இங்கே வராதே

யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்

கரும்பு மருள் முதல பைந்தாள் செந்தினை

மடப்பிடித் தடக்கை அன்ன பால்வார்பு,

கரிக் குறட்டு இறைஞ்சிய செறிங்கோட் பைங்குரல்

படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்

எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்து

ஆரம் நாறு மார்பினை,

வாரற்க தில்ல, வருகுவள் யாயே!

நூல்: குறுந்தொகை (#198)

பாடியவர்: கபிலர்

சூழல்: காதலியைச் சந்திக்க வருகிறான் காதலன். அவனை வழிமறிக்கும் தோழி ‘இனிமேல் இங்கே வராதே, அம்மா பார்த்துவிடுவாள்’ என்கிறாள். காதலர்கள் சந்திக்கத் தோதான வேறு ஓர் இடத்தைக் குறிப்பால் உணர்த்துகிறாள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

மலையனுடைய பெரிய கைகளும் வேல் படையும் போரில் பகைவர்களை ஓட ஓட விரட்டிக் கொல்லும். அப்படிப்பட்ட மலையனின் காட்டில் வளர்ந்த சந்தனத்தை அரைத்து மார்பு முழுக்கப் பூசிக்கொண்டு வந்திருக்கிறாயே, இந்த அற்புதமான நறுமணத்தை நுகர்ந்தால் எங்களுடைய தாய்க்குச் சந்தேகம் வராதா? ‘யார் அந்தச் சந்தன மார்பன்?’ என்று இங்கே வந்து பார்க்கமாட்டாளா?

இனிமேல், நீ இங்கே வருவது நல்லதில்லை. உன் காதலியைச் சந்திக்கச் சரியான இடம் இதுவல்ல.

அதோ, அங்கே பார், மரங்களை வெட்டி எரித்த காட்டு வழியில் பயிர் விளைந்திருக்கிற அந்த நிலம் தெரிகிறதா? சிவந்த தினைப் பயிர்கள் தெரிகின்றனவா? கரும்பு போன்ற தடிமனான தண்டு, பெண் யானையின் அகன்ற துதிக்கைபோலப் பசுமையான தாள்(இலை)கள், கரி எடுக்கின்ற குறட்டைப்போல வளைந்த தானிய மணிகள் தெரிகிறதா?அந்தத் தானியங்களைத் தின்னக் கிளிகள் வரும், அவற்றை விரட்டுவதற்கு நானும் உன் காதலியும் வருவோம், அப்போது அங்கே நீங்கள் சந்தித்தால் ஒருவருக்கும் சந்தேகம் வராது!

துக்கடா:

 • கரி எடுக்கிற குறடு எப்படி இருக்கும்? நானும் பார்த்ததில்லை, உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள், புகைப்படம் இருந்தால் கொடுங்கள் (உயரமான மரங்களில் காய் பறிக்க ஒரு நீண்ட குச்சியின் நுனியில் அரிவாளைக் கட்டிப் பயன்படுத்துவார்கள், அதுதானா இது?)
048/365
Advertisements
This entry was posted in அகம், கதை கேளு கதை கேளு, கபிலர், குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, பெண்மொழி, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to இங்கே வராதே

 1. G.Ragavan says:

  எங்கிருந்தய்யா இந்தப் பாக்களைப் பிடிக்கின்றீர்கள். படிக்கப் படிக்கச் சிந்திக்க வைக்கின்ற பாடல். முதலில் ஒரு நன்றியைப் பிடித்துக் கொள்ளுங்கள். 🙂

  சொல்ல வந்த செய்தி சிறியதுதான். இங்கு வராதே. அங்கு வா. ஆனால் அதைச் சொல்வதற்குள் எவ்வளவு செய்திகள். ஒவ்வொன்றையும் அனுபவிப்பதே சுகமாக இருக்கிறது.

  காடு வெட்டிக் கழனி செய்தனர் என்று படித்திருக்கிறோம். அதையும் அழகாகச் சொல்லியிருக்கிறாள் தோழி.

  யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்

  இதில் யாமரம் என்பது பற்றித் தேடும் பொழுதுதான் ஒரு உண்மை தெரிந்தது. இந்த யா மரம் யால் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. யால் என்பது பின்னாளில் ஆல் என்று மாறியிருக்கிறது. யாமம் வடக்கே போய்ச் சாமம் ஆனது போல யால் என்பது வடக்கில் சால் என்று ஆகியிருக்கிறதாம்.
  http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/64c0457d0ec6be62/e32f5eccb722033c?lnk=raot&pli=1

 2. G.Ragavan says:

  கரும்பு மருள் முதல பைந்தாள் செந்தினை
  மடப்பிடித் தடக்கை அன்ன

  இந்த வரிகளைப் பிரித்துப் பிரித்துப் பார்ப்போம்

  கரும்பு மருள் முதல – கரும்பைப் போன்ற அடியை உடைய
  பைந்தாள் – பசும் இலைகளோடும்
  மடப்பிடித் தடக்கை அன்ன – மடம் நிறைந்த பெண்யானை (பிடி) யானையின் துதிக்கை போன்ற
  செந்தினை – செம்மையான தினை

  இதில் பிடித் தடக்கை என்று சொல்வதில் பொருள் உள்ளது. பிடியின் துதிக்கை சற்று நளினமாக இருக்குமாம். அது போல நளினமான தினை என்று புலவர் கூறுகிறார். அது ஏன்?

  பால்வார்பு கரிக் குறட்டு இறைஞ்சிய செறிங்கோட் பைங்குரல்

  எந்தக் கூளமும் வளர்ந்து வரும் பருவத்தில் பால் பிடிக்கும். அப்பொழுது அந்தப் பக்கம் போனாலே நெஞ்செல்லாம் வாசம் நிரம்பும். பயிரில் எடை கூடுவதால் நேராக வளர்ந்து கொண்டிருந்த பயிர் மெல்லத் தலைசாயும்.
  அதுதான் பால்வார்வு செறிங்கோட் பைங்குரல் – பால் பிடித்த செறிந்த கொண்டைகள் போன்ற பசுங்கதிர்கள்

  அப்படித் தலை சாயும் பசுங்கதிர்கள் எதை ஒத்திருக்கின்றன?
  கரிக்குறட்டினை ஒத்திருக்கின்றன. இது வழக்கமான குறடு போலத்தான் இருக்கும். ஆனால் கரித்துண்டுகளை இழுப்பதற்காக கிண்ணம் போல இருக்கும். வளைந்த குறட்டுக் கிண்ணம் என்று சொல்லலாம்.
  இந்தப் படத்தைப் பாருங்கள். தினைப்பயிர்தான்.
  http://www.google.co.in/imgres?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+pics&hl=en&sa=X&biw=1366&bih=613&tbm=isch&prmd=ivns&tbnid=0zBk0A-NASu4RM:&imgrefurl=http://azhkadalkalangiyam.blogspot.com/2010/02/blog-post_5691.html&docid=qM7Oeh76nI_lwM&w=200&h=136&ei=v4lSToqtCYyvrAeNw9ysAg&zoom=1

 3. குறுந்தொகை = குறுகிய வடிவிலான ஆழ்ந்த தமிழ்! அழகு தமிழ்! இது போன்ற கவிதைகளை அறிமுகம் செய்வதற்கு மிக்க நன்றி சொக்கரே! 🙂
  கவி நயம் சொட்டுது பாட்டிலும், இராகவன் மொழியிலும்!
  அதுக்குப் பைய வாரேன்! முதலில்…

  குறடு வேற! துறடு வேற!
  * துறடு=மரங்களில் கனி/காய் இழுத்து விடும் கோலுக்கு துறட்டுக் கோல்-ன்னு பேரு! எங்கூரு வழக்கில் தொறடு-ம்பாங்க!:)
  * குறடு=கொல்லர்கள் பயன்படுத்துவது! இடுக்கி! Tongs-ன்னு சொல்வோமே, அது! உலைக் களத்தில், சூடா இருக்கும் நிலக்கரியை நிமிண்டி, எடுத்து விடும் இடுக்கி!

