முட்டாதே

ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்உரைக்குக்

காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? தீந்தேன்

முசுக்குத்தி நக்கும் மலைநாட! தம்மைப்

பசுக்குத்தின் குத்துவார் இல்

நூல்: பழமொழி நானூறு (#57)

பாடியவர்: முன்றுரையரையனார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

ஆண் குரங்கு தேன் கூட்டைக் கிழித்து அதில் இருந்து ஒழுகும் தேனைக் குடிக்கும் வளம் மிகுந்த மலை நாட்டின் தலைவனே,

பசு ஒன்று நம் மீது முட்ட வருகிறது. உடனே யாராவது கோபப்பட்டு அந்தப் பசுவைத் திருப்பி முட்டுவார்களா? அதுபோல, ஆராய்ந்த அறிவு இல்லாதவர்கள் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டால், உன்னைப்போல் நன்கு படித்தவர்கள் கோபப்படமாட்டார்கள், அவர்களோடு வீண் சண்டை போடமாட்டார்கள்.

067/365

Advertisements
This entry was posted in அறிவுரை, உவமை நயம், பழமொழி நானூறு, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to முட்டாதே

 1. chinnapiyan v.krishnakumar says:

  அருமை . நன்றி நல்லதோர் அறிவுரை.அந்த கால கவிராயர்களை படிக்கும்போது வியப்பு மேலிடுகிறது.

 2. anandraaj22 says:

  விருதை நைனார், சேதுபதி வாத்தியார்ட படிச்சதெல்லாம் இப்பத்தான் ஞாபத்திற்கு வருது ..! சிறந்த உவமைநயம் கொண்ட நமது பா’க்கள்….!

 3. சுப. இராமனாதன் says:

  சங்க இலக்கியங்களில் எனக்குப்புரியாத ஒன்று, சொல்ல வந்த செய்தியை விட்டு வெகு தூரம் போய், எதற்கென்றே புரியாத வகையில் ஒரு காட்சி விளக்கம் தருதல்.

  உதாரணம்: “ஆண் குரங்கு தேன் கூட்டைக் கிழித்து அதில் இருந்து ஒழுகும் தேனைக் குடிக்கும் வளம் மிகுந்த மலை நாட்டின் தலைவனே”

  • 🙂
   ஆமாம்-ல்ல? எதுக்கு தொடர்பே இல்லாமல், குரங்கு தேன் கூட்டைக் கிழிச்சதைப் பற்றியெல்லாம் சொல்லணும்?:)

   ஒரு முறை வாரியாரைப் பார்க்க, திருச்சிக்குப் பக்கத்தில் இருந்து ஒரு பள்ளி முதல்வர் வந்தாரு! (பேரு வேணாம்)!
   அவரு தனவந்தரா இருந்தாலும் பொது உதவி எதுவும் செய்வதில்லை! ஆனா வாரியார் கையால், தன் மேல ஒரு வெண்பா எழுதிக்கணும்-ன்னு ஆசை! 🙂
   (வாரியார் அப்போ, பல திருமணங்கள்/ விழாக்களுக்கு வாழ்த்தை, வெண்பாவில் எழுதிக் குடுப்பது வழக்கம்)

   வந்த முதல்வரின் “தயாள” குணம் பத்தி வாரியார் கேள்விப்பட்டு இருந்தார்! அதுனால வந்தவரை, உடனே..
   “சித்திரைத் திங்கள் சீர்வட காவிரியின் முத்திரை பதித்த முதல்வரே” வருக-ன்னு சொன்னாராம்!
   யாருக்கும் ஒன்னுமே புரியல! பள்ளி முதல்வரே வாங்க-ன்னு சொல்லலாம்! இல்ல காவேரிக் கரையோரப் பள்ளி முதல்வரே-ன்னு சொல்லலாம்! அது என்ன சித்திரை மாசம்? அவர் தான் வருசம் பூரா முதல்வராச்சே-ன்னு முழிக்க…அந்த முதல்வரே முழிச்சி வாய்விட்டே கேட்டாராம்!

