ஒரே வாயில் மூன்று கொழுக்கட்டை

பக்கரை விசித்ரமணி பொன்கலனை இட்ட நடை

……பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப்

பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டு ஒழிய

……பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்

……சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு

……செப்பு என எனக்கு அருள்கை மறவேனே

இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன் நெய்

……எள், பொரி, அவல், துவரை இளநீர், வண்(டு)

எச்சில், பயறு, அப்ப வகை, பச்சரிசி பிட்டு வெள்

……ளரிப் பழம், இடிப் பல்வகை, தனிமூலம்

மிக்க அடிசில், கடலை, பட்சணம் எனக்கொள் ஒரு

……விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி

வெற்ப! குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்

……வித்தக! மருப்பு உடைய பெருமாளே!

நூல்: திருப்புகழ்

பாடியவர்: அருணகிரிநாதர்

முருகா,

 • ’அங்கவடி’ என்கிற நகை, குறையில்லாத ரத்தினங்கள், தங்கச் சேணம் போன்றவற்றை அணிந்துகொண்டு குதிரைபோல் கம்பீரமாக நடக்கிறது உன்னுடைய மயில்
 • கடம்ப மரத்தில் நன்றாகப் பூத்த மலர்களைத் தேர்ந்தெடுத்துத் தொடுத்த பூமாலையை அணிந்திருப்பவன் நீ
 • உன் திருக்கரத்தில் உள்ள கூர்மையான வேல், கிரௌஞ்சம் என்கிற மாயமலையைத் துளைத்துச் சென்று அழித்தது
 • உனது சேவல் கொடியை எட்டுத் திசைகளும் வணங்குகின்றன
 • உன்னுடைய சிறிய திருவடிகள் எங்களுக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றுகின்றன
 • திரண்ட பன்னிரண்டு தோள்கள்
 • இந்த வயலூர் என்கிற திருத்தலம்

’இவை அனைத்தையும் கவிதையினுள் வைத்துத் திருப்புகழாகப் பாடு’ என்று நீ எனக்கு அருள் செய்தாய். அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன்!

ஒற்றைக்கொம்பு கொண்ட பெருமானே (பிள்ளையாரே),

வளைந்த சடை கொண்டவர், ’பினாகம்’ என்கிற வில்லை ஏந்தியவர், இந்த உலகத்துக்கே தந்தை… அந்தச் சிவபெருமானின் பிள்ளையாகிய வித்தகனே, ஈடு இணை இல்லாதவனே,  ’எல்லா வினைகளையும் நீக்கக்கூடியவன்’ என்று புகழ் பெற்றவனே, அருள் கடலே,

உனக்குக் கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பங்கள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பலவகை மாவுப் பண்டங்கள், கிழங்குகள், கடலை, மற்ற உணவுவகைகளைப் படைக்கிறேன், ஏற்றுக்கொள்!

துக்கடா

  • அனைவருக்கும் இனிய ‘விநாயக சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்
  • சிவபெருமான், பிள்ளையார், முருகர் என்று மூவரையும் துதிக்கும் இன்றைய 3-இன்-ஒன் பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர், நண்பர் @kryes . அவருக்கு என் நன்றி
  • இன்னொரு விசேஷம், இந்தப் பாடலை வெறுமனே படித்தால் போதாது, சந்தத்தோடு பாடவேண்டும், அதற்காக நண்பர் @kryes இந்தப் பாடலைப் பாடியும் அனுப்பியிருக்கிறார். அதனை இங்கே கேட்கலாம்:  http://cinch.fm/kryes/277783
  • இதே பாடலின் மற்ற ஒலி வடிவங்கள்:
  • திருப்புகழ் ராகவன் அவர்கள் பாடியது (Link via @lalitha_ram ) –> http://www.kaumaram.com/audio_k/graudio.html
  • ’அருணகிரிநாதர்’ திரைப்படத்தில் டி. எம். சௌந்தர்ராஜன் பாடியது – 4:41 விநாடிமுதல் கேட்கவும் (Link via @RagavanG ) –> http://t.co/oIOYKE4
 • இந்தப் பாட்டின் நடுவே விநாயகருக்கு என்னென்ன பொருள்களைப் படைப்பது என்று ஒரு நீண்ட லிஸ்ட் வருகிறது, அதன் நடுவே ‘எச்சில்’ என்ற வார்த்தையைப் பார்க்கிறோம், உம்மாச்சிக்கு எச்சிலைப்போய்ப் படைப்பார்களோ?
 • எச்சில் புதிருக்கு விடை, முந்தின வரியின் கடைசி வார்த்தையில் இருக்கிறது – ‘வண்டு எச்சில்’ என்று சேர்த்துப் படிக்கவேண்டும், Honeybee என்கிற வண்டின் எச்சில், தேன்!
058/365
Advertisements
This entry was posted in அருணகிரிநாதர், சிவன், திருப்புகழ், பக்தி, பட்டியல், பிள்ளையார், முருகன், Uncategorized. Bookmark the permalink.

