அரும்பெறல் பாவாய்

குழவித் திங்கள் இமையவர் ஏத்த,

அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்

உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின்

பெரியோன் தருக திருநுதல் ஆகு என

*

அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்

படை வழங்குவது ஓர் பண்பு உண்டாகலின்

உருவு இலன் ஒரு பெரும் கருப்பு வில்

இரு கரும் புருவமாக ஈக்க

*

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்

தேவர் கோமான் தெய்வக் காவல்

படை நினக்கு அளிக்க அதனை நினக்கு இடையென

*

அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்

இருமுறை காணும் இயல்பினின் அன்றே

அம்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச்

செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது

*

மா இரும் பீலி மணிநிற மஞ்சை நின்

சாயல் குடைந்து தண்காண் அடையவும்

*

அன்னம் நன்னுதல் மென் நடை கழிந்து

நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்

*

அளிய தாமே சிறு பசும் கிளியே,

குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்

மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்

மடநடை நின் மலர்க்கையின் நீங்காது

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின

*

நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர்

மறுவில் மங்கல அணியே அன்றியும்

பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்!

*

பல்லிரும் கூந்தல் சின்மலர் அன்றியும்

எல் அவிழ் மாலையொடு என்னுற்றனர் கொல்!

*

நானம் நல் அகில் நறும்புகை அன்றியும்

மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்!

*

திருமுலைத் தடத்து இடைத் தொய்யில் அன்றியும்

ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்!

*

திங்கள் முத்து அரும்பவும் சிறு இடை வருந்தவும்

இங்கு இவை அணிந்தனர் என்னுற்றனர் கொல்!

*

மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசுஅறு விரையே! கரும்பே! தேனே!

அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!

மலைஇடைப் பிறவா மணியே என்கோ!

அலைஇடைப் பிறவா அமிழ்தே என்கோ!

யாழ்இடைப் பிறவா இசையே என்கோ!

நூல்: சிலப்பதிகாரம் (மனை அறம் படுத்த காதை)

பாடியவர்: இளங்கோ அடிகள்

சூழல்: முதல் இரவு. கோவலன் கண்ணகியைப் பாராட்டிப் பேசுகிறான்

தேவர்கள் போற்ற, சிவபெருமானின் முடிமீது அழகாக வீற்றிருக்கிறது பிறை நிலா. ஆனால் அந்த நிலா உன்னுடைய சகோதரி, பாற்கடலில் திருமகளான உன்னோடு கூடப் பிறந்தது. ஆகவே, சிவன் தனது பிறை நிலாவை உன்னுடைய நெற்றியாகக் கொடுத்துவிட்டான்.

*

போரில் கலந்துகொள்ளும் வீரர்களுக்குப் படைக்கருவிகளை அளிப்பது வழக்கம். ஆகவே, என்னோடு காதல் போர் செய்ய வரும் உனக்குத் தன்னுடைய பெரிய கரும்பு வில்லை இரண்டு கருத்த புருவங்களாகச் செய்து கொடுத்தான் உருவம் இல்லாத மன்மதன்.

*

அமுதம் என்பது அழிவு இல்லாத மருந்து. ஆனால் அந்த அமுதத்துக்கு முன்னால் பிறந்த திருமகள் நீ. ஆகவே, தேவர்களின் தலைவனாகிய இந்திரன் தன்னுடைய காவலுக்காக வைத்திருந்த வச்சிரம் என்ற ஆயுதத்தை உனக்குக் கொடுத்துவிட்டான். நீ அதை உன் மெலிந்த இடையாகச் செய்துகொண்டுவிட்டாய்.

*

ஆறுமுகன் முருகனுக்கு என்மேல் என்ன கோபமோ தெரியவில்லை, என்னைத் துன்புறுத்துவதற்காகவே தன்னுடைய அழகிய சுடர் மிகுந்த நெடுவேல் உன் முகத்தில் குளிர்ச்சியான இரண்டு கண்களாக மாறும்படி செய்துவிட்டான்.

*

கருத்த பெரிய தோகையையும் நீலமணி போன்ற நிறத்தையும் உடைய மயில்கள் உன்னுடைய அழகின்முன்னால் தோற்றுவிட்டன. குளிர்ச்சி மிகுந்த காட்டில் சென்று ஒளிந்துகொண்டன.