  இங்கே…பயிர் குறடு போல் வளைஞ்சிருக்காம்!
  சமையலறை இடுக்கியைக் கற்பனை செஞ்சிக்கோங்க!
  கைப்பாகம் வளைஞ்சி இருக்கும்! ஆனா மேல் பாகம் சிறுசா, நிமிர்ந்து இருக்கும்!
  அது போல், பயிர் வளைஞ்சி இருக்கு! ஆனா அதன் மேல் உள்ள கதிர், கெட்டியா நிமிர்ந்து இருக்கு!

  என்னவொரு காட்சி! எத்தனை உன்னிப்பா கொல்லன் களத்தைப் பார்த்திருந்தா, இப்பிடிப் பயிருக்கு உவமை காட்டுவாரு கவிஞர்!
  சங்கத் தமிழே தமிழ்!!

 4. சங்கப் பாடல்களில் தான் எத்தனை காட்சிப்படுத்தல் இருக்கு பாருங்க!
  மருத நிலத்துக்கு உண்டான பொருட்களை எப்படி அழகா காட்சிப் படுத்த முடியுது, அதுவும் ஓரிரு வரிகளில், வரீசையாக?

  1. யாஅம் கொன்ற மரம் = காட்டை அழித்து வயல் ஆக்குதல்
  2. சுட்ட இயவில் = அப்படி ஆக்கும் போது, மரத்தின் மேற்பகுதிகளை நிலத்திலேயே எரித்து விடுவது வழக்கம்! சாம்பற் சத்து மிக்க மண்ணாய் இருக்கும்! அப்படி மரங்களைச் சுட்ட வயற்கால் பாதையில்…
  (இன்றும் கரும்பு மூனு போகம் ஆன பொறவு, கரும்புக் காட்டைக் கொளுத்தி, புதுக் கரும்பு நடுவது வழக்கம்)

  3. கரும்பு மருள் முதல = கரும்பு போல கெட்டியா இருக்கும் அடிப்பாகம்
  4. பைந்தாள் செந்தினை = காம்பு பசுமையா இருக்கு! தினை சிவப்பா இருக்கு!
  கவிதையில் water color அடிக்கிறாரு கவிஞர்!:) ஓவியக் கவிதை!

  5. மடப்பிடித் தடக்கை அன்ன = பெண் யானையின் துதிக்கை போல் பயிரும் அப்படியே வளைந்து வளைந்து ஆடுகிறது!
  பெண் யானையை எதுக்குக் குறிப்பிட்டுச் சொல்லணும்? ஆண் யானைக்கு ரெண்டு பக்கமும் தந்தம் தெரியும், துதிக்கையோடு! பெண் யானைக்கு வெறுமனே துதிக்கை தான்! தினைப் பயிரில் வளைவு மட்டும் தான்! தந்தம் போல் விரிப்பு இல்லை! அதான் மடப்-பிடித் கை போல பயிர்!

  6. பால்வார்பு = பால் கட்டி நிற்பதால்
  கரிக் குறட்டு இறைஞ்சிய = இடுக்கி போல் ஒரு பக்கம் ஒயிலா வளைஞ்சி, அதே சமயம் இடுக்கியின் மேற்புறம் போல், கதிர் மட்டும் கீழே குனியாது, மேலே நிமிர்ந்து நிக்குது!

  7. செறிங்கோட் பைங்குரல் = செறிவான பசுங்குலைப் பயிர்! அந்தப் பால் வாசத்துக்கும், கதிருக்கும்…
  படுகிளி = கிளிகள் பறந்து வந்து கொத்த…
  கடிகம் சேறும் = நாங்க அதை ஆலோலம், ஆலோலம்-ன்னு கடிய (ஓட்டப்) போறோம்….

