வாகை சூடியவன்

பொன்வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின்

மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரல் சீறியாழ்

நன்மை நிறைந்த நயவரு பாண!

சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்

வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே;

வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை

சாந்தார் அகலம் உளம் கழிந்தன்றே;

உளம் கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்

ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்

புன்தலை மடப்பிடி நாணக்

குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே.

நூல்: புறநானூறு (#308)

பாடியவர்: கோவூர் கிழார்

சூழல்: வாகைத் திணை – மூதின் முல்லைத் துறை (விளக்கம் ‘துக்கடா’வில்)

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

சிறிய யாழ், அதில் தங்கக் கம்பியைப் போல் முறுக்கப்பட்ட நரம்பு, மின்னல் போன்ற தோல், ’மிஞிறு’ என்கிற வண்டின் குரலைப்போன்ற ஒலி. இப்படிப்பட்ட யாழை வாசிக்கின்ற நல்லவனே, பாணனே,

இந்தச் சிறந்த ஊரின் மன்னன், என்னுடைய காதலன், அவனை எதிர்த்து இன்னொருவன் போரிட வந்தான். இவன் தன்னுடைய கையில் இருந்த வேலை அந்த மன்னனின் யானைமீது வீசிக் கொன்றுவிட்டான்.

உடனே, அந்த அரசனுக்குக் கோபம். அவன் தனது வேலை இவன்மீது வீசினான். அந்த வேல் என்னைத் தழுவிய, சாந்து அணிந்த இவனுடைய பரந்த மார்பைத் துளைத்துச் சென்றது.

அப்போதும், என் மன்னன் சோர்ந்து விழுந்துவிடவில்லை. தொடர்ந்து போர் செய்யவே விரும்பினான்.

ஆனால் பாவம், அவன் என்ன செய்வான்? அவனிடம்தான் வேல் இல்லையே.

அதனால் என்ன? தன்னுடைய மார்பில் தைத்த வேலையே பிடுங்கினான். அதை வைத்தே போர் செய்தான். எதிரியைத் தோற்கடித்தான்.

எதிரிப் படையின் ஆண் யானைகளெல்லாம் என் மன்னனின் வீரத்தைப் பார்த்துப் பயந்து நடுங்கின, திரும்பி ஓடின, அதைப் பார்த்து அந்த யானைகளின் காதலி(பெண் யானை)கள் வெட்கப்பட்டன.

துக்கடா

 • நவராத்திரி நவரசப் பாடல் வரிசையில் இது ஐந்தாவது, வீரம்!
 • சமீபத்தில் ‘வாகை சூட வா’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்தத் தலைப்பை வைத்து ‘வாகை என்றால் கிரீடமா?’ என்று கேட்டு நண்பர் ஜெகன்னாதன் மின்னஞ்சல் எழுதியிருந்தார். அவருக்கு விளக்கம் சொல்வதற்காகவே இன்றைய பாடல் – ‘வாகை’ என்பது ஒருவகைப் பூ, அந்தக் காலத்தில் போர் செய்து ஜெயித்த அரசர்கள் இந்த மலரை அணிந்தபடி வருவார்கள். ‘வெற்றி வாகை சூடினான்’ என்கிற சொற்றொடரின் விளக்கம் இதுதான்
 • வாகைப்பூ எப்படி இருக்கும்? பட்டாணிக்காய் போலவே இருக்குமாம். ஒரு நண்பர் இந்தப் புகைப்படங்களை அனுப்பியுள்ளார் –> http://www.flowersofindia.in/catalog/slides/Siris%20Tree.html & http://en.wikipedia.org/wiki/File:Starr_080531-4752_Albizia_lebbeck.jpg
 • ‘மூதின் முல்லை’ என்றால், வீரத்தின் சிறப்பை அறியாதவர்களுக்கு வீரத்தை விளக்கிச் சொல்வது
 • ’குஞ்சரம்’ என்றால் யானை, ’பிடி’ என்றால் பெண் யானை
 • இந்தப் பாடலின் நயமான விஷயம், பாடலைச் சொல்லும் பெண் வேண்டுமென்றே புறமுதுகிட்டு ஓடிய ஆண் யானைகளைப் பற்றிப் பேசுகிறாள், ‘அந்த யானைகளின் ஜோடிகள் (பெண் யானைகள்) பாவம், ’போயும் போயும் இந்தக் கோழைகளைக் காதலித்துவிட்டோமே’ என்று வருத்தப்படுகின்றன. ஆனால் என் காதலன் அப்படி இல்லை, நெஞ்சில் தைத்த வேலைப் பிடுங்கிப் போரிடும் அளவுக்கு வீரன்’ என்று பெருமிதப்படுகிறாள் – புறத்துக்குள் அகம் தோன்றும் அபூர்வமான பாடல்களில் இதுவும் ஒன்று

089/365

This entry was posted in கதை கேளு கதை கேளு, காதல், நவரசங்கள், நாடகம், புறநானூறு, புறம், வாகை, வீரம். Bookmark the permalink.

2 Responses to வாகை சூடியவன்

 1. anandraaj says:

  எனக்கு அவ்ளோவ் அறிவில்லை. ஆனாலும் முன்பே இது பற்றிய பதிவை கண்டிருந்தேன். லிங்க் உடன்.. http://koodal1.blogspot.com/2008/07/blog-post_22.html

  குமரன் (Kumaran) said…
  ஆமாம் செல்வன். நீங்கள் சொல்வது போல் ‘அஸ்வத்தாமா அத: குஞ்சர:’ என்ற சொற்றொடரில் உள்ள மகாபாரதப் போரின் திருப்புமுனை நிகழ்ச்சியில் குஞ்சர: என்பது யானையைத் தான் குறிக்கிறது. சில சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குப் போனதா இல்லை அங்கிருந்து இங்கு வந்ததா என்று சரியாகத் தெரிவதில்லை. இந்தச் சொல்லும் அது போன்றது தான். குஞ்சரம் என்ற சொல் பழந்தமிழ் நூல்களிலும் (மகாபாரதக் காலத்திற்கும் முந்தைய நூல்களிலும்) பயின்று வந்துள்ளது என்று எண்ணுகிறேன். ஒரு வேளை தென்னகத்தில் இருந்து வந்த யானைக்கு குஞ்சர: என்று வடமொழியாளர் கூறினார்களோ என்னவோ?

  2:47 PM, March 27, 2006

  • GiRa says:

   தெரியலைங்க. பொதுவாவே யானைகள் தெற்கில்தான் நிறையன்னு நெனைக்கிறேன். வடக்குல அவ்வளவா யானைகள் இருக்குற மாதிரித் தெரியல. தெரிஞ்சவங்க சொல்லலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s