எய்த நகை

 

மடித்த பில வாய்கள் தொறும் வந்து புகை முந்தத்

துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்பக்

கடித்த கதிர் வாள் எயிறு மின்கஞல மேகத்து

இடித்த உரும் ஒத்து உரறி ‘யாவர் செயல்?’ என்றான்.

*

‘செய்தனர்கள் மானுடர்’ எனத் திசை அனைத்தும்

எய்த நகை வந்தது, எரிசிந்தின கண் எல்லாம்

’நொய்து அவர் வலித்தொழில், நுவன்ற மொழி என்னோ

பொய் தவிர், பயத்தை ஒழி, புக்க புகல்’ என்றான்.

நூல்: கம்ப ராமாயணம் (ஆரண்ய காண்டம், மாரீசன் வதைப் படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: லட்சுமணனால் அவமானப்படுத்தப்பட்ட சூர்ப்பனகை இலங்கைக்குச் செல்கிறாள். தன்னுடைய அண்ணன் ராவணன் காலில் விழுந்து புரள்கிறாள். தங்கையின் நிலையைக் கண்ட ராவணனின் கோபம் இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

ராவணனின் மடித்த வாய்கள் பத்தில் இருந்தும் கோபப் புகை பறந்தது. மீசைகள் பத்தும் படபடவென்று துடித்தன. அவனுடைய பெருமூச்சின் உஷ்ணத்தால் அந்த மீசைகள் சூடாகின. அவன் தனது பிரகாசமான பெரிய பற்கள் அனைத்தையும் ஆவேசமாகக் கடிக்க, அவற்றிலிருந்து மின்னல் போன்ற தீப்பொறிகள் பறந்தன. மேகத்திலிருந்து இடிக்கும் இடியைப்போல அலறினான் அவன். ‘உனக்கு இந்த அநியாயத்தைச் செய்தது யார்?’ என்று சூர்ப்பனகையிடம்கேட்டான்.

*

சூர்ப்பனகையை அவமானப்படுத்தியது சாதாரண மனிதர்கள்தான் என்று அவள் சொன்னதும் ராவணனுக்குச் சிரிப்புதான் வந்தது. ‘கேவலம், மனிதர்களா?’ என்று எல்லாத் திசைகளுக்கும் கேட்கும்படி கோபமாகச் சிரித்தான். அவனது கண்களில் இருந்து நெருப்புப் பொறிகள் பறந்தன.

தங்கையே, நீ சொல்வதை என்னால் நம்பமுடியவில்லை. சாதாரண மனிதர்களால் உன்னை இப்படி அவமானப்படுத்தமுடியாது, நீ அச்சத்தில் ஏதோ உளறுகிறாய்’ என்றான் ராவணன். ‘பயப்படாதே, பொய் சொல்லாதே, நடந்ததை அப்படியே சொல்’ என்றான்.

துக்கடா

 • நவராத்திரி நவரசப் பாடல் வரிசையில் இது நான்காவது, கோபம்!
 • ராமாயணக் கதைப்படி ராவணனுக்குப் பத்து தலைகள் என்பது நமக்கு முன்பே தெரிந்திருந்தாலும்கூட, இந்த முதல் பாடலில் வாய்கள், மீசைகள் என்ற பதங்கள் கொஞ்சம் விநோதமாகவே தோன்றுகின்றன 🙂
088/365
Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், கோபம், நவரசங்கள், நாடகம். Bookmark the permalink.

3 Responses to எய்த நகை

 1. GiRa says:

  கம்பன் என்றாலே கவியமுதம். பேசாமல் கம்பன் கழகத்தில் சேர்ந்து விடலாமா என்று கூடத் தோன்றும். அத்துணை சுவை. ஏற்பிலாக் கருத்தையும் ஏற்புடையதாகச் செய்யும் கவிவண்ணம் கம்பன் கைவண்ணம். இராமனின் கைவண்ணம் கால்வண்ணம் மெய்வண்ணம் கண்டவர்கள் எல்லாரும் அப்பொழுது இருந்தார்கள். அதற்குப் பின்னால் எப்பொழுதும் இராமனின் வண்ணங்களைக் கம்பன் கைவண்ணங்களால்தான் எல்லாரும் காண்கிறோம். தமிழால் கம்பனுக்கு உண்டான பெருமையிது.

 2. GiRa says:

  பில வாய்களுக்குப் பொருள் சொல்லாம விட்டுட்டீங்களே. 🙂 பிலம் என்றாலே பொதுவான பொருள் துளை/வழி. பொதுவாக பிலத்துவாரம் என்று பாதாளத்துக்குச் செல்லும் வழியைச் சொல்வார்கள் (கே.ஆர்.எஸ் அவர்கள் இந்தப் பொருளைச் சரிபார்க்கவும்.)

  அப்படியான பாதாள வழி அச்சமூட்டி அரட்டி விரட்டும். அப்படிப் பட்ட அச்சமூட்டும் வாய்களாம் இராவணனின் பிலவாய்கள். அதிலும் புகை முந்தும் வாய்கள். அடங்கா ஆத்திரத்தில் அடி வயிற்று அக்கினி பற்றி எரிய, அதன் புகை வாய் வழியாக வெளியே வருகிறதாம். ஒரு வாய் வழியாகவா? இல்லை. பத்து வாய்களின் வழியாகம் புகை வருகின்றது. பத்து மீசைகள் துடிக்கின்றன.

  பற்களைக் கடிக்கும் பொழுது ஒன்றோடொன்று மோதி உராய்ந்து தீப்பொறிகள் பறக்கின்றன. ஒரு மண்டைக்குள் உண்டாகும் ஆத்திரத்தையே நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. பத்துமண்டை ஆத்திரத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் சூர்ப்பனகையைக் கேட்டான் “யார் அவன்” என்று.

  இராவணனின் இந்தக் கோவம் நியாயமானதுதான். ஆனால் “யார் அவன்” என்று கேட்ட கேள்வி “யார் அவள்” என்று மாறியதன் விளைவுதான் ஒரு “வன்வாளி” அவன் உடல் புகுந்து தடவியது.

 3. GiRa says:

  கம்பனைப் பற்றி நினைத்தாலே எண்ணச் சிறகுகள் வண்ணம் பூசிப் பளபளத்துப் பறக்கின்றன. ஒரு மேடையிலேனும் அவன் கவிச்சுவையை வியந்து நயந்து பேச வேண்டும். என்று தணியுமோ இந்த ஆவல். 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s