*

மயில்களைப்போலவே, அன்னங்களும் உன்னுடைய நடைக்கு முன்னால் படுதோல்வியடைந்தன. நல்ல நீரை உடைய வயல்களில் நிறைந்திருக்கும் மலர்களுக்கு நடுவே சென்று பதுங்கிக்கொண்டன.

*

ஒருவிதத்தில் இந்த மயில்களும் அன்னங்களும்கூடப் பரவாயில்லை, பச்சைக் கிளிகளின் நிலைமைதான் ரொம்பப் பரிதாபம்!

குழலும் யாழும் அமுதமும் சேர்ந்து குழைத்த உன்னுடைய மழலைப் பேச்சுக்குமுன்னால் அந்தக் கிளிகளின் பேச்சு எடுபடவில்லை. ஆனாலும் மென்மையான நடையைக் கொண்ட உன்னை விட்டு அவை நீங்க விரும்பவில்லை. உன் மலர் போன்ற கையிலேயே தங்கியிருந்து உன்னுடைய பேச்சைக் கேட்டுப் பழகிக்கொள்ளலாம் என்று திட்டமிடுகின்றன.

*

மணம் மிகுந்த மலர்களை அணிந்த கோதையே, உனக்கு அலங்காரம் செய்கிற பெண்களுக்கு அறிவே கிடையாதா? குற்றம் இல்லாத உன் இயற்கை அழகு இருக்க, அதன்மீது வேறு நகைகளைப் பூட்டுகிறார்களே, அதனால் என்ன பயன்?

*

அடர்த்தியான உன்னுடைய கூந்தலில் ஒன்றிரண்டு மலர்களைச் சூடினால் போதாதா? இத்தனை பெரிய மாலையைச் சுமத்தவேண்டுமா?

*

உன் கூந்தலுக்கு மணம் நிறைந்த நல்ல அகில் புகையை ஊட்டினார்கள். சரி. அதற்குமேல் கஸ்தூரிச் சாந்து பூசியது எதற்காக?

*

அழகிய உன் மார்புகளில் தொய்யில் (சந்தனக் கோலம்) வரைந்தார்கள். சரி. அதற்குமேல் ஓர் ஒற்றை வட முத்துமாலையை அணிவித்திருப்பது எதற்காக?

*

அவர்கள் இத்தனை நகைகளையும் உனக்கு அணிவித்துவிட்டதால், உன்னுடைய சிறு இடை பாரம் தாங்காமல் நோகிறது. நிலா போன்ற உன் முகத்தில் முத்துபோல் வியர்வை அரும்புகிறது. இப்படி உன்னை வருந்தச் செய்த அவர்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது!

*

குற்றம் இல்லாத (24 காரட் 🙂 பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்துவைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே!

உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா?

077/365

Advertisements
This entry was posted in அகம், இளங்கோவடிகள், காதல், சிலப்பதிகாரம், வர்ணனை. Bookmark the permalink.

13 Responses to அரும்பெறல் பாவாய்

 1. PVR says:

  What should have been given in little doses, over a long span of years/ decades, this guy Kovalan gave in one shot – that too in one night, on the First night. Stock over. Is it possible that’s the reason he deserted Kannagi… Is this a lesson to all young to-be couples? 🙂

  • 🙂
   //lesson to all young to-be couples?// Actually yes! – but in the other way!
   kaNNagi is a very timid girl at first!
   but kOvalan not forcing himself upon her!

   If u notice, he does a lot of fore-play, trying to involve her!
   he starts where? = her perspiring forehead…a gentle kiss!
   he ends where? = திருமுலைத் தடத்து + இடைத் தொய்யில்…
   thatz how it goes…eyes & fingers, glancing & dancing:)

   itz not just a long dialogue!
   if u see, itz a word play & fore play, followed by next word play & fore play..and..and…

   muruga! i am containing my hand! I shd not have come here at all
   கண்ணகி-கோவலன் காதலில் “அது” அதிகம் இல்லை, அதான் வேற எங்கேயோ போனான்-என்று வகுப்பில் சொல்லிய என் பேராசிரியர் – அப்பறம் அவர் என்னிடம் பட்ட பாடு – இன்றும் நண்பர்களிடையே hot topic:)

 2. இந்தப் பதிவே சொக்கன்-100 க்குத் தரும் நல்ல பரிசாக இருக்கும்! தமிழின் முதல் காவியம் அல்லவா! இதோ, தந்து விட்டு அமைகிறேன்!

