எல்லாம் நிரம்பியது

ஆதி நெடும்தேர் பரிவிட்டு அவை ஆற்றி,

கோது இல் அடிசில் குறை முடிப்பான், மேதிக்

கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன்

மடைவாயில் புக்கான் மதித்து.

*

ஆதி மறை நூல் அனைத்தும் தெரிந்து உணர்ந்த

நீதி நெறியாளர் நெஞ்சம்போல், யாதும்

நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே – பொன்தேர்

வரப் பாகன் புக்க மனை.

நூல்: நளவெண்பா

பாடியவர்: புகழேந்திப் புலவர்

சூழல்: அரசனாக இருந்த நளன் சூழ்நிலை காரணமாகத் தன் நாட்டை இழக்கிறான், மனைவி, குழந்தைகளைப் பிரிகிறான், இன்னோர் அரசனிடம் தேர்ப் பாகனாக வேலை செய்கிறான். அவ்வப்போது ஓய்வு நேரத்தில் சமையலும் செய்கிறான் (அஞ்ஞாதவாசத்தின்போது பீமன் போல). தன் முதலாளியுடன் அவன் மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது, நளன் சமையல் செய்யும் காட்சி இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

எருமைகள் குவளை மொட்டுகளை மேய்கின்றன. அவற்றை மென்றபடி நடக்கின்றன. அப்போது அந்த எருமைகளின் வாய் ஓரத்தில் கருநீல நிறக் குவளை அரும்புகள் மலர்கின்றன. அப்படிப்பட்ட வளமான நாட்டைச் சேர்ந்தவன் நளன்.

அந்த நளன், இப்போது ஒரு சிறந்த, பெரிய தேரை ஓட்டி வந்தான். பயணம் முடிந்ததும் தனது குதிரைகளை அவிழ்த்து இளைப்பாறவிட்டான். பின்னர் குற்றம் இல்லாத சமையலைச் செய்வதற்காக மடப்பள்ளி(சமையலறை)யினுள் புகுந்தான்.

*

பொன் தேரை ஓட்டுகின்ற பாகனாகிய நளனிடம் தண்ணீர், விறகு, காய்கறிகள், மளிகை சாமான்கள் எவையும் இல்லை. ஆனால், ஒரு வரம் இருந்தது. அதனால், அவன் நுழைந்த சமையலறை சிறிது நேரத்தில் சாப்பாட்டுப் பண்டங்களால் நிரம்பி வழிந்தது – பழங்கால வேத நூல்கள் அனைத்தையும் படித்து உணர்ந்துகொண்ட நீதிநெறியாளர்களின் நெஞ்சத்தைப்போல!

துக்கடா

 • நளன் கதை மிகச் சுவாரஸ்யமானது, ஏகப்பட்ட திருப்பங்கள், அசாத்தியக் கற்பனைகள் நிறைந்தது – இங்கே இரண்டாவது பாடலில் வரும் ‘வரம்’ அப்படிப்பட்ட ஒரு சுவையான கிளைக்கதை:
 • தமயந்திக்குச் சுயம்வரம். ஓர் அன்னத்தின்மூலம் தமயந்தியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த நளன் அவளைத் திருமணம் செய்துகொள்வதற்காக வருகிறான். அவனை இந்திரன் வழிமறிக்கிறான். ‘எச்சூச்மீ, தமயந்தியிடம் போய் எங்களைப் பற்றி உயர்வாகச் சொல்லு’ என்கிறான். இவனும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு தன் காதலியிடமே இன்னொருவருக்காகத் தூது போகிறான், ‘இந்திரன் நல்லவரு, வல்லவரு, அவரைத்தான் நீ கட்டிக்கணும்’ என்கிறான் (என்ன? தமிழ் சினிமாக் கதைமாதிரி இருக்கா? 😉 )
 • நல்லவேளையாக, நளன் சொல்லும் ‘தூதுச் செய்தி’யை தமயந்தி மதிப்பதில்லை. ’டேய் மடையா, உனக்காகதாண்டா இந்தச் சுயம்வரமே!’ என்று சொல்லிவிடுகிறாள். நளன் குஷியாகத் திரும்பி வருகிறான்.
 • தேவர்கள் விசாரிக்கிறார்கள். ‘என்னாச்சு? தமயந்தியைப் பார்த்தாயா? சேதி சொன்னாயா?’
 • நளன் படுபுத்திசாலித்தனமாக, ‘பார்த்தேன். சொன்னேன்’ என்கிறான். அப்புறம் நடந்ததைச் சொல்லவில்லை.
 • மகிழ்ச்சியடைந்த தேவர்கள் நளனுக்குப் பல வரங்களை அளிக்கிறார்கள். அவற்றில் ஒன்று, அவன் எங்கே இருந்தாலும் சமையல் செய்யத் தண்ணீரோ, நெருப்போ, காய்கறிகளோ மற்ற மளிகை சாமான்களோ தேவையில்லை. சுவையான சாப்பாடுமட்டும் தானாகச் சமைக்கப்பட்டுவிடும்.
 • சரி சரி, கற்பனையை நிறுத்துங்கள் 😉
065/365
Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, நளவெண்பா, நாடகம், வெண்பா. Bookmark the permalink.

