மீனாவேன், படியாவேன்…

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வான் ஆளும் செல்வமும் மண் அரசும் நான்வேண்டேன்,

தேன் ஆர் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே!

*

செடி ஆய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,

நெடியோனே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல்

பாடியவர்: குலசேகர ஆழ்வார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

வான் உலகத்தையும் மண் உலகத்தையும் ஆட்சி செய்கிற அதிகாரமும் செல்வமும் தேவலோகத்து அழகிகளெல்லாம் என்னைச் சூழ்ந்துகொள்கிற சொகுசும் கிடைத்தால்கூட, நான் அதையெல்லாம் விரும்பமாட்டேன். தேன் நிறைந்த பூஞ்சோலைகளைக் கொண்ட திருவேங்கடத்தின் (திருப்பதி) நீர்ச்சுனை ஒன்றில் மீனாகப் பிறந்து நீந்திக்கொண்டிருந்தால், எனக்கு அதுவே போதும்.

*

துன்பம் தரும் வினைகளையெல்லாம் தீர்க்கும் திருமாலே, நெடியவனே, வேங்கடவா,

உன் கோயிலில் பக்தர்களும் தேவர்களும் விண்ணுலகப் பெண்களும் நடமாடுகின்ற வாசல்படியாக நான் மாறிக் கிடப்பேன், உன் பவளவாயைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்!

துக்கடா

 • இன்றைய பாடலை விரும்பிக் கேட்ட நண்பர் கிரி ராமசுப்ரமணியன் (http://www.sasariri.com/ & http://www.twitter.com/rsgiri ) அவர் இந்தப் பாடல்களின் இசை வடிவங்களையும் தந்துள்ளார்:
 • 1. அவரே பாடியது: http://paadugiren.blogspot.com/2011/10/httptwitter.html
 • 2. ரஞ்சனி – காயத்ரி பாடியது: http://www.youtube.com/watch?v=XabhZdhB3ZU
 • டி. எம். எஸ். பாடிய ’மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ தனிப்பாடல் (எழுதியது யார்? வாலியோ?) ஞாபகம் இருக்கிறதா? அதற்கு முன்னோடி குலசேகர ஆழ்வாரின் இந்தப் பாடலாக இருக்கலாம்
 • இன்றைய வார்த்தை: செடி = துன்பம்
 • உதாரணங்கள்:
 • 1. செடி தீர்த்து அருளும் திருத்தணிகைத் தேவே – திருவருட்பா
 • 2. செடியார் வினைகெடச் சேர்வரை – திருமந்திரம்
094/365
Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நண்பர் விருப்பம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி. Bookmark the permalink.

10 Responses to மீனாவேன், படியாவேன்…

 1. nvaanathi says:

  எங்கேயோ கேட்ட/படித்த ஞாபகம். ஆனா “மனப்பாடப்பா” இல்லை. ஒரு வேளை அந்த டி.எம்.எஸ் பாட்டுதானோ? 😉

 2. இன்று தான் ஒவ்வொரு பழைய பா – பதிவுகளாக வாசித்து முடித்தேன்:) மழை…எங்கும் வெளியே போக முடியலை! நாளைக்கு Flight புடிக்கணும்:)

  “மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்” பாட்டு எழுதியது = தமிழ்நம்பி!
  ஆழ்வார் பாசுரமே தூண்டுகோலாக, முருகன் மீது பாடிய பாட்டு என்று அவரே குறிப்பிட்டும் உள்ளார்!

  மண் ஆனாலும் திருச்செந்தூரில்…
  மணி முடி ஓராறும்…
  எனக்கும் இடம் உண்டு…
  போன்ற பல அழகான முருகன் பாடல்களை எழுதியவர்! ஆனால் சினிமாவுக்கு எழுதாதவர்!

  சினிமாவில் வராததால், இது போன்ற பாடல் வரிகளை யார் எழுதினார் என்று அதிகம் தெரிவதில்லை! பாடும் TMS மட்டுமே நம் மனதில் தங்குகிறார்!
  அதனால் என்ன?
  பாட்டின் வரிகளில் முருகன் தங்குகிறான்! முருகன் மனத்தில் முகமறியாத் தமிழ்நம்பி போன்றவர்கள் தங்குகிறார்கள்!

