தங்கை கேட்கிறாள்

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று

அன்னை கூறினள், புன்னையது நலனே –

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே,

விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,

வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்

துறை கெழு கொண்க! நீ நல்கின்,

இறைபடி நீழல் பிறவுமார் உளவே.

நூல்: நற்றிணை (#172)

பாடியவர்: தெரியவில்லை

சூழல்: நெய்தல் திணை – காதலியைப் பார்க்க வருகிறான் காதலன். ‘அவள் உன்னைச் சந்திக்கமாட்டாள்’ என்கிறாள் தோழி. ‘ஏன்?’ என்று பரிதாபமாகக் கேட்கும் காதலனுக்குத் தோழி சொல்லும் பதில்

’சுருக்’ விளக்கம்: காதலிக்கறேன் பேர்வழின்னு மரத்தைச் சுத்தினது போதும், எப்ப என் தோழியைக் கல்யாணம் கட்டிக்கப்போறே?

முழு விளக்கம்: 

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பாணர்கள் பாடும் மெல்லிய இசைபோல வலம்புரிச் சங்கு சத்தமிடுகிற கடற்கரையின் தலைவனே,

சின்ன வயதில் நாங்கள் தோழிகளோடு சேர்ந்து மணலில் விளையாடும்போது அங்கே ஒரு புன்னை விதையைத் தவறவிட்டோம். அது தானாக முளைத்துச் செடியாக மாறியது.

அதன்பிறகு, நாங்கள் அந்தச் செடிக்குத் தேன் கலந்த இனிப்பான பாலை ஊற்றி வளர்த்தோம். இப்போது அது வளர்ந்து பெரிய மரமாகிவிட்டது.

இதைப் பார்த்த எங்களுடைய தாய்க்குச் சந்தோஷம். ‘இந்த மரம் உங்களைவிட அழகானது’ என்று புகழ்ந்து பேசினாள். ‘நீங்கள் இருவரும் இந்த மரத்தை வளர்த்ததால், இது உங்களுடைய தங்கை’ என்றாள்.

நேற்றைக்கு அந்தப் புன்னை மரத்தின் கீழேதான், நீயும் உன் காதலியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தீர்கள். உன்னுடைய காதல் பேச்சையெல்லாம் தங்கை கேட்கிறாளே என்று உன் காதலிக்கு வெட்கமாகிவிட்டது.

ஆகவே, இனிமேல் இந்த மரநிழலில் உட்காராதீர்கள். நீங்கள் பேசவும் பழகவும்தான் இங்கே வேறு பல மரங்கள், நிழல்கள் இருக்கிறதே!

061/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், இயற்கை, கதை கேளு கதை கேளு, தோழி, நற்றிணை, நெய்தல், பெண்மொழி. Bookmark the permalink.

7 Responses to தங்கை கேட்கிறாள்

 1. G.Ragavan says:

  ஒவ்வொரு பாவும் நம் மனதுக்குள் தாவும் வண்ணம் தேடித் தரும் சொக்கனுக்கு நன்றி. 🙂

  இந்தப் பாடல் நெய்தல் திணைன்னு குறிப்பதற்கு நிறைய குறிப்புகள் உள்ளன.

  வெண்மணல் – இது மலையிலோ காட்டிலோ வயலிலோ இருக்காது. நீர் அரிக்கும் கடற்பாக்கங்களில் இருக்கும்.

  புன்னை மரமும் அவ்வண்ணமே. கடற்கரைப் பகுதியில் நிறைந்திருந்த புன்னை மரங்கள் இன்று அழகிற்காகவும் வளர்க்கப்படுகின்றன,

  வலம்புரிச் சங்கு, இலங்கு நீர்த்துறை ஆகியனவும் நெய்தலைக் குறிக்கும்

  உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் பொருந்தி வருகிறது. அதாவது வருந்துதலும் வருத்தம் நீக்குதலும்.

 2. G.Ragavan says:

  நெய் பெய் தீம்பால் பெய்து என்பதற்குப் தேனொடு கலந்த இனிய பால் என்று கூறியிருக்கின்றீர்கள். அதில் சிறுது நான் மாறுபடுகிறேன்.

