ஆடலாம், பாடலாம், நீராடலாம்!

காது ஆர் குழை ஆட, பைம்பூண் கலன் ஆட,

கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,

சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,

வேதப் பொருள் பாடி, அப்பொருள் ஆமா பாடி,

சோதி திறம் பாடி, சூழ்கொன்றைத் தார் பாடி,

ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்

பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்!

நூல்: திருவெம்பாவை (#14)

பாடியவர்: மாணிக்கவாசகர்

இந்தப் பாடலுக்கு உரையாசிரியர் பி.ஸ்ரீ. தந்துள்ள சூழல்: அதிகாலை நேரம். ஆற்றில் குளிக்க வருகிறாள் ஒரு பெண். ஆனால் இந்த நேரத்தில் தண்ணீர் ரொம்பக் குளிராக இருக்குமே என்று தயங்கிக் கரையிலேயே நிற்கிறாள். இதைப் பார்த்த மற்ற பெண்கள் (ஏற்கெனவே ஆற்றில் இறங்கிக் குளித்துக்கொண்டிருப்பவர்கள்) சிரிக்கிறார்கள், ’இறைவன் புகழைப் பாடி ஆடியபடி உள்ளே இறங்கு, குளிரெல்லாம் தெரியாது’ என்று உற்சாகப்படுத்துகிறார்கள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

குளிக்கும்போது, நாம் காதுகளில் அணிந்துள்ள குழைகள் ஆடுகின்றன, அழகிய பசும்பொன் நகைகள் ஆடுகின்றன, நம் கூந்தல்கள் ஆடுகின்றன, அதனால் அந்தக் கூந்தல்களில் உள்ள பூக்களும் ஆடுகின்றன, அந்தப் பூக்களை மொய்த்துள்ள வண்டுகளும் கூட்டமாக மேலே எழுந்து ஆடுகின்றன!

இந்தத் தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பது உண்மைதான். அதனால் என்ன? சிற்றம்பலத்தில் ஆடும் இறைவனைப் பாடியபடி அதில் இறங்கிக் குளிப்போம், அவனே வேதப்பொருள் என்று பாடுவோம், அதனால் உணர்த்தப்படுகின்ற விளக்கமும் அவனே என்று பாடுவோம், ஆதியாகவும் அந்தமாகவும் சோதியாகவும் அருள் புரியும் அவனுடைய திறனைப் பாடுவோம், அவன் சூடியிருக்கும் அடையாள மாலையாகிய கொன்றையைப் பாடுவோம்!

நம்மைத் தீய விஷய ங்களில் இருந்து விலக்கி, நல்ல விஷயங்களைச் சொல்லித்தந்து வளர்த்தவள், கைகளில் வளை அணிந்த பார்வதி, அவளுடைய பாதங்களைப் போற்றிப் பாடி நீராடுவோம், வா!

துக்கடா

 • திருவெம்பாவை முழுமையையும் இசை வடிவமாகக் கேட்கவும், டவுன்லோட் செய்துகொள்ளவும் இங்கே செல்லலாம் –> http://www.shaivam.org/gallery/audio/pavai.htm
 • இணையத்தில் திருவெம்பாவைக்குப் பல உரைகள் கிடைக்கின்றன. ஓர் எளிய Google Search போதும். ஆனால் நான் வாசித்தவரை மிகச் சிறந்த உரை பி.ஸ்ரீ. எழுதிய ‘திருவெம்பாவை: ஒரு புதிய வழிகாட்டி’. 1960ல் ’அமுத நிலையம்’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் (விலை: 30 காசுகள் 🙂 ) இப்போது அச்சில் உள்ளதா என்று தெரியவில்லை. எனக்கு ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைத்தது
055/365
Advertisements
This entry was posted in சிவன், திருவெம்பாவை, பக்தி, பாவைப் பாட்டு, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

3 Responses to ஆடலாம், பாடலாம், நீராடலாம்!

 1. கட்டோடு குழலாட ஆட…ஆட
  கண் என்ற மீன் ஆட…ஆட
  கொத்தோடு நகை ஆட…ஆட
  கொண்டாடும் மயிலே நீ…ஆடு

