என்ன சொல்லிப் பாடுவேன்?

மாசுஇலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி

நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி

‘ஆசு இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல்

பேச இன்று உன்னைக் கேட்டோம், பித்தனோ மறையோய்?’ என்றார்.

*

அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்

‘முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே

என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்’ என்றார், நின்ற

வன் பெரும் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.

நூல்: திருத்தொண்டர் புராணம் – சுந்தரமூர்த்தி நாயனார் புராணம் (#176 & 209)

பாடியவர்: சேக்கிழார்

சூழல்: இரு பாடல்களும் வெவ்வேறு சூழல்களில் வருபவை. ஆனால் தொடர்புள்ளவை. அதனை உரையோடு பார்த்தால் புரியும்

திருநாவலூர் என்ற ஊரில் நம்பி ஆரூரர் என்பவருக்குத் திருமணம். அங்கே ஓர் அந்தணர் வருகிறார். ‘கல்யாணத்தை நிறுத்துங்கள்’ என்கிறார். காரணம் கேட்டால் ‘இந்த நம்பி ஆரூரன் என்னுடைய அடிமை’ என்கிறார். அப்போது…

குற்றம் இல்லாத மரபில் தோன்றிய வள்ளல் நம்பி ஆரூரருக்கு அந்த அந்தணரைப் பார்த்துச் சிரிப்புதான் வந்தது. ஆனால் முற்பிறவியில் சிவனுக்குப் பெரும்தொண்டு செய்து வாழ்ந்த அவருக்கு, அந்தணர் வேடத்தில் வந்திருப்பது சிவன்தான் என்பது எப்படியோ சிந்தனையில் தோன்றியிருக்கவேண்டும். அந்த நேசத்தால் அவர் வந்தவரைக் கேலி செய்து சிரிக்கவில்லை. பொறுமையாகப் பேசினார்:

‘குற்றம் இல்லாத அந்தணர்கள் இன்னோர் அந்தணருக்கு அடிமையாவது வழக்கத்தில் இல்லையே. இப்படி நீ சொல்வது விநோதமாக உள்ளது, நீ என்ன பித்தனா?’

*

அதன்பிறகு, வழக்கு நடக்கிறது. நம்பி ஆரூரர் அந்த அந்தணருக்கு அடிமைதான் என்பது முடிவாகிவிடுகிறது. சிவன் தன்னுடைய திருவிளையாடலை முடித்துக்கொண்டு தனது நிஜமான தோற்றத்தைக் காண்பிக்கிறார். நம்பி ஆரூரர் ஆச்சர்யத்தில் மூழ்குகிறார். ‘இறைவா, உன்னை என்ன சொல்லிப் பாடுவேன்!’ என்று நெகிழ்கிறார். அப்போது…

அழகிய கண்களைக் கொண்ட சிவபெருமான் தன்னுடைய அன்பராகிய நம்பி ஆரூரரை அருள் பொங்கப் பார்த்தார். ‘முன்பு என்னைப் பித்தன் என்று சொன்னாய். ஆகவே, அந்தச் சொல்லையே என்னுடைய பெயராக வைத்துப் பாடு’ என்று ஆணையிட்டார். பெரும் தொண்டராகிய நம்பி ஆரூரரும் அந்த வள்ளலைப் பாடத் தொடங்கினார்.

துக்கடா

 • வழக்கு தொடங்குவதற்கு முன்னால் நம்பி ஆரூரர் சிவனை(அதாவது அந்த அந்தணரை)ப் ‘பித்தன்’ என்று திட்டியிருந்தார். வழக்கு முடிந்தபிறகும் அந்த வார்த்தையை மறக்காமல் நினைவு வைத்துக்கொண்டு பேசுகிறார் சிவபெருமான். இப்போது ‘சுந்தர மூர்த்தி நாயனார்’ ஆகிவிட்ட நம்பி ஆரூரரை அதே வார்த்தையை முதல் வரியாக வைத்துப் பாடப் பணிக்கிறார்
 • சுந்தரர் என்ன பாடினார்? அந்தப் பாட்டு நாளைய #365paa
075/365
Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சிவன், சுந்தரர், சேக்கிழார், நாடகம், பக்தி. Bookmark the permalink.

12 Responses to என்ன சொல்லிப் பாடுவேன்?

 1. சுப இராமனாதன் says:

  >>>>>அந்தணர் வேடத்தில் வந்திருப்பது சிவன்தான் என்பது எப்படியோ சிந்தனையில் தோன்றியிருக்கவேண்டும்.
  >>>>>சிவன் தன்னுடைய திருவிளையாடலை முடித்துக்கொண்டு தனது நிஜமான தோற்றத்தைக் காண்பிக்கிறார். நம்பி ஆரூரர் ஆச்சர்யத்தில் மூழ்குகிறார்

  இடிக்குதே?

  • gragavanblog says:

   இடிக்கலை. ஒரு சிலரைப் பாத்ததுமே பிடிச்சிரும். ஒரு சிலரைப் பாத்ததுமே பிடிக்காது. ஏன்னு நமக்குத் தெரியாது.