   வாரியார் சிரிச்சிக்கிட்டே…
   வடகாவேரி=கொள்ளிடம்!
   பொதுவா சித்திரை மாசத்தில், தென் காவிரியிலேயே தண்ணி இருக்காது! அப்பறம் கொள்ளிடம் பத்திக் கேக்கவா வேணும்?
   அது போல, நீங்களும் சித்திரை மாச வட காவேரி-ன்னு கேள்விப்பட்டேன்! ஈரமே இல்லாதவரே, முதல்வரே வருக-ன்னு ஆசையா வரவேற்றேன்-ன்னு சொல்ல…தன் தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டாராம் முதல்வர்!:)

   அப்படிச் சில குறிப்புகளை…”நைசா” சொல்லுறது சங்கத் தமிழிலும் உண்டு! அதான் இந்தக் குரங்கு-தேன் நாடனே-ன்னு கூப்பிட்டது:)

   • சுப. இராமனாதன் says:

    சரி கண்ணபிரான், “ஆண் குரங்கு-தேன் நாடனே”-வுக்கு விளக்கம் சொல்லுங்கள். கேட்டுப்பயனடைய ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    அதனை விளக்கத்தவறிய சொக்கனுக்கு என்ன தண்டனை தரலாம்? 🙂

 4. சொக்கனுக்கு மொதல்ல தண்டனை குடுங்க! அப்பறமா விளக்குறேன்-ன்னு சொல்ல நினைச்சேன்! :))
  ஆனா கருணையே உருவான என் முருகன், அதெல்லாம் வேணாம், சொக்கன் நூலகத்தில் இருந்து ரெண்டு புத்தகம் உருவித் தரேன்-ன்னு சொல்லிட்டான்! 🙂
  So, அவரை மன்னிச்சிறலாம் :))

 5. //ஆண் குரங்கு தேன் கூட்டைக் கிழித்து
  அதில் இருந்து ஒழுகும் தேனைக் குடிக்கும்
  வளம் மிகுந்த மலை நாட்டின் தலைவனே//

  பொதுவா, குரங்கு ஒரு இடத்தில் இருக்காது! தாவிக்கிட்டே இருக்கும்! மனம் ஒரு குரங்கு!:)
  ஆனா அப்படிப்பட்ட குரங்கு கூட, பொறுமையாத் தேன் கூட்டைக் கிழித்து, அது மெல்லச் சொட்டச் சொட்ட, அதில் இருப்பதைக் குடிக்கிறது! அம்புட்டு பொறுமை! ஏன்? = தேனின் ருசி அப்படி!

  உன் நாட்டுக் குரங்குக்கே, பயனுள்ள விடயம்-ன்னா, பொறுமை காக்கத் தெரியுதே! அப்போ உனக்குத் தெரியாதா என்ன?
  எதுக்கு இவிங்க கிட்ட எல்லாம் முட்டுறே? உனக்கு ஆக்கப்பூர்வமான வேலை ஆயிரம் இருக்கே! அந்தக் குரங்கின் கவனமும் பொறுமையும் தேனில் இருப்பது போல், உனக்கும் இருக்கு அல்லவா?

  பழமொழி நானூறு = பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்னு! ஒவ்வொரு பாவிலும் ஒரு பழமொழி இருக்கும்!
  இங்கு பழமொழி = பசுக்குத்தின் குத்துவார் இல்!

  * அதை உவமையாச் சொல்லுறாரு! = ஆய்வு செய்யாது வாதம் செய்யும் ஆட்களுடன், கோபமாக மோத வேண்டாம்! = இது நேரடிப் பொருளாட்சி!
  * உன் ஊரு குரங்குக்கே இந்த விடயம் தெரியுதே-ன்னு சொல்லி, மலை நாட்டவனை ஊக்குவிப்பது = குறிப்புப் பொருளாட்சி!

  எப்படி இருக்கு, தமிழ்த் தேன் கூட்டைக் கிழித்து, தேன் குடிக்கும் ருசி?:)

  • சுப. இராமனாதன் says:

   அருமை கண்ணபிரான்! ஆயினும், எனகென்னவோ ‘பசுக்குத்தின் குத்து’க்கு எதுகை மோனை சேர்த்திட கவிஞர் முசுக்குத்தி நக்கு என்பதை சேர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

   எனினும், தங்களின் அருமையான உரையால் கவரப்பட்டேன். மேலும் தங்களின் திறமையால் எந்த ஒரு சங்கப்பாடலுக்கும் உங்களால் பல வகைகளில் உரை எழுத இயலுமென்று நினைக்கிறேன். 🙂

   சொக்கன் சார் – உங்கள் வேலை ஆட்டம் காண்கிறது. 🙂 🙂

   • ha ha ha
    //முசுக் குத்தி – பசுக் குத்தின்// எகனை மொகனை சூப்பரு தான், நீங்க சொல்லுறாப் போல! முசு=குரங்கு! பசு=பசு!:)

    முசு-குந்த சக்ரவர்த்தி-ன்னு கேட்டிருக்கீங்க தானே? சைவத்தில் சொல்லுவாய்ங்க! முற்பிறவியில், சிவபெருமானுக்கு வில்வ இலையைப் பறித்துப் போட்ட குரங்கு=முசு!

