நெஞ்சே, அங்கேயே இரு

கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப

நீல் நிறப் பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,

மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி

குவை இரும் புன்னைக் குடம்பை சேர

அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலை

தாழை தளரத் தூக்கி, மாலை

அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்

காமர் நெஞ்சம் கையறுபு இனைய,

துயரம் செய்து நம் அருளார் ஆயினும்,

அறாஅலியரோ அவருடைக் கேண்மை!

அளி இன்மையின் அவண் உறை முனைஇ

வாரற்கதில்ல – தோழி! – கழனி

வெண் நெல் அரிநர் பின்றைத் ததும்பும்

தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை

செறிமடை வயிரின் பிளிற்றி, பெண்ணை

அகமடல் சேக்கும் துறைவன்

இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே!

நூல்: அகநானூறு (#40)

பாடியவர்: குன்றியனார்

சூழல்: நெய்தல் திணை – பொருள் சேர்ப்பதற்காகக் காதலியைப் பிரிந்து சென்றான் காதலன், அவனையே நினைத்து வருந்திய காதலிக்குத் தோழி ஆறுதல் சொன்னாள், அவளுக்குக் காதலி சொல்லும் பதில்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தோழி,

மாலை நேரம். கடற்கரைச் சோலை அருகே உள்ள ’உப்பங்கழி’(Backwater?)யில் வரிசையாக மலர்கள் குவிந்திருக்கின்றன. நீல நிறம் கொண்ட கடலின் ஓசை பலமாக ஒலிக்கிறது. மென்மையான இறகுகளை உடைய பறவைக் கூட்டம் மீனைக் கொத்திச் சாப்பிட்டுவிட்டுப் பெரிய புன்னை மரங்களில் உள்ள கூடுகளைச் சென்று சேர்கிறது. வண்டுகள் அங்கும் இங்கும் அலைந்தபடி சத்தமிடுகின்றன. தாழைச் செடிகள் காற்றில் தளர்ந்து அசைகின்றன.

இந்த மாலைப்பொழுது அழகானதுதான். ஆனால் என்னைப்போல் துணையைப் பிரிந்திருக்கிறவர்களுக்கு இது மிகவும் துன்பம் தருகிறது.

என்னுடைய நெஞ்சம் வருந்தும்படி என்னைப் பிரிந்து சென்றுவிட்டான் என் காதலன். ஆனாலும் அவனை என்னால் வெறுக்கமுடியவில்லை – அவனுடைய நட்பை (உறவை) இழக்க மனம் வரவில்லை.

வயலில் வேலை செய்வோர் வெள்ளை நெல்லை அரிகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்து பறை ஒலி கேட்கிறது. அதைக் கேட்டுப் பயந்த நாரை ’கொம்பு வாத்திய’த்தைப்போல் சத்தமிட்டபடி பனை மரத்தின் மடலில் சென்று உட்கார்கிறது. அப்படிப்பட்ட கடல்துறையின் தலைவன் என் காதலன். அவனுடைய மார்பை அணைத்தபடி தூங்கவேண்டும் என்று என் மனமும் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

எனக்குதான் அவனோடு இருக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. என் நெஞ்சமாவது திரும்பி வராமல் அங்கேயே அவனுடனேயே தங்கிவிடட்டும்.

080/365

Advertisements
This entry was posted in அகநானூறு, அகம், காதல், தோழி, நெஞ்சுக்குச் சொன்னது, நெய்தல், பிரிவு. Bookmark the permalink.

4 Responses to நெஞ்சே, அங்கேயே இரு

 1. மிக அழகான காட்சிக் கவிதை!

  அவன் விட்டுட்டுப் போயிட்டான், இவ அவனே-ன்னு காத்துக் கிடக்கா…நெஞ்சு அங்கே போயிருச்சி! – இம்புட்டுத் தானே கவிதை? எதுக்குக் கடலோர நிலத்தில் உள்ள பறவை, மரம், பூ பத்தியெல்லாம் சம்பந்தமே இல்லாமல் சொல்லணும்? -ன்னு சிலர் கேட்கலாம்:)

  சூரியனை வரையும் இடத்தில், சூரியனை மட்டுமா வரைகிறார்கள் ஓவியர்கள்?
  அதே தான் இங்கேயும்! அவன்-அவளை மையத்தில் வைத்து வரையப்படும் காட்சிக் கவிதை = சங்கத் தமிழ்!
  ———————

  ஆனா…
  கழிமுகம்/உப்பங்கழியில் எப்படிப்பட்ட மலர்கள் பூக்கும்?
  குள்ளமான புன்னை மரத்தில், பெரிய பறவை உட்காரும் விதம் என்ன?
  நாரை, பனை மரத்தின் மேல் உட்கார இடம் இருக்கா?
  – இப்படி நிறைய கேள்விகளை…உள்வாங்கிக்கிட்டே, வாசிச்சா…”தேவையில்லாத” வர்ணனைகளுக்கும், அவன்-அவள் somethingக்கும் பல தொடர்புகள் தெரி்ய வரும்!
  அதுக்கு, கவிதையை வாசிக்கணுமா, அல்லது சுவாசிக்கணுமா?