 5. அடுத்தாப்புல சந்தன வீரப்பனைக் காட்டுறாரு கவிஞரு! 🙂

  * அடுபோர் எஃகுவிளங்கு தடக்கை = கொடும் போரிலே ஏந்தும் எஃகு வேலைக் கையில் ஏந்திய
  * மலையன் கானத்து = மலையமான் காட்டிலே
  * ஆரம் நாறு மார்பினை = அந்தக் காட்டிலே விளையும் சந்தனத்தை….,
  இப்படி வாசமா மார்பில் பூசிக்கிட்டு வந்திருக்கியே…தலைவா..

  அட வெண்ணெய், உனக்கு இவ கூட மகிழ்வா இருக்கணும்-ன்னு ஆசை! அதுக்கு இந்த சந்தன ஒப்பனை எல்லாம் பண்ணிக்கிட்டு வந்திருக்க…
  ஆனா, இந்த வாசமே, உன்னைக் காட்டிக் குடுத்துருமே! இப்படியா வீட்டு கிட்டக்க வந்து காதல் செய்வது?
  ,
  வாரற்க தில்ல = இனி இப்படி வராதே!
  வருகுவள் யாயே! = இங்கிட்டு அம்மா வந்துருவாக!
  அதனால், நான் முன்னாடி சொன்ன தினைப் புனத்துக்கு வா! அங்கே மகிழ்வா இருக்கலாம்! – இப்படி-ன்னு தலைவியின் தோழி ஏய்க்கிறா….தலைவனை! :))

  சந்தன மணம் பூசிக்கிட்டு வந்த தலைவன் முகத்தைக் கற்பனை செஞ்சிப் பாருங்க! வழிசல் தெரியுதா? 🙂

  தலைவிக்குச் சந்தன மணமா முக்கியம்? அவன் மணமே போதுமே!
  ஒப்பனையெல்லாம் ஒன்னும் வேணாம்! இயற்கையான தினைப்புனப் பகுதிக்கு வா! இன்பம், இன்பம், இன்பம்! = சங்கத் தமிழின்பம்! காதல் தமிழின்பம்!

 6. குறடு is here
  தொறடு is here

  கிராமத்தில் தொறடு போட்டு, மணியக்காரு வீட்டு கொருக்கலிக்கா பறிச்சது எல்லாம் ஞாபகத்துக்கு வருது! 🙂

  மாட்டிக்கிட்டாலும் என்னைய மட்டும் அடிக்க மாட்டாங்க! திருப்பாவைப் பாட்டு பாடச் சொல்லி கேக்கும் மணியக்காரம்மா! சல்லுன்னு சொல்லிட்டு, கை நிறைய கொருக்கலிக்காவோட எஸ்கேப் 🙂

 7. G.Ragavan says:

  செம்மொழிச் செம்மல் பொருள்கூறும் பெருமாள் திரு.கே.ஆர்.எஸ் அவர்களின் திருவாய்மொழியால் பாராட்டு பெற்றது சிறியேன் பெருமை. 🙂

  ஒரு செய்யுளைப் படிக்கையில் புரிகையில் அதன் தன்மையறிந்து கொளல் வேண்டும் என்பது என் கருத்து. பக்திப்பாடலாக இருந்தால் திரேதா யுகத்திற்கும் துவாபரயுகத்துக்கும் தொடுப்பு கொடுக்கலாம். இது அகப்பாடல். உள்ளங்களுக்கிடையேதான் தொடுப்பு கொடுக்கும்

  பொதுவில் அகப்பாடல்களில் கருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே வரும். இதனைச் சொல்வதற்குக் காரணம் குறட்டை இடுக்கி என்று நினைத்துப் பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. என் கருத்தை நான் சொல்கிறேன். பொய்யறியாப் புண்ணியர் கே.ஆர்.எஸ் அதைச் சிந்தித்துக் கூறும் முடிவு ஏதாயினும் ஏற்றுக்கொள்கிறேன்.

  காடு வெட்டிக் கழனி அமைத்து – இது உழவுக்குடி. ஆகக் கருப்பொருள்களும் அதையொட்டியே இருக்கும்.

