இளைத்தேன்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

…..வாடினேன், பசியினால் இளைத்தே

வீடுதோறு(ம்) இரந்தும் பசி அறாது அயர்ந்த

…..வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்

…..நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்

ஈடு இன் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

…..இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்.

நூல்: திருவருட்பா (#3471)

பாடியவர்: இராமலிங்க வள்ளலார்

(மிகச் சில வார்த்தைகளைத் தவிர, இந்தப் பாடலுக்குத் தனியே விளக்கம் அவசியமே இல்லை. இருந்தாலும் ஒரு சாத்திரத்துக்காக இது)

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தண்ணீர் இன்றி வாடியிருக்கும் பயிர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய மனம் வாடுகிறது. பசியினால் இளைத்தவர்கள், ஒவ்வொரு வீடாகக் கெஞ்சிக்கேட்டும் பசி தீராமல் களைத்துப்போன ஏழைகளைப் பார்த்து என் உள்ளம் பதைபதைக்கிறது. நீங்காத நோயினால் அவதிப்படுகிறவர்களை நேருக்கு நேர் பார்க்கும்போது என் நெஞ்சம் துடிக்கிறது.

இவர்களெல்லாம்கூடப் பரவாயில்லை. பசியால் வயிறு காய்ந்தாலும் இணையில்லாத மானம்தான் பெரியது என்று நினைக்கிறவர்கள், அதனால் யாரிடமும் பிச்சை கேட்காமல் சுயமரியாதையோடு பட்டினி கிடக்கிறவர்கள், அவர்களைப் பார்க்கும்போது, நானும் இளைத்துப்போகிறேன்!

துக்கடா

 • நவராத்திரி நவரசப் பாடல் வரிசையில் இது மூன்றாவது, கருணை – இரக்கம்!
087/365
Advertisements
This entry was posted in கருணை, திருவருட்பா, நவரசங்கள், வள்ளலார். Bookmark the permalink.

14 Responses to இளைத்தேன்

 1. முருகா…
  “நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்”-ன்னு சொல்ல….
  இந்த மனுஷனின் மனசுக்குள்ளத் தான் எம்புட்டு “கருணை” இருக்கணும்!

  இந்தக் கோயிலுக்கு போங்கோ, இந்தப் பரிகாரம் பண்ணுங்கோ-ன்னு எல்லாம் ஜகத்குருக்கள் சொல்லும் காலத்திலே…
  ஒரு திருவருட்பாவில், தனக்காக ஒரு பரிகாரமும் வேண்டாது….மனசு ஒடிஞ்சவன் நிலை கண்டு இளைச்சேன்-ன்னு சொல்லுறாரே…இதை விடவா ஒரு பரிகாரம், தோஷம் போக்கும்?
  ——————-

  வாயளவில் பேசுவோர் மத்தியில், வாழ்வளவில் ஒடுங்கி விட்ட வள்ளலாரை…நினைக்கும் போதெல்லாம்….என்னை என்னமோ செய்கிறது!
  “கடைவிரித்தேன், கொள்வார் இல்லை”-ன்னு அந்த உள்ளத்தை ரொம்ப நோகடிச்சிட்டாங்களோ?:((

  முருகா! வள்ளலார் உள்ளத்தை இன்புறச் செய்து, எப்பவும் உன்கிட்டவே வச்சிக்கோ-ன்னா?

 2. பெரும் நாத்திகராக அறியப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன்….
  பகுத்தறிவுப் பாசறையில் இருந்து கொண்டே….
  ரெண்டே ரெண்டு ஆன்மீக உள்ளங்களை மட்டுமே போற்றியவர்!

  = அதில் ஒருவர், இன்றைய பாவின் தலைவர் = இராமலிங்க வள்ளலார்!

  முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
  இத்தமிழ் நாடு இருந்தவப் பயனாய்
  இராமா னுசனை ஈன்ற தன்றோ?

  சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு
  மெச்சவும் காட்டுவோன் வேண்டும் என்றெண்ணி
  இராம லிங்கனை ஈன்ற தன்றோ?

 3. பாரதிதாசனே போற்றியதற்கு காரணம் = “கருணை” (இன்றைய நவரசம்!)

  “கருணை” என்பதை அடிப்படைக் குணமா வச்சிக்கிட்டா இன்னிக்கி உலகில் வாழ முடியாது, புனித பிம்பம்-ன்னு எல்லாம் சொல்லீருவாங்க:))
  ஆனாலும்….

  இந்தக் “கருணை” என்பது எந்தக் குணத்தையும் விட நல்ல குணம் என்ற புத்தியையாச்சும் எப்பவும் மறக்காம இருக்கணும்! முருகா…நீயே இதுக்கு பொறுப்பு, சொல்லிட்டேன்!

 4. GiRa says:

  ஒன்னு தெரியுது. பாரதிதாசனால் பாராட்டப்படாத ஆன்மீகவாதிகளிடம் கருணை இல்லை. 🙂

  • :))))
   அது அப்படியா என்ன?

