என்ன காரணம் சொல்வது?

நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்

காமர் பீலி, ஆய் மயில் தோகை

இன் தீம் குரல் துவன்றி, மென் சீர்

ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி

கண் நேர் இதழ, தண் நறும் குவளைக்

குறுந்தொடர் அடைச்சிய நறும் பல் கூழை

நீடு நீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய்

உயங்கிய மனத்தை ஆகி, புலம்பு கொண்டு

இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி

அன்னை வினவினள் ஆயின், அன்னோ!

என் என உரைக்கோ யானே – துன்னிய

பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி

ஓடை யானை உயர் மிசை எடுத்த

ஆடு கொடி கடுப்ப, தோன்றும்

கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே?

நூல்: அகநானூறு (#358)

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்

சூழல்: குறிஞ்சித்திணை – காதலன் காதலியைச் சந்திக்க வருகிறான், அவன் வந்ததைக் கவனித்துவிட்ட தோழி காதலியிடம் பேசுவதுபோல் அவனுக்கு ஒரு செய்தி சொல்கிறாள். ‘சீக்கிரம் இவளைத் திருமணம் செய்துகொள்’ என்று வலியுறுத்துகிறாள்.

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தோழி,

நீலமணி போன்ற கழுத்து, அழகிய தோகையைக் கொண்ட மயில்கள் இனிய குரலில் பாடியபடி மென்மையான தாளத்தில் நடனம் ஆடும். அதுபோல, நீயும் உன் தோழிகளோடு சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவாய்.உன்னுடைய கண்களைப்போல் அழகான குவளை மலர்களைத் தலையில் சூடிக்கொண்டு ஆழமான தண்ணீர்ச் சுனையில் ஆனந்தமாக ஆடுவாய். அப்போது உன் கூந்தல் கூந்தல் அலையாய்ப் பரந்து நிற்கும்.

ஆனால் இப்போது, நீ யாருடனும் பேசுவதில்லை, பழகுவதில்லை, எந்நேரமும் வருத்தமாக உட்கார்ந்திருக்கிறாய், நாள்முழுக்கத் தனிமையில் கிடக்கிறாய், உன்னுடைய உடம்பு வண்ணம்கூட மாறிவிட்டது.

இதையெல்லாம் பார்த்த நம் தாய் கவலைப்படமாட்டாளா? ‘என்னாச்சுடீ இவளுக்கு?’ என்று என்னைக் கேட்கமாட்டாளா? அப்படிக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?

நெற்றிப்பட்டத்தை அணிந்த யானையின்மீது ஒரு வெள்ளைத் துணிக் கொடி கட்டப்பட்டிருக்கிறது. அது காற்றில் அசைவதைப் பார்க்கும்போது மலை உச்சியிலிருந்து விழும் அருவியின் நீர்ப் படலம்போல் தோன்றுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த மலைகளை உடைய தலைவனால்தான் உனக்கு இந்தக் காதல் நோய் வந்திருக்கிறது, இதை நான் எப்படித் தாயிடம் சொல்வது?

051/365

Advertisements
This entry was posted in அகநானூறு, அகம், குறிஞ்சி, தோழி, பெண்மொழி. Bookmark the permalink.

4 Responses to என்ன காரணம் சொல்வது?

 1. மயில்கள் இனிய குரலில் பாடியபடி/// என்ன கொடுமை இது?

 2. amas32 says:

  பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ் பாடம் படிக்கும் பொழுது, என் மகன், இந்தத் தோழிகளுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாமா என்று கேட்ப்பான். ஆனால் தோழிகள் மூலம் தான் பல எண்ணங்கள் வெளிப்படுகின்றன. மேலும் அந்த நாள் வாழ்க்கை முறையை கவிஞர்கள் தோழிகள் மூலம் அழகாக வெளிப்படுத்தினார்கள்.
  amas32

 3. காதலுக்கு ஊக்கம் குடுக்கும் கவிதைகளாகவே பதிவிடும் சொக்கனுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்!:)
  வாழ்க தோழி! வாழ்க காதல்! 🙂
  ————————

  @ஜெயஸ்ரீ
  >மயில்கள் இனிய குரலில் பாடியபடி/// என்ன கொடுமை இது?<

  மயில் அகவல் மனிசருக்கு கொடுமை! ஆனா மயில்களுக்கு?:)
  காதல் மயில், தன் துணையைக் குரல் குடுத்தும், தோகை விரித்தும் அல்லவா, காதலுக்கு அழைக்கிறது! எனவே இந்த 'இன்குரல்' – மயில்களுக்கு இடையேயான குரல்!

  காமர்பீலி ஆய்மயில் "தோகை"+ "இன்தீம் குரல்" துவன்றி – காதல் மயில்கள் ஆடுவது போல், காதல் களிப்பில் நீயும் முன்பு ஆடினாயே – என்று தோழி நினைவுறுத்துகிறாள்…என்று கொண்டுகூட்டிப் பொருள் கோள்! 🙂

 4. சொக்கன்
  just a small idea!
  சங்கப் பாட்டில் வரும் அழகான சில இலக்கண நயங்களையும், அடிக்குறிப்பாக குடுக்கலாமே?
  இந்தக் குறிஞ்சிக் கவிதையே எடுத்துக் கொள்ளுங்கள்!

  இன்-தீம் குரல் = இன்,தீம் ரெண்டுமே சுவை தான்! ஒரு பொருட் பன்மொழி!
  உறீஇய = இன்னிசை அளபெடை
  அன்னோ = இரக்கச் சொல்/வியப்புச் சொல்
  ———————————–

  பாட்டு என்னமோ ‘குறிஞ்சி’, கவிஞரோ ‘மருத’ இளநாகன் 🙂
  * மருதன் இளநாகன் = திருமால் அன்பன்
  * இவர் தோழன் பெயர் = நல்லந்துவன் = முருக அன்பன்

  தன் ஆருயிர்த் தோழனையும் பல பாடலில் வாய் விட்டு வாழ்த்துவார் இந்தக் கவிஞர்!
  தான் மட்டுமே தன் படைப்புகளில் தொனிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தன் தோழன்-அவன் படைப்புகளையும், ஒவ்வொரு இடத்திலும் நினைத்துப் பார்த்து இன்புறும் உள்ளம்…

  அந்தப் பாட்டு இங்கே இருக்கு:)
  http://madhavipanthal.blogspot.com/2010/08/aganaanooru.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s