  நெய்தலில் தேன் வராது. அது குறிஞ்சிக்கான கருப்பொருள்.

  நெய் பெய் தீம்பாலைச் சற்று சிந்தித்த பொழுது இப்படித் தோன்றியது.

  அது நெய்யைப் பாலொடு கலப்பதல்ல. பதப்படுத்தப்பட்ட பாலைக் காய்ச்சும் பலருக்கு நான் சொல்லப் போவது தெரியாமலிருக்கலாம். ஆயினும் நான் கண்கூடாகக் கண்டதைச் சொல்கிறேன்.

  செழும் மாட்டின் அப்பொழுது கறந்த பாலில் கொழுப்புச் சத்து நிறைய இருக்கும். அதிலும் எருமையென்றால் கேட்கவே வேண்டாம். அந்தப் பாலைக் காய்ச்சும் பொழுதே அக்கொழுப்பு இளகி உருகி நெய்யாகப் படரும். இயற்கையோடு இணைந்து இயைந்திருந்த அந்நாளைய வாழ்வில் இது போன்ற நெய் பெய் தீம்பால் (நெய்யைப் பெய்கின்ற தீம்பால்) நாட்படி நிகழ்வாகவே இருந்திருக்கும்.

  அந்தப் பாலைத்தானே மக்கள் பருகுவர். அதையே மரத்திற்கும் ஊற்றினர் போலும்.

  தானருந்து பாலை மரமும் அருந்தியதால் அது தங்கையாகிறது. ஒரு தாய் தந்த உணவு உண்டவர் உடன் பிறந்த உணர்வு கொண்டவர் என்பது சிறப்பல்லவா.

  அதையும் அன்னையைக் கொண்டே சொல்ல வைத்திருக்கிறார் புலவர். யார் சொல்கிறார்கள் என்பதைப் பொருத்து சொல்லின் திறனும் வேறுபடுமல்லவா. ஆகையால் இங்கு புன்னை மரத்தை தன் மகள்களுக்குத் தங்கை என்று அன்னை கூறியது பொருத்தமே.

  பாண்டியன் தீதற்றவன் என்று யார் கூறியிருந்தாலும் ஒப்புக்கொள்ளக் கூடியதுதான். அதையே கண்ணகி கூறும் பொழுதுதானே தென்னவன் தீதிலன் என்பது உறுதி பெறுகிறது. அது போலத்தான் இங்கும்.

  கருத்தம்மாவில் அன்னையைப் புதைத்த இடத்தில் முளைத்த மரமும் அன்னை என்பது போலப் பாரதிராஜா காட்டியிருப்பதும் கிட்டத்தட்ட இதே போன்ற காட்சியமைப்புதான்.

 3. சங்க கால மக்கள், இயற்கையான வாழ்வை எப்படி அணுகினார்கள் என்பதற்கு இது போன்ற பாடல்கள், அழகான எடுத்துக்காட்டு!

  யாராச்சும் மரத்தை, உடன் பிறந்த பிறப்பாகக் கருதுவாங்களா? இங்கே கருதுகிறார்கள் – எல்லாருமே! அம்மா சொல்லி…தலைவி, தோழி, காதலன்…எல்லாருமே! அத்தனை இயற்கை ஒன்றுதல்!

  ஏதோ அம்மா மட்டும் சொல்லியிருந்தா, வயசானவங்க, அப்படித் தோனுது-ன்னு சொல்லீறலாம்! ஆனால் காதலர்கள்? அவங்களுக்கு மரம், நிழல், ஒதுக்குப்புறம் தானே சொர்க்கம்!:) அவங்களே, அதையெல்லாம் விட்டுட்டு, இந்த மரம் என் தங்கச்சி-ன்னா, எப்படிப் பார்த்துப் பார்த்து வளர்த்து இருப்பாங்க!
  ஏதோ சங்கத் தமிழ்-ன்னா ஒன்னு காதல்/காமம் (அகம்) இல்லீன்னா வீரம் (புறம்)! வேற ‘நவ ரஸங்கள்’ ஒன்னுமே இருக்காது-ன்னு பேசும் ‘அதிமேதாவிகள்’ இது போன்ற இயற்கைப் பாடல்களைப் பார்த்தால் தெரியும்!