   எது எப்படியோ, பாரதிதாசனின் கருத்தையே கவர்ந்திருக்கணும்-ன்னா, அது சும்மா இல்லை!

   ஏன்-ன்னா பாரதிதாசன்…கலர்த் துண்டு பகுத்தறிவாளர் அல்லர்!
   பொதுப் பேச்சிலும், தனி வாழ்விலும் ஆ.மாயை கடந்த செந்தமிழ் உணர்வாளர்!

   • GiRa says:

    அப்படிச் சொன்னதே தாங்கள்தானே. நீங்கள் சொன்னதை வழிமொழிந்தேன். இனிமேல் கே.ஆர்.எஸ் எடுத்தாண்டு நிரூபித்தபடி அப்பரும் அருணகிரியும் கருணையற்றவர்கள் என்றே சொல்கிறேன்.

  • மன்னித்து விடு இராகவா!
   அந்தப் பின்னூட்டத்தை del செய்து விடுகிறேன்!

   நாத்திகரான பாரதிதாசன் இவர்களை மட்டும் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்? அப்பர் பெருமானையும், அருணகிரியையும் ஏன் குறிப்பிடவில்லை?…..இதை பாரதிதாசனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்!

   ஒன்றை ஒரு இடத்தில் குறிப்பிடுவதால், எல்லாவற்றையும் அதே இடத்தில் கூடவே குறிப்பிட வேணும்-ன்னு என்னிடம் “எதிர்ப்பார்ப்பது” ஏன் என்று தான் புரியவில்லை!:(
   ———————

   பல இடங்களில் அப்பர் பெருமானையும், அருணகிரியையும், இதே பா-தளத்தில் சிலாகித்துப் பேசி இருக்கேன்!

   இருந்தும்…//இனி கே.ஆர்.எஸ் எடுத்தாண்டு நிரூபித்தபடி அப்பரும் அருணகிரியும் கருணையற்றவர்கள் என்றே சொல்கிறேன்// என்று நீங்கள் சொல்லப் போதுவீர்களேயானால்…அது என் துரதிருஷ்டம் என்றே கொண்டு அடங்கி விடுவதைத் தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை! பிழை பொறுத்தருள்க!

 5. இங்கே, பாரதிதாசன் வள்ளலாரையும், இன்னொருவரையும் மட்டுமே குறிப்பிடக் காரணம்…அவர் சார்ந்த கொள்கை என்பதனால் இருக்கலாம்!

  தமிழ்/பக்தி என்பதை எழுத்து/பாடல் என்று தன்னளவில் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல்….
  “கருணை” என்பதை சமூகத்துக்கும் கொண்டு சென்று, சமுதாயப் பணியும் சேர்த்தே செய்தமையால், நிறுவன அமைப்புகளை மீறி நடைமுறைப்படுத்தியதால்…
  பாரதிதாசன், தன் “கொள்கை” அளவில், பாடி இருக்க வாய்ப்புண்டு! இதற்கு மேல் யூகிக்க முடியவில்லை! பாரதிதாசனிடம் தான் கேட்க வேண்டும்!

  இளையராஜாவைப் பற்றி ஒரு குறிப்பு பேசுங்கால்…மற்ற எல்லாரையும் கூடவே பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் “நியாயங்கள்” புரியாமல் தடுமாறுகிறேன்!

  எதுவாயினும், உங்களுக்குப் “பிடிக்காததைச்” சொல்லி இருந்தாலோ, பிழையானதைச் சொல்லி இருந்தாலோ, மன்னிக்குமாறு வேண்டுகிறேன்!…இனி அமைந்து விடுகிறேன்

  • GiRa says:

   ஐயா, எனக்குப் பிடித்ததை நீங்கள் சொல்ல வேண்டும் என்று உலகில் எந்தச் சட்டதிட்டமும் இல்லை. அப்படி எதிர்பார்ப்பது சிறிதும் முறையாகாது. உங்களுக்குப் பிடித்ததைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும். சொல்கின்றீர்கள். இதற்கு ஏன் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?

   நீங்கள் சொன்ன வரிகளையே எடுத்துக் கொள்வோம்.
   // பெரும் நாத்திகராக அறியப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன்….
   பகுத்தறிவுப் பாசறையில் இருந்து கொண்டே….
   ரெண்டே ரெண்டு ஆன்மீக உள்ளங்களை மட்டுமே போற்றியவர்! //

   பாரதிதாசனார் வள்ளலாரைப் போற்றினார் என்று நீங்கள் கூறியிருந்தால் நான் அப்படி எடுத்துக் கொண்டிருப்பேன். உங்களுக்குப் பிடித்த வைஷ்ணவ சம்பிரதாய ராமானுஜரைப் பற்றிச் சொல்லியிருக்கின்றீர்கள். அதுவும் சரிதான்.