20 Responses to ஒரே வாயில் மூன்று கொழுக்கட்டை

 1. G.Ragavan says:

  நாளுக்குப் பொருத்தமான பாட்டு. அருணகிரிநாதர் திரைப்படத்திற்காக ஜி.ராமநாதன்+டி.ஆர்.பாப்பா இசையில் டி.எம்.எஸ் மிகவும் அருமையாகப் பாடியிருப்பார். அந்தப் படத்தில் நிறைய திருப்புகழ் பாடல்கள். ஆகையால்தான் இரு மேதைகள் இணைந்து இசையமைத்திருக்கிறார்களோ!

 2. G.Ragavan says:

  பட்சியெனும் உக்ர துரகமும்

  இதுல வரும் துரகம் என்ற சொல் குதிரையைக் குறிக்கும். ரத கஜ துரக பதாதிகள் என்று சொல்வார்களே. அதில் வரும் துரகமேதான்.

  அப்பனோ நரியைப் பரியாக்கினான். அதாவது ஒரு விலங்கை இன்னொரு விலங்காக்கி மாணிக்கவாசகர் கைவிலங்கைக் கழட்டினான். இங்கே மகனின் அடியாரோ இன்னும் ஒரு படி மேலே போய் பறவையை விலங்காக்கி நம்மையெல்லாம் முருகப் பெருமானின் திருவடிகளோடு சேர்த்து அன்பு விலங்கிடுகிறார்.

  இந்தப் பாடலில் மட்டுமல்ல. பல இடங்களில் மயிலைக் குதிரை என்கிறார். கந்தர் அநுபூதியில் மயிலை ஆடும்பரி என்கின்றார். ஆடுகின்ற குதிரையாம்.

  கந்தர் அலங்காரத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று மயிலேறும் ராவுத்தனே என்கிறார். அந்தக் காலத்தில் ராவுத்தர்கள் குதிரை வணிகம் செய்தவர்கள். அரபு நாட்டில் இருந்துதான் குதிரைகள் வரவேண்டியிருந்தது.

 3. G.Ragavan says:

  பக்கரை விசித்திர மணி பொற்கலை இட்ட நடை என்று சொல்லி விட்டு பட்சியெனும் உக்ரதுரகம் என்று அடுத்த வரியை அருணகிரி அடுக்கும் பொழுது, முருகனைப் புகழ்கிறாரா மயிலைப் புகழ்கிறாரா என்று சட்டென்று எண்ணம் எழுவது தவிர்க்க முடியாது. முருகனைத்தான் சொன்னார் என்றாலும் மயிலுக்குச் சொல்லவும் பொருத்தமாக இருக்கிறது. மயில் விருத்தமென்று பின்னாளில் எழுத இந்தத் திருப்புகழெல்லாம் முன்னோடி போலும்.

  நீபம் – கடம்பம். இந்த நீபம் என்ற சொல்லைத் திருப்புகழில் எக்கச்சக்கமாகக் காணலாம்.

  எ.டு-1
  சீரான கோல கால நவமணி
  ………..
  சீராக மோது நீப பரிமள இருதாளும்

  எ-டு-2
  வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
  ……………..
  குன்றென வந்தருள் நீப முந்திய …… மணிமார்பா

  இந்த வரியைப் பாருங்களேன்.
  நீபப் பக்குவ மலர்த்தொடை

  முருகனுக்கு மலர்த்தொடையா? ஆண்களுக்கு மலர்த்தொடை என்று சொல்லும் வழக்கம் கிடையாதே. 🙂 தோளில் சூடிய மாலை முழங்கால் வரை வருகிறது. மயில் மீது அமர்ந்திருப்பதால் அந்த மலர்மாலையைத் தொடை தாங்குகிறது.

  திருப்புகழில் ஒவ்வொரு வரியாக எடுத்தால் ஆழ்ந்து கொண்டேயிருக்கலாம்.