    அது போகட்டும்! “நெய் குத்துங்க”-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? சில ஐயங்கார் வீட்டு ஆசாமிகளைக் கேட்டுப் பாருங்க! இந்தப் பேச்சு வழக்கு தெரியும்:))
    நெய் “ஊத்து”-ன்னு சொல்ல மாட்டாங்க! கொஞ்சமா விடுற சங்கதி இல்லையா? அதான் நெய்க் “குத்து”!

    நெய்க் கிண்ணத்தில், குச்சியை விடச் சிறுசா இருக்குற கரண்டியை, ஒரு குத்து குத்தி எடுப்பாங்க! குத்தினதும் தெரியாது, நெய் இலையில் விழுந்ததும் தெரியாது! ஆனா வாசனை மட்டும் வரும்! அதுலயே பருப்புச் சோற்றைச் சாப்புடறலாம்:))

    அது போலத் தான் இந்தத் தேனடையும் இருக்காம்! ரொம்ப மெதுவா, தேன், சொட்டு சொட்டு-ன்னு விழுது! அதான் முசு(குரங்கு), தேனைக் “குத்துது” என்று பாடுகிறார்! அவா ஆத்துக் குரங்காக இருக்குமோ?:))))

 6. இன்னொன்னும் சொல்லணும்!
  அதுக்காக விவாதமே பண்ணக் கூடாது-ன்னு சொல்லலை கவிஞரு! விவாதித்தால் தானே விளக்கொளி எல்லாத் திசையிலும் பாயும்?

  பொதுவா, பழமொழி-யில் நாம என்ன சொல்லுவோம்? நாய் அதில் இறங்குச்சின்னா, நீயும் இறங்குவியா? – இப்படித் தானே கேட்பது வழக்கம்?
  ஆனா, சங்கக் கவிஞர் மரியாதை தெரிஞ்சவரு! அவை மரபு அறிஞ்சவரு! அதான் “நாய்”, “பன்றி”-ன்னு எல்லாம் வாதம் செய்பவர்களைக் குறிப்பிடாது, “பசு”-ன்னு சொல்கிறார்!

  பசு, இயல்பில் அடக்கமான விலங்கு தான்!
  ஆனா அதுவே சில சமயம் முரண்டு பிடிச்சா, அப்போ நீயும் அது கூட முட்டாதே!
  அது போல, வாதிப்பவர்கள் நல்லவர்கள் தான்! ஆனா சில சமயம் ஆய்வு செய்யாது பேசிடறாங்க:( அதுக்காக நீயும் அவிங்களோட முட்ட வேணாம்!-ன்னு மிகுந்த நயத்தோடு சொல்லும் கவிதை!

  சங்கத் தமிழ் மரபு = யாரையுமே இழிக்காது….என்பதற்கு, இக்கவிதை மேலும் ஒரு அகச் சான்று!

 7. Sundar Vel says:

  அருமை அருமை

 8. G.Ragavan says:

  // சுப. இராமனாதன்
  September 10, 2011 at 10:21 am

  அருமை கண்ணபிரான்! ஆயினும், எனகென்னவோ ‘பசுக்குத்தின் குத்து’க்கு எதுகை மோனை சேர்த்திட கவிஞர் முசுக்குத்தி நக்கு என்பதை சேர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.//

  🙂 அப்படித்தான் கொள்ள வேண்டுமென்று விரும்பினால் அப்படித்தான் கொள்ள முடியும்.

  சங்கப்பாடல்களில் ஒவ்வொரு சொல்லுக்கும் பயனுண்டு. மானே வந்தா தேனே போட்டுக்கோன்னு எழுதுற அளவுக்கு புலவர்களுக்கு அறிவுக்குறை இல்லாத காலம் சங்ககாலம். இது சங்கம் மருவிய காலத்துப்பாட்டுதானேன்னு குறைச்சு மதிப்பீடு செய்துட்டீங்களா?

  சங்கம் மருவிய காலத்தில்தான் ”தேரா மன்னா செப்புவதுடையேன்”ன்னு சொன்னது தமிழ். அது ஆத்திரம் மிகுந்த பெண் சொன்னது. இதுவோ பாத்திறம் மிகுந்த புலவன் சொன்னது.

  முசுக்குத்திக்கான விளக்கத்தை மிக அழகாகச் செம்மொழிச் செம்மல் கே.ஆர்.எஸ் விளக்கிவிட்டார். ஆகையால் இது போன்ற சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

  ஒரு சங்கப்பாடல் வரி.

  பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண்டுறை ஊரன்

  இந்த வரி தன்னுடைய தலைவனைப் பார்த்து தலைவி சொல்வது. எங்கெங்கயோ போய்ட்டு திரும்ப தலைவியிடம் வருகிறான் தலைவன். வந்தவனை சேர்த்துக்கிட்டு அவன் இல்லாதப்போ இவ எப்படியெல்லாம் இருந்தான்னு சொல்லும் பொழுது தலைவனை இப்படி அழைக்கிறாள்.

  இந்தப் பாட்டு எந்தத் திணைன்னு கேட்டா, இந்த வரியை மட்டும் வச்சு நெய்தல்னு சொல்லீருவாங்க. நெய்தல் மலரே வந்துருச்சே. ஆனா அது தவறு. இது மருதத் திணைப் பாடல். ஓரம்போகியார் எழுதியது.

  சரி. அந்த வரியோட பொருளுக்கு வருவோம்.

  அதாவது நீலமலரோடு நெய்தலை நிகர்க்கும் (ஒன்றாக வைக்கும்) ஊரன்னு பொருள்.

  இதுக்கு முந்துன பாட்டுல “நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன் வாழ்க”ன்னு சொல்றா.

  அதாவது காஞ்சி மலரின் அரும்பும் சினைகொண்ட சிறுமீன்களும் கொண்ட ஊரன். (யாணருக்குப் பொருள் வேறு. சொல்ல வந்த செய்தி மாறுபடும் என்பதால் அதை விளக்கவில்லை.)

  ரெண்டு ரெண்டு பொருளாச் சொல்றாளே.
  மலர் – மணமுடையது
  மீன் – நாற்றமுடையது
  நீலம் – மலரில் உயர்ந்த வகை மலராம்
  நெய்தல் – சற்றுக் குறைந்த வகை

  அதாவது அவனுடைய வாழ்க்கையில் இல்லக்கிழத்தியாக உயர்ந்தவள் இவள் இருக்கிறாளாம். அதே நேரத்தில் பொதுமகளிரும் இருக்கிறார்களாம். அதை நேரடியாகச் சொல்லாமல் இப்படிச் சொல்றா. ஏன்னா.. இப்பத்தான் வந்திருக்கான். வந்ததுமே “இப்பத்தான் வழி தெரிஞ்சதான்னு” கேட்டா திரும்ப ஓடிப்போயிருவான். ஆகையால இடத்துக்குத் தக்க அப்படிச் சொல்றா.

  செம்மீனே செம்மீனே, வெண்மதி வெண்மதியே, சிக்குபுக்கு சிக்குபுக்குன்னு எழுதுறதுக்கு அப்பல்லாம் ஆள் இல்லைங்க. 🙂

  இந்த ரெண்டு வரியை வெச்சுக்கிட்டே ரொம்பப் பேசலாம். ஆனா இப்ப இத்தோட முடிச்சிக்கிறேன்.

 9. சுப. இராமனாதன் says:

  ஓரம்போகியார் = ஆர்யா?

  • G.Ragavan says:

   இருக்கலாம். 🙂 ஆர்யா மலையாளிதானே. ஓரம்போகியார் அல்லது ஓரேர் போகியாரை ஆதரித்தது சேர மன்னன் ஆதன் அவினி. ஆகையால அவரும் சேரநாட்டவரா இருக்க வாய்ப்பிருக்கு. 🙂

  • ஒரம் போகியார் = ருக்குமணி வண்டில ஓரம் போனாரு-ன்னு ஒரு அசைபடம் குடுக்காம வீட்டீயளே!:))
   ஆர்யா is very casual & rugged! அவரையே சங்கத் தமிழ்ப் படத்துக்கு Book செஞ்சீறலாமா?:)

   btw, ஓரம் போகியார் = பெரும்பாலும், பரத்தையர் கண் சென்ற தலைவனின் போக்கு, அதனால் விளைந்த உறவுச் சிக்கல்கள் பற்றியே அதிகம் எழுதுவாரு! மருதத் திணை தான் அதிகமா இருக்கும்!
   “ஓரம் போதல்” = பரத்தையிடம் போதல் என்பது அக்காலச் சைகைக் குறிப்பு:)
   அதான் அதையே தனக்கும் புனைப்பெயரா வச்சிக்கிட்டாரு போல, நம் கவிஞர்!
   (இன்னிக்கி கூமுட்டை, வெட்டிப்பயல்-ன்னு எல்லாம் பிரபல பதிவர்கள் பேரு வச்சிக்கறதில்லையா? அது போல:)))

 10. chinnapiyan v.krishnakumar says:

  Kannabiran Ravi Shankar (KRS) / சுப. இராமனாதன் இவர்களின் பின் கருத்துரையாடல்கள் மிகவும் மனம் கவர்ந்ததாயிற்று. நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s