  ஆயம்
  காழ் முளை
  நெய் பெய் தீம் பால்
  பாணர் விளர் இசை
  வலம்புரி
  வான் கோடு நரல்
  -ன்னு எத்தனை சொல்லாட்சி!

  ஆயம்-ன்னா என்ன-ன்னு சொல்லுங்க பார்ப்போம்! இன்னைக்கும் தீர்வாயம், நடுவணாயம்-ன்னு எல்லாம் சொல்லுறோம்!:)

 4. “நெய்பெய் தீம்பால்” – நானும் உங்கள் விளக்கம் பற்றிச் சுட்டிக்காட்டணும்-ன்னு ட்விட்டரில் இந்தச் சொல்லை இட்டேன்!
  ஆனால், ராகவன் மிக அழகாக விரித்து, தமிழ் வரித்து, கனி உரித்து, சுவை தரித்துக் காட்டி இருக்கும் அழகு!

  தீம் = உரிச்சொல்! இனிமையைக் குறிக்கும்!
  தீங்குழல் = தேன் கலந்த புல்லாங்குழல்-ன்னு எடுத்துப்போமோ?:)

  கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
  இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
  கொன்றை அம் “தீம் குழல்” கேளாமோ தோழீ – சிலப்பதிகாரக் குரவைக் கூத்து!
  தீங்குழல் = இனிய ஓசை எழுப்பும் குரல்!
  தீம்பால் = இனிமை நிறைந்த பால்!

  “நெய்பெய்” என்பதற்கு ராகவன் மிக அழகான மாட்டுக் கொட்டில் காட்சியை வரைந்து காட்டி விட்டார்!

  பால் -> தயிர் -> வெண்ணெய் -> நெய் -ன்னு இத்தனை கடைதல் இல்லாது…மாடே கூட நெய்யைக் குடுக்கும்!
  ஆனா அது “நெய் போல” இருக்கும் கொழுப்பு! கெட்டியா மேலே படரும்! அதுவும் சுவையாத் தான் இருக்கும்! அந்த “நெய்பெய்” தீம்பால்!
  நல்ல பாலைக் காய்ச்சும் போது, மேலாக்க…எண்ணெய் போல் ஒட்டாமல், பால் மேல் மெல்லீசாப் படரும்! அந்த “நெய்”!

  பாலூற்றி வளர்த்த கிளி போல், பாலூற்றி வளர்த்த மரம்! 🙂
  இன்னிக்கும், திருமணங்களில், பந்தக்கால் நடும் போது, அரசங்கிளைக்குப் பால் ஊற்றிப் பூசை வைப்பது வழக்கம் தான்!
  ———————————–

  கருப்பொருள் பற்றி மட்டும், ஒரேயொரு தெளிவு!

  தேன் = குறிஞ்சியின் கருப்பொருள் என்பதால் நெய்தலில் வரக்கூடாது என்பதில்லை!
  அப்படிப் பார்த்தா, பால் = முல்லையின் கருப்பொருள்! ஆயர்கள் பொருள்! அது மட்டும் இந்த “நெய்தல்” பாடலில் வருகிறதே!:)

  ஒரு பாடலில் அதிகமான கருப்பொருட்கள், அந்த நிலத்துக்குரியனவாக, இலங்கி இருக்கும்!
  மற்றபடி ஓரிரு கருட்பொருட்கள் மற்ற நிலங்களில் இருந்தும் வரும்!

  முன்பே யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்…குறிஞ்சிப் பாட்டிலே, மருதத்தின் கரும்பு, வயல்-ன்னு எல்லாம் பார்த்தோம் அல்லவா?
  கருட்பொருட்கள் கொஞ்சமே இருந்து, அதுவும் திணைக்குத் தொடர்பில்லாத “திணை மயக்கம்” என்பதும் சங்கத் தமிழில் உண்டு!