9 Responses to எல்லாம் நிரம்பியது

 1. G.Ragavan says:

  வேண்பாவுக்கும் உவமைக்கும் புகழேந்தியை மிஞ்சி யாருமில்லை. கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் பலவற்றில் புகழேந்தியின் பாதிப்பு தெரியும். அவரைப் புகழ்ந்தே திரைப்பாடலில் அதுவும் காதற்பாடலில் கவியரசர் பயண்படுத்தியிருக்கிறார்.

  பாமா ருக்மணி படம் தெரியுந்தானே. பாக்கியராஜ் இரண்டு மனைவியரொடு படும் பாடு. அந்தப் படத்திற்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். அவர் இசையில் ஒரு பாடலை எழுதுகிறார் கவியரசர். பாலசுப்ரமணியம் அவர்களும் ஜானகி அம்மாள் அவர்களும் இணைந்து பாடியிருக்கின்றார்கள்.

  நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
  தேடி உறவானவள்

  அப்பாடலை நான் வலையேற்றியிருக்கிறேன்.

  அந்த இனிய பாடலில் ஒரு வரி
  உவமைகளாலே தமயந்தி அழகை உருவாக்கினான் ஒரு புலவன்

  புலவன் பெயரைச் சொல்லவில்லை. ஏன்… அவன் படைக்கும் நான்முகனை விட மேல் இந்த இடத்தில். நான்முகன் எதையெதையெல்லாம் வைத்துப் படைக்கிறானோ நாம் அறியோம். ஆனால் வெறும் உவமைகளை மட்டும் வைத்துக் கொண்டு தமயந்தியின் அழகை உருவாக்கினானே (புகழேந்தி), அவன் புலவன் என்று பெருமைப் படுத்துகிறார்.

  தமிழ் கற்போர்க்கும் கேட்டு மகிழ்வோருக்கும் புகழேந்தி ஒரு மகிழ்வேந்தி. நாமெல்லாம் புகழ் வேந்தி.

 2. G.Ragavan says:

  மொல்ல மொதப் பாட்ட எடுத்துக்குவோம். நாலுவரி எழுதியிருந்தாலும் அது சொல்ல வருவது என்னன்னா.. நளன் தேர்ப்பாகனாகவும் குதிரையப் பாத்துக்கிட்டும் இருந்தான். அப்படியே சமையல்காரனாகவும் இருந்தான். இதுதான் புகழேந்தி சொல்ல வருவது.

  இந்த நளன் யார்? முன்னாள் அரசன். எந்த நாட்டுக்கு? நிடத நாட்டுக்கு.

  நிடதநாடு வளம் நிரம்பியதுன்னு சொல்லனும். என்னென்ன வளங்கள்? நீர், நிலம் மற்றும் நிரை. இந்த மூனும் நல்லாயிருக்கும் நாட்டில் மற்ற வளங்கள் தானாகச் சேரும்.

  இந்த மூனையும் ஒரு வரிக்குள்ள சொல்லனும். முடியுமா? முடிச்சுக் காட்டுனாரு புகழேந்தி.

  மேதிக் கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன்

  எருமைக் கடைவாயில் நீலம் கண்விழிக்கும்.

  இதுல எருமை – நிரை – பால் வளம் வந்தாச்சு
  நீலம் – அப்ப செடிகொடியெல்லாம் நெறைய இருக்கு
  ஆனா நீலமலர் எங்க பூக்கும்? குளத்துல. அப்ப நீர்வளமும் வந்தாச்சு.

  எருமை எறங்கி உழப்பும் அளவிற்கு நீர்வளம் மிகுந்த குளம். அந்தக் குளத்துக்குள்ள எருமை நீலமலர்களைக் கடிக்குது. அப்பத்தான் விடிஞ்சிருக்கு. ஆகையால குளத்துல பூக்க வேண்டிய நீலமலர்கள் எருமை வாயில் பூக்குது.