  என்னால் அத்தனையும், இன்னிக்கிச் சொல்ல முடியாத மன நிலைமை!
  ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிட்டுப் போறேன்…
  ———————-

  //அவனுடைய உறவை இழக்க மனம் வரவில்லை// = எனக்கு அருளார் ஆயினும், அறாலியரோ?

  //எனக்குத் தான் அவனோடு இருக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. என் நெஞ்சமாவது திரும்பி வராமல்…// = அங்கிருந்து என் நெஞ்சு திரும்பி வந்துருச்சின்னா…என்னைப் போலவே, அதுவும் அவதியில் அல்லப்படும்!

  அதனால், என் கிட்ட வராமல்…மகிழ்வான இடமான அவன்கிட்டயே, என் நெஞ்சு தங்கிறட்டும்!
  அவன் இன்துயில் மார்பில் சாயச் சென்ற என் நெஞ்சே! = முருகா! என் நெஞ்சை அவன் கிட்டயே வச்சிரு! அவன் கிட்டயே வச்சிரு!

 2. GiRa says:

  பாட்டைப் பத்தி நீங்க சொல்லீட்டீங்க. அதுக்கு மேல நான் என்ன சொல்றது. 🙂 இன்னொன்னு புரிஞ்சிக்கனும். இந்தப் பாடல் கைக்கிளையோ பொருந்தாக் காமமோ அல்ல. ஒரு ஐயம். விருப்பமே இல்லாத ஒருத்தரைப் பாத்து விரும்புறேன் விரும்புறேன்னு நேரடியாகவோ மறைமுகமாகவோ வன்கொடுமைப் படுத்திக்கிட்டு அதை அன்பை வெளிப்படுத்துறதுன்னு நம்புறதப் பத்தி சங்கப் பாடல் ஏதாச்சும் இருக்கா?

 3. GiRa says:

  சங்கப்பாடல்களை ருசிக்கும் போது பல சொல்லாடல்கள் மயக்குகின்றன. இது பொதுவாகவே தமிழில் இருப்பதுதான். பிற்காலத்தில் அருணகிரி மணிப்பவழத்தில் சொன்ன பனிப்பானு என்ற சொல்லாடலும் அப்படியே. பானு என்றால் சூரியன். பனி குளுமையானது. பனி போன்ற குளுமையான கதிரவனாம். எது? நிலவு. பனிப்பானு வெள்ளிப் பொன் செங்கதிரோன். இப்பிடி கண்டபடி அவர் விளையாண்டதாலதான் அவருக்கும் ஓசை முனின்னு பேரு.

  இந்தப் பாடல்ல மீன் ஆர் குருகு. அடடா! வண்டார் குழலின்னா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். வண்டுகள் மொய்க்கும்/இருக்கும் குழல். ஏன் கூந்தல்ல வண்டு மொய்க்குது? ஏன்னா.. அதுல மலர்கள் இருக்கு. அதிலிருக்கும் தேனுக்காகத்தான் வண்டுகள் மொய்க்குது.

  இந்த மீன் ஆர் குருகு. இன்னும் சற்று வித்தியாசமானது. குருகு என்பது பறவை. மீன்கள் மொய்க்கும்/இருக்கும் பறவையா? அதெப்படி? அந்த மீன்களெல்லாம் பறவைகள் வாயில் இருக்கு.இவ்வளவு தகவலை விளக்குறேன்னு நீட்டி முழக்காம மீன் ஆர் குருகுனு சட்டுன்னு முடிச்ச குன்றியனாரைப் பாராட்டாம இருக்க முடியலை.

 4. GiRa says:

  இன்னொன்னு புரிஞ்சிக்கனும். நெய்தல் நிலப்பாடல்கள் அப்படீன்னாலே என்னவோ தலைவன் தலைவிய விட்டு விலகிப் போயிட்டதா மட்டும் நினைக்கக் கூடாது.

  இந்தப் பாட்டை எடுத்துக்கிட்டீங்கன்னா தலைவன் இல்ல. தலைவி அவனைப் பத்திதான் பாடுறா. அதுவும் தோழிகிட்ட. ஆனா ஏன் இந்தப் பிரிவு? தலைவன் வணிகத்துக்குப் போயிருக்கான். அதனால்தான் பிரிவு. தலைவன் தலைவி மேல ஆத்திரப்பட்டோ வேறு ஏதேனும் நிகழ்ச்சிகளாலோ விலகிப் போகலை. அப்படியிருந்தா அதைக் குத்திக் காண்பிச்சிருப்பா தலைவி. ஆக இந்த இடத்துல இருவரும் கருத்து ஒருமித்த காதல்தான். அதையும் குறிப்பிட்டுச் சொல்லனும்.

  அதுனாலதான் இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே. அதாவது… உறுதியான அவன் மார்பைக் கூட பஞ்சணையாய் கொண்டு துயின்று இன்புற்ற என் நெஞ்சே, அந்த இன்பம் தந்த மார்போடு நீயும் புறப்பட்டுப் போய் விட்டாய். அங்கேயே இரு என்கிறாள்.

  இப்படியாகக் காதல் இருவழிப்பட்டதுன்னும் சொல்லனும். இது என் தாழ்மையான கருத்து. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s