   அது மாதிரி முதலில் வந்திருக்கும் ஆளைப் பார்த்ததும் சுந்தரருக்கு ஏதோ ஒரு வகையில பாசம் புரிஞ்சது. ஆனா ஏன்னு புரியலை. பிறகு உண்மை தெரிந்ததும் தெளிந்து விட்டார்.

   இப்பவும் இடிக்குதா? 🙂

  • காதலிக்கு, எப்படியும் காதலன் வந்துவிடுவான் என்ற உள்ளுணர்வு!
   கடற்கரையில், தொலைவில் தெரிபவர்களைக் கூட அவனோ, அவனோ?-ன்னு மனம் சொல்லுது!

   ஆங், ஒருத்தன் ஓடியாறான்….இவளை நோக்கி! இவளும் பார்த்து விட்டாள், அவனே தான்! – மனமெல்லாம் ஒருவித மகிழ்ச்சி-வியப்பு! அப்பாடா, இந்த முறை இவனே தான்!
   அவன் கிட்டக்க வந்து, hey honey, sorry dee.. late ன்னு மூச்சிரைக்கச் சொல்லுகிறான், அப்போதும்…அதே வியப்பான மகிழ்ச்சியைத் தானே காட்டுவா?

   நீ ஓடியாற போதே, உன்னைப் பார்த்து மகிழ்ந்துட்டேன், வியந்துட்டேன்…இப்போ வியக்க ஒன்னுமில்லை! வா, நேராச் சுண்டல் சாப்பிடுவோம்-ன்னா சொல்லுவா?:))

   * இன்னான் என்று தெரியாத போது = ஒரு வியப்பு!
   * இன்னான் என்று தெரிந்த பின்பும் = ஒரு வியப்பு!
   முன்னது = தனக்கு மட்டும்! பின்னது = இருவருக்கும்!
   தான் வியப்பதைப் பார்த்து, அவனும் வியந்து மகிழ்வதான ஒரு காதல் நாடகம்! அப்பாடா நீங்க தானா?-ன்னு அவள் விரியும் கண்ணைக் கண்டு, அவனுக்கும் விரியும்! 🙂

   அதே போல் தான் சுந்தரருக்கும்!
   முதலில் உள்ளுணர்வு வியப்பு! பின்பு வெளியுணர்வு வியப்பு!
   – இப்போ சொல்லுங்க! “இடிக்குதா”? :))

 2. gragavanblog says:

  இந்தப் பாடலின் பொருள் விளக்கத்தை விட நான் ரசித்தது மாசு-ஆசு பயன்பாட்டைத்தான்.

  மாசு என்ற சொல் நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்தது.
  மாசில் வீணையும் மாலை மதியமும்
  மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
  மாசிலா உண்மைக் காதலே

  ஆனா ஆசு அவ்வளவா கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆசுஇல் (ஆசில்) அந்தணன். ஆசு என்றாலும் குற்றம். அந்தணன் ஆசு இல்லாதவனா? அல்லது ஆசு இல்லாதவன் தான் அந்தணனான்னு விவாதிக்கலாம். ஆனா இங்க வேண்டாம்.

  நம்ம கதைக்கு வருவோம். மாசுன்னா என்ன? ஆசுன்னா என்ன?

  மாசு என்பது அழுக்கு. ஆசு என்பது குற்றம். அழுக்கு தொடைச்சா போயிரும். குற்றம்? செய்யாம இருந்தாத்தான் நல்லது.

  மாசு ஏற்படக்கூடியது. நீக்கக் கூடியது. மாற்றக் கூடியது. ஆனால் குற்றம் எப்படிப் போகும்? செய்யாமல் இருந்தால் ஒழிய குற்றம் போகாது.

  மாசில் வீணை – வீணையில் சுரங்கள் சிறப்பா வரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கு. ஏதேனும் சுரக்குற்றம் உண்டானால் தந்தியை மாற்றியோ தளர்த்தியோ இழுத்தோ சரி செய்யலாம்.

  ஆனால் கொள்ளை எனப்படும் குற்றம்? செய்த பிறகு போகுமா? போகாது. செய்யாமல் இருப்பதே உய்யும் வழி.

  மாசுக்கும் ஆசுக்கும் வேறுபாடு புரிஞ்சிருக்கும். பாட்டுக்கு வருவோம்.

  மாசுஇலா மரபின் – மரபு போற்றத்தக்கதாக இருக்க வேண்டும். ஒருவேளை ஏதேனும் தவறு நேர்ந்து விட்டாலும் திருந்திக்கொள்ளலாம். ஆகையால்தான் மரபைப் பற்றிச் சொல்லும் பொழுது மாசு இல்லாத மரபு என்று கூறுகிறார்.

  ஆசுஇல் அந்தணன் – குற்றமில்லாத அந்தணன்னு சொல்லக் கூடாது. குற்றம் செய்யாத அந்தணன் என்று சொல்ல வேண்டும். ஏன் அங்க குற்றம் செய்யாதன்னு சொல்லனும்? அந்தணன் ஆகப்பட்டவன் ஒரு வேளை உணவுக்கும் யாசித்துப் புசிக்க வேண்டியவன். அப்படிப் பொருட்பற்று இல்லாதவனாக இருக்க வேண்டிய ஒருவன் மற்றொருவனை அடிமை என்று நினைத்தால் அது குற்றமாகாதா?