 4. G.Ragavan says:

  ஒரு சிறிய தவறு செய்து விட்டேன். மலர்த்தொடை பற்றித்தான். இந்தப் பாடலை இணையத்தில் தேடுகையில்தான் தொடை சொன்ற சொல்லிற்கு மாலை என்ற பொருளும் உண்டு என்று தெரிந்தது.

  ஆகக்கூடி மலர்த்தொடை என்றால் மலர்மாலை எனப் பொருள் கொள்க.

  அதே போல, முதலடி முருகனையும் சேவலையும் புகழ்வது போல இருக்கிறது என்று எழுதியிருந்தேன். அது சேவலைப் புகழ்வது என்று சில சுட்டிகளும் முருகனைப் புகழ்வது எனச் சில சுட்டிகளும் கூறுகின்றன. பொற்கலனை இட்ட நடை என்று சேவலைப் புகழ்வதுதான் பொருத்தமாக இருக்கிறது என்பது என் கருத்து.

  பி.கு – இனிமேல் மற்றவர்கள் என்ன உரை எழுதியிருக்கிறார்கள் என்று படித்து விட்டுத்தான் எதையும் எழுத வேண்டும். 🙂

  • :))
   இந்தப் பாட்டு இராகவனுக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு! அதான் இத்தனை ஆழ்தல்! இத்தனை உசாவல்:)

   கோதை, கண்ணி, தொங்கல், ‘தொடை’யல்… = மலர்மாலை கட்டும் விதம்:)
   ———————-
   பொற்+கலணை=பொன்னாலான குதிரைச் சேணம்!
   * கலணை=சேணம் (saddle)
   * பக்கரை=தாங்கு வளை (Stirrup), கிராமத்தில் அங்கவடி-ன்னும் சொல்லுவாங்க! அங்க+அடி! கால் வச்சிக்க உதவும் வளையம்! சேணத்தில், பக்கவாட்டிலே தொங்கும்!

   அதனால் பொற்கலணை இட்ட நடை=மயிலையே குறிக்கும்!
   பக்கரை + பொன்கலனை இட்ட நடைப் பட்சி = மயில்
   அதுவே உக்ர துரகம் = உக்கிரமான குதிரை வேகத்தில் முருகனைத் தாங்கிக் கொண்டு பறக்கிறது!

 5. G.Ragavan says:

  குடிலச் சடில என்ற சொற்றொடரைச் சற்று ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.

  அதற்குப் பொருள் வளைந்த சடையன்.

  அதிலும் குறிப்பாகக் குடிலம் என்ற சொல் என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது.

  குடிலை என்பது ஓங்காரத்தைக் குறிக்கும். ஓம் என்ற மந்திரல ஒலிக்குக் குடிலை என்று பெயர். அந்த ஓங்கார எழுத்து போல் வளைந்த சடையன் என்று பொருள் கொள்ளலாமா?

  சடை ஓம் என்பது போல வளைந்திருக்கிறது என்று கூறுவதில் என்ன பெருமை இருக்க முடியும்?!

  ஓம் என்பது அனைத்திற்கும் மூலம். ஓசையும் ஓசையின்மையும் (அமைதி) கூடியது. படைப்புக்கும் காப்புக்கும் மறைப்பிற்கும் ஆன ஆகுபொருள். அந்த ஆகுபொருள் வெற்பன் (மலையன்) சடைமுடிமேல் உயர்ந்த இடத்தில் ஆகுபொருள் என்று பொருள் சொல்கிறதோ திருப்புகழ்?!

  தமிழ் சுவைக்கும் வண்டீர்களே விளக்குங்கள்.

  • ‘குடிலம்’ என்பது ஓங்காரம் அல்ல!

   சக்தி, மொத்தம் ஆறு ரூபங்களில் தோற்றம் அளிக்கிறது என்பது “முருக தத்துவம்”!
   ஆனா, இது தமிழ் அல்ல!
   தமிழ்க் கடவுளான என் முருகன் மேல் ஏத்தி வைக்கப்பட்ட சமஸ்கிருதம் :)))

   பரம்பொருள்…பல கூறுகளாகப் பிரிந்து மனிதனை வந்து அடையுதாம்…
   1. ஆதி சக்தி (அதிலிருந்து, நூறில் ஒரு கூறு பிரிந்து…)
   2. பரா சக்தி (ditto)
   3. ஞான சக்தி (ditto)
   4. இச்சா சக்தி (ditto)
   5. கிரியா சக்தி (ditto)
   6. “குடிலா” சக்தி (ditto)

   இந்த ஆறு சக்தியும் தான், ஆறு முகங்கள்-ன்னு வடமொழியில் சொல்லிப்பாய்ங்க:)

   குடிலம்=வளைவு!
   வளைந்த பாம்பு போல் உள்ள குண்டலினி சக்தி ஆதலால்=”குடிலா” சக்தி!

