணை = கபிலர்!

  கலி-ன்னாலே ஒலி-ன்னு பொருள்!
  இசையோடு பாடக் கூடிய சங்கத் தமிழ் = கலித் தொகை + பரி-பாடல்!
  தொல்காப்பியத்துக்கு முன்னரே இந்த வகைப் பாடல்கள் இருந்தன என்பதைத் தொல்காப்பியமே சொல்கிறது!

  பாட்டைப் பாருங்க…
  துவக்கத்தில் படபட-ன்னு ஓசை விரவி வரும்!
  ஆனா வெண்பா போல மூனே சீரால் முடிஞ்சிரும்!
  கலித் தாழிசை-ன்னு சொல்லுவாங்க!

  “கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு”, அகம்-புறம் என்று
  இத்திறத்த எட்டுத் தொகை
  —————

  இப்பேர்ப்பட்ட, “மிகத் தொன்மையான” கலித் தொகையில் தான்….தமிழ்க் கடவுளான திருமால் பற்றிக் குறிப்புகள் பல வருகின்றன!
  மாயோன், வெறுமனே திணை அடையாளமாய் நில்லாது, காதலர்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தான்!

  பெண்ணே! என் காதலை இன்னுமா நம்பலை நீ? இதோ “தொல் குடி”க்குத் தெய்வமாய் நிக்கும் இந்தத் திருமால் மேல் சூள் (சத்தியம்) செஞ்சி, என் காதலைச் சொல்லுறேன், ஏத்துக்கோ – என்ற Proposal எல்லாம் காணலாம்:)

  இப்படி முருகனும் திருமாலுமே…கலித்தொகை முழுதும் விரவி வருவார்கள்!
  பண்டைத் தமிழில் தமிழ்க்கடவுள் = ஒவ்வொரு இலக்கியமாக, எளிமையான வாசிப்பு இங்கே = http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html

 7. நியூ யார்க் வந்தாச்:)
  * ஊஞ்சலை ஊக்கி, பயம், கை தவறல்,
  * பொய்யாக, ஆனால் மெய்யாக,
  * மேல் விழுந்து, மயக்கத்தில்….
  இப்படியெல்லாம் விமானத்தில் சுகமான கனவுகள்!:)))

  //மெய் அறியா தேன்போல் கிடந்தேன்
  மெய் அறிந்து ஏற்று எழுவேன்…//

  மெய்(உடம்பு), மெய்(பொய்) என்று என்னமா விளையாட்டு பாருங்க!:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s