 3. இந்த ஆழ்வார் பாசுரத்தை கேட்ட கிரி-க்கும், இட்ட சொக்கனுக்கும் மிக்க நன்றி!
  பா+சுரம்-ன்னாலே இசைப்பாட்டு! இசையாதவர்களையும் இசையால் இசைவிக்கும் எசப்பாட்டு!

  இது மிகவும் சிறப்பான பாசுரம்! வாசற்படி பாசுரம்!
  = குலசேகரன் படி!
  ஒவ்வொரு ஆலயத்திலும் இறைவனின் முன்பு, இந்தப் பாசுரத்தின் “படி” தான்!

  பாடியது என்னவோ திருவேங்கடமுடையான் மேல் என்றாலும் கூட…
  எல்லா ஆலயங்களிலும், கருவறையில் இருக்கும் அந்த வாசல்படிக்கு…”குலசேகரன் படி” என்று தான் பெயர்!

  திருவேங்கடத்தில் எம்பெருமானுக்குச் செய்யப்படும் கர்ப்பூர தீபம், அதே தட்டில், இந்தக் குலசேகரன் படிக்கும் செய்யப்பட்டு, பின்பே வெளியில் வரும்!

 4. இத்தனைக்கும் இதைப் பாடிய குலசேகரன் ஒரு பெரும் மன்னர்! = சேர அரசர்!
  சேரன் செங்குட்டுவன் மரபிலே தோன்றியவர்! = கொல்லி காவலன், சேரலர் கோன்!

  இவரின் மகன் தான், பின்னாளில் “சேரமான் பெருமாள் நாயனார்” என்று புகழ் பெற்ற நாயன்மார்!
  இப்படி தகப்பனும், பிள்ளையுமாய் ஆழ்வார்-நாயன்மாராய் இருப்பது, வேறெங்கும் காண முடியாத ஒரு அதிசயம்!

  பன்னிரு ஆழ்வார்களில், “பெருமாள்” என்று இறைவனின் அடைமொழி இவருக்கு மட்டுமே சொந்தம்!
  இவர் பாடியதும் “பெருமாள் திருமொழி” என்றே போற்றப்படுகிறது!

  இராகவன் பால் மிக்க காதல் கொண்ட ஆழ்வார்!
  எப்படி பெரியாழ்வார் கண்ணனைத் தாலாட்டினாரோ…அதே போல் இவர் இராகவனைத் தாலாட்டியவர்!
  இசையில் மிகுந்த நுணுக்கம் கொண்டவர்! இவர் பாசுரங்கள் பல, வெவ்வேறு இசை வடிவங்களாக வந்துள்ளன!

 5. //மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே!//

  எதுக்கு மீனாய்ப் பொறக்க ஆசைப்படுறாரு? அது அல்பாயுசு ஆச்சே! 🙂
  வானாளும் விண்ணரசு வேணாமாம்! இவர் சேர நாட்டு மண்ணரசும் வேணாமாம்! Why மீன்? What does he mean?:)

  இதுக்கு முந்தின பாசுரம் = கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே! (கொக்கு)
  ————-

  ஆழ்வார், முதல் முதலாக, திருமலைக்கு வருகிறார்!
  வீங்கு நீர் அருவி வேங்கட மாமலை
  பகை அணங்கு ஆழி – பால் வெண் சங்கு
  தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி…
  என்னும் சிலப்பதிகார இளங்கோ அடிகள் வாக்கு நினைவுக்கு வருது! அத்தனை எழில் கொஞ்சும் இயற்கை!

  கொக்குக் கூட்டம் மலையின் மேல் பறப்பதைப் பார்க்கிறார்!
  ஆகா…நாமும் இதே போல்…இங்கேயே ஜாலியாப் பறந்து திரிய மாட்டோமா என்ற ஆசை வருகிறது அவருக்கு!
  = கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!

