YPL ;)

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்

மாயோன் மேய ஓண நல் நாள்

கோணம் தின்ற வடு ஆழ் முகத்த

சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை

மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்

மாறாது உற்ற வடுப் படு நெற்றி

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்

கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட

நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப

கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…

நூல்: மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)

பாடியவர்: மாங்குடி மருதனார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அவுணர்களின் கூட்டத்தை அழித்தவர், பொன்னால் செய்த மாலையை அணிந்திருக்கும் திருமாலின் பிறந்த நாள், திருவோணம் என்கிற நல்ல நாள்.

ஓணத் திருநாளை மறவர்கள் பெரிய விழாவாகக் கொண்டாடுவார்கள். அடிக்கடி போர் செய்வதால் அவர்களுடைய உள்ளங்கையில் ஆயுதங்களின் தழும்புகள் விழுந்திருக்கும்.

மறவர்கள்மட்டுமா? அவர்களுடைய யானைகளும் வீரம் செறிந்தவைதான். அவற்றின் முகத்தில் அங்குசம் குத்திக் குத்தி வடு விழுந்திருக்கும், எதிரியின் யானைகளோடு கடுமையாக முட்டி மோதுவதால் அவற்றின் தந்தங்கள் இந்த யானைகளின் நெற்றியில் வடுவாகப் பதிந்திருக்கும்.

ஓணத் திருநாளன்று மறவர்கள் தங்களுடைய பெரிய யானைகளை மோதவிடுவார்கள். இதைப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட கூட்டம் வரும். அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு குன்றின்மீது ஏறி நின்று யானைச் சண்டையை ரசிப்பார்கள்.

அந்தக் குன்றின்மீது பருக்கைக் கற்கள் பதிந்திருக்கும். அவை இந்த மக்களின் காலைக் குத்தி உறுத்தும், வலிக்கும். ஆனால் அதையெல்லாம் யார் கவனித்தார்கள்? எல்லோரும் கள்ளைக் குடித்து மயக்கத்தில் திரிவார்கள்.

துக்கடா

 • அனைவருக்கும் ஓண நல் நாள் வாழ்த்துகள்
 • ஓணம் மலையாளப் பண்டிகையாச்சே, இதற்கெல்லாம் பழந்தமிழ் இலக்கியத்தில் பாடல் இருக்காது என்று நினைத்தேன். ‘ஏன் இல்லை?’ என்று இந்தப் பாட்டைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தார் நண்பர் @kryes – #365paa மீது அவர் காட்டும் ஆர்வத்துக்கும் அக்கறைக்கும் திரும்பத் திரும்ப எத்தனைமுறை நன்றி சொல்வது? போரடிக்கிறது :> ஆனாலும் நன்றி 🙂
 • இந்தப் பாட்டில் வரும் யானைச் சண்டையைப் படிக்கும்போது கிட்டத்தட்ட ஒரு Gladiator / American Base Ball Match சூழல் வருகிறது 😉
 • யானைச் சண்டையைப் பார்ப்பதற்கு எதற்கு குன்று? அதில் எதற்குக் கற்களைப் பதித்திருக்கிறார்கள்? எல்லாம் காரணமாகதான்! சண்டை மும்முரத்தில் ஒருவேளை யானைகள் இந்தப் பார்வையாளர்கள்மீது திரும்பிவிட்டால்? விபரீதமாகிவிடும் அல்லவா, அதனால், யானைகள் சுலபத்தில் ஏறமுடியாத ஒரு குன்றின்மீதுதான் பார்வையாளர்கள் நிற்பார்கள். அப்படியே மீறி ஏறிவிட்டாலும் யானைகளின் கால்களை உறுத்தவேண்டும் என்பதற்காக அந்தக் குன்றில் சிறிய (பருக்கைக்) கற்கள் நிறைய இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அப்போதுதான் யானைகள் வலி தாங்காமல் கீழே வந்துவிடும், மக்கள் பிழைப்பார்கள்
 • இத்தனை பாதுகாப்பு ஏற்பாடு செய்து என்ன? கள் குடித்த ஜனங்கள் அந்தக் கிறக்கத்தில் காலில் கல் குத்துகிற வலியையும் பொருட்படுத்தாமல் குன்றிலிருந்து கீழே இறங்கிவருகிறார்கள், தப்பாச்சே மக்கா!
066/365
Advertisements
This entry was posted in நண்பர் விருப்பம், பண்டிகை, மதுரைக் காஞ்சி. Bookmark the permalink.