   கிருஷ்ணா முகுந்தா முராரே
   “குடில” குண்டலம்
   குவலய தளநீலம்
   மதுரமுரளீ அவலோலம்-ன்னு சினிமாப் பாட்டும், இதே “குடிலம்” தான்!:)

 6. ஞானமே உருவான “வயலூர்” முருகப்பெருமானின் வற்றாத தனிப்பெருங் கருணையினாலே….ன்னு தான் வாரியார் ஒவ்வொரு பொழிவையும் தொடங்குவாரு…அந்த “வயலூர்” புகழ் தான் இந்தத் திருப்புகழ்!

  ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
  சோழமண்டல மீதே மனோகர
  ராசகம்பீர நாடாளும் நாயக – “வயலூரா”

  சும்மா இரு-ன்னு அம் மா பொருள் சொல்லிய பின்…
  முத்தைத் தரு பத்தித் திருநகை = திருப்புகழின் முதல் பாடல்!

  அருணகிரியின் அம்மா=முத்து!
  அவங்களை எண்ணி “முத்து” என்றே புகழும் துவங்குது!
  அம்மாவுக்கு அம்மாவாய் இருந்து காப்பாத்திய அக்காவும் அடக்கம்!

  ஆனா, அந்த நாள் வழக்கப்படி, காப்புப் பாடல் பாடிவிட்டு, அப்பறமாத் திருப்புகழைத் துவங்கலை அருணகிரி! நேரே முத்து-ன்னே துவங்கிட்டாரு!
  இதைப் பின்னாளில் ஒரு குறை ஆக்கீறக் கூடாது அல்லவா? விநாயகரை முதலில் துதிக்கணும் என்ற ‘சமய விதி’ அல்லவா?

  அதனால் வயலூரில் அடுத்தடுத்த திருப்புகழ்-களைப் பாட ஆரம்பிக்கும் முன்…
  காப்புப் பாட்டாக, “கைத்தல நிறை கனி”-யும், “பக்கரை விசித்ரமணி”-யும் எழுதிச் சேர்த்தாரு!

  மிக்க சந்தம் கொஞ்சம் திருப்புகழ்! வேகமாப் பாடும் போது, அந்தச் சந்த வீச்சு தெரியும்!
  எனக்குப் புடிச்ச பல தின்பண்ட லிஸ்ட்டும் அடுக்குவாரு! அதுக்காகவே இது ரொம்பப் பிடிக்கும்! = திருப் புகழ் + தின்பண்டப் புகழ் :)))

 7. G.Ragavan says:

  வில் பரமர் – பினாகபாணி – ராமயணத்தில் ராமன் வில்லன் ஆகுமுன்பே வில்லன் ஆனவர் ஈசன்.

  இதே போல முதலில் குழலூதியது முருகன் என்று வாரியார் சொன்னது நினைவிற்கு வருகிறது. தரவு தேட வேண்டும். தெரிந்தவர் இருந்தால் சொல்லுங்கள்.

  இந்த வில் பற்றி ஒரு சுவையான கதை உண்டு. ”முப்புரம் எரி செய்த அதிதீரா” கதைதான்.

  மூவரையும் ஒரே நேரத்தில் ஒருவரே கொல்ல வேண்டும் என்பது அவர்கள் பெற்ற வரம். மூன்று கோட்டைகளை அமைத்து விண்ணில் பறந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒருவரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

  ஈசனிடம் போகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக மாறுகிறார்கள். திருமால் வில்லுக்கு நாணானார் என்று நினைவு. அப்படித் தேரேரிப் போகையில் ஒவ்வொருவருக்கும் ஆணவம். நாம் இல்லையென்றால் ஈசனால் இப்பிடிப் போருக்குச் செல்ல முடியுமா என்று.

  அவருக்கா தெரியாது. அனைத்தையும் விட்டு விட்டு மெல்லச் சிரித்தாராம். மூன்று கோட்டைகளும் தீப்பற்றி அழிந்தனவாம்.

  அதனால் அருணகிரி ஈசனை நகை ஏவிய நாதர் என்று சொல்வார். அந்தப் பாடல் எந்தப் பாடல் என்று நினைவிற்கு வரவில்லை. தெரிந்தவர் சொல்லுங்களேன்.