  எல்லாம் நெய்தல் நிலக் குறிப்புகள். நல்ல வளமையான நாட்டைச் சேர்ந்தவனான நளன், தேர் செலுத்தி, குதிரையப் பாத்துக்கிட்டு சமைக்கிறதுக்காக மடைவாயில் புக்கான் (புகுந்தான்). அதுவும் மதிப்பா. முன்னாடி மன்னனா இருந்தமேன்னு எண்ணமில்லாம எல்லாப் பணிகளையும் மதிப்புறச் செய்தான் நளன் என்று பெருமையாகச் சொல்றாரு புகழேந்தி.

  • //அப்போது அந்த எருமைகளின் வாய் ஓரத்தில் கருநீல நிறக் குவளை அரும்புகள் மலர்கின்றன//
   – என்று சொக்கன் சொல்லிட்டாரு! ஆனா, அது எப்படி எருமையோட வாயிலே பூ பூக்கும்?-ன்னு கேக்க இருந்தேன்!:)

   விளக்கமாச் சொன்னாத் தானே என்னைப் போலக் கத்துக்குட்டிகளுக்கும் புரியும்?
   ஆனா…பின்னூட்டத்தில் வந்து, குளத்தின் ஓவியம் வரைஞ்சிக் காட்டி செவ்விய விளக்கம் நல்கிய இராகவனுக்கு நன்றி!

   ஒரேயொரு Finishing Touch on color canvas மட்டும் குடுத்துறேன்!:)
   //மேதிக்..
   கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும்//

   * எருமையின் கலரு = உங்களுக்கே தெரியும்:)
   * அதன் வாயிலே குவளைப்பூ = நீலம்-ன்னு சொன்னாலும்…அது ஒரு மாதிரியான வெளிர் violet! எனக்குப் புடிச்ச கலரு:)

   அதிகாலை வெளிச்சத்தில்…
   எருமையின் கருமை நிறம், காலைக் கருமையினூடே கருமையாத் தெரிய
   அதன் வாயில் மட்டும் வெளிர் நீலப் பூ…பளிச்சுன்னு கண் விழிக்குது!

   எருமை மாடு தண்ணியில் குளிக்காது! மிதக்கும் 🙂
   எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்சாப் போலே-ன்னு சொல்லுவோம்-ல்ல?:)
   அப்படி்…எருமை தேமே-ன்னு குளத்தில் கிடக்க, ஒரு அசைவு இல்ல…ஒன்னுமில்ல!
   குளமும் கருமை, மாடும் கருமை…அப்போ, பூ மட்டும் வெளீர்-ன்னு பூக்க…பூ அந்தரத்தில் பூத்தாப் போல ஒரு உணர்வு!
   குளத்தில் பூக்காமல், மாட்டின் வாயில் பூத்த மலரை, இப்படி contrast color குடுத்து canvas-இல் வரையறாரு புகழேந்தி! :))

 3. G.Ragavan says:

  என்னைக் கேட்டா நளதமயந்தி கதை ராமாயணத்தை விட மேலானதுன்னு சொல்வேன்.

  நளன் ஒரு சிறந்த ஆண்மகன். என்னென்ன வகையுண்டோ அத்தனையிலும். பொண்டாட்டிக்குச் சமைச்சுப் போடுறதுலயும். பின்னாடி அத வெச்சுத்தான் வந்தவன் நளன்னு தெரிஞ்சு தமயந்தி அவனோட சேர்ரா.

  குற்றமே சொல்ல முடியாத குணக்குன்று நளனும் தமயந்தியும். அதையும் தாண்டிய அன்புப் புரிதல் இருவருக்கும்.

  மொதல்ல ஒரு சுயம்வரம். தேவர்கள்ளாம் கூட வந்திருக்காங்க. ஆனாலும் மனிதனுக்கு மாலையிட்டாள் தமயந்தி. இந்திரலோகம் போயிருந்தா அமுதமுண்டு சாகாவரத்தோட இருந்திருக்கலாம். ஆனா அவள் தேர்ந்தெடுத்தது ஒரு மனிதனை.

  வாழ்ந்தாங்க. வாழ்ந்தும் கெட்டாங்க. பிள்ளைகளைப் பெத்தவங்க வீட்டுக்கும் அனுப்பிச்சாங்க. விதியாலப் பிரிஞ்சாங்க. நளனுக்கோ உருவம் வேற மாறீருச்சு.