   ஆனால் இவர்கள் இருவரை மட்டும் பாரதிதாசன் பாராட்டினார் என்று நீங்கள் அழுத்திச் சொல்லி அதற்குக் கருணை என்னும் கொள்கையைக் காரணம் காட்டுகையில் வேறு எப்படி பொருள் எடுத்துக் கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

   நூறு ஓட்டல் இருக்கும் ஊரில் இரண்டு ஓட்டல்கள் மட்டும் சுவை என்னும் கொள்கையில் சிறப்பு என்று நீங்கள் சொல்லும் பொழுது அவையன்றி இன்னொன்று சுவையிராது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்.

   பாரதிதாசன் வள்ளலாரையும் இராமானுஜரையும் பாராட்டினார் என்றால் அது செய்திக் குறிப்பு. அவர்கள் இருவரை மட்டும் பாராட்டினார் என்பது சிறப்புக் குறிப்பு. சொன்னவர் தாங்கள். கேட்டுக் கொண்டவர்கள் நாங்கள். அவ்வளவே. 🙂

   • அது பாரதிதாசனின் சிறப்புக் குறிப்பு! அவ்வளவே!

    நாத்திகரான அவர், அதையும் மீறி, இருவரை மட்டும் காட்டுகிறார்! – அது அவருக்குள் ஏற்பட்ட தாக்கம்!

    உடனே, அவர் பாடலில் காட்டாத பல நூறு பேர்கள் லாயக்கற்றவர்கள் என்று பேசுவது எதில் சேர்த்தி?

    //இனி கே.ஆர்.எஸ் எடுத்தாண்டு நிரூபித்தபடி அப்பரும் அருணகிரியும் கருணையற்றவர்கள் என்றே சொல்கிறேன்//
    – மேற்கண்ட விஷமத்தனமான வாக்கியத்தின் பொருள் என்ன?

    “அப்பரும் அருணகிரியும் கருணையற்றவர்கள்” என்று எப்படியெல்லாம் நிரூபித்தேன்? அறியத் தாருங்கள்!

  • GiRa says:

   ஐயா, நீங்கள் எல்லாரையும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கவே இல்லையே. 😦

   இளையராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்று கருத்து சொல்வதற்கும் இளையராஜா மட்டுமே சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை செந்தமிழ் செல்வராகிய தாங்கள் அறிவீர்கள்.

   அப்படி இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர் என்று சொல்வது கூட ஒரு கருத்துதான். அதைச் சொல்கின்றவர் வேறொருவர் இசையைக் கேட்டும் ரசித்ததில்லை என்பதே அவர் சொல்வதற்கான காரணம். அவ்வளவுதான். அதுவும் அவர் கருத்து. தவறு என்று சொல்லவே முடியாது.

   அது போலத்தான் நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் சொன்ன சரியான பொருளில் புரிந்து கொண்டேன் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான். உங்களுடைய கருத்தை வெளிப்படையாகச் சொன்னதற்கு ஏன் வருத்தப்படுகின்றீர்கள் என்றுதான் புரியவில்லை. ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

   • “இளையராஜா-நெளஷத் இசையை மட்டுமே கேட்டு, என் காலை வேளைகள் விடிகின்றன” – இப்படி….ஒரு பேட்டியில், ஒரு பிரபலம் சொல்லி இருந்தால்…..

    அதை, இதழாசிரியர் ஒருவர், ராஜா பற்றிய கட்டுரையில் மேற்கோள் காட்டினால்…

    உடனே, இதழாசிரியர், “MSV, ரஹ்மான் எல்லாம் லாயக்கற்றவர்கள் என்று நிரூபித்த படி” என்று தான் சொல்வீர்களா?
    “இனி கே.ஆர்.எஸ் நிரூபித்தபடி அப்பரும் அருணகிரியும் கருணையற்றவர்கள்” என்பதற்கான முகாந்தரம் என்ன?சபையில் சொல்லுங்கள்!

 6. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்னும் வள்ளலார் பதிவிலே, எனக்கு இப்படி ஒரு வாட்டம் :(((

  //இனி கே.ஆர்.எஸ் நிரூபித்தபடி அப்பரும் அருணகிரியும் கருணையற்றவர்கள்!
  இனி கே.ஆர்.எஸ் நிரூபித்தபடி அப்பரும் அருணகிரியும் கருணையற்றவர்கள்!
  இனி கே.ஆர்.எஸ் நிரூபித்தபடி அப்பரும் அருணகிரியும் கருணையற்றவர்கள்!//
  – சரியாகப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? :(((

  நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்! இளைத்துச் செத்தேன்!

  “கடை விரித்தேன்…கொள்வார் இல்லை” என்று வள்ளலார் எத்தனை ஆற்றாமையில் பாடி இருப்பார்…ன்னு உணர்வுப்பூர்வமாக இன்றே எனக்குப் புரிந்தது…..

 7. Pingback: பசி தீரப் பாடினோர் | நாலு வரி நோட்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s