  ஆகையால் யா மரங்களை வெட்டி வயலாக்கும் பழக்கம் வருகின்றது. அப்படி வெட்டப்பட்ட மரங்கள் என்னவாயின? சுடப்பட்டன. அதுதான் இரண்டாம் செய்தி. கொல்லனுக்கு மட்டுமல்ல இல்லனுக்கும் கரி வேண்டும்.

  மரங்களைப் புடம் போட்டுக் கங்கு வைத்து சுட்டால்தால் கரி கிடைக்கும். எரிந்து போனால் சாம்பர் மிஞ்சும். அதனால்தான் புலவர் மரஞ் சுட்ட என்று கூறுகிறார்.

  அப்படிச் சுட்ட கரித்துண்டுகளை இழுப்பதற்குப் பயன்படுவதுதான் இந்தக் குறட்டு. கொல்லன் உலைப் பொருட்கள் இங்கு கருப்பொருட்களாகா.

  வில்லிபுத்தூராரும் குறடிட்டுக் காதறுத்தார்.  அது இடுக்கியாக இருந்தால் அதைக் கொண்டு காதறுப்பது எவ்வளவு கொடுமை மற்றும் கடினம்.

  இதுதான் எனக்குத் தோன்றியது. பெரியவர்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறேன்.

  • //செம்மொழிச் செம்மல் பொருள்கூறும் பெருமாள் அவர்களின் திருவாய்மொழியால் பாராட்டு பெற்றது சிறியேன் பெருமை//

   :)))))
   என்ன ராகவா, இது விளையாட்டு?:)
   படிக்கும் போதே, வெட்கம் வெட்கமா வருது:) முருகா!

   அருணகிரி-வில்லிபுத்தூரார் குறடு வேற! குறட்டிலேயே பல வகை! psankarக்கு தந்துள்ள சுட்டியைப் பாருங்க!
   இந்தக் குறடு = வளைஞ்ச பயிர், வளையாத கதிரைக் காட்டுவதற்காக!

   கரிக் கங்குகளை எடுக்க பல கருவிகள் இருக்கு! இடுகாட்டில் எடுக்க, தீ மிதிக்கும் குழியில் எடுக்க…அதெல்லாம் நீளமா, ஒத்தைக் காது வச்சி இருக்கும்! ஒதுக்கி நிமிண்டி விட பயன்படுத்துவாங்க!

   ஆனா, இங்கே சொன்ன குறடு, வளைஞ்ச பயிர், வளையாத கதிரைக் காட்டுவதற்காக!
   குறுந்தொகை நினைவில் இருந்து தான் சொல்ல முடியுது! தமிழ் இணையப் பல்கலைக்கழக – நூலகச் சுட்டி வேலை செய்யல! இல்லீன்னாச் சரி பாத்து, பிழையா இருந்தா திருத்திக்கிடலாம்! தமிழின் அழகே திருத்தமான பொருள் தானே!
   http://www.tamilvu.org/library/libcontnt.htm

   • G.Ragavan says:

    தாங்கள் யார்? கண்ணனுக்கும் கந்தனுக்குமாய் ஆனவர். அமெரிக்க ஆழ்வார், செந்தமிழுக்கும் சிக்கெடுக்கும் இந்த நூற்றாண்டுக் கம்பர். ஒரு நல்லாசானுக்குக் கொடுக்கும் மதிப்பு உங்களுக்கு என்னிடத்தில் எப்பொழுதும் உண்டு.

    ஆயினும் சிறியேன் மறுத்துப் பேசுவதற்காக மன்னிக்கவும். நெல்லுக்கும் தினைக்குக் கதிர் வளையும். கம்புக்கும் சோளத்துக்கும் வளையாது என்று நான் அறிந்ததை மட்டும் சொல்லி இந்தப் பின்னூட்டத்தை நிறுத்திக் கொள்கிறேன். கண்டவன் சொன்னதாக எண்ண வேண்டும். எங்களூரில் கண்டவன் சொன்னதாகக் கொள்ளுங்கள்.

    நன்றி.

 8. psankar says:

  kari edukkira kuradu == foreceps / fire tongs ? This is what vannaans use for ironing kari.

