சிறியவர், பெரியவர்

தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதை

வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்

ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.

தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை

தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு

மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

நூல்: நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை (#16, 17, 18 & 19)

பாடியவர்: அதிவீர ராம பாண்டியர்

’சுருக்’ விளக்கம்: யாரையும் உருவத்தை வைத்து எடைபோடாதே!

முழு விளக்கம்:

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

சுவையான பனம்பழம் நன்கு பெரிதாகத் திரண்டிருக்கும். அதில் உள்ள ஒரு விதை வானை எட்டும் அளவுக்கு உயரமாக வளரும்.

ஆனால், அந்தப் பனைமரத்தின் அடியில் ஒருவர்கூட நிழலுக்கு ஒதுங்கமுடியாது.

பனம்பழத்தோடு ஒப்பிடுகையில் ஆலம்பழம் மிகச் சிறியது. அதில் உள்ள ஒரு விதையைக் கையில் எடுத்துப் பார்த்தால், தெளிந்த நீரை உடைய குளத்தில் வசிக்கும் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாகதான் இருக்கும்.

ஆனால் அந்த விதை வளர்ந்ததும் பிரமாண்டமான ஆல மரமாகும். அதன் நிழலில் பெரிய அரசரும் அவருடைய காலாட்படையும் யானைப்படையும் குதிரைப்படையும் அலங்கரிக்கப்பட்ட தேரும்கூடத் தங்கமுடியும்.

ஆக, நாம் பெரியவர் என்று நினைப்பவர்கள் எல்லாம் பெரியவர்களும் இல்லை, சிறியவர் என்று நினைப்பவர்கள் எல்லாம் சிறியவர்களும் இல்லை!

துக்கடா

 • வெற்றிவேற்கை / நறுந்தொகை நூலை நம்மில் பலர் பள்ளிக் காலத்தில் படித்திருப்போம். அதனை எளிய உரையுடன் முழுமையாகப் படிக்க இங்கே செல்லலாம் –> http://www.tamilvu.org/library/l6150/html/l6150ind.htm

072/365

Advertisements
This entry was posted in அதிவீர ராம பாண்டியன், அறிவுரை, உவமை நயம், வெற்றிவேற்கை / நறுந்தொகை. Bookmark the permalink.

4 Responses to சிறியவர், பெரியவர்

 1. அதிவீரராம கவிதை அருங்கவிதை!

  இதே கருத்தைத் தான்…”தில்லுமுல்லு” என்கிற பதினெண் நடுக்கணக்கு நூலில்…அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் சொல்லி இருக்காரு!:)

  உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே!
  அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!!

 2. jokes apart…
  பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
  சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

  -ன்னு பாட, எவ்ளோ ‘தில்லு’ வேணும்? அவையில் பெரியவர்கள் எல்லாம் கோவிச்சிப்பாங்க-ன்னு கூடப் பார்க்காம, மிக அழகான உவமையோடு…பொடேர் என்று அறையும் கவி-மன்னன் = அதிவீரராம பாண்டியன்!
  ——————–

  பனை மரத்துக்கு எல்லாமே பெருசு தான்! = பனங்காய், பனம் பழம், பனங்கிழங்கு, பனை இலை! பனம்பூ கூட கொத்தா, பெருசா, தினுசாத் தான் இருக்கும்!
  ஆனா பனை-க்கு இப்படி எல்லாமே பெருசா வச்ச ஆண்டவன், நிழல் மட்டும் குடுக்க முடியாதபடி வச்சிட்டான்!

  இது பாவம், பனையின் பிழை அல்ல!
  இத்தனைக்கும்…பனை மரத்தின் அத்தனை பாகமும் மக்களுக்கு உதவும்!
  ஆனா நிழல்? அது ஒன்னு தான்!:(

  அதான்….பெரியவங்க-ன்னு எவ்ளோ தான் பெருசா இருந்தாலும், வேறு ஏதாவது ஒரு வகையில் பயன் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கு!
  அதுனால “பெரியவங்க” என்ற போதை தலைக்கேறாமல் இருக்கணும்! 100% பயனுள்ளவர்கள்-ன்னு யாருமே இல்லை-ன்னு எத்தனை அழகாக் காட்டுறாரு!

  இத்தனைக்கும் இவரு மன்னன்! ஆனா ஒரு கிராமத்தான் போல, இத்தனை நுணுக்கமாக் கவனிச்சி, பனைமரம்-ஆலமரத்தை உவமைக்கு எடுத்து இருக்காரு! ஆகா!
  ———————–

  எங்கூருக்கு இப்ப போனாலும், ஆசை ஆசையா ஏறி, சீவிக் குடுப்பாங்க…இளசா நுங்கு…
  மேல் மட்டை வைச்சே, பனங்காயை லபக்-ன்னு துழாவி, நுங்கைத் திங்கலாம்! அதன் வாசமே ஒரு கிறக்கமான வாசம்!:) அவிச்ச பனங்கிழங்கும் செம சுவையானது 🙂

  மரங்களில் ஆண்மரம்,பெண்மரம்-ன்னு பனைக்கு மட்டுமே உண்டு!
  பனை பழுக்காது, குடியானவன் அழுது தேம்பிய போது, ஞான சம்பந்தப் பெருமான், ஆண் பனையை, பெண் பனையாக்கிப் பதிகம் பாடினாரு! பழுத்துக் கனிந்தது!
  எங்கூரு வாழைப்பந்தலுக்குப் பக்கத்தில் உள்ள ஊரு தான்!=செய்யாறு (திருவோத்தூர்).

 3. எனக்கு விளக்கம் படிக்காமலேயே புரிஞ்சிடிச்சி இந்தப்பா..(கைதட்டினதெல்லாம் பொதும் நிறுத்துங்க..)!!

  KRS என்னோட தமிழ் வாத்தியாரை நினைவூட்டுகிறார்…நன்றி!!

  இந்தப்பாவில் சொல்வது பொல, “நாமார்க்கும் குடி அல்லோம்…நமனை அஞ்சோம்” அப்டியெல்லாம் நெறய சொல்லீருக்காங்க தமிழ்ல…எங்கே நம்மாலளுங்க யாரையும் மதிக்காம போயிடுவாங்களோன்னு balance பண்றதுக்கு திருவள்ளுவர் மட்டும் “பெரியாரைத் துணைக்கோடல்”ன்னு சொல்லி ஒரு அதிகாரமே வச்சிருக்கார்!!

 4. aravind says:

  அருமையான விளக்கம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s