நின்ற தவம்

கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ – கூர்நுனைவேல்

வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

கொண்டிருக்கப் பெற்ற குணம்.

நூல்: முத்தொள்ளாயிரம் (#75)

பாடியவர்: தெரியவில்லை

பாடப்பட்டவர்: பாண்டியன்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

கார் காலம். நல்ல மணம் கொண்ட நீல நிறக் குவளைப் பூ தினந்தோறும் நீர்நிலையின் மத்தியில் நின்றபடி தவம் செய்கிறது. எதற்காக?

கூரான நுனி கொண்ட வேலை ஏந்தியவன், வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்தவன், விரைந்து செல்லும் குதிரையைக் கொண்டவன், பாண்டியன் வழுதியின் மார்பைச் சேரும் பெருமைக்காகதான் அந்தக் குவளை மலர் தவம் இருக்கிறதோ?

துக்கடா

 • சாதாரணமாகக் குளத்தில் நிற்கிறது குவளை மலர். அதன்மீது ‘பாண்டியன் மார்பைச் சேர்வதற்காகத் தவம் செய்கிறாயோ’ என்று புலவர் தன்னுடைய குறிப்பை / கற்பனையை ஏற்றிச் சொல்வதால் இந்தப் பாடல் தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளது
 • இந்தப் பாடலின் மையக் கருத்தைச் சற்றே நீட்டி ஒரு காதல் பாட்டில் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து:
வெள்ளிமலரே,
*
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய், ஒற்றைக் காலில் உயரத்தில் நின்றாய், மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய், சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய், இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ?
*
வெள்ளி மலர் அன்று இயற்றிய தவம் எதற்கு? பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு!
 • ’முத்தொள்ளாயிரம்’ (கிடைத்துள்ள) பாடல்கள் அனைத்திற்கும் நான் எளிய உரை ஒன்று எழுதியுள்ளேன். அது கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும் –> https://www.nhm.in/shop/978-81-8493-455-7.html
074/365
Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், சினிமா, பாண்டியன், முத்தொள்ளாயிரம், வெண்பா. Bookmark the permalink.

3 Responses to நின்ற தவம்

 1. ஜோடி படம் தானே? பிரசாந்த்-சிம்ரன்?:)) வெள்ளி மலரே வெள்ளி மலரே…பாட்டை விட, தனியா வரும் ட்யூன் இன்னும் நல்லா இருக்கும்!
  வைரமுத்து-ரஹ்மான் கூட்டணியில் தான் பல சங்கப்பாடல்கள், அதிகம் திரையிசையில் வந்துள்ளன!
  சினிமாவைக் கலந்து குடுப்பதற்கு நன்றி சொக்கரே! சங்கத் தமிழ், சினிமா மூலமாக, இன்னும் பலரையும் சென்றடையும்!

  உங்க முத்தொள்ளாயிரம் புத்தகம், இங்கே @இலவசத்திடம் வாங்கிக் கொள்ளலாமா?:)
  ————–

  முத்தொள்ளாயிரம் = 3 தொள்ளாயிரமா? (2700)..இல்லை 3 பிரிவுகள் கொண்ட தொள்ளாயிரமா? (900)
  சேர, சோழ, பாண்டியர் மூவரையும் பாடும் நூல்…அதுவும் களப்பிரர் காலத்தில்! முதலாழ்வார்கள் மூவரும் கூட இதே காலம் தான்!
  களப்பிரர் காலம்-ன்னாலே இருண்ட காலம்-ன்னு முத்திரை குத்தி, தங்களுக்குப் பிடிச்சமானதே ‘வரலாறு’ என்று காலங்காலமாக எழுதி வைத்தனர், சில சமண வெறுப்பாளர்கள்!
  ஆனால் இன்று, தமிழிலக்கியங்கள் அனைவர் கைக்கும் எட்டிய பின்னர், அவை அனைத்தும் தகர்க்கப்பட்டு விட்டன!
  முத்தொள்ளாயிரம் போன்ற நூல்களே, இதற்குச் சாட்சி!

 2. கார்நறு நீலம் = நீலக் கலர் தாமரைப்பூ பார்த்து இருக்கீங்களா? தாமரை இல்லை! குவளைப் பூ வகை! கரு நீல நிறம்!

  கடிக் கயத்து = கயம் என்பதும் ஒரு வகை நீர்ப்பூ -ன்னு தான் நினைக்கிறேன்! கடி மலர்=கடி கயம்= மணமுள்ள பூ!

  வைகலும், நீர்நிலை நின்ற தவம்கொலோ = விடியலில், தினமுமே, தவம் செய்யுதாம், தண்ணியில் நின்னுகிட்டு!

  எதுக்கு?= அவன் மார்பை அடைய! மாலையாய் அடைய! காதலன் மார்பில்….மாலையாய், இரண்டு கைகள் கோர்த்து இருப்பதில் தான் எத்தனை சுகம்!!
  ———————-

  எழில் வேங்கட மலைமேல் தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே!
  தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில், செண்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே!
  ….இப்படியெல்லாம் பூவாய் நின்னு, அவன் மார்பை அலங்கரிக்க ஆசைப்படும் பாசுரங்கள்! கொல்லி காவலன் குலசேகராழ்வார் கவிதை!

  இதை அப்படியே பின்னாளில், கண்ணதாசன் எடுத்தாண்டான், முருகனுக்கு!
  மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் – ஒரு
  மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன்
  பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்!!
  பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூ ஆவேன்!!

  நானும், இந்தப் பூ மாதிரியே…நின்னுறட்டுமா? கூர் நுனி வேல் கொண்ட சேவல் “கொடியவன்” ஒருவனுக்கு?

  வேணாம்! பூ ஒரு நாள் தான் இருக்கும்! அப்பறமா வாடிரும்! தூக்கி வீசிருவாங்க!
  ஆனா பூங்கொடியாவே மாறி, அவனைச் சுத்திக்கிட்டா?
  எத்தனை பூ மலர்ந்தாலும், உதிர்ந்தாலும், அவனைச் சுற்றியே எல்லாம்! அவனைச் சுற்றியே இந்தக் கொடி!
  முல்லை மலராய் முருகன் மேனியில் கொடி ஆவேன்…நான்

 3. Sabari GS says:

  அருமையான தளம்… முதல் முறையாக வருகிறேன் நான். இது போல ஒரு தளம் இருக்காதா என்று நினைத்ததுண்டு. நன்றி. விளக்கங்களும் துணுக்குகளும் சிறப்பு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s