  • eggjactly:) fire tongs!
   கரி எங்கெல்லாம் பயன்படுதோ, அங்கெல்லாம் குறடும் தேவையாச்சே! = கொல்லர், வண்ணார், உழவர்…
   ஒவ்வொரு குறடும் ஒவ்வொரு வடிவுல இருக்கும், இடத்துக்கேத்தாப் போல…

   இந்தாங்க, பல குறடுகள் இங்கே! பொதுவா, குறடு=Tong!

   இங்கிட்டு கவிஞர் காட்டுவது = வளைஞ்ச பயிர், வளையாத கதிர்!
   அதுக்கு உவமையா = ஒரு வித Fire Tong!

   கிராமத்தில் இருந்ததால், தினை எப்படி முத்தி அறுப்பாங்க-ன்னு பார்த்திருக்கேன்!
   நீங்களும் பார்க்க…இந்தாங்க தினை+கதிரின் படம்!
   வளைஞ்ச பயிர், வளையாத கதிர் = பயிர் தலை சாய்ஞ்சாலும், கதிர் புடைப்பா நிக்கும்!
   அதுக்குத் தான் Fire Tongஐ உவமையாக் காட்டுறாரு!

   Fire Tong-இன் body வளைஞ்சி இருந்தாலும், அதன் மேற்பாகம் நிமிர்ந்து இருக்கும்! அதே போல் பயிர் தலை சாய்ஞ்சாலும், கதிர் புடைப்பா நிக்குது! இதான் அந்த உவமையழகு!
   இயற்கையை எம்புட்டு நுணுக்கிப் பார்த்திருந்தா, கவிஞர் இப்படியொரு கூரிய உவமை காட்டுவாரு!

   உள்ளத்தில் ஊறி வரும் அகப்பொருள் காதல், அது விளைந்த அழகிய தமிழ்நிலம்! = சங்கத் தமிழ்!

 9. @ragavan
  //ஆயினும் சிறியேன் மறுத்துப் பேசுவதற்காக//
  haiyo! enna ithu kuRumbu ragava?:)
  யாரு சிறியன்? நீங்க ‘சிரி’யன்! சிரிக்கும் பெரியன்!:)

  இப்போ தான் பார்த்தேன்! தமிழ் இணையப் பல்கலைச் சுட்டியின் cached copy ஒன்னு கிடைச்சுது! அதில் கொல்லர் குறடு-ன்னு எல்லாம் போடலை! நான் தான் பிழையாகச் சொல்லிட்டேன்…மன்னிக்க வேண்டுகிறேன்!

  //எங்களூரில் கண்டவன் சொன்னதாகக் கொள்ளுங்கள்//
  பெங்களூரில் கண்டவன் சொன்னதாகவும் தட்டாமல் கொள்வேன்! 🙂

 10. G.Ragavan says:

  திரு கே.ஆர்.எஸ் தினை+கதிர் என்று கொடுத்த படம் கம்பங்கதிரைக் காட்டுகிறது. அது தொடர்பான சுட்டிகளை நோக்குகையில் கம்பு, சாமை மற்றும் தினைக்கும் அதே படத்தைக் காட்டுகிறது. கம்பங்கதிரின் தண்டுப்பகுதி தட்டை எனப்படும். கம்பந்தட்டை. அது சாயும். ஆனால் வளையாது.

  நெல், தினை, குதிரைவாலி ஆகியவை கதிர் சாய்ந்து வளைந்துதான் தான் நான் பார்த்திருக்கிறேன். சாயாத வளையாத தினையும் உண்டு போலும்.

  • இராகவன் சொல்வது சரியே!
   விக்கியில் ஒரே படங்களைத் தான் குடுத்து இருக்காங்க! கேழ்வரகு, கம்பு, தினை எல்லாம் ஒரே தானிய வகை-ன்னாலும், பயிர் வேற வேற தான்!
   முற்றிய தினை படம் எங்கும் அம்படலை! ஆனா நரி வாலு போல பொசுபொசு-ன்னு இருக்கும்! சரசர-ன்னு உதிர்த்திடலாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s