  தினமொருபா, இணையத்துக்(கு) அளித்திட்டான் வாழியே!
  தீந்தமிழில் கவிதை மடல் ஆடியவன் வாழியே!
  கார் காலப் புதினங்கள் சில தந்தான் வாழியே!
  கட்டுரைநூல் வரலாறு பல தந்தான் வாழியே!

  ஒரு நூற்று நூல் நூற்றான், ஒளி மிகுந்து வாழியே!
  சிறுநூறு அறுநூறாய்ச் சிறக்க அவன் வாழியே!
  மால்தமிழில் மயக்கமுற நூல்தமிழில் வாழியே!
  மால்மருகன் முருகருளால் முத்தமிழ்போல் வாழியே!!

 3. GiRa says:

  நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம். கம்பன் கவி அமுதம்தான். ஆனால் சிலம்பு பல நூற்றாண்டுகள் முன்னோடி.

  இருக்கும் காப்பியங்களில் மூத்த காப்பியம். பெருந்தேவனார் பாடிய பாரதம், அவரது பெயருக்கு முன்னால் மட்டுமே உள்ளது. அதற்கு முன்பு பல நூல்களை ஆராயும் ஆசை கடலரசனுக்கு வந்தது என்பர்.

  போனவை போகட்டும். இருப்பவைகளை ருசிப்போம்.

  சிலம்பு என்ற சொல்லுக்கு மலை என்றும் ஒரு பொருள் உண்டு. மலை உயர்ந்தது. அப்படி உயர்ந்த அதிகாரமாய் இன்றும் நிற்பது சிலப்பதிகாரம். இடைச்செருகல்கள் உண்டுதான். ஆனாலும் சிலம்பு மெருகு குறையாதது. சிலம்பிலுள்ள இடைச்செருகல்கள் குறித்தான ம.பொ.சியின் நூல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் ஆய்ந்த தமிழ்ச் செம்மல் அல்லவா.

  மற்ற காப்பியங்களின் பாத்திரப் பெயர்களைக் கேட்டால் பொதுவாக யாருக்கும் நினைவிருக்காது. இங்கு யாரேனும் பட்டியல் போடலாம். ஆனால் பொதுவாக யாரிடமாவது சென்று கேட்டால் தெரிந்திருக்காது. மணிமேகலையில் அவள் பெயர் மட்டும் நினைவிருக்கும்.

  ஆனால் சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன், மாதவி மட்டுமல்லாது நூலை எழுதிய இளங்கோவையும் பெரும்பானோர்க்குத் தெரிந்திருக்கும். தொன்னூலாயினும் நன்னூலாயின் மக்கள் கொன்னூலே (கொள்+நூலே).

 4. GiRa says:

  மனையறம் படுத்த காதை இது. திருமணம் முடிந்து கோவலனும் கண்ணகியும் இல்லறம் நடத்திய முறை காட்டும் பகுதி.

  அதிலும் இந்தப் பாடல் முதலிரவுப் பாடல். “வா வா பக்கம் வா” என்று பாடாமல் வரிவரியாகப் பாடியிருக்கிறான் கோவலன்.

  என்னறிவுக்கு எட்டிய மாற்றங்களோடு பொருள் விளக்கம் பார்க்கலாம்.

  குழவித் திங்கள் இமையவர் ஏத்த,
  அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
  உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின்
  பெரியோன் தருக திருநுதல் ஆகு என

  பொழுதோ இரவு. அறைக்குள் நிலவோ குறைவு. மெல்லிய விளக்கொளிதான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அல்லவா.

  உள்ளே வந்தவளின் முகத்தைத்தான் பார்க்கிறான் முதலில். வானிலிருந்து கொண்டு மூடிய அறைக்குள் வராத நிலவு, இப்பொழுது வரக்கண்டான். பொலிவான முகம். அதிலும் சிறந்தது நெற்றி. அனைவரும் கண்களிலோ இதழ்களிலோ தொடங்கினால் கோவலன் நெற்றியில் தொடங்குகிறான். பின்னாளில் அந்த நெற்றிக்கு அவனால் ஒரு குறைவு வரப்போகிறது என்று அவனுக்குத் தோன்றியிருக்கலாம். யார் கண்டது!