6 Responses to YPL ;)

 1. chinnapiyan v.krishnakumar says:

  எப்படி தேடி அலைந்து கண்டுபிடித்தீர்கள்? உங்களுக்கும் க்ரஎஷ்க்கும் நன்றி பல. வியக்க வைக்கும் பா

 2. கள் எந்த வடிவிலும்,எப்பவும் நமக்கு இம்சைதான்..!!

 3. ட்விட்டரில் சிலுக்குத் தொண்டெல்லாம் முடிச்சிட்டு, இந்தப் பாட்டுக்கு, இப்பத் தான் வர முடிஞ்சுது! கோபித்துக் கொள்ளாதீரும் திருமாலே!:) ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்:)

  //இந்தப் பாட்டில் வரும் யானைச் சண்டையைப் படிக்கும்போது கிட்டத்தட்ட ஒரு Gladiator//

  நீங்க சொன்னது முற்றிலும் சரி @சொக்கநாதரே! Gladiatorயே தான்!

  “குன்றேறி யானைப்போர் கண்டற்றால்”, தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை – என்று, திருக்குறளும் யானைப்போர் பற்றிச் சொல்லும்!
  மலை சூழ்ந்த பள்ளத்தாக்கில்…கீழே யானைச் சண்டை, மேலே மக்கள் ஆரவாரம்-ன்னு கற்பனை பண்ணிப் பாருங்க! Gladiatorயே தான்!

  யானை, இன்னிக்கும் மலையேற முடியாது! (அதாச்சும் மலைப்படி ஏற முடியாது)!
  அதுக்குன்னே பழனியில் யானைப்பாதை! குன்று இன்னும் செங்குத்தா இருக்கும்! யானையின் அகலக் கால் வச்சி ஏறுவது கடினம்!

  அதுக்காக, மலையில் யானையே இருக்காதா என்ன? இருக்கும்! ஆனா மலைக்காடு, மற்றும் பாதைகளில்! படிகளில் அல்ல!

 4. ஓணம்-ன்னாலே ஏதோ மலையாளப் பண்டிகை-ன்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம்!
  ஆனால் இது சங்கத் தமிழ் விழா!

  இன்னொரு தமிழ்க் கடவுளான மாயோன்-திருமாலுக்கு-ன்னே எடுக்கப்பட்ட விழா!
  அதைத் தான் மேலே பாட்டில் கண்டோம் அல்லவா! – “மாயோன் மேய, ஓண நன்னாள்”

  மதுரைக் காஞ்சி என்னும் இந்த நூலில், மதுரை-சுற்றுவட்டங்களில், மக்கள் எப்படி ஓண நன்னாளைக் கொண்டாடினார்கள்-ன்னு காட்டுகிறார் கவிஞர்!
  யார் ஆட்சியில்? = தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்…
  ————————-

  திருவோணம் = வான்வெளி விண்மீன் மண்டலம்!

  Aquilae என்று ஆங்கில/கிரேக்க/லத்தீனிலும் குறிக்கப்படுவது இஃதே!
  பார்க்க, சிறகுகள் விரித்துப் பறக்கும் பருந்து/கருடன் போல் இருக்கும்! மிகவும் ஒளி பொருந்திய நட்சத்திர மண்டலம்!

