உடைத்து

வேழம் உடைத்து மலைநாடு; மே தக்க

சோழ வளநாடு சோறு உடைத்து – பூழியர்கோன்

தென்னாடு முத்து உடைத்து; தெள்நீர் வயல் தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து.

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: ஔவையார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

மலைகள் அதிகம் உள்ள சேரனின் நாட்டில் சிறந்த யானைகள் நிறைந்திருக்கும்.

மேன்மை கொண்ட சோழனின் நாட்டில் வயல்கள் நன்கு வளமாக விளையும், சோறு நிறைந்திருக்கும்.

பூழியர்களின் தலைவனாகிய பாண்டியனின் தென்னாட்டில் முத்துகள் நிறைந்திருக்கும்.

தெளிவான நீர் நிரம்பி நிற்கும் வயல்களைக் கொண்ட தொண்டை நன்னாட்டில், நல்ல சான்றோர்கள் நிறைந்திருப்பார்கள்.

துக்கடா

 • ’பூழியர்’ என்பது ‘பாண்டியர்’களைக் குறிக்கும் சிறப்புச் சொல்
 • ‘தொண்டை நாடு’ என்பது தமிழகத்தின் வடகிழக்குப் பகுதி. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டது

073/365

Advertisements
This entry was posted in ஔவையார், சேரன், சோழன், தனிப்பாடல், பாண்டியன், புகழ்ச்சி, வெண்பா. Bookmark the permalink.

5 Responses to உடைத்து

 1. G.Ragavan says:

  பிற்காலத்து ஔவை பாடிய பாடல் இது. தொண்டை நாடு பற்றிய குறிப்பிலிருந்து அறியலாம். 

  எளிய பாடல்தான். ஆனாலும் இதற்குள்ளும் மறைபொருளுண்டு. அதற்குப் பிறகு வருவோம்.

  மலைநாட்டில் வேழங்கள் நிறைய. மலைவேழம் நிறைந்த நாடு என்பதால் மலையாளம் ஆனதோ!

  அளம் என்றால் இடம். எ.கா உப்பளம். அது போல மலையளம் மலையாளம் ஆகியிருக்கலாம்.

 2. G.Ragavan says:

  சோழ வளநாடு என்று சொல்லும் பொழுதே வளத்தின் பயனான உழவு செழித்து சோறு நிறைக்கும் நாடு என்னும் பொருள் வந்துவிடுகிறது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதால் மேதக்க (மேன்மையான) சோழவளநாடு என்கிறார் ஔவையார்.

  பூழியர்கோன். பாராண்ட பாண்டியர்கள் தமிழ்மன்னர்களில் முதல் மன்னர்கள். தென்னவன், வழுதி, பூழியர்கோன், செழியன் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள். அந்தப் பாண்டியர்களின் நாட்டில்தான் முத்து விளைகிறது. மற்ற நாடுகளெல்லாம் நிலத்தில் விளைவித்தால், பாண்டிநாடு கடலிலும் விளைவித்திருக்கிறது.

 3. G.Ragavan says:

  தொண்டைநாடு சான்றோருடைத்து. பல்லவர் ஆட்சியில் காஞ்சி செழித்தது. வடவர்கள் நகரேஷு காஞ்சி என்பார்கள். நாவுக்கரசர் இருந்த ஊர். பின்னாளில் அருணகிரி, வள்ளலார் என்று அருட்சான்றோரைப் பெருமித்த ஊர். சோழநாட்டுப் பட்டினத்தடிகளுக்கே வீடுபேறு சென்னைத் திருவொற்றியூர் தானே. பாண்டிநாட்டு பாம்பன் சுவாமிகளுக்கோ சென்னை திருவான்மியூர்.

  இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சிறப்புடையன.

 4. பூழியர் கோன்-ன்னு பாண்டியனைச் சொல்கிறார்களே! “பூழி” என்றால் என்ன?
  பூழி = சேறு, புழுதி!
  விண்ணைப் பூழிப் படுத்தியதாம் சுழற் காற்று-ன்னு பாரதியின் பாஞ்சாலி சபதக் கடைசி வரிகள்!

  அச்சிச்சோ! “சேற்றுக்கு மன்னன்”-ன்னா பாண்டியனைச் சொல்லுறா பாட்டி?:)))
  சோற்றுக்கு = சோழன்! சேற்றுக்கு = பாண்டியனா?

  முன்பு, பாண்டியன் கல்யாண வீட்டில் பாட்டிக்குச் சாப்பிட இடம் கிடைக்கலை!
  வழுதி கலியாணத்து உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியாலே
  சுருக்குண்டேன், சோறு மட்டும் உண்டிலேன்-ன்னு அவள் ஏக்கம்! அதுக்காக இப்படிப் பழி வாங்கிட்டோளோ?:)))

  நல்ல தமிழுள்ளம், இப்படி மனத்திலே வன்மம் வைத்துக்கொண்டு, சமயம் கிடைக்கும் போது, இழிக்குமா? இழிக்கவே இழிக்காது!
  அப்பறம் என்ன “பூழி”?
  காரணம் இருக்கு! என்ன-ன்னு சொல்லுங்க!:)

 5. G.Ragavan says:

  ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன சிறப்புன்னு சொல்றதுக்கா கிழவி ஒரு பாட்டை எழுதீருக்கப் போறாங்க? அப்படியே பொருள் தெரிஞ்சாலும் வேற ஏதோ ஒரு மறைபொருள் வெச்சிருப்பாங்களே.

  இந்தப் பாட்டுலயும் இருக்கு மறைபொருள். அந்த மறைபொருளைச் சுருக்கமாச் சொன்னா “சரஸ்வதி சபதம்”.

  கல்வியா செல்வமா வீரமான்னு கேள்வி கேக்குறாரே நாரதர். அந்த மூன்றும் இன்றியமையாதவைன்னு படத்தின் முடிவுல சிவன் வந்து சொல்லீர்ராரு.

  அதைத்தான் ஔவைக்கிழவி இந்தப் பாட்டில் சொல்றாங்க. வரப்புயரன்னு சொன்ன மாதிரி.

  சான்றோர் வாழும் நாடு இறைவன் வாழும் நாடு. ஏன்னா நல்ல அறிவுரைகளும் கருத்துகளும் மக்கள் படிக்கப் புரிந்து நடக்க வழி செய்யும்.

  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். அப்படி அறிவு சிறந்த சான்றோர்கள் நாட்டின் உணவு வளத்தில் தங்கள் அறிவைச் செலுத்துவார்கள். ஒரு நாடே கூடி உழைக்கும் வயல்களில் விளைச்சல் சிறப்பாகத்தான் இருக்கும். அவ்வாறு கழநி செழித்த மக்களிடத்தில் செல்வம் சேரும். அதுதான் முத்து. அப்படி கல்வி, உழவு, செல்வம் என்று சிறந்து விளங்கும் நாட்டில் பாதுகாப்பாக வேழங்களும் (படைகள்) இருக்கும். இப்படித்தான் எந்த நாடும் முன்னேற முடியும். இப்படி முன்னேறாத நாடுகளின் முன்னேற்றம் நிலையாக இருக்காது.

  வல்லரசு ஆனால் உழவு செழிக்காது. ஆனால் உழவு செழித்தால், செல்வம் பெருகி வல்லரசு ஆகலாம். அதற்காக சரியான வழிமுறையை நம்நாடு மட்டுமல்ல. உலகமே பின்பற்ற வேண்டும். இல்லையேல் தொழுதுண்டு பின்செல்லும் நிலைதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s