  குழவித் திங்கள் – குழந்தை நிலா

  இமையவர் – கயிலை ஈசன்

  அந்த இமயத்து அமர் ஈசன் சடைமுடியில் அழகாகப் பொலிந்து சிறப்புற்றிருக்கிறது நிலா. இருந்தாலும்……உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின்…. இந்த அழகு நிலா உன்னோடுதான் பிறந்திருக்க வேண்டும் என்பது உண்மையென எண்ணி, அந்தப் பெரியோன் உனக்கு நெற்றியாகத் தந்தானே.

  அழகானவை எல்லாம் உன்னோடு பிறந்தவையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் நீ அவ்வளவு அழகு.

  கவசத்தொடு பிறந்தவன் கர்ணன். அது போல நிலவுடன் பிறந்தவள் கண்ணகி என்று சொன்னால் இந்த வரி இன்னும் எளிதாய் விளங்கும். கண்ணகிக்கு நெற்றியாகச் சிறப்பு செய்ய வேண்டிய பிறையானது தன்னுடைய முடியில் இருத்தல் தகாது என்று சிவனே கொடுத்தானாம் நெற்றியாக.

 5. GiRa says:

  முதலில் நெற்றியைப் பார்த்தவன், அடுத்து கொஞ்சம் கீழ இறங்குறான். இரு கரு புருவங்கள். வில்லாய் வளைந்த புருவங்கள். இந்தப் புருவங்கள் தானே பார்வைக் கணைகளை ஏற்றி நம்மேல் தொடுக்கிறது என்று வியக்கிறான்.

  இது வில்லா? வில்லைப் போன்றதா? இந்தக் குழப்பத்தில் அதை வில்லென்றே முடிவு கட்டுகிறான்.

  அதுவும் யாருடைய வில்? உருவு இலன் ஒரு பெரும் கருப்பு வில்.

  உருவு இலன் யார்? மன்மதன். அனைத்தையும் கடந்து அனைத்திற்குள் உள்ளிருக்கும் பேரானந்தப் பெரும் பொருள் தவமிருக்கும் பொழுது ஐவகை மலர்களைக் கூட்டி அம்பாக்கி எய்து, அதனால் ஐயன் சினத்திற்கு ஆளாகி நெற்றிக்கண் சினந்த நெருப்பில் சாம்பலாகிப் போனானே. அந்த மன்மதன். ரதியின் வேண்டிக் கேட்க, அவள் மட்டுமே காணவும் மற்றோர் காணாததாகவும் உருவு தந்தாரே ஈசன். அந்த மன்மதன்.

  அப்படிப் பட்ட மன்மதனுடைய ஒரு பெரும் கருப்பு வில்தான் ஒரு கரும் புருவங்கள் ஆனது.

  கருப்பு வில்லில் கூறப்படும் கருப்பு நிறத்தைக் குறிப்பதல்ல. இங்கு கருப்பு கரும்பைக் குறிக்கும்.

  பெரிய கரும்பைத்
  தோகையோடு வில்லாக்கிப்
  பூக்கணை வைத்து,
  தனது துணையவளாம்
  தோகையொடு வந்து
  தோகை மையல் உண்டாக
  எய்கிற மன்மதன்.

  முதல் இரண்டு அடிக்கு வருவோம். அடையார் முனையகத்து அமர்மேம்படுநர்க்குப் படை வழங்குவதோர் பண்பு.

  அடையார் முனைன்னா சென்னையில் இருக்கும் அடையார் அல்ல. அடையார் முனைன்னா போர்முனை.

  அமைதியை அடையா(தா)ர் செல்வது போர்முனை. அப்படிப் போர் முனைக்கு வரும் எதிர்களோடு போர் செய்யப் புகும் வீரர்களுக்கு படைக்கலன் வழங்குவது வழக்கம்.