  எப்படிக் கண்டுபிடிக்குறது? இன்னொரு சுயம்வரம் வெச்சா தமயந்தி. அதுக்கு அயோத்தி மன்னன் ரிதுபர்ணன் வர்ரான். அவனுக்கு உருவம் மாறுன நளன் தேரோட்டி.

  வந்தவங்களையெல்லாம் கவனிச்சு நளனைத் தெரிஞ்சுக்கிட்டு அவன் சமையல் சுவையாலப் புரிஞ்சிக்கிட்டு ஒன்னு சேர்ராங்க.

  இன்னொரு சுயம்வரம் வெச்சியேன்னு தமயந்தி மேல அவன் சந்தேகப்படலையே. தீக்குளிக்கச் சொல்லலையே. ஊருக்கு நிரூபிக்கச் சொல்லலையே. அவந்தான் உண்மையான ஆம்பளை. பொண்டாட்டியப் புரிஞ்சவன். ஒன்ன எனக்குத் தெரியும்னு கூடச் சொல்லலை. அப்படியே சேத்துக்கிட்டான். உண்மையச் சொன்னா இவனைத்தான் கடவுளா வணங்கனும். ஏன்னா… அத்தன துன்பம் வந்தப்பவும் எந்தத் தப்பும் பண்ணலை. அவனைப் பிடிக்கிறதுக்கே கலி ரொம்பச் சிரமப்பட்டிருக்கான்னா பாத்துக்கோங்களேன். எப்படியோ ஒரு ஒப்புக்குச் சப்பாணிக் காரணத்த வெச்சி பிடிக்கிறான்.

  இவ மட்டும் என்ன. தமயந்தி. முதத் திருமணத்துலதான் நளனத் தேர்ந்தெடுத்த. அவனக் காணோம்ல. இன்னோரு திருமணத்துலயாச்சும் தேவப்பய இந்திரனைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே. அப்பவும் நளனத்தான் தேர்ந்தெடுத்தா. அவளுக்கும் அவனைத் தெரியும்.

  எது வந்தாலும் நீதியின் படியும் உண்மையான இல்லறத்தின்டியும் வாழ்ந்து வெற்றி பெற்ற நளசரிதமே நாம் உண்மையிலேயே போற்றத்தக்க இதிகாசம். இவர்களே போற்றத் தக்க பெருமக்கள்.

  • //இன்னொரு சுயம்வரம் வெச்சியேன்னு தமயந்தி மேல அவன் சந்தேகப்படலையே. தீக்குளிக்கச் சொல்லலையே//

   //இவ மட்டும் என்ன. இன்னோரு திருமணத்துலயாச்சும் தேவப்பய இந்திரனைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே. அப்பவும் நளனத்தான் தேர்ந்தெடுத்தா//

   மேற்கண்ட ஒவ்வொரு சொல்லுக்கும்,
   வெறும் வாய்ச் சொல்லாய் இல்லாது,
   மனச் சொல்லும், வினைச் சொல்லுமாய், தலை வணங்குகிறேன்!
   மிக்க மகிழ்வான களி பேருவகை கொள்கிறேன்!

   Greek Mythology-இல் நள-தமயந்தி போலவே இரண்டு காதல் உள்ளங்கள் – Odysseus & Penelope!
   அவனும் Trojan War முடிஞ்சி உருவம் மாறி வருவான்! இவளும் இரண்டாம் சுயம்வரம் வைப்பா!

   போருக்குச் சென்றவன், பெருநில மன்னனின் சுயநலத்துக்காக, தன் வாழ்வையே தொலைத்து விட்டவன்! ஆளு என்ன ஆனான், அட்ரெஸ் என்னா-ன்னு ஒன்னுமே தெரியாது!
   Penelope க்கு ஏகப்பட்ட நெருக்கடி…அவனைத் தலை முழுகிட்டு, இன்னோரு கண்ணாலம் பண்ணிக்கச் சொல்லி…

   ஆனா செஞ்சாளா?
   ஆமாம் செஞ்சா! “பொய்” சொல்லுறா! “நாடகம்” ஆடுறா!

   ஒரு ஆண்டு, ரெண்டு ஆண்டு இல்ல! இருபது வருசம்! அவனுக்காகவே…என்னென்னமோ பொய், என்னென்னமோ நாடகம் ஆடி…
   எல்லாரையும் தட்டிக் கிழிச்சிட்டு…அவன் ஒருவனுக்காக மட்டுமே காத்துக் கிடக்கா!

