புலன் அறத் துடைத்த…

நிலைநீர் மொக்குளின் விளைவாய்த் தோன்றி

வான் தவழ் உடல் கரைமதி எனச் சுருங்கி

புல்லர் வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும்

சிறு உணவு இன்பம், திருந்தா வாழ்க்கையைக்

கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்துப்

புலன் அறத் துடைத்த நலன் உறு கேள்வியர்.

நூல்: கல்லாடம் (#80 முதல் 6 வரிகள்மட்டும்)

பாடியவர்: கல்லாடனார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

இந்த வாழ்க்கை, அசையாமல் நிலையாக நிற்கும் நீரில் தோன்றுகிற குமிழைப் போன்றது, நம்முடைய பழைய வினைகளின் பலனாக இங்கே பிறக்கிறோம், வானத்தில் தவழ்ந்து செல்லும் கறை பட்ட நிலாவைப்போல் வளர்கிறோம், தேய்கிறோம், சின்னச் சின்ன ஆசைகளில் புத்தியைச் செலுத்துகிறோம், நம்முடைய தவறுகளைத் திருத்திக்கொள்ளாமலேயே தொடர்ந்து வாழ்கிறோம், கீழ்த்தரமான மக்கள் சொல்லுகின்ற சூளுரையைப்போல் சட்டென்று அழிந்துவிடுகிறோம்.

இதையெல்லாம் பார்க்கும்போது, சாப்பிட்ட சோற்றை மீண்டும் வெளியே கக்கி அதைப் பார்ப்பதுபோல் ஓர் அருவருப்பு வருகிறது. நல்லவர்கள், நன்கு படித்து அறிந்தவர்கள் இந்த அற்ப வாழ்க்கையை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல், ஐந்து புலன்களையும் அடக்கி ஆட்சி செய்யவே விரும்புவார்கள்.

துக்கடா

 • நவராத்திரி நவரசப் பாடல் வரிசையில் இது ஆறாவது, அருவருப்பு!
 • இந்தப் பாடலை ‘தேடிச் சோறு நிதம் தின்று’ எனத் தொடங்கும் பாரதியார் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்
 • இன்றுமுதல், தினசரிப் பாடலில் இருந்து ஒரு Rare Wordஐக் குறிப்பிட்டுப் பொருள் தர உத்தேசம். இன்றைய வார்த்தை:
 • மொக்குள் = நீர்க் குமிழ் அல்லது மொட்டு
 • உதாரணங்கள்:
 • 1. மாரி மொக்குள் (நீர்க்குமிழ்) புடைக்கும் – ஐங்குறுநூறு
 • 2. முகை மொக்குள் (மொட்டு) உள்ளது நாற்றம் – திருக்குறள்
090/365
Advertisements
This entry was posted in கல்லாடம், தத்துவம், நவரசங்கள். Bookmark the permalink.

3 Responses to புலன் அறத் துடைத்த…

 1. GiRa says:

  சொல்ல வந்ததைச் சுருக்கமாச் சொல்றது எப்படீன்னு இந்தப் பாட்டிலிருந்து தெரிஞ்சிக்கனும். நிலைநீர் மொக்குள். எல்லாம் அதுக்குள்ள முடிஞ்சு போச்சு.

  வழக்கமா நீர்நிலைன்னு சொல்வாங்க. இங்க நிலைநீர்ன்னு சொல்லீருக்காங்க. இது விற்பூட்டுப் பொருள்கோளா? இல்லைன்னும் தோணுது.

 2. GiRa says:

  பாடலை எழுதியது யார்னு சொல்லலையே. 🙂 கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே என்ற பழமொழியை நினச்சு விட்டுட்டீங்களா? 🙂

  மொத்தம் மூன்று கல்லாடர்கள் இருந்திருக்காங்கன்னு உ.வே.சா சொல்றாரு.

 3. GiRa says:

  இன்னொன்னும் சொல்லியாகனும்.

  வான் தவழ் உடல் கரைமதி

  என்ன அழகான உவமை. உடல் கரையுறதக் கூட அழகுன்னு சொல்ல வைக்குதேய்யா இந்தத் தமிழ்.

  இந்த வரியைப் படிக்கும் பொழுது கவியரசர் கண்ணதாசன் எழுதிய “கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா” என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

  கல்லாடம் என்னும் ஊரிலுள்ள சிவனைக் குறித்து எழுதப்பட்ட நூல் கல்லாடம். அந்த ஊர்க் கோயிலில் இருக்கும் சிவனுக்குக் கல்லாடர் என்று பெயர். இது திருமுறைகளில் தொகுக்கப்படவில்லை. ஆகையால் அதற்குப் பின்னால் வந்திருக்கலாம். ஒரு ஊகந்தான். 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s