  அதை ஏன் இங்க சொல்றான் கோவலன். அமைதியில்லாது தவிக்கிறது அவன் மனது. வெற்றித் திருமகளைப் பற்றிப் பறித்திடத் துடிக்கிறது உடல். அப்படி வந்து நிற்பவனை அப்படியே விட்டால் என்னவாகும்? காய்ந்த மாடு வயலுக்குள் புகுந்தது போலத்தான்.

  அப்படி போருக்கு வேகத்தோடு வந்தவனை எதிர்த்து அவன் வேகத்தைக் குறைத்து விவேகமாக்கி கட்டிலில் இல்லறம் சிறக்க வைக்க அவளுக்கும் படைக்கலன் வேண்டுமே. அந்தப் படைக்கலன்கள்தான் அவள் புருவங்கள்.

 6. GiRa says:

  முதலில் நுதலைப் (நெற்றி) பார்த்தான். அடுத்து புருவம் கண்டான். அடுத்து டக்கென்று இடைக்கு நழுவுகிறான் கோவலன். ஏன்? அந்த வில்லாகிய புருவம் தாக்கி விட்டதே. அதனால்தான் நழுவல்.

  அந்த இடையை எப்படிப் பார்க்கிறான் தெரியுமா? பாடலைச் சற்று பார்ப்போம்.

  மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின் – மூவாமருந்து எது? ஏவா மக்கள் மூவா மருந்து என்று ஔவை சொன்னதை இங்கு நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. 🙂 கண்ணகியும் ஒருவிதத்தில் ஏவாமக்கள் வகையில் வருகின்றவள்தான்.

  மூவாமருந்து என்று சிலப்பதிகாரம் சொல்வது அமுதம். பாற்கடலைக் கடைந்தார்கள் அல்லவா. அப்பொழுது வந்தது அமுதம். அந்த அமுதம் என்று இங்கு சொல்லப்படுவது எது? அல்லது யார்? வேறு யார்? கண்ணகிதான்.

  அப்படி அமுதம் தோன்றுவதற்கு முன்பு பல பொருட்கள் பாற்கடலில் தோன்றின. அப்படித் தேவர்கோமான் இந்திரன் பெற்றது ஒரு படைக்கலன். அந்தப் படைக்கலனின் பிடி சிறுத்திருக்கிறது. மூவிலைச் சூலம் விரிந்திருந்தாலும் அதன் பிடி சிறுத்திருப்பது போல இடையும் சிறுத்திருக்கிறதாம் கண்ணகிக்கு.

  மானல்லவோ கண்கள் தந்தது
  மயில்லல்லவோ சாயல் தந்தது
  என்று கவியரசர் எழுதியது நினைவிற்கு வருகிறது.

  அது போல சிறுத்த இடை தந்தது இந்திரன் படைக்கலனாம். இப்பொழுது வரிகளைப் படியுங்கள். புரியும்.

  மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
  தேவர் கோமான் தெய்வக் காவல்
  படை நினக்கு அளிக்க அதனை நினக்கு இடையென

 7. என் முருகனைப் பற்றிய சிலம்பு வரிகள்…யாரேனும் சொல்லுவாங்களா-ன்னு ரொம்ப நேரமாக் காத்துக் கிடக்கேன்! 🙂

 8. அறுமுக ஒருவன் = அவன் “ஒருவன்” தான்!

  அப்படியென்ன பெருசா ஒருவன்?:)
  ஒரு கூட்டத்துள் பல பேர் இருந்தாலும், அவளுக்கு, அவன் மட்டும் தனியாகத் தெரிந்து விடுவான் = ஒருவன்!

  அது அவன் உருவத்தாலா, வாசனையாலா, குரலாலா…என்னன்னே தெரியாது!
  ஆனாலும் தெரிந்து விடுவான்! அப்படியான ஒரே “ஒருவன்” = என் முருகன்!
  ——————–

  ஓர் பெறுமுறை இன்றியும் = கொஞ்சம் கூட முறை தெரியாத லூசு இந்த முருகன்:)

  ஆறு முகமாம்! பதினெட்டு கண்ணு! அதுல ஒரு கண்ணுக்குக் கூடவா, என் துன்பம் தெரியாது?
  அன்பர்களின் அன்பைப் பெறும் “முறை” தெரியாதவன்!