  பண்டைத் தமிழர்கள் தங்கள் தெய்வமான மாயோனுக்குரிய விழாவினை, ஓணத்தில் தான் கொண்டாடினர்!
  இன்றும் திராவிடத் தோன்றல்களுள் ஒன்றான மலையாள மொழியிலும், ஓணம் அவர்களுக்கே உரித்தான பெரும் பண்டிகை!

  பத்து நாட்கள் உள்ள ஓண விழா, அத்தத்தின் பத்தாம் நாள் என்னும் படிக்கு, அத்தம் என்ற விண்மீனில் துவங்கி, ஓணத்தில் நிறைவு பெறும்!
  பூக்கோலங்களும், ஆடல்-பாடல் துள்ளல்களும், யானைத் துள்ளல்களும், ஒளி விளக்குகளும், சுவை உணவுகளும் – எல்லாம் உண்டு!
  ————————

  மாயோனுக்குரிய திரு ஓண நன்னாளைச் சுற்றத்தோடு கொண்டாடும் காட்சி காட்டப்படுகிறது!
  பின்னாளில், இந்தச் சங்கத் தமிழ் மரபையே ஆழ்வார்களும் சொல்லப் போந்தனர்.

  “எந்தை, தந்தை, தந்தை தம் மூத்தப்பன் என்று ஏழ்படி கால் தொடங்கி
  வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு ஓணத் திருவிழவில்
  – இதெல்லாம் பெரியாழ்வார் திருமொழி!

  நாள்பட நாள்பட, சங்கத் தமிழ் பழக்கம்-விழாக்கள் எல்லாம் மறைஞ்சி போய், ஓணம் தமிழ்நாட்டை விட்டே போய்விட்டது போலும்!
  ஆனால் தமிழ்நாட்டுத் திருமால் ஆலயங்களில் மட்டும் ஓண-நாளைக் கொண்டாடி, பூசை வைக்கின்றனர்

  தீபாவளி போன்ற வடநாட்டுப் பண்டிகைகள், அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன!
  பொங்கல் மட்டும் இன்னும் இருக்கு! நல்லது!

 5. 1. வடுக்கள் உள்ள முகம் கொண்ட மறவர்கள், சேரியில் வீர விளையாட்டுகளில் ஈடுபட…

  2. வேகமாக ஓடும் யானையை அடக்க, நெருஞ்சி முள் போல் கப்பணம் என்னும் கருவியை, கால் பொதுக்கி, அதனால் யானைகள் ஒரே இடத்தில் நிற்கின்றன…அப்படியே கேரளா ஓணம் காட்சி போலவே இருக்கு-ல்ல?

  3. கணவருடனும், புதல்வர்களுடனும், சுற்றத்தோடும் குழுமி, செவ்வழிப் பண்ணில் பாடி, யாழ்-முழவு போன்ற இசைக் கருவிகள் வாசித்து…குரவைக் கூத்து ஆடி….

  4. மயில் போல் ஒன்று திரண்டு, மகளிர் தேவராட்டியுடன் நின்று, தெய்வத்திற்கு மடை கொடுக்க…
  குலவை இட்டு, கை தொழுது, சாலினின் பெண்கள் அருள் வந்து ஆட…

  5. இப்படி விழா இரவின் பல யாமங்கள் நீடிக்கிறது! சாலினி என்னும் அருள் வந்து ஆடலால், முருகனுக்கும் வேலன் வெறியாட்டு நடக்கிறது! இரவு முழுதும் விழா ஒலி பரவ…..
  மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் உறங்குகின்றான்!

  பொலந் தார் மார்பின், நிலம் தரு திருவின் “நெடியோன்” (திருமால்) போல, சிறப்புடன் தோன்றுவாயாக என்று பாண்டியனை வாழ்த்துகிறார்!!

 6. Sabari GS says:

  விளக்கமும் துக்கடாவும் அருமை… இத்தளத்தின் மீது காதல் கொண்டுவிட்டேன்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s