  ஆனா…அடுத்த நிமிடமே ஆசை மாறுகிறது ஆழ்வாருக்கு!:))
  ஏன்?
  கொக்கு, பறந்து விடும்!
  அற்ற நீர் குளத்து, அறு நீர்ப் பறவை-ன்னு சும்மாவாச் சொன்னாங்க!

  தண்ணி இருக்கோ, இல்லையோ…அதை விட்டு அகலாத உயிர் எது? = மீன்!
  அவன் கருணை/அன்பு, என் மேல் இருக்கோ, இல்லையோ…அவனை விட்டு அகலாத உயிர் எது?=நான்!

  * வாழ்வோ, சாவோ…= மீனுக்கு ரெண்டுமே அந்தக் குளத்தில் தான்!
  * எனக்கு வாழ்வோ, சாவோ… = எல்லாமே அவன் தான்!!!

  அதான் //மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே!//

 6. * முதலில்…கோனேரி வாழும் கொக்காய் பிறப்பேனே
  * அதன் பின்பு மீனாய்ப் பிறப்பேனே!

  மீனுக்கு அல்பாயுசு! நான் அவனைப் பாத்துக்கிட்டே இருக்கணும்! என்ன செய்வது?

  * குளக் கரையில் செண்பகப் பூவாய் பிறப்பேனே = அவனுக்கு மாலையாச் சூட்டுவாங்க! ஆனா வாடிய பின் தூக்கி வீசிருவாங்களே!

  * ஆறாய்ப் பாய்வேனே! = ஆனா, ஆறு வத்திப் போகும் வாய்ப்புண்டே!

  * தம்பகமாய் ஆவேனே = வாடாத முள்ளுச் செடியாகவாச்சும் வேங்கடத்தில் இருக்கேன்! ஆனா நிலத்தைப் பெருசாக்கும் போது வெட்டி வீழ்த்தி விட்டால்..?

  என்ன தான் பண்ணுவது?
  என்ன ஆனா, அவனை விட்டு நீங்காம இருக்கலாம்?
  ஆங்….கல்லாய்…வாசல்படியாய் மாறிட்டா?….
  கல்லானாலும், உன் வாசல்படியில் கல்லாவேன்!

 7. * எத்தனை திரை போட்டாலும்…அந்த வாசல்படி அவனையே தான் பாத்துக்கிட்டு இருக்கும்!

  * நல்ல நாள், கெட்ட நாள், தீட்டு-ன்னு சிலர் கோயில் கதவை அடைச்சாலும், வாசப்படியின் பார்வை அவனை விட்டு நீங்காது!

  * செல்வாக்கு மிக்கவர்கள் ஆலயத்தில் வந்தால், சாதாரண பக்தர்களை ஒதுக்குவது போல், அந்த வாசப்படியை ஒதுக்கி விட முடியாது!

  இப்படி,
  எப்பவும் என் முருகனைப் பார்த்துக் கொண்டே….
  திருச்செந்தூரில் வாசல் படியாக நான் மாறி விட மாட்டேனா?
  என் ரொம்ப நாள் ஆசை = http://madhavipanthal.blogspot.com/2011/08/chendurpadiyaaikidanthu.html

 8. அவனை அருகே போய் மாலையாய் அணைந்து கொள்ள முடியா விட்டாலும்…
  அவனையே கண்ணுக்குள் எப்போதும் நிறைத்துக் கொள்ளும் வாழ்வையே = வாசல் படியையே எனக்குக் கொடு!

  முருகா…
  ஆழ்வாருக்கு = திருவேங்கடப் படி!
  எனக்கு = உன் திருச்செந்தூர்ப் படி!!

 9. Alex Pandian says:

  /மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்/ எழுதியவர்: தமிழ்நம்பி as per http://classroom2007.blogspot.com/2010/05/blog-post_22.html

  இதே பாடல் கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடிப்பில் ‘சிம்ஹாத்ரி சிம்ஹா’ படத்தில் (2002) sung by SPB
  Good localised lyrics for Kannada land http://www.youtube.com/watch?v=BvEtFrrBMkw

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s