   ஒரு கட்டத்துல, சொந்த வேலைக்காரியே, அவள் நாடகங்களைப் போட்டுக் குடுக்க…வேற வழியே இல்லாமச் சுயம்வரம் துவங்குது!
   அவனும் ஆளு-அடையாளமே தெரியாம வந்தான்! வில்லை நாணேற்றி வெற்றி கொண்டான்…
   ஆனா….அவளுக்கோ ஐயமோ ஐயம்…

   மனசு இவன் Odysseus தான்-ன்னு அடிச்சிக்குது! ஆனா ஆளைப் பாத்தா வேறு மாதிரி இருக்கான்!
   என்ன பண்ணுவா பேதை? இருபதாண்டு காலம் “பொய்” சொல்லிக் காத்துக் கிடந்தாளே!
   அவனாச்சும் வேடத்தைக் கலைக்கக் கூடாதா? அந்தச் சொல்லாளி-வில்லாளி இராகவன் முதற்கொண்டு, odysseus வரை…ஆண்களே இப்படித் தான் போலும்! புரிந்தும் புரியத் தயங்குபவர்கள் 😦

  • கடைசியில்….அவளே இன்னொரு நாடகமும் வெட்கத்தை விட்டு ஆடுறா…
   “புதிய” கணவனின் அறைக்கு, தங்கள் பழைய இன்பக் கட்டிலை நகர்த்தச் சொல்லுறா…

   அய்யோ…அந்தக் கட்டிலில்…நாலில் ஒரு கால்…மெய்யாலுமே ஒரு ஆலிவ் மரம்…உயிருள்ள மரம்…அதை அழிக்க வேணாம்-ன்னு பதற….
   Odysseusக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்…அவனே Odysseusன்னு அம்பலத்துக்கு வருகிறது!

   முருகா…இவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்!
   Homer-இன் புகழ் பெற்ற Odyssey காவியத்தின் நாயகியும்…ஒரு வகையில் தமையந்தியே!

   Homer = புகழேந்திப் புலவர்
   Odysseus = நளன்
   Penelope = தமயந்தி

   இவர்கள் மாசில்லாக் காதல்…
   எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
   மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

 4. ஆனா…
  அகத் துறையில் என்ன தான் நளன்-தமயந்தி, இராமாயணத்தை விட மேலு-ன்னு சொன்னாலும்…

  இந்த உலகம் என்னவோ…அகத்தின் மாசில்லா அன்பைக் கொண்டாடுவதில்லை!
  உலகத்துக்கு எப்பமே…..வீரம், வெற்றி, காமம், இன்பம்-ன்னு தான் கொண்டாட்டம்!
  இதுகளோடு ஒட்டி இருந்தா, அப்போ காதல் ஓக்கே! ஒப்புக்குச் சப்பாவா இருக்கட்டும்! கேட்டா, நடைமுறை வாழ்வாம்!

  திராவிடம் பேசும் வாய்கள் கூட, சமயம் வரும் போது, ஆரிய உதடுகள் உன்னது-ரெண்டும் கலக்கட்டுமே-ன்னு கலந்துவிடும் உலகம்:)

  அவளை அத்தனை பேர் முன்னாடி மறுதலிப்பதும்,
  “கற்பு” – அதை prove பண்ணச் சொல்வதும் தான் “புருஷ லட்சணம்”! 😦
  வீரம், ஆண்மை – இதுவே உலகப் போற்றல்!
  அது இங்கத்திய இராமாயணம் ஆகட்டும்..அங்கத்திய கிரேக்கம் ஆகட்டும்!

  Penelope என்னும் பேதையா பேசப்படுவாள்?
  Helen என்னும் பேரழகியே பேசப்படுவாள்!
  முன்னவள் சும்மா காவிய நாயகி! ஆனா அனைவர் கண்ணும் பின்னவள் மீது தான்!
  Odysseusஆ பேசப்படும் தலைவன்?
  Julius Caesar, Augustus Caesar என்று தறி கெட்டு அலைந்த, காமப் “பேராண்மை” மிக்கவர்கள் மீதே பாடாண் திணை!

  சில கதைகள் உள்ளத்துக்கு!
  சில கதைகள் உலகத்துக்கு!!
  முருகா, எனக்கு உள்ளத்தையே கொடு!

 5. //”உணர்ந்த” நீதி நெறியாளர் நெஞ்சம்போல்,

  யாதும் நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே//

  இந்த அழகிய உவமை பற்றி யாரேனும் சிலாகித்துச் சொன்னால் நல்லா இருக்கும்!
  யாதும் நிரப்பாமல்…..எல்லாம் நிரம்பிற்றே = என்னவொரு சொல்லாட்சி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s