  அதனால்தான் இதுவரைக்கும் நீ குற்றம் செய்யாதவனாக இருந்தாலும் என்னை உன் அடிமை என்று சொல்வதன் வழியாக குற்றவாளி ஆகப் போகிறாய். உனக்குப் பைத்தியமா என்று கேட்கிறார் சுந்தரர்.

  • மாசு,ஆசு பற்றிய மாசிலா+ஆசிலா விளக்கம்!
   நனி நன்று!
   இனியது கேட்கின், இனியது கேட்டேன்!
   மாசில் வீணை போல், ஆசில் அருந்தமிழ் போல் இனித்தது…

   ஆசு+இரியர் = ஆசிரியர் என்பது தான் வழக்கமே தவிர மாசிரியர்-ன்னு சொல்லுறோமா?

   ஒரு ஆசிரியர்-ன்னா மாசைத் துடைச்சிக்கலாம்-ன்னு இருந்துறக் கூடாது! ஆசே இல்லாதவராய் ஒழுகணும்! அப்போ தான் மாணவர்களை உருவாக்க முடியும்!
   * மாணவர்கள் = மாசில் மாணவர்களா இருக்கலாம்!
   * ஆனா ஆசிரியர் = ஆசில் ஆசிரியரே!

 3. ChPaiyan says:

  சூப்பர் பாட்டு & விளக்கம்.

  ஜெமினி & சிவாஜி?

  பித்தா பிறைசூடி?

 4. //‘முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
  என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்’//

  மிக மிக நெருங்கிய உறவில் பார்ப்போம் அல்லவா?
  எப்பவாச்சும் வந்த சண்டையில்…”டேய் லூசு, பொற்க்கி ரவி”-ன்னு திட்ட…அதையே பிடிச்சி வச்சிப்போம்!

  பிற்பாடு சமாதானம் ஆனாலும்…அன்னிக்கி என்னை லூசு ரவி-ன்னு சொன்ன-ல்ல? இப்ப மட்டும் என்னவாம், வந்து கொஞ்சற?-ன்னு கேட்க…
  “சாரிடா லூசு ரவி, செல்லம்-ல்ல லூசு ரவி, போடா பொற்க்கி முருகவா”-ன்னு எல்லாம் நடக்கும்-ல்ல? அதே தான் இங்கேயும் நடக்குது!:))

  அப்போ என்னைப் பித்தா-ன்னு கூப்பிட்ட-ல்ல? இப்பவும் அப்படியே கூப்புடுறா-ன்னு ஈசன் கிடுக்குறாரு! இவரும் பித்தா-ல்ல, பிறைசூடிப் பெம்மான்-ல்ல?-ன்னு பம்மப் போறாரு:))

 5. சுந்தரர் = வன்+தொண்டர் = வன்மை(முரட்டுத்தனம்) அதிகம்:))
  ஆனா, எவ்ளோ முரண்டு பிடிச்சாலும், அதுக்குள்ள ஒரு அன்பு இருக்கத் தான் இருக்கு…ஆழமா…ஒளிஞ்சிக்கிட்டு!

  அதான் போலும், வன்றொண்டர் என்பதை விடத், “தம்பிரான் தோழர்” என்னும் பட்டம் இன்னும் பரவி விட்டது! அவ்ளோ ஒன்றிய தோழமை…
  தன் அந்தரங்க ஆசைகளைக் கூட, ஈசனிடமே மறைக்காது சொல்லக் கூடிய தோழமை!

  * காதலுக்கும் காமத்துக்கும் தூது போனாரு ஈசன்!
  * பிற்பாடு இன்னொரு காதலுக்குப் “பொய்” சாட்சி சொல்லவும் துணிஞ்சாரு ஈசன்!
  * ஒரு சமயம் கோவம் வர, அடிக்கவும் அடிச்சாரு! கண் பார்வை மங்கிப் போச்சு! அதைத் திருப்பியும் குடுத்தாரு ஈசன்!
  * பிற்பாடு, சுந்தரா என்னை மறந்தாயோ?-ன்னு வாய் விட்டே கேட்கவும் கேட்டாரு ஈசன்!

  இப்படி…அடிச்சாலும் அணைச்சாலும்…காதலிலும் காமத்திலும்…”அவனே”-ன்னு இருக்கும் ஒரு அதீத தோழமை!…
  என்னை மறந்துட்டியா?-ன்னு கேட்கும் தோழமை! கடைசியில் “அவனே” என்று அவன் நிழலாகவே கண்ணாடியில் சென்று கலந்தது!
  – பித்தா! பெம்மானே…என் லூசு முருகவா…..

 6. Pingback: பித்தா « தினம் ஒரு ’பா’

 7. Pingback: பித்தா! « தினம் ஒரு ’பா’

 8. balu says:

  மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

 9. Pingback: மாதோட்ட மாதேவன் | தினம் ஒரு ’பா’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s