  என்ற கண்ணதாசன் பாட்டுக்கு, ஒரு முன்தோன்றி இந்தத் திருவெம்பாவைப் பாடல்! இன்னொரு ‘ஆட’ என்னும் சொல்லைத் திருவெம்பாவையில் போட்டுப் பாருங்க! சூப்பரா இருக்கும்! திருவெம்பாவை ரொம்பப் பிடிச்சிப் போகும்:)

  காது ஆர் குழை ஆட, ஆட
  பைம்பூண் கலன் ஆட, ஆட
  கோதை குழல் ஆட, ஆட
  வண்டின் குழாம் ஆட ஆட..

  இதுவும் திருவாசகமே என்பது பலரும் அறியாதது!

  திருவெம்பாவை = திருவாசகத்தின் ஏழாம் பதிகம்! எங்கூருக்கு அருகால இருக்கும் திருவண்ணாமலையில் ஈசனை அல்லாது, அவளை (சக்தியை) வியந்து எழுதியது இது!

  திருவாசகத்தின் துவக்கம் முழுக்க ஒரே தத்துவம்! பிறவி, மாயை அது இதுன்னு கிட்டு…
  எப்போ ‘அவனை’ லேசா விடுத்து, ‘அவளை’ வியந்து பாடத் தொடங்கினாரோ, அப்பவே Jolly Games Start 🙂

  * திருவெம்பாவைக்கு முன்னாடி = நீத்தல் விண்ணப்பம்! ஐயோ சாமி..அதை நீத்து விடு, இதை நீத்து விடு…ஆசை வேணாம்! காதல் வேணாம்-ன்னு…போங்க மணிவாசகரே!:)
  * ஆனா…இந்தத் திருவெம்பாவையில் தொடங்கித் தான் = பெண்கள் கும்பலா நீராட்டம்! Water Game, இனி வரும் பதிகம் எல்லாமே Game தான்!…வாங்க மணிவாசகரே!:)

  திருவெம்பாவை
  அம்மானை
  பொற்சுண்ணம்
  கோத்தும்பி
  தெள்ளேணம்
  திருச்சாழல்-ன்னு….இனி எல்லாமே பெண்கள் ஆடும் விளையாட்டாவே வரும்! எனக்கு ரொம்பப் பிடிக்கும்!:)

 2. இன்னொன்னு கவனிச்சீங்களா? = இது fullstop-யே வராத பாட்டு!
  பாட்டின் முதலடியில் துவங்கியது எட்டாம் அடியில் தான் வந்து நிக்கும்!

  மற்ற திருவெம்பாவை எல்லாம் நடுநடுவால நிக்கும்!

  ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியை, யாம் பாடக் கேட்டேயும், மாதே வளருதியோ?
  வன் செவியோ நின் செவி தான்?
  ஏதேனும் ஆகாள் கிடந்தாள்
  என்னே என்னே!
  – இப்படி நடுநடுவால நிப்பாட்டுவாரு மாணிக்கவாசகர்! ஆனா இந்தப் பாட்டுல ஆட-ன்னு துவங்கியவர், பாட-ன்னு மாத்தி, relay race போல் ஒரே ஓட்டம் தான்! 🙂

 3. இன்னொன்னும் சொல்லோணும்!
  இது வினைத் தொகை, பண்புத் தொகை-ன்னு ஒரே தொகையாத் தொகையாக் கட்டி எழுதிய பாட்டு!

  அதான் சொல்லுறது…
  திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்!
  திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!

  ஆர் குழை
  பூண் கலன்
  – வினைத் தொகை

  கோதைக் குழல்
  சீதப் புனல்
  – பண்புத் தொகை

  வேதப் பொருள் ,
  சோதித் திறம்
  – இரு பெயரொட்டுப் பண்புத் தொகை

  சூழ் கொன்றை
  பெய் வளை
  – வினைத் தொகை!

  எப்படிக் கலக்கறாரு பாருங்க மாணிக்கவாசகர்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s