 5. //நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்//

  இதையும் ட்விட்டரில் சொன்னேன்! ஆனா, மக்கள், நான் காதலில் ஊறிப் போய் கிடக்கேன்-ன்னு கிண்டல் செய்றாங்க!:) இருந்தாலும் சொல்லுறேன்!:)

  காதலன் – காதலி சீண்டல் வரும்போது,
  அவன், “ஏய், உன்னை விட உன் தங்கச்சி, பளிச்-ன்னு இருக்காடீ”-ன்னு சொல்லுறதில்லையா?:)
  அவளும், “ச்சீய், கண்ணை நோண்டிருவேன்”-ன்னு அவனை மிரட்டிக் கொஞ்சறதில்லையா?:)

  இந்த மச்சினி பாசம், அப்பவே சங்கத் தமிழில் இருக்கு போல! ஆனா சொல்வது, அவன் இல்லை! அவள் அம்மா!
  இந்த லூசுப் பொண்ணு, அம்மா சொன்னதை மறைக்காம, அவன் கிட்டயே சொல்லி வைக்கிறா! இனி கேக்கணுமா அவனுக்கு?:)
  நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’
  நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’
  நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’
  -ன்னு பாடப் போறான்! முருகா, இந்தக் காதல் சீண்டல் தான் எவ்ளோ அழகா இருக்கு-ல்ல? சண்டையில் துவங்கும் காதலின் அழகே அழகு! மனசில் அப்படியே கடைசி வரைக்கும் இருக்கும்:)

 6. இறைபடி நீழல் பிறவுமார் உளவே.
  //நீங்கள் பேசவும் பழகவும்தான் இங்கே வேறு பல மரங்கள், நிழல்கள் இருக்கிறதே!//

  அச்சச்சோ! தோழியின் திட்டத்துக்கு நீங்களே வேட்டு வெச்சிருவீங்க போல இருக்கே, சொக்கனாரே!:))
  தலைவனுக்கு, களவுக் காதலை வேறு மரத்துக்கு extend பண்ணச் சொல்லிக் குடுக்குறீங்களா?:)

  இறைபடி நீழல் பிறவுமார் உளவே? – Question Mark!
  இல்லை! – என்பதே Answer!

  கடல் நிலத்தில், அதிகம் நிழல் மரங்கள் இருக்காது! தென்னை, பனை…இப்படி தான்! அங்கொன்னும் இங்கொன்னுமா புன்னை, ஞாழல் இருக்கும்!

  இங்க இருந்ததோ ஒரே புன்னை மரம்! அதுவும் தங்கச்சி-ன்னு ஆயிருச்சி! இனி நீழல் பிறவுமார் உளவே??? = இல்லை! எனவே இவளைச் சீக்கிரம் கண்ணாலம் கட்டிக்கோ! :)) -ன்னு தோழி வரைவு கடாதல் பாட்டு!
  வரைவு = திருமணம்!
  கடாதல் = அவசரப்படுத்தல்!

 7. G.Ragavan says:

  இந்தத் தீம்பால் பல இடங்கள்ள வருது. அதுவும் கறந்த பால் என்ற பொருளிலேயே.

  கன்றும் உண்ணாது
  கலத்தினும் படாது
  நல் ஆன் தீம்பால்
  நிலத்து உக்காங்கு

  அடுத்து திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில்
  ”புனிற்றுக் கவரி முலை நெறித்துப் பொழியும் அமுதந்தனை
  பேட்டெகினம் புனலைப் பிரித்துத் தீம்பால் பருகும் திருச்செந்தூர்”

  சுருக்கமாகச் சொல்கிறேன். மொட்டவிழும் தாமரைப் பூவோடையில் கன்று ஈன்ற எருமை இறங்கி உழப்புகையில், அதன் மடியை விரால் மீன் இடிக்க, பாலெல்லாம் தண்ணீரில் சொரிந்தது. அப்பொழுது மலர்களின் மேல் அமர்ந்துள்ள அன்னப் பறவைகள் தண்ணீரில் இறங்கி அந்தப் பாலை மட்டும் பிரித்துக் குடித்ததாம். என்ன அழகான கற்பனை.

  இன்னும் நிறைய சொல்லலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s