  • வீட்டுக்கு வந்தாச்!:)
   பேருந்தில் யோசிச்சேன்! = நகையேவிய நாதரு..

   பாட்டின் துவக்கம் சரியா நினைவுக்கு வரலை…ஆனா வரகூர்-ன்னு ஒரு தலம்…
   பாட்டுக்கு நடுவால இப்படி வரும்…முன்ன பின்ன மாத்தி இருந்தா கண்டுக்காத ராகவா:)

   அரி அயன் அறியா அடிமுடி புரமூன்று
   அது எரி “நகை ஏவிய நாதர்”
   மனமகிழ் குமரா என உனதிரு தாள்
   மலரடி தொழுமாறு அருள்வாயே

   மதன் எரி “விழி ஏவிய நாதர்”
   வரகூர் வருகிற பெருமாளே..
   அப்படின்னு வரும்…சரியா நினைவில்லை! தேடிப் பாக்கணும்!

 8. G.Ragavan says:

  போன பின்னூட்டத்திலும் ஒரு தவறு. தேரேறி என்றிருக்க வேண்டும். தேரேரி என்று எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும். 😦

 9. இக்கு = கரும்பு!
  அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்-ன்னு அபிராமி அந்தாதி!
  மன்மத பாணத்தை, கரும்பு வில்-மலராக என் முருகனே தாங்கி என்னைத் தாக்குகிறான்!:)

  1 இக்கு=கரும்பு,
  2 அவரை,
  3 நற் கனிகள்
  4 சர்க்கரை,
  5 பருப்பு,

  6 நெய்,
  7 எள்,
  8 பொரி,
  9 அவல்,
  10 துவரை,

  11 இளநீர்,
  12 வண்டு எச்சில்=தேன்,
  13 பயறு,
  14 அப்ப வகை,
  15 பச்சரிசி,

  16 சுவையான பிட்டு,
  17 வெள்ளரிப்பழம்,
  18 இடிப் பல் வகையான = பலவகை இடித்த மாவுப் பண்டங்கள்
  19 தனி மூலக் = கிழங்குகள்,
  20 மிக்க அடிசில் = சோற்று வகை அடிசில் = சர்க்கரைப் பொங்கல்

  21 கடலை = சுண்டல்
  பட்சணம் எனக் கொள்-ன்னு மொத்தம் 21 வரிசைத் தட்டு வைக்கறாரு! 🙂 படையலில் ஒத்தைப் படையாக 21 வைப்பது ஒரு வகை மரபும் கூட! – நாவிற்கும், வயிற்றுக்கும் மரபு:)

  • G.Ragavan says:

   ஒரு சிறிய ஐயம்.

   அடிசில் என்றால் உணவு என்றும் ஒரு பொருள் உண்டே. மிக்க அடிசில் என்றால் விதவிதமான உணவுவகைகள் என்று பொருள் வராதா? அப்படித்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

   அதே போல் இடிப்பல்வகைத் தனி மூலம் என்பதில் கிழங்குகளை இடித்துச் செய்யப்பட்ட மாவுப்பண்டங்கள் என்று படித்த நினைவு.

   இரண்டையுஞ் சற்று பார்த்துச் சொல்லுங்கள்.

   அப்படியே… அந்த நகையேவிய நாதரையும் கண்டுபிடித்துக் கொடுக்க முடியுமா?

   நன்றி.

   • அடிசில்=சோறு!
    அடு=பொங்கு=boil! அடுப்பதால்=அடிசில் என்னும் தமிழுக்கே இனிய காரணப் பெயர்!
    நெய்யுடை அடிசில், ஊன்துவை அடிசில் என்று சங்கத் தமிழ்!

    ஆனா இங்கிட்டு பிள்ளையாருக்குச் சர்க்கரைப் பொங்கல்…அக்கார அடிசில்-ன்னு “அவாளா”ச் சொன்னேன்:)

    மாவு உருண்டையும் தனியாகப் படைப்பார்கள்!
    வள்ளிக் கிழங்கும் தனியாகப் படைப்பார்கள்!
    அதனால் இடிப் பல்வகை + தனி மூலம்

    வள்ளிக் கிழங்கை திருத்தி
    வாழைப் பழத்தை உரித்து
    உண்ணும் படியே தருவோம்
    கணபதி சப்பாணி கொட்டாயே

 10. //சிவபெருமான், பிள்ளையார், முருகர் என்று மூவரையும் துதிக்கும் இன்றைய 3-இன்-ஒன் பாடலை…//

  🙂
  இது அருணகிரியின் ஒரு மாதிரியான, பேதை உள்ளம்!

  பாட வந்தது விநாயகர் பாட்டு-ன்னா கூட, ‘வயலூருக்கு வா’-ன்னு வரச் சொன்னவன் முருகன்!
  அதனால் அவனையே முன் இருத்தி, அப்பறம் தான் விநாயகரையே இருத்துகிறார்! (மரபு மீறல்?)

  இதே போல் முதல் முதல் திருப்புகழிலும் பண்ணுவாரு!
  ‘முத்தைத் தரு பத்தி’-ன்னு முருகனே குடுத்த பாட்டு=முதல் பாட்டு=முக்கியமான பாட்டு!

  அதுல முழுக்கமுழுக்க முருகனையே பாடலாம்-ல்ல? கண்ணனை எதுக்கு ஊடால பாடணும்?
  ஏதோ அப்பறமா வர திருப்புகழ்-ன்னா கூடப் பரவாயில்லை…சமய நல்லிணக்கம் அது இது-ன்னு சொல்லலாம்! ஆனா முதல்முதல் முருகன் பாட்டு??
  = ஏன்? இது என்ன திருப்புகழா? திருமால் புகழா??:))

  பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக…
  பத்தர்க்கு இரதத்தைக் கடவிய
  பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
  பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒருநாளே!

  முருகனுக்கு அடைமொழிக்கா பஞ்சம்? = பச்சைப் புயலான கண்ணன் ‘மெச்சத்தகு’ ஒரு பொருளாம்! யாரு?=என் முருகன்!:) ஏன்னா….

  அப்போ தான் அருணகிரியைத் தற்கொலையில் இருந்து காத்தவன் முருகன்! தற்கொலைக்குப் பின் ‘சும்மா இருந்து’, பாடும் முதல்முதல் பாட்டு!
  முன்பு, தன் சத்தியமே பொய் ஆகி, பழி வந்தாலும் பரவாயில்லை…தோழனின் உயிரே முக்கியம்-ன்னு…
  தற்கொலையில் இருந்து தோழனைக் காத்தவன் நினைவுக்கு வர…

  இது அருணகிரியின் ‘ஒரு மாதிரியான, பேதை’ உள்ளம்!
  முன்பு காமம் மிகுந்த அருணகிரியின் பேதை உள்ளம்!
  மரபு மீறல் போலத் தெரிந்தாலும்…
  இது வேறு உள்ளம், அருணகிரி உள்ளம்….முருகா!

 11. Kumaran says:

  சொக்கன்,

  இந்த இருவர் துணை இருக்கும் வரையில் எத்தனை பாடல்கள் வேண்டுமானாலும் எழுதலாம்; அருமையாக விளக்கம் கூறி சுவை கூட்டுகிறார்கள். 🙂

  • G.Ragavan says:

   பாட்டும் பொருளும் காட்டித் தமிழ் கூட்டுஞ் சுவைக்குக் குமரன் வருவதில் என்ன வியப்பு! 🙂 வருக வருக. உங்கள் கருத்தமுதம் அள்ளித் தருக. 🙂

 12. இந்தப் பேதை உள்ளம், தற்கொலை காலத்தில் என்ன பாடு பட்டுதோ? அதுக்கு
  * மயில்
  * வேல்,
  * சேவலங் கொடி
  * கடம்ப மாலை
  * பன்னிரு தோள்
  * திருவடி-ன்னு
  ஆறையும் ஒரே பாட்டில் காட்டி, வாழ்வு காட்டிய முருகா…
  உன் தன்னோடு உறவேல் எனக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
  எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு…என் முருகா!

 13. வீரர்களுக்குப் பாதம் அகன்று இருக்கும்! = அகன்ற வீரக் கழல்!
  ஆனா…
  //ரட்சை தரும் சிற்று அடியும்//
  முருகனின் பரந்த திருவடிகளைச் “சிற்றடி”-ன்னு சொல்லக் காரணம் என்ன? 🙂

 14. ரொம்பத் தூக்கமா வருது! Jetlag!
  landed around 5:00 am and came to work today! now leaving early! 🙂
  இராகவனுக்கு ரொம்பப் பிடிச்சமான பாட்டு என்பதால் கொஞ்ச நேரம் தாக்குப் பிடிச்சேன்! இப்போ முடியல…அப்பறமா வரேன்:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s