கள்வன் மகன்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்

மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி

நோ தக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்

அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே,

உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை

‘அடர் பொற் சிரகத்தாவாக்கி, சுடர் இழாய்

உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள், என யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை

வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு

‘அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!’ என்றேனோ

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்

உண்ணு நீர் விக்கினான் என்றேனோ, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம்

செய்தான் அக் கள்வன் மகன்.

நூல்: கலித்தொகை (#51)

பாடியவர்: கபிலர்

சூழல்: குறிஞ்சித் திணை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

ஒளியுடைய வளையல்களை அணிந்த என் தோழி, நான் சொல்வதைக் கேள்!

சின்ன வயதில் நீயும் நானும் மணலில் சிறிய வீடு கட்டுவோம். அப்போது ஒரு குறும்புக்காரச் சிறுவன் அதைக் கால்களால் உதைத்துச் சிதைப்பான். ஞாபகம் இருக்கிறதா?

அப்புறம், நாம் கூந்தலில் மலர் மாலை சூடி வீதியில் வருவோம், அந்தக் குறும்புப் பயல் அந்த மாலையை அறுத்துக்கொண்டு ஓடுவான்.

பின்னர், நாம் வரிகளை உடைய பந்தை வைத்து விளையாடுவோம், அந்தப் பொல்லாதவன் அங்கேயும் வருவான், நம்முடைய பந்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவான்.

இப்படிப் பல குறும்புகளால் நம்மை நோகவைத்த அந்தப் பயலை, சமீபத்தில் மீண்டும் பார்த்தேன்.

இப்போது அவன் நன்கு வளர்ந்த வாலிபன். ஒருநாள் நானும் அம்மாவும் தனியாக இருக்கும்போது நம் வீட்டு வாசலில் வந்து நின்றான். ‘தண்ணீர் வேண்டும்’ என்றான்.

அம்மா பாவம், என்னைக் கூப்பிட்டு ‘அழகான அணிகலன்களை அணிந்தவளே, யாரோ தாகம் என்று வந்து நிற்கிறார்கள், தங்கத்தால் ஆன பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துப்போய்க் கொடு’ என்றாள். விவரம் புரியாமல் நானும் போனேன்.

அந்தப் பயல் என்ன செய்தான் தெரியுமா? தண்ணீரை விட்டுவிட்டு, வளையல் அணிந்த என் முன் கையைப் பிடித்து இழுத்தான்.

அதிர்ச்சியடைந்த நான் ‘அம்மா! இவன் என்ன செய்கிறான் பாரேன்’ என்று அலறினேன்.

அம்மாவும் பதறிப்போய் ஓடி வந்தாள். ஆனால் இவன்? எதுவும் தெரியாத அப்பாவிபோல் விழிக்கிறான்.

நல்லவேளை, நான் அவனைக் காட்டிக்கொடுக்கவில்லை. அவன் செய்த குறும்பை மறைத்து ‘தண்ணீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் எடுத்தது, அதனால்தான் பயந்துபோய் அலறினேன்’ என்று பொய் சொன்னேன்.

நான் சொன்னதை அம்மா நம்பிவிட்டாள். ஆதரவாக அவனுடைய முதுகைத் தட்டிக்கொடுத்தாள். அப்போது அந்தத் திருட்டுப்பயல் கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் பார்த்துப் புன்னகை செய்தான்!

056/365

Advertisements
This entry was posted in அகம், கதை கேளு கதை கேளு, கபிலர், கலித்தொகை, குறிஞ்சி, குறும்பு, தோழி, நாடகம், பெண்மொழி. Bookmark the permalink.

2 Responses to கள்வன் மகன்

  1. என் அனுமதி இல்லாமல் எப்படி நீங்கள் என் வாழ்க்கைக் கதையை இங்கு பிரசுரிக்கலாம்?:)

  2. மிக அழகாக, கதைப் பாங்கில் சொல்லி இருக்கிறீர்கள். என்றாலும் ஒரு விண்ணப்பம். நகைக் கூட்டம் செய்ததாக அல்லவா கபிலர் கூறுகிறார்!
    அதைப் புன்னகை செய்தான் என்பதை விட இன்னும் அழாகாக எப்படிச் சொல்லலாம் என்று யோசித்தேன். சிரிப்பை அடக்க முடியாமல் விட்டு விட்டுப் புன்னகைக்கும் வாலிபன் மனதில் வருகிறான். பாட்டுடன் இசையும் படியான வரிகளில் நீங்கள் தான் உங்கள் பாணியில் அணியூட்ட வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s