  முறை வகுத்து வச்சிக்கிட்டாத் தானே முறை பாராட்டறதுக்கு? முருகனுக்கு இந்த வரை-முறை-தகுதியெல்லாம் தெரியாது!
  ———————

  //இருமுறை காணும் இயல்பினின் அன்றே//

  சொக்கன் சார், இங்கே ஒரு சின்ன பிழை திருத்தம்! இறுமுறை! வல்லின ற!
  அறுமுக-இறுமுறை-பெறுமுறை! எல்லாம் எதுகை!

  அது என்ன ‘இறு’முறை? = இறுக்கிக் கட்டிக் கொள்ளும் முறையா?:))
  இறுத்தல் = அழித்தல்! முடிவுக்கு கொண்டு வரல்! இறுதி செய்தல்! அதான் இறு+தி!

  இறுமுறை காணும் = ஒரு முடிவு பண்ணிப் பாக்குறது
  இறுமுறை காணும் இயல்பினன் அன்றே! = என்னை ஒரு முடிவு பண்ணிப் பாக்குறது-ன்னு நினைச்சிட்டான் போல!:)
  ———————

  அன்றே = ஆமாம்-ன்னும் பொருள்! இல்லை-ன்னும் பொருள்! 🙂
  தேற்றேகாரம்-ன்னு சொல்லுவாய்ங்க!

  கோவலனுக்கு முருக பக்தியோ, பாசமோ என்னவோ? அதான் கிடந்து அலைபாயுது மனசு:)
  * அன்றே=என்னை ஒரு வழியாக்கணும்-ன்னு முருகன் நினைச்சிட்டானோ! இருக்காதே!
  * அன்றே=என்னை ஒரு வழியாக்கணும்-ன்னு முருகன் நினைச்சிட்டானே!

  டேய், கொடியவா முருகா! சேவல் கொடியவா முருகா…
  அப்படி என்ன தான் இந்த முருகன் பண்ணிட்டான் கோவலனை?…

 9. அப்படி என்ன தான் இந்த முருகன் பண்ணிட்டான் கோவலனை?…

  அஞ்சுடர் நெடுவேல் ஒன்று
  நின் முகத்துச்
  செங்கடை மழைக் “கண்” இரண்டாய் ஈத்தது!

  இவன் வேலே ஒரு கொடிய ஆயுதம்!
  தொடு வேலவனே தொடு வேலவனே-ன்னு தொட்டுக்கிட்டே இருப்பான்!
  அது போதாது-ன்னு அந்த வேல், குட்டி வேற போட்டுச்சாம்!:)

  சின்னபுள்ளையா இருக்கச் சொல்ல, மயிலிறகை, நோட்டுக்குள் வைத்து, குட்டி போட்டுச்சா-ன்னு பார்ப்போம்-ல்ல?:)
  அதே போல், வேல், இரண்டாய் ஈத்தது! = என்னமோ மகவு ஈத்தாற் போலச் சொல்லுறாரு:)
  —————-

  நின் முகத்துச் செங்கடை மழைக் “கண்”
  = உன் முகத்திலே, சிவப்பா ஓரத்தில் இருக்கே, கண்ணு!
  = அதான் அவன் வேல் போட்ட குட்டி!:)

  கொடி-யவனின் கொடிய வேல், இரண்டாய் ஈத்து, ரெண்டு கண்ணாய் மாறிப் போச்சு!
  இப்படி வேல், வேல்-ன்னு என்னைக் கொல்லுது!
  பாவி முருகா! என்னை ஒருவழி பண்ணனும்-ன்னு நினைச்சிட்டியா? ச்ச்சீ போடா!:)))

 10. இந்தச் “செங்கடை-மழைக்கண்” என்பது அரிய சொல்லாட்சி!

  *கண்ணுல எப்படி மழை பெய்யும்?
  *அது என்ன செங்கடை-மழை?

  இதையெல்லாம் விளக்கினா…அப்பறம் எனக்கு ரொம்பப் பசிக்கும்! மணி இப்பவே 2:30pm! Oppiceல எல்லாரும் சாப்பிட்டுட்டாங்க, என்னைத் தவிர…நான் போய்ச் சாப்பிட்டு வரேன்!:)
  நேற்று இரவு முழுதும் தூக்கமும் இல்ல! = செங்கடை-மழைக்கண்!

 11. KRS, பின்றீங்க சார்.
  It’